மோடி அழைக்கிறார் !

இந்தியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் ஆபிரிக்க ஒன்றியத்தை நிரந்தர உறுப்பினராக -அதாவது 21வது அங்கத்தவராக- சேர்த்திருக்கிறார்கள். இன்றைய ஆபிரிக்க கொந்தளிப்புகளின் காரணமாக மேற்குலகினது பிடி ஆபிரிக்காவில் தளர்வதும் மறுபுறத்தில் இந்தியா, ரசியா உட்பட சீனாவினஞது பிடி வியாபிப்பதுமாக இருக்கும் சூழலில் அவர்களுக்கான தத்தமது நலன் சார்ந்த தேவை ஆபிரிக்க யூனியனை இணைத்துக்கொள்ள இடமளித்திருக்கிறது அல்லது அவசரப்படுத்தியிருக்கிறது. இவ்வாறான பூகோள அரசியல் கள்ள நோக்கம் இருந்தாலும், ஆபிரிக்க ஒன்றியத்தையும் அந்த தளத்தில் இயங்க இடமளிப்பது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆபிரிக்க ஒன்றியம் 2002 இல் ஆரம்பிக்கப்பட்டது. அது 55 ஆபிரிக்க நாடுகளின் கூட்டணியாக உள்ளது.

1999 இல் ஆரம்பிக்கப்பட்ட ஜி-20 இல் 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் அங்கத்தவர்களாக இருந்தன. இதுவரை ஆபிரிக்கக் கண்டத்தை கண்டுகள்ளாது அல்லது புறக்கணித்து, சலங்கை கட்டி ஆடிய ஜி-20 க்கு இப்போதான் அந்தக் கண்டம் கண்ணில் எத்துப்பட்டிருக்கிறது.

யூலை 2021 இல் ஐ.நா சபையின் “உணவு வழங்கல் முறைமை” சம்பந்தமான மாநாட்டில் ஜெப்ரி ஸாக்ஸ் அவர்கள் ஆற்றிய உரையில் விடுத்த வேண்டுகோள்தான் ஜி-20 இனை ஜி-21 ஆக்க வேண்டும் என்பது. ஆபிரிக்க ஒன்றியத்தை அந்த 21 வது நிரந்தர உறுப்பினராக இணைக்க வேண்டும்” என ஜெப்ரி ஸாக்ஸ் வேண்டுகோள் விட்டார். (4 வது நிமிடத்துக்குப் பின் காணொளியில் வருகிறது)

இதே வேண்டுகோளை People as Brothers, Future Earth என்ற பொருளில் இத்தாலியில் ஒக்ரோபர் 2021 இல் நடந்த சர்வதேச மாநாட்டிலும் முன்வைத்தார். அன்றைய இத்தாலிய அதிபர் Mario Draghi அவர்களிடம் “அடுத்த ஜி-20 ஆனது ஜி-21 ஆக மாற வேண்டும், ஆபிரிக்க ஒன்றியத்தை அந்த 21 வது நிரந்தர உறுப்பினராக இணைக்க வேண்டும்” என்றார்.

(https://www.santegidio.org/pageID/30284/langID/en/itemID/44521/Jeffrey-Sachs–appeal-to-Draghi-Let-s-include-Africa-in-the-G20-to-defeat-Covid19.html?fbclid=IwAR2XJly5aJPhDIjFIt3TUjqSzUgAtQ3JSb_aX-RHMLVZoVNn4Id0nnG6M0o)

அதாவது இந்தக் குரலுக்கு சொந்தக்காரர் ஐநா சபை செயலாளரின் விசேட ஆலோசகரும் அறியப்பட்ட விமர்சகருமான பேராசிரியர் ஜெப்ரி ஸாக்ஸ் அவர்கள்!. இந்த ஆபிரிக்க ஒன்றியத்தை இணைப்பதன் மூலம் 1.4 பில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையும் என தனது கருத்தை அழுத்தமாக முன்வைத்தார்.

2021 இல் வைக்கப்பட்ட இந்த வேண்டுகோள் அல்லது ஆலோசனை 2023 இல் சாத்தியமானதற்கு, அவரது குரல் செவிமடுக்கப்பட்டதற்கு, ஆபிரிக்க எழுச்சிதான் காரணம். ஜெப்ரி அவர்களின் இந்த ஆலோசனையை, முன்வைப்பை இருட்டடிப்புச் செய்து, “ஆபிரிக்காவே நம்மோடு இணைந்துவிடு” என மோடி அழைக்கிறார் என பெரும் படம் வேறு காட்டுகிறார்கள் !

Leave a comment