ஏன் தடுக்கிறது மேற்குலகம்?

image : Al Jazeera

மேற்கு ஆபிரிக்காவின் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளை மேற்குலகின் கண்களினூடாகப் பார்த்தால் அந்த கவிழ்ப்பு ஜனநாயகத்துக்கு எதிரான செயல். ஓகே. இவர்கள் முன்வைக்கிற ஜனநாயகப் பெறுமதி என்ன. ஆபிரிக்காவை காலனியாக்கி நூற்றாண்டு காலமாய் வளங்களை கொள்ளையடித்துவிட்டு, பெயருக்கு சுதந்திரம் வழங்கியபின் அந்தக் கொள்ளையை தொடர நவகாலனியத்தை கையிலெடுத்தனர். அதற்கான பொம்மை ஆட்சியாளர்களை ஆட்சிக்கட்டிலில் இருத்துவதற்கு அவர்கள் செய்த திருகுதாளமெல்லாம் அவர்களின் எந்த ஜனநாயகப் பெறுமதிக்குள் உள்ளடங்குகிறதோ தெரியவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களை இராணுவம் தூக்கியெறிந்து ஜனநாயகத்தை சாய்த்துவிட்டதாக பொங்கியெழும் மேற்குலக ஜனநாயகப் பெறுமதியானது எண்ணற்ற உதாரணங்களை காட்ட முடியும் என்றபோதும், ஒரு உதாரணமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சதாம் குசைன் அவர்களை வீழ்த்தும்போது விடுமுறையில் சென்றுவிட்டதா என்ன.

ஆபிரிக்காவில் மேற்குலகம் கற்றுக்கொடுத்து பேணிவந்த பொம்மை ஆட்சிகளின் சூத்திரங்களைத்தான் இப்போ ஆபிரிக்க இராணுவம் அவர்களுக்கு எதிராகக் கையிலெடுக்கிறது. வித்தியாசம் என்னவெனில், வழமைபோலன்றி இந்த கவிழ்ப்புகளை அந்த மக்கள் ஆதரிக்கிறார்கள். அந்த ஆட்சியாளர்களை கொண்டாடுகிறார்கள். அது ஏற்படுத்திய விழிப்புணர்வும் ஒற்றை உலக ஒழுங்கு ஆட்டம்காணும் நிலையும் அந்த மக்களை துணிகரமாகக் களம் இறக்கியிருக்கிறது.

இராணுவ ஆட்சி எதிர்காலத்தில் சந்தர்ப்பவாதமாக -ஏன் மக்களுக்கு எதிராகக்கூட- திரும்பாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாதபோதும், அவ்வாறான நிலை ஏற்பட்டால் மக்களின் விழிப்புணர்வும் எழுச்சியும் இன்னொரு பரிணாமத்துக்கு மாறிக் கொள்ளும் என்பதே இயங்கியல். திடீர் எழுச்சியும் அதை வெளிப்படுத்தும் பூகோள அரசியலின் சாத்தியப்பாடும், துரிதமாக மாற்றத்தை காண விழையும் இளந்தலைமுறை பட்டாளத்தின் வேகமும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பினூடாக வடிகாலிடப்படுகிறது. அவ்வளவே.

மேற்குலகின் நலனை காத்து ஆட்சிநடத்தியவர் மொகமட் பஸோம் அவர்கள் என்பதை மறைத்துக்கொண்டு, மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரை இராணுவம் தூக்கியெறிந்துவிட்டதாக சொல்கிறார்கள் அவர்கள். அதே ஜனநாயக தர்க்கத்தை பாவித்து, இப்போ ஒரு வெகுஜன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தி அவர் ஆட்சிக்கு மீண்டும் வரவேண்டுமா இல்லையா என இதே மக்களிடம் கேட்கச் சொல்லி ஏன் மேற்குலகம் இராணுவ ஆட்சியாளர்களை கேட்க முடியாது. கேட்க மாட்டார்கள். கிழிஞ்சிடும்.

மாறாக அவரை மீண்டும் அரியணையில் ஏற்றுங்கள் என அந்த மக்கள் சார்பில் மேற்குலகம் சொல்ல என்ன தகுதி இருக்கிறது. 70 களில் தனது நாட்டு மக்களுக்கு எதிராக உடல்உதறும் ஆட்சி நடத்திய கொடுங்கோலன் இடி அமீனை பாதுகாப்பாக சவூதிக்கு அழைத்துவந்து வசதியாக வாழவழிசெய்து கொடுத்தது அமெரிக்கா. தன் வாழ்நாளில் தண்டனை பெறாமல் இயற்கை மரணம் எய்தும்வரை பாதுகாத்து வைத்த மேற்குலக ஜனநாயகப் பண்பு அவர்களது.

மாலி , புர்கீனோ பாஸோ, குய்னியா என (2020-2022) இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தபோதெல்லாம் எழாத வன்மம் 2023 நைஜர் இல் நடக்கிறபோது வெளிப்படுவதின் கொள்ளை அரசியல் அப்பட்டமாக வெளிப்படுகிறது. அந்த மக்கள் தங்கள் நாட்டை தங்களிடம் விட்டுவிடுங்கள் என்கிறார்கள். இனியாவது எமது வளத்தை எம்மிடம் விட்டுவிட்டு இடத்தை காலி பண்ணுங்கள் என்கிறார்கள். தங்கள் வளங்களை தாமே எடுத்து சுத்திகரித்து பூர்த்தியான உற்பத்திப் பொருளாக (finished product) -உங்களைப் போலவே- நாமும் ஏற்றுமதி செய்கிறோம், வாங்கிக் கொள்ளுங்கள் என கேட்கிறார்கள்.

இந்த வளங்கள் குடிகொண்டுள்ள பாறைகளை பாளம் பாளமாய்ப் பெயர்த்து பிரான்ஸ் மற்றும் மேற்குலகு தமது நாட்டுக்கு கொண்டுபோய் சுத்திகரித்து கொள்ளை இலாபமீட்டி, அதன்மூலம் தங்களை முட்டாளாக்கவும் ஏழ்மையை பரிசளிக்கவும் செய்கிற வரலாற்றை இனியும் தொடர வேண்டாம் என்கிறார்கள். தம்மை சுதந்திரமாக விட்டுவிடுங்கள் என்கிறார்கள். என்ன தவறு இருக்கிறது. வளம்கொண்ட பூமியில் வறுமை வருவதன் சூட்சுமம்தான் என்ன. அது என்னவகைத் தர்க்கம். வறுமை தானாக வருவதில்லை. அது மனிதரால் எற்படுத்தப்படுவது. அதை அவர்கள் முறியடிக்க நினைக்கிறார்கள். மாறிவரும் உலகும் அதன் வேகமும் ஏன் ஆபிரிக்காவை எட்டக்கூடாது. அதை ஏன் தடுக்கிறது மேற்குலகம்?.

Leave a comment