நைஜரின் ஒளிரும் யுரேனியம்

1

நைஜர் (Niger) என்ற நாடு நைஜீரியா, சாட், அல்ஜீரியா, மாலி, புர்கீனோ பாஸோ, லிபியா, பெனின் நாடுகளுடன் எல்லையைக் கொண்டது. 27 மில்லியன் சனத்தொகை உள்ள நாடு நைஜர். யுரேனியம், தங்கம், பிளாற்னம் போன்ற இயற்கை வளங்களைக் கொண்ட நாடு அது. ஆனால் அதை அவர்கள் அனுபவித்ததில்லை. வறுமையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யுரேனியத்தில் இயங்கும் பிரான்ஸின் அணுஉலைகள் பிரான்சுக்கான மின்சாரத்தை மட்டுமல்ல, ஜேர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மின்சாரத்தையும் உருவாக்குகின்றன. பிரான்சுக்கான தேவையின் மூன்றிலொரு பகுதி மின்சாரத்தை நைஜர் யுரேனியம் வழங்குகிறது. பிரான்ஸ் முழுவதும் மின்சாரம் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க, நைஜரில் 20 வீதமளவுக்குக்கூட மின்சாரம் பூத்ததில்லை. யுரேனியத்தை அகழ்ந்து கொண்டுவரும் பிரான்சின் ஈபிள் கோபுரம் இரவில் வால்நட்சத்திரமாக ஒளிர்ந்திருக்க, யுரேனியத்தை புதையலாக வைத்திருக்கும் நைஜர் நிலம் இரவில் சிறிய ஒளிக்கீற்றால் மட்டும் கீறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

நைஜரின் Arlit என்ற நகரில் இந்த புதையல்களைத் தோண்டும் பகாசுரக் கம்பனி ORANO (முன்னைய AREVA) ஆகும். உலகின் யுரேனிய அகழ்வில் ஈடுபடும் கம்பனிகளில் இதுவே முதலிடத்தில் உள்ளது. இந்தப் பகாசுர கம்பனியின் 80 வீதமான பங்கு பிரான்ஸ் நாட்டுக்கு உரியது. இந்தப் பங்கில் பிரான்ஸ் அரசின் பங்கு அதிகமானது. அது 54 வீதத்துக்கு மேற்பட்டதாகும். இந்தக் கம்பனி அணு உற்பத்திக்கான யூரேனியம், மற்றும் தங்கம், பிளாற்னம் என்பவற்றின் கையாளல், களவாடல் சம்பந்தப்பட்டு இயங்கிறது. அது யூரேனிய அகழ்வு, சுத்திகரிப்பு என்ற லேபலில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நிலத்தடி வளங்களை கொள்ளையிடுகிற வேலையில் சம்பந்தப்பட்டிருக்கிறது.

மின்சாரத்துக்குத் தேவையான யுரேனியத்தைவிட பலமடங்கு யுரேனியத்தை நைஜரிலிருந்து மட்டுமல்ல, கஜகஸ்தான்,ரசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுமிருந்தும் இறங்குமதி செய்து மேற்குலக நாடுகள் சேமிப்பில் வைத்திருக்கின்றன. அவை மின்சாரம், மருத்துவம் என்பவற்றுக்கு மட்டுமல்ல, அணுவாயுத தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. நைஜரில் தற்போதைய இராணுப்புரட்சி நடந்தபோது ஐரோப்பிய ஒன்றியம் அது தம்மை உடனடியாகப் பாதிக்காது எனவும் தம்மிடம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான சேமிப்பு உள்ளதாகவும் அறிவித்தது. பிரான்சுக்கு மட்டுமன்றி, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தேவையின் 25 வீத யுரேனியத்தை நைஜர் மட்டும் வழங்குகிறது. அதனால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கோ பிரான்சுக்கோ ஒரு நீண்டகால தேவையை பூர்த்திசெய்ய நைஜரை இழக்க முடியாது என்பது மட்டும் உண்மை. பிரான்சின் நலன் பாதிக்கப்பட்டால் படைநடவடிக்கையில் இறங்க நேரிடும் என மக்ரோன் எச்சரித்ததை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ளலாம்.

பிரான்ஸில் முன்னர் இருந்த யுரேனிய அகழ்வு சுரங்கங்களில் கடைசி 230 சுரங்கங்களையும் -சுற்றுச்சூழலைக் கருத்திற் கொண்டு- 2001 இல் மூடியபின், யுரேனியத்தை கசகஸ்தான், ரசியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து பிரான்ஸ் இறக்குமதி செய்யத் தொடங்கியது. ஆனால் நைஜர் இலிருந்து பிரான்ஸ் கம்பனி ORANO தாமே யுரேனியத்தை அகழ்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. உலகவங்கியால் மிக மோசமாக மாசுபட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டவற்றில் நைஜர் உம் ஒன்று. உலகவங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஒருமுறை இதுபற்றி கூறியபோது, “நைஜரை மாசுபடுத்துவதானது பிரான்ஸை மாசுபடுத்துவதைவிட மலிவானது” என்றார்.

இந்தக் கம்பனி அகழ்ந்து தள்ளும் நைஜர் நாட்டின் Arlit என்ற இடம் யுரேனியக் கதிர்வீச்சும், அதன் மாசும் சூழ்ந்த பேய்கள் உறங்கும் நகரமாக இருக்கிறது. ஆம், அங்கு அந்த ஏழை மக்கள் வாழவிடப்பட்டிருக்கிறார்கள். 120 ஹெக்ரர் நிலப்பரப்பில் திட்டுத்திட்டாக 35 மீற்றர் உயரம்வரையான 20 மில்லியன் தொன் ரொக்சிக் (toxic) கழிவுகள் Arlit நகரை மாசுபடர்ந்த நகரமாக ஆக்கியுள்ளது. இக் கழிவு கதிர்வீச்சுத் தன்மையுடையவை. காற்றும் நீரும் மாசுபட்டிருக்கின்றன. இதனால் ஏற்படும் மரணங்களும் நோய்களும் அதிகரித்த வீதத்தில் செல்கிறது. புற்றுநோய், இதயநோய், தோல்வியாதிகள், மைக்கிரேன் (ஒற்றைத் தலைவலி), மூட்டுவலி என இன்னோரன்ன நோய்கள் அவர்களை தாக்குகின்றன. Arlit இல் 120 வீடுகளில் வாழ்பவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் 16 வீதமானோரின் உடலில் மோசமான கதிர்வீச்சுத் தாக்கங்கள் காணப்பட்டிருக்கின்றன. Arlit இல் இரண்டு இலட்சம் பேர் இருக்கின்றனர். நாட்டின் மற்றைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் இந்த சுரங்கங்களுக்கு அருகாமையில் வசிக்கும் இவர்களின் இறப்பு வீதம் இரண்டு மடங்காக உள்ளது. இதுதான் பிரான்ஸின் அணு உலைகளில் ஒரு பகுதியை இயக்கும் Arlit நகரத்தின் நிலை.

CRIIRAD என்ற பிரான்ஸிய பரிசோதனைக்கூடத்தின் அணுவியல் பொறியியலாளரான Bruno Chaeyron என்பவர் கூறுகிறபோது, “ORANO மக்களுக்குப் பொய் சொல்கிறது. நீர்நிலைகளை தாம் பரிசோதித்தபோது எந்த கதிர்வீச்சு மாசுபடல் பிரச்சினையும் காணப்படவில்லை என சொல்கிறார்கள். ஆனால் அதே நீர்நிலைகளை நாம் பரிசோதித்தபோது அது மிக ஆபத்தான மட்டத்தில் காணப்படுகிறது” என்கிறார்.

பிரான்ஸ், பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தினதும் மின்சாரத் தேவையின் கணிசமான பகுதியை நைஜரின் சுரங்கங்கள் பூர்த்தி செய்கின்றன. இந்த நாடுகளின் அணு உலைகளில் பெரும் பகுதியை இயக்குவதற்கான விலையை நைஜர் மக்கள்தான் கொடுக்கிறார்களே யொழிய, பிரான்ஸ் அல்ல!. இந்த கதிர்வீச்சு மாசுபடலை முடிவுக்குக் கொண்டுவர பிரான்ஸ், பெல்ஜியம் நாடுகள் முன்வருமா என்ற கேள்விகளுக்கு விடையிருக்கவா போகிறது. ஐநாவின் மனித அபிவிருத்தி சுட்டியின்படி 193 நாடுகளில் 187 வது இடத்தில் நைஜர் இருக்கிறது. Arlit இல் யுரேனியத்தை அகழும் ORANO கம்பனியின் வரவுசெலவுத் திட்டத்தைவிட (budget), நைஜர் என்ற அந்த நாட்டின் வரவுசெலவுத் திட்டம் என்பது மிகமிகச் சிறியது என்பது எவளவு கொடுமையானது.

2

சுரண்டலுக்கு அளவேயில்லையா. 1960 இல் பிரான்ஸ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தபின், நைஜரை நவகாலனிய முறைமையில் சுரண்டும் பிரான்ஸின் -அதாவது மேற்கின்- ஜனநாயக முகம் இதுதான். இந்தச் சுரண்டலுக்காக ஆபிரிக்க நாடுகளில் தமது பொம்மை அரசுகளை தொடர்ச்சியாக உருவாக்கி பேணி வருகின்றன. இப்போ அரச கட்டிலிலிருந்து சதிப்புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்ட Mohamed Bazoum அவர்களும் பிரான்ஸின் செல்லப் பிள்ளைதான். (இவர் 2021 இல் ‘ஜனநாயக’ தேர்தல் முறைமை மூலம் ஆட்சிக்கு வந்த தலைவர் ஆவர்).

நைஜரின் பிரச்சினை இது மட்டுமல்ல. அதன் மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் ஜிகாத், பொக்கோ ஹராம், மற்றும் அல்கைடா அமைப்புகள் செயற்படுகின்றன. பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் பிரான்சின் 1500 வரையான படைகளையும் அமெரிக்காவின் 800 படைகளையும் கொண்ட அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றும் இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீடுகளும் இராணுப் பங்களிப்பும் உள்ளன. இந்த தலையீட்டை தக்கவைப்பதற்காகவே இந்த பயங்கரவாத அமைப்புகளை மேற்குலகம் பாலூட்டி வளர்த்துவிட்டதாக ஒரு விமர்சனம் உண்டு. இன்னொருபுறம் வறுமை அந்த நாட்டை சபித்திருக்கிறது.

இது எல்லாவற்றுக்குமான விடையை இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு தந்துவிடுமா என்பது கேள்விக்குறியே. ஜனநாயகக் கட்டமைப்பை நோக்கிய ஒரு தொடர் செயல்முறைமைகள் வளர்த்தெடுக்கப்படாமல், அடிக்கிற காற்றில் பறக்கிற கொடியாக நாட்டின் இராணுவங்கள் மக்களின் மீட்பர்களாக செயற்படுவது கதாநாயகத்தனத்தையும் சுயலாபத்தையும் தாண்டியதாக இருக்க வாய்ப்பு இல்லை. அவை மக்களின் மேற்குலகம் மீதான வெறுப்பை மூலதனமாகக் கொண்டதேயன்றி, மக்கள் விழிப்புணர்வு பெற்று பொங்கியெழுந்த போராட்டம் அல்ல.

பிரான்சுக்கான யுரேனியம் ஏற்றுமதியை நிறுத்துவதாக நைஜர் இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்ததாக வந்த செய்தி பொய் என Reuter போன்ற ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன, தமது செயற்பாடுகளில் எந்த இடையூறும் இல்லை என ORANO அறிவித்திருக்கிறது. “நைஜரிலிருந்து பிரான்சுக்கு யுரேனிய ஏற்றுமதி செய்யப்படுவது நிறுத்தப்படுமானாலும், எமக்கு உடனடியாக எந்த பாதிப்பும் வராது” என ஐரோப்பிய அணுசக்தி அமைப்பு EUROTOM தெரிவித்துள்ளது.

இராணுவ ஆட்சியாளர்களை நிர்ப்பந்தத்தின் மூலமோ அல்லது தமது சதிவலைக்குள் வீழ்த்தி அவர்களை விலைக்கு வாங்கவோ அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பின்நிற்காது. அதனடிப்படையில் இந்த புதிய இராணுவ ஆட்சியும் அமெரிக்காவின் பொம்மையாக மாறக்கூடிய சாத்தியத்தை மறுக்கமுடியாது என சில அரசியல் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இல்லையேல் நைஜர் இன்னொரு லிபியாவாக மேற்குலகால் மாற்றப்படும் என்றே தெரிகிறது.

ஆபிரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் எண்ணற்ற பொம்மை ஆட்சியாளர்களை ஆட்சிக்கவிழ்ப்பு மூலமோ, சுத்துமாத்து ஜனநாயக முகமூடி அணிவித்தோ அமெரிக்கா உருவாக்கிய தொடர் நிகழ்வுகளின் பாதை -அதே மேற்குலகை எதிர்க்கும் முறைமையாக- இப்போதைய மேற்கு ஆபிரிக்க நாடுகளின் ஆட்சிக் கவிழ்ப்புகளின் முன்னுதாரணமாக இருக்கின்றது. இதனிடையே 15 ஆபிரிக்க நாடுகளை அங்கத்தவர்களாகக் கொண்ட பொருளாதாரக் கூட்டமைப்பு ECOWAS உம் ஆபிரிக்க ஒன்றியமும் (AU) இந்த இராணுவ ஆட்சிமாற்றத்தை ஏற்கவில்லை. “மீண்டும் அரசியல்சாசனத்தின் அடிப்படையிலான அரசை கொண்டுவர வேண்டும்; இராணுவம் முகாம்களுக்கு திரும்ப வேண்டும்” என அறிவித்திருக்கின்றன. ஒரு ஜனநாயகவழிப் பாதையில் சரிகளோடும் தவறுகளோடும் பயணிக்கும் முறைமையை இவ்வாறான ஆட்சிக் கவிழ்ப்புகள் இடையூறு செய்வதாக அவை கருதுவதாகத் தெரிகிறது.

புர்கீனோ பாஸோ, அல்ஜீரியா, மாலி போன்ற சில அண்டை நாடுகள் நைஜர் இராணுவ ஆட்சியாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த ஆதரவை இராணுவ ரீதியிலும் வழங்கத் தயார் என அறிவித்துள்ளன. இதேநேரம் ரசிய கூலிப்படையான வாக்னர் குழு இந்த ஆட்சிக் கவிழ்ப்பை சுதந்திரப் போராட்டம் என கூறுகிறது. நைஜர் ஆட்சியாளர்கள் வாக்னர் படையின் ஆதரவை கேட்டிருக்கின்றனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னால் ரசியா இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது.

3

கடந்தகால இராணுப் புரட்சிகள் போலன்றி தற்போதைய மேற்கு ஆபிரிக்க இராணுப் புரட்சிகளை மக்கள் பலமாக ஆதரிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. வேகமாக மாறிவரும் உலகில் இளைய சமுதாயம் ஆபிரிக்காவில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் மந்த நிலைமைகளை விரக்தியுடன் நோக்குவதாகவும், ஊழல் படிந்த தேர்தல் முறைமை இழுத்தடிப்புகளைவிட மிக வேகமான மாற்றத்தை விரும்புவதாகவும், அதை இராணுவ ஆட்சிமாற்றங்களினூடாகக் காண்பதாகவும் அரசியல் பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. மேற்கு ஆபிரிக்காவில் நடைபெறும் அடுத்தடுத்த ஆட்சிக் கவிழ்ப்புகளை ஒரு ஜனநாயக ஸ்பரிசத்துக்கான அலையின் வெளிப்பாடாக அந்த மக்கள் பார்க்கிறார்கள். மேற்குலகின் வரலாறு பூரான -அடிமைத்தனம், நிறவாதம், பொருளாதாரச் சுரண்டல், ஏமாற்று, இழிவு போன்ற- பௌதீக மற்றும் கருத்தியல் ஒடுக்குமுறைகளின் அடித்தளமான வெள்ளை மேலாதிக்கத்தின் சூழ்ச்சிகளை அறிந்திருப்பவர்களாகவும் அதற்கெதிரான உணர்வுகளை கொண்டவர்களாகவும் இளம் சமுதாயம் காலமாற்றத்தோடு தம்மை அடையாளப்படுத்தத் தொடங்கியுமிருக்கிறது.

இன்று மாறிவரும் உலக அரசியலின் ஒரு விளைவாக, ஒற்றை உலக ஒழுங்கு கேள்விக்குள்ளாவதன் விளைவாக, சீனாவின் ஆபிரிக்கக் கண்ட முதலீடுகள் மற்றும் அந்த நாடுகளில் போக்குவரத்துக் கட்டமைப்புகளின் அபிவிருத்தி, BRICS இன் வளர்ச்சி போன்றன ஆபிரிக்கக் கண்ட நாடுகளில் மேற்குலகின் மீதான வெறுப்பை ஆபிரிக்க மக்களும் சில அரசுகளும் கட்சிகளும் துணிந்து வெளிக்காட்ட களம் அமைத்திருக்கின்றன. அது ஒரு ஜனநாயகக் கட்டமைப்பு இன்றி இயங்க வைக்கப்பட்ட நைஜர் போன்ற நாடுகளில் குழப்பமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. இராணுவப் புரட்சிகளையும், வெற்றுக் கோசங்களையும் உருவாக்கியிருக்கின்றன. ஆனால் யதார்த்தத்தில் அவை இலகுவாக நசுக்கப்படக்கூடியதாகவே வரலாறு காட்டிச் சென்றிருக்கிறது.

அந்த இயலாமையின் ஒரு நம்பிக்கை தரும் குறியீடாக இந்த மக்கள் ரசியக் கொடியை ஊர்வலங்களில் உயர்த்திக் காட்டியுள்ளனர். போருக்குள்ளும் பொருளாதாரத் தடைகளுக்குள்ளும் அகப்பட்டிருக்கும் ரசியா -விரும்பினால்கூட- இவர்களை உடனடியாக வறுமையிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் மீட்க முடியாது என்பதே யதார்த்தம். ஆனாலும் தம்மீதான மேற்குலகின் சுரண்டல் பற்றிய விழிப்புணர்வும் அதை வெளிப்படுத்தும் ஒரு களமும், (BRICS அமைப்பு, சீனா, ரசியா போன்ற) ஆதாரசக்திகளும் கிடைத்திருப்பதாக மக்கள் கருதுவது ஒரு நேரம்சமாக உள்ளது. வீதிக்குவந்து இறைஞ்சும் இந்த மக்களின் கனவுகளை BRICS தத்தெடுக்குமா என்பதை பொறுத்து அந்த நேரம்சம் வீச்சுப் பெற வாய்ப்பு உண்டு. இல்லையேல் மேற்குலக பிசாசுகள் அந்தக் கனவுகளை மீண்டும் தின்று செரித்துவிடும்.

  • 06082023
  • Thanks for images: VectorStock (1), africanarguments.org (2), atalayar.com (3)

Leave a comment