கலவரமும் காட்சிப் பிழையும்!
பிரான்சில் கடந்த செவ்வாயன்று இளைஞன் நகேல் கொல்லப்பட்டதிலிருந்து தோன்றிய கலவரம் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளை மட்டுமன்றி 20 க்கு மேற்பட்ட வேறு நகரங்களுக்கும் பரவியிருக்கிறது. அது நேற்று இரவு சுவிற்சர்லாந்தின் லொசான் நகரத்திலும் அதே வடிவில் வெளிப்பட்டது. ஆனாலும் அது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுவிஸ் பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்தக் கொலைக்கு எதிராக பெல்ஜியத்தில் கடந்த 30ம் தேதி அமைதியான பெரும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.
பிரான்சில் நடந்த பிரச்சினையின் தீ ஏன் இந்த நாடுகளிலும் வெளிப்படுகிறது என்பதிலிருந்து கேள்விகளை எழுப்புகிறபோது, மேற்குலகில் உள்ளார்ந்த வடிவமாக செயற்படும் systemic racism இன் பொதுமைதான் காரணம் என்பதை கண்டுகொள்ள முடியும்.
இந்த systemic racism இனை இன்றைய இளம் சமுதாயம் அனுபவப்படுவதற்கும் முதிய சமுதாயம் இனவாதத்தை நேரடி இனவாதமாக அனுபவித்ததிற்கும் இடையில் “வித்தியாசங்கள்” இருக்கின்றன. காலவெளியோடு அடைந்த மாற்றம் அது. வந்தேறிகள் என்ற சுட்டலின் கீழ் அடையாளப்படுத்தப் படுபவர்களிடையேயும் அடையாளப் படுத்துபவர்களிடையேயும் என இரு சாராரிடமும் மேற்சொன்ன “வித்தியாசங்களின்” அடிப்படையில் எழும் சிந்தனைகளும் கருத்துகளும் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுகின்றன.
இதில் ஒரு பகுதி தமிழர்கள் புரிந்துகொண்டிருக்கிற விதம் (இனவாதத்தை ஒத்த) சாதிய மனநிலையிலும் வெள்ளைக் காலனிய மனநிலையிலிருந்தும் எழுகிறது. நாம் எங்கே நிற்கிறோம் என்பதை காட்டும் இன்னொரு உதாரணமாக இது இருக்கிறது. 130 வருடங்களுக்கு மேலாக பிரான்ஸ் கொலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டதிலிருந்து தொடங்கி, முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் பிரான்சுக்காக போரிட்டு மடிந்த வரலாறும், பின் பிரான்ஸ் காலனியாதிக்கத்திற் கெதிராக போராடிய வரலாறும் என பிரான்சுடன் சுமார் 200 வருட கால வரலாறு கொண்ட மக்களின் இன்றைய கொதிநிலையை பிரான்சுடன் எந்த வரலாற்றுப் பிணைப்பும் அற்ற தமிழர்களில் ஒரு பகுதியினரும், புலம்பெயர் வாழ்வில் வெறும் அகதிகளாக ஒரு 40 வருடங்களை கடந்துவிட்ட தமிழர்களில் ஒரு பகுதியினரும் பார்க்கிற பார்வை அபத்தமானதாக இருக்கிறது.
நகேலின் உயிர்த் தீ !
17 வயதான அந்த இளைஞன் நகேலின் காரை நிறுத்தி பொலிஸ் யன்னலோரமாக மிக அண்மையில் வைத்து சுட்டுக் கொன்ற காணொளியை பார்த்தவர்களின் முன்னால், பொலிஸ் “பாதுகாப்புக்காகச்” சுட்டதாக சொன்ன பொய் அம்மணமாக நின்றது. பொலிசின் அப்பட்டமான அராஜகம் என்பது தெரிந்தது. அது சம்பவம் அல்ல, (இனவெறியின்) வெளிப்பாடு என்பதில் பிடித்த தீதான் இந்தக் கலவரம். பிரான்சின் இந்தப் போராட்டத்தில் ‘பிரெஞ்சு வட ஆபிரிக்கா’ என முன்னர் சுட்டப்பட்ட அல்ஜீரியா, மொரோக்கர், துனேசியா போன்ற நாடுகளை வேர்நாடுகளாக கொண்டவர்கள் மட்டுமல்ல, பிரான்சை வேராகக் கொண்ட இளைஞர்களும் சேர்ந்தே ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இனவாதத்துக்கு எதிரான வேறுபாடற்ற குரலாக அதை நாம் பார்க்கலாம்.
ஒரு போராட்டம் என்பது சந்தர்ப்பங்களில் வெடிப்பாக வருவதற்கு மையக் காரணம் ஒன்று இருக்கும் அதே நேரம் மற்றைய காரணிகளும் இணைந்துகொண்டுவிடுகிறது. தொடர்ந்த இனவாதத்துக்கெதிரான இந்தத் திடீர்க் கிளர்ச்சியோடு பொருளாதார ரீதியில், யுத்த எதிர்ப்பு ரீதியில்… என வேறு காரணிகளும் இணைந்துவிடுகின்றன. அண்மைக்காலங்களில் விடாப்பிடியாக பிரெஞ்சு மக்கள் நடாத்திய போராட்டங்களின் தோல்விகளின் வெப்பியாரமும் இணைந்துகொண்டு விட சாத்தியம் உண்டு.
ஜனநாயகத்தின் உண்மை முகம்!
பிரான்ஸ் தேசம் பிரெஞ்சுப் புரட்சியின் மூலம் ஜனநாயகத்தின் ஒரு குறியீடாக வரலாறு பூராகவும் நினைவுகூரப்படும் நாடாகும். அந்த மக்கள் அதில் வேர்விட்டு அதற்கூடாக பரம்பரைகொண்ட மக்கள். அதனால்தான் -மற்றைய மேற்குலக நாடுகளை விடவும்- அண்மைக் காலங்களில்கூட மஞ்சள் அங்கிப் போராட்டம், ஓய்வூதிய வயதெல்லை சீரமைப்புக்கு எதிரான போராட்டம் என நெடும் போராட்டங்களை நடத்திக் காட்டியவர்கள். மக்களால் தெரிவுசெய்யப்படும் ஜனநாயக முறைமையில் மக்களின் சொல்லை புறக்கணித்து தாம் நினைத்ததையே நடத்தி முடிக்கும் சூழ்ச்சிகரமான அணுகுமுறைகளில் இயங்குவது முதலாளித்துவ ஜனநாயக முறைமை. பிரான்ஸ் அரசும்தான்!
மேற்குலக அரசுகள் ஜனநாயகக் கட்டமைப்புகளை உருவாக்கி நிர்வாகத்தனமாக பேணுவதோடு சரி. ஜனநாயகத்தை பண்பாகக் கொண்டிருப்பதில்லை. இந்த அரசுகள் பூகோள அரசியலுக்கு ஏற்ப நகர்ந்துகொண்டுவிடுகின்றன. காலனியாதிக்கம், போர்கள் எல்லாமே ஜனநாயகப் பண்புக்கு எதிரானவை. ஆனால் செய்தன. காலனியாதிக்க வன்முறைகள் இன்றைய போர் வன்முறைகள் என எதுவுமே மேற்குலக நாடுகள் ஜனநாயக மனநிலையில் செயற்படுவது இல்லை என்பதை தெளிவாக்குவன.
முதலாளித்துவ வளர்ச்சி சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது. அதனால் அது வன்முறையோடு பிணைந்திருக்கிறது. தனது தொழிலாளர்களை சுரண்டுவது என்பதற்கு மேலாக, வளமுள்ள ஏழை நாடுகளை அதன் வளங்களை கொள்ளையடிப்பதன் மூலம் பெறும் பெரும் நிதியில் தமது நாடுகளுக்குள் பொருளாதாரத்தை குவித்து, ஜனநாயக கட்டமைப்பை சீரமைத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த மேற்குலக நாடுகளில் வாழும் மக்கள் அதை -ஏற்றத்தாழ்வுடன்- அனுபவிக்கிறார்கள். ஒருவகையில் சலுகைபெற்ற மக்கள்தான், அவர்கள்!. அங்கு வாழும் நாங்களும்கூட.
அடுத்தது, ஜனநாயகத்தின் ஒரு அம்சம் வெளிப்பாட்டுச் சுதந்திரம் என சொல்லிக்கொண்டு சுவீடன் அரசானது -இஸ்லாமியர்களின் நம்பிக்கையை காயப்படுத்தும் விதமாக- குர்ஆன் எரிப்பை முதலில் அங்கீகரித்து வியாக்கியானப்படுத்தியது. அந்த ‘வெளிப்பாட்டுச் சுதந்திர’ வியாக்கியானத்துக்கு முரணாக, பிரான்ஸ் அதிபர் இப்போ ரிக்ரொக் உட்பட சமூகவலைத்தளங்களில் தணிக்கையைக் கோருகிறார். களத்தில், கைதுகளின்போது பொலிஸ் நடந்துகொள்ளும் முறையை அல்லது வன்முறைகளை படம்பிடிக்க தடையாக பொலிஸ் தடையரண்களாக குறுக்கறுத்து நிற்பதும் நடக்கிறது. ஒன்றும் புதிதல்ல. ஆனால் இதுதான் முதலாளித்துவ அரசுகளின் வெளிப்பாட்டு சுதந்திரத்தின் ஜனநாயக இரட்டை முகம். மேற்குலகில் மட்டுமல்ல இது!
கொலனி பிடித்தபோதும் சரி, பின்னரான நவ காலனிய முறைகளில் ஏழை நாடுகளின் ஆட்சிமுறைமைகளையும் ஆட்சியாளர்களையும் ஊழல் படிந்த ஆட்சியாகப் பேணி தமக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டபோதும் சரி, அவர்களின் ஜனநாயகமும் வன்முறையும் இரவும் பகலும் போன்றே செயற்படுகின்றது. ஏழை நாடுகளின் மனித வளம் இயற்கை வளம் என எல்லா வளங்களையும் கொள்ளையடிப்பதில் மில்லியன் கணக்கான மக்களை கொலைசெய்யவோ, அடிமைகளாக்கவோ, கலாச்சாரங்களை அழித்தொழிக்கவோ அவர்கள் பின்நின்றதில்லை. இந்த நூற்றாண்டிலும் போர்களின் மூலம் அதே வன்முறைகள்தான்.
இந்த பிரமாண்டமான களவுகளையும் கொலைகளையும் பண்பாட்டு அடையாள தீக்கிரையாக்கல்களையும் செய்துகொண்டு, தமக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும்போது கடையை உடைத்து நாலு பொருட்களை களவெடுத்து ஓடிச் செல்லும் அதிகாரமற்ற சாமான்ய மனிதர்களை காட்டி போராட்டத்தின் மையத்தை மறைத்து அதன்மீது சேறுபூசுகிற தந்திரத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மேற்குலக ஊடகங்கள் அதை கச்சிதமாகச் செய்கின்றன. நமக்கு மலைகள் தெரிவதில்லை. சல்லிக்கல்தான் உறுத்துகிறது.
வட ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்களின் வரலாறு நூற்றாண்டுகளோடு நகர்ந்திருக்கிறது. அவர்கள் பல சந்ததிகள் கடந்தவர்கள். அவர்கள் பிரெஞ்சு குடிமக்கள். இருந்தும் அவர்கள் இன்றுவரை கல்விநிலையங்கள், வேலைவாய்ப்புகள், வீட்டுவசதிகள், பொலிஸ் கட்டமைப்பின் அணுகுமுறைகள் என்பவற்றில் தாம் வேறுபாடுகள் காட்டப்படுவதாக உணர்ந்தால், அதை பிரான்ஸ் அரசு கையாளவேண்டும். அது ஏன் சீர்செய்யப்படவில்லை அல்லது அப்படி எதுவுமே இல்லை என பிரான்ஸ் அரசு மறுக்கிறதா.
அல்ஜீரியர்களும் போர்களும்!
‘அடையார்’ அல்லது ‘அடை’ என தமிழர்களால் சுட்டப்படுகிற இந்த அல்ஜீரியகளுக்கும் பிரான்ஸ் தேசத்துக்கும் இடையிலான வரலாறு நீண்டது. 1830 இலிருந்து 132 வருடங்களாக பிரான்ஸ் அல்ஜீரியாவை கொலனியாக்கி வைத்திருந்தது.
முதலாவது உலக யுத்தத்தின் போது பிரெஞ்சு தேசத்துக்காக 172’000 அல்ஜீரிய இராணுவத்தினர் போரிட்டனர். இதில் 43’000 பேர் பலியாகினர். இரண்டாவது உலக யுத்தத்தில் 134’000 அல்ஜீரியர்கள் ஐரோப்பாவின் விடுதலைக்காக போரிட்டனர். 18’000 பேர் பலியாகினர். இந்த இரு யுத்தங்களிலும் அவர்களில் ஒரு பகுதியினர் தொண்டர் அடிப்படையில்கூட பிரான்சுக்காக போரிட்டார்கள். அமெரிக்காவுக்கு முன்னர் வியட்நாமை ஆக்கிரமித்திருந்த நாடு பிரான்ஸ். அந்த ஆக்கிரமிப்புப் போரிலும் பிரான்ஸ் இராணுவத்தில் அல்ஜீரியர்களும் அங்கம் வகித்திருந்தனர்.
1956 இல் அல்ஜீரியாவில் 4 இலட்சம் பிரான்ஸ் படையினர் இருந்தனர். அவர்களில் 170000 பேர் அல்ஜீரியர்கள். 1954 இலிலிருந்து 1962 வரையான காலப் பகுதியில் கொலனியவாதிகளுக்கு எதிராக அல்ஜீரியா ஆயுதம் தாங்கிய பெரும் போராடங்களை சந்தித்தது. விடுதலைப் படையான FLN அமைப்புக்கு சோவியத் மற்றும் சீன நாடுகள் உதவி வழங்கின. 1962 இல் அல்ஜீரியா கொலனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து சுதந்திர நாடாக பரிணமித்தது. FLNஅமைப்பின் போராட்டத்தில் 300’000 இலட்சம் போராளிகளும் 40’000 பொது மக்களும் இணைந்து செயற்பட்டனர். இந்தப் போராட்டத்தில் 150’000 பேர் பலியானார்கள்.
இந்த வரலாறு பிரான்ஸ் தேசத்துக்கும் அந்தத் தேசத்துக்காகப் போராடி இழப்புகளைச் சந்தித்த அல்ஜீரியர்களுக்குமான தொடர்பினை காட்டுவதாக உள்ளது. பிரான்ஸ் தேசத்தை காப்பாற்றவும் கட்டியெழுப்பவும் தம்மை ஒப்புக்கொடுத்த இவர்களை ‘வந்தேறிகள்’ அல்லது ‘குடியேற்றவாசிகள்’ என்பது எவளவு பொருத்தமோ தெரியவில்லை.
பிரான்சின் இனவாதம் குறித்து!
ஆபிரிக்கா குறித்த ஆய்வாளரும் சமூகவியல் பேராசிரியரமான ஸ்ரோனி புறூக் அவர்கள் “பிரான்ஸ் இதை systemic racism என ஏற்றுக்கொள்வதற்கும் அதை முகங்கொடுப்பதற்கும் இன்னும் எத்தனைபேர் இப்படியான கொடுமைக்கு பலியாகவேண்டி இருக்குமோ என ஆச்சரியமாக உள்ளது” என்கிறார்.
பிரான்சின் Nanterre இல் 50 வருடங்களாக வதியும் மரியா, “வாழ்நாள் முழவதும் பொலிசுடனான இவ்வாறான பிரச்சினைகளை கண்டுகொண்டு வருகிறேன். இந்த நிலை நிறுத்தப்பட வேண்டும். அரசு முற்றாகவே எமது யதார்த்த நிலையிலிருந்து தொடர்பற்றதாக இருக்கிறது” என்கிறார்.
SOS Racisme அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் (Tracy Ladji) கூறுகையில், “அமெரிக்கா பிரான்ஸ் இரு நாடுகளினும் கலாச்சாரம், பொலிஸ் படை மற்றும் சமூகம் என்பவற்றுக்கு இடையில் வேறுபாடுகள் இருப்பினும் இந்த systemic racism, பொலிஸ் அராஜகம் இரண்டையும் பார்க்கும்போது இந்த விடயத்தில் அமெரிக்கா தனியாக இல்லை என்பதையே காட்டுகிறது”எனக் கூறும் அவர்,
“வேறு நாட்டில் வேர் கொண்ட பிரான்சு நாட்டவருக்கு நடக்கும் சம்பவங்கள் இவை. நாங்கள் பிரெஞ்சுக்காரர்களாக கருதப்படுவதில்லை. பிரான்சில் நாம் பிறந்தபோதும்கூட அவர்கள் எமது உடல் நிறத்தையும் நாம் எங்கிருந்து வந்தோம் என்பதையுமே பார்க்கிறார்கள்” என்கிறார்.
ஜோர்ஜ் புளொய்ட் அவர்களின் கொலை 2020 இல் அமெரிக்காவில் பெரும் கலவரங்களை ஏற்படுத்தியது. இப்போ பிரான்சில் நகேல் இன் கொலை இனவாதத்தின் இன்னொரு உதாரணம். ஆனாலும் அமெரிக்க பொலிஸ் கட்டமைப்பின் இனவெறி நடவடிக்கைகள் அளவுக்கு பிரான்சில் நிலைமை வீரியமாக இல்லை. 2017 க்குப் பின்னரே இவ்வாறான சம்பவங்கள் பிரான்சில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது. எனவே இச் சம்பவம் பிரான்ஸ் அரசுக்கு இதுவிடயத்தில் தம்மை தாமே கேள்விகேட்கும்படி முகத்திலறைந்து சொல்லியிருக்கிறது எனலாம். பொலிஸ் இராணுவம் போன்ற அரச வன்முறை இயந்திரங்களின் கட்டமைப்பினுள் நிலவும் போக்கை மாற்றியமைப்பது என்பது அவளவு எளிதானதல்ல.
மேற்குலகம் இன்று எதிர்நோக்கியிருக்கிற நிழற்போரும் அதன்விளைவான பொருளாதார சவால்கள் ஒருபுறமும், மேற்குலகின் உலக ஒழுங்குக்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்தும் அதன்விளைவான வெள்ளையின மேலாதிக்கத்துக்கு ஏற்பட்டிருக்கிற சவால்கள் இன்னொருபுறமும் நிலவும்போது இனவாதம் இறங்குமுகத்தில் செல்ல சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
- 02072023
- Thanks for images : ABC10, Free Press Journal, The New York Times


