வாழைப்பழ அரசியல்

வாழைப்பழத்தின் பூர்வீகம் தெற்கு,தென்கிழக்கு ஆசியா என சொல்லப்படுகிறது. கரப்பா காலத்தின் கி:மு 3000-2500 தொல்பொருள் சான்றுகள் இதை நிரூபித்திருக்கின்றன. போத்துக்கீச, ஸ்பானிய காலனியவாதிகள் இதை தென்னமெரிக்கா மத்திய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு காலநிலைப் பொருத்தம் கருதி எடுத்தச்சென்றனர் என சொல்லப்படுகிறது. அதில் தொடங்கிய அதன் அரசியல் இருபதாம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய கனவுகளுக்கும் தீனி போட்ட வரலாறு இது.

வாழைப்பழ நாடுகள்

2021 கணக்கெடுப்பின்படி வாழைப்பழ உற்பத்தியானது,

1. இந்தியா – 33 மில்லியன் தொன்

2. சீனா – 11.7 மில்லியன் தொன்

3. இந்தோனேசியா – 8.7 மில்லியன் தொன்

4. பிரேசில் – 6.8 மில்லியன் தொன்

5. எக்குவடோர் – 6.6 மில்லியன் தொன்

6. பிலிப்பைன் – 5.9 மில்லியன் தொன்

7. அங்கோலா – 4.3 மில்லியன் தொன்

8. குவாத்தமாலா – 4.2 மில்லியன் தொன்

9. தன்சானியா – 3.5 மில்லியன் தொன்

10. கொஸ்ரா றீக்கா – 2.5 மில்லியன் தொன்

என்ற கணக்கில் விளைச்சலாகிறது.

இந்தியாவில் 800’000 ஹெக்ரர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. மகாராஸ்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேஷ், மற்றும் அசாம் பிரதேசங்களில் இவை பெருமளவில் பயிரிடப்படுகிறது.

இருந்தபோதும் இந் நாடுகளில் பலவும் உள்நாட்டுச் சந்தைகளுக்கான தேவைகளையே மையமாகக் கொண்டிருக்கின்றன. உலகின் முன்னணி ஏற்றுமதி நாடுகளாக எக்குவடோர் 24 சதவீதமும், கொஸ்ரா றீக்கா 12.9 சதவீதமும், பிலிப்பைன்ஸ் 7.8 சதவீதமும், கொலம்பியா 7 சதவீதமும், குவாத்தமாலா 6.5 சதவீதமும் என்ற அடிப்படையில் இருக்கின்றன. 5 பெரும் கம்பனிகள் Dole, Del Monte, Chiquita, Fyffes and Noboa உலக சந்தையின் 80 வீதமான வாழைப்பழ ஏற்றுமதியை கட்டுப்படுத்துகின்றன.

அரசியல்

வாழைப்பழம் எல்லோராலும் விரும்பப்படும் பழவகைகளில் ஒன்று என்ற இனிமைக்குப் பின்னால் அது ஒரு அரசியல் ஆயுதமாக எப்படி பாவிக்கப்பட்டது என்ற கசப்பும் உள்ளது. ரெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான Rebecca Cohen சொன்னார், “வாழைப்பழம் ஒரு பழம் என்பதாய்த் தெரிந்தாலும் அது சுற்றுச்சூழல் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, மற்றும் சமூக அரசியல் சார்ந்த பிரச்சினைகளையும் அது கொண்டிருக்கிறது. வாழைப்பழ வர்த்தகமானது பொருளாதார ஏகாதிபத்தியம் மற்றும் விவசாயப் பொருளாதார உலகமயமாக்கம் என்பவற்றை அடையாளமாகக் கொண்டுள்ளது.“ என்றார்.

வாழைப்பழ வர்த்தகம்

இலத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள வாழைப்பழ வர்த்தகமானது 1871 இல் கொஸ்ரா றீக்காவில் அமைக்கப்பட்ட புகையிரதப் பாதையோடுதான் தொடங்கியது. அமெரிக்கர்களால் இப் பாதை நிர்மாணிக்கப்பட்டபோது நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அமெரிக்கர்களுக்கு அது பொருட்டாக இருக்கவில்லை. இந்த நீண்ட புகையிரதப் பாதையின் இருமருங்கிலும் வாழைப் பயிர்ச் செய்கையை செய்யும் திட்டத்தை சாத்தியமாக்குவதுதான் அவர்களின் குறியாக இருந்தது.

இந்தப் பாதையினூடே வர்த்தகம் தொடங்கியதும் வாழைப்பழம் அமெரிக்காவுக்கு இலகுவாக சென்றடையக்கூடிய போக்குவரத்து வசதியை உருவாக்கியது. 1880 களில் சில கம்பனிகள் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டபோதும், 1899 இல் UFCO (United Fruit Comapy) உலகின் மிகப் பெரிய வாழைப்பழ உற்பத்தி கம்பனியாக இருந்தது. இக் கம்பனியானது இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் வாழைப்பழ உற்பத்தியை செய்தது. இந்தப் பாதையினூடே வர்த்தகம் தொடங்கியதும் வாழைப்பழம் அமெரிக்காவுக்கு இலகுவாக சென்றடையக்கூடிய போக்குவரத்து வசதியை உருவாக்கியது.

1880 களில் சில கம்பனிகள் இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டபோதும், 1899 இல் UFCO (United Fruit Comapy) உலகின் மிகப் பெரிய வாழைப்பழ உற்பத்தி கம்பனியாக இருந்தது. இக் கம்பனியானது இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியனிலும் வாழைப்பழ உற்பத்தியை செய்தது. கொலம்பியா, கொஸ்ரா றீக்கா, கியூபா, யமெய்க்கா, நிக்கரகுவா, பனாமா போன்ற நாடுகளிலும் டொமினிக்கன் குடியரசின் தலைநகரமான Santo Domingo இலும் வியாபித்திருந்தது. 180 கி.மீற் நீளம் கொண்ட புகையிரதப் பாதையானது மேற்கூறிய வாழை உற்பத்திப் பிரதேசங்களையும் துறைமுகங்களையும் இணைத்து வைத்திருந்தது. 180 கி.மீற் நீளம் கொண்ட புகையிரதப் பாதையானது மேற்கூறிய வாழை உற்பத்திப் பிரதேசங்களையும் துறைமுகங்களையும் இணைத்து வைத்திருந்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (அப்போதைய சனத்தொகை 70 மில்லியன்) அமெரிக்க மக்கள் சராசரியாக வருடத்துக்கு 16 மில்லியன் வாழைக் குலைகளை உட்கொண்டனர். அதனால் கம்பனி பெரும் இலாபமடைந்தது.

இந்த UFCO கம்பனியானது வாழைப்பழ உற்பத்தியை மையமாக வைத்து உலக நாடுகள் சிலவற்றில் பெருமளவான நிலங்களை வாங்கிக் கொண்டது. உள்ளுர் மக்களிடமிருந்து களவாடப்பட்ட நிலங்களும் இதுள் அடக்கம். UFCO வின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானவை குவாத்தமாலாவும் கொலம்பியாவும் ஆகும்.

குவாத்தமாலா

1901 இல் குவாத்தமாலாவின் சர்வாதிகாரி Manuel Estrada Cabrera குவாத்தமாலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அஞ்சல் போக்குவரத்துக்கு அனுமதியை UFCO வுக்கு வழங்கினார். இவ்வாறாகத்தான் UFCO குவாத்தமாலாவுக்குள் காலூன்றியது. அதன் பிறகு இந்தக் கம்பனியின் மேற்பார்வைக்குக் கீழ் குவாத்தமாலா வரத் தொடங்கியது. இந்த சர்வாதிகாரி (Cabrera) UFCO வின் பொம்மை ஆட்சியாளராக இருந்தார். UFCO வின் துணைநிறுவனமாக “குவாத்தமாலா புகையிரத வழித்தட கம்பனி” உருவாகியது. இதற்கு 40 மில்லியன் டொலர் முதலீடாகப் போடப்பட்டது.

UFCO வானது குவாத்தமாலாவின் போக்குவரத்தை மட்டுமல்ல, தொலைத் தொடர்பையும் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தது. குவாத்தமாலாவின் Puerto Barrios. துறைமுகத்தினூடாக ஏற்றுமதியாகும் அல்லது இறக்குமதியாகும் சரக்குகளுக்கு UFCO வரி விதித்தது. அதுமட்டுமல்ல, குவாத்தமாலாவின் எல்லா வரிவிதிப்புகளிலிருந்தும் 99 வருடங்களுக்கு தமக்கு விலக்களிக்கும் ஒப்பந்தத்தை சர்வாதிகரி Cabrera வுடன் செய்துவிட்டிருந்தது.

1951 இல் Jacobo Arbenz, மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதுவரை 2.2 வீதமானவர்கள் 70 வீதமான நிலத்தை உடமையாக்கி வைத்திருந்தனர். குவாத்தமாலா சனத்தொகையின் 90 வீதமான மக்களுக்கு 10 வீதமான நிலமே இருந்தது. அவர்களில் பெரும் பகுதியினர் பூர்வ குடிகள். பெரும் நிலச்சுவாந்தர்களின் பெருமளவு நிலம் பாவிக்கப்படாமலே இருந்தது. Jacobo Arbenz நிலப் பங்கீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். பாவனையற்றிருந்த நிலத்தில் 90 வீதமானவற்றை விவசாய நிலமாக மாற்றினார். இது UFCO வை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனெனில் பாவனையில்லாதிருந்த நிலப் பரப்பில் பெரும்பாலானதும் இக் கம்பனிக்கு சொந்தமானவையாக இருந்தன.

UFCO அமெரிக்க அரசின் உதவியை நாடியது. அமெரிக்க அரசும் UFCO உம் அமெரிக்க மக்களிடையே பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. அதாவது குவாத்தமாலா “கம்யூனிச அரசு” என்றும், “சோவியத் மேற்பார்வை அரசு” எனவும் அப் பிரச்சாரம் பரப்பப்பட்டது. அதனால் அந்த அரசு தூக்கியெறியப்பட வேண்டும் என்ற கருத்தியலை உருவாக்கியது. அமெரிக்க அரசும் சிஐஏ யும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி Jacobo Arbenz அவர்களை 1954 இல் ஒரு சதிப்புரட்சி மூலம் வீழ்த்தியது.

தனது பொம்மை ஜனாதிபதியாக தீவிர வலதுசாரியும் சர்வாதிகாரியுமான Carlos Castillo Armas இனை அதிகாரத்துக்குக் கொண்டுவந்தது. இதுவே குவாத்தமாலாவின் இராணுவ சர்வாதிகார வரலாற்றின் தொடக்கமாக இருந்தது. அமெரிக்காவின் நிழலில் 30 வருடங்களாக சில சர்வாதிகாரிகள் மாறிமாறி ஆட்சிசெய்தார்கள். இதன் விளைவாக இரண்டு இலட்சம் பேர் உள்நாட்டு யுத்தத்தில் மரணமடைந்தார்கள்.

கொலம்பியா

1928 பனிக்காலம். கொலம்பிய நகரமானCiénaga இல் வாழைப்பழ உற்பத்தித் தொழிலாளர்கள் தமது வாழ்வாதார தேவைகளையும், சம்பள உயர்வையும் கோரி பெரும் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். ஒன்றும் விசேடமான கோரிக்கைகள் அல்ல இவை. இருந்தபோதும் டிசம்பர் 6ம் தேதி அவர்கள் திரண்டிருந்த கூட்டமொன்றில், தொழிற்சங்க தலைவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, கொலம்பிய இராணுவம் பெரும் படுகொலையை நிகழ்த்தியது. இதில் இரண்டாயிரம் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை மரணமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளிவரவில்லை. UFCO (United Fruit Company இன் கட்டளைப்படி இயங்கிய கொலம்பிய துணை இராணுவ கொலைப் படைப் பிரிவு இப் படுகொலையைச் செய்தது.

2018 இல் கொலம்பிய அரசுக்கும் விடுதலைப்படையான FARC க்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தபோது, UFCO இன் தலையீடு பற்றி உரையாடப்பட்டது. UFCO ஆனது 2004 இல் கொலம்பிய துணை இராணுவக் கொலைப் படைக்கு நிதியுதவி செய்ததான குற்றச்சாட்டு எழுந்தது. இந்த உதாரணமானது எந்தளவுக்கு UFCO கொலம்பியாவில் அரசியல் தலையீடு செய்தது என்பதையும் அமெரிக்க கொள்கை வகுப்பில் எந்தளவு தாக்கம் செலுத்தியது என்பதையும் காட்டுகிறது.

ஆபிரிக்க நாடுகள்

ஆபிரிக்க நாடுகளை பொறுத்தவரை கொங்கோவில்தான் உலகிலேயே அதிக வகையின வாழைப்பழங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் அவை உள்ளுர்த் தேவைகளுக்கே பாவிக்கப்படுகிறது. மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கடந்த 20 வருட காலப்பகுதியில் வாழைப்பழ உற்பத்தி பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. உலக வாழைப்பழ வியாபாரத்தில் 5 வீதமான உற்பத்தியை இப்போ எட்டியுள்ளன.

ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிற இந்த வாழைப்பழங்களின் பெரும் பகுதி பிரான்ஸ் க்கும் பிரித்தானியாவுக்கும் போய்ச் சேர்கின்றன. 1975 இலிருந்து ஆபிரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் எவ்வளவு வேண்டுமானாலும் ஐரோப்பிய சந்தைக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்ய முடியும். வளர்முக நாடுகளான ஆபிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் பொருளாதாரமானது வெளியாரின் தலையீடு இன்றி சுதந்திரமாக வளர தமது தாராள இறக்குமதி ஆதாரமாக இருக்கும் என்பது ஐரோப்பிய நாடுகளின் வியாக்கியானமாக இருந்தது.

இந்த வியாக்கியானத்தை சில பொருளாதார நிபுணர்கள் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். உண்மையில் நீங்கள் ஆபிரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ விரும்பினால், முதலில் ஆபிரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களை ஐரோப்பாவுக்கு இறக்குமதி செய்வதற்கு போடப்பட்டிருக்கும் தடைகளை அகற்ற வேண்டும். உதாரணமாக பதப்படுத்தப்படாத கோப்பிக்கு 30 வீத வரியும் பதப்படுத்தப்பட்ட கோப்பிக்கு 60 வீத வரியும் நிர்ணயிப்பதை குறிப்பிடுகின்றனர். இந்த இறக்குமதிக் கட்டுப்பாட்டை முதலில் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும் என்கின்றனர்.

ஆனால் ஆபிரிக்காவிலிருந்து வாழைப்பழங்களை எந்தக் வரிக் கட்டுப்பாடுமின்றி ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஏனெனில், ஆபிரிக்காவில் விளையும் வாழைப்பம் மற்றும் அன்னாசிப் பழங்களின் உற்பத்தியை UFCO போன்ற அமெரிக்கக் கம்பனிகள்தான் கையில் வைத்திருக்கின்றன. ஆக, ஆபிரிக்காவின் மற்றைய விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு, ஆபிரிக்க பொருளாதார அபிவிருத்தி குறித்த வியாக்கியானத்தை சொல்வது இன்னொரு ஐரோப்பியப் பொய் ஆகும்.

கொண்டுராஸ்

1900 இலிருந்து 1916 வரை இரண்டாவது பெரும் வாழைப்பழ ஏற்றுமதி நாடாக இருந்த கொண்டுராஸ் (Honduras) பின்னர் முதலிடத்துக்கு வந்தது. 1899-1903 இல் ஆட்சியில் இருந்த இராணுவ சர்வாதிகாரி Terencio காலத்தில்தான் கொண்டுராசில் வாழைப்பழ கம்பனிகள் காலூன்றின. அதன்பின் ஒரு கிளர்ச்சியின் மூலம் வென்ற குழு ஆறு மாதம் மட்டுமே ஆட்சியில் நீடித்தது. அடுத்த இராணுவ சர்வாதிகாரி Bonilla சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தார். Bonilla இன் ஆட்சியில் Standard Fruit and Steamship company புகையிரதப் பாதை அமைத்து வாழைப்பழ வியாபாரத்தை மேற்கொள்ளத் தொடங்கியது.

1906 இல் Bonilla அரசு கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டு ஜெனரல் Miguel Davila ஆட்சிக்கு வந்தார். 1907-1911 வரையான இவரது ஆட்சிக் காலத்தில் கொண்டுராஸ் மண்ணில் வெளிச்சக்திகளின் நிலவுடமையை கட்டுப்படுத்தும் சில சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பின்னர் இவரது ஆட்சியை Bonilla வின் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினார்கள். அதற்கான நிதியை Cuyamel Fruit company வழங்கியது. 1913 இல் மீண்டும் Bonilla பதவிக்கு வந்தார். இவர் வாழைப்பழ கம்பனிகளுக்கான (Standard Fruit, Cuyamel Fruit Company, UFCO) சலுகைகளை வழங்கினார். ஏற்றுமதி வரி சலுகையை அறிவித்தார்.

1919 இல் கொண்டுராஸ் தொழிலாளர் இயக்கம் போராட்டத்தில் குதித்தது. வாழைப்பழ உற்பத்தித் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வைக் கோரியும் UFCO மீதான அரசின் மிதவாதப் போக்கை எதிர்த்தும் இப் போராட்டம் நடந்தது. வன்முறையில் இப் போராட்டம் முடிவடைந்தது. இருந்தபோதிலும் தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளில் வெற்றிபெற்றனர். எதிர்காலத்திலும் இவ்வாறான போராட்டங்கள் உருவாவதைத் தவிர்க்க UFCO புதிய உத்தியை கையாண்டது. புகையிரதத் தடம் அமைக்கும் திட்டத்தின் கீழ் நிலத்தை அரசிடமிருந்து பெறுவதை கைவிட்டு, தனியாரிடமிருந்து நிலங்களை வாங்கும் வேலையில் இறங்கியது.

1920 இல் FSH (Honduran Union Federation) தொழிலாளர் அமைப்பு தோற்றம் பெற்றது. 1930 இல் FSH ஆனது UFCO க்கு எதிராக முதலாவது வேலைநிறுத்தப் போராட்டத்தைத் துவங்கியது. இது பெரும் தோல்வியில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து FSH தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது புகலிடம் தேடி நாட்டைவிட்டு ஓடினர். 1932 இல் மீண்டும் வாழைப்பழ உற்பத்தித் தொழிலாளர்களின் கிளர்ச்சி தொடங்கியது. அதுவும் தோல்வியில் முடிந்தது.

1932 இல் ஜெனரல் Tiburcio Carias நாட்டின் தலைவராக தேர்தலில் வெற்றிபெற்றார். UFCO அவரது தேர்தல் பரப்புரைக்கு நிதியளித்தது. இந்த புதிய தலைவரும் 16 வருட கால சர்வாதிகார ஆட்சியை நடத்தினார்.

இடைக்காலத்தில் அமெரிக்காவில் நுகர்வோர் தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் வாழைப்பழ விலையும் வீழ்ச்சியடைந்தது. அதை ஈடுசெய்ய தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் கைவைத்ததோடு வாழைப்பழ உற்பத்தியில் ஈடுபட்ட தனிநபர்களிடமிருந்து பெற்ற வாழைப்பழ கொள்வனவு விலையையும் UFCO குறைத்துக் கொண்டது.

இது தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு வழிகோலியது. கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. அரசு கொண்டுராசின் பொருளாதார நெருக்கடிக்கு UFCO உதவும் என நம்பியது அல்லது கதைவிட்டது. வேலைநிறுத்தத்தின்போது அரசு UFCO க்கு ஆதரவாக இருந்ததோடு, சம்பளக் குறைப்புக்கு ஒப்புதலும் அளித்தது. 1949 இல் Carias தாமாகவே பதவி விலகி UFCO இன் வழக்குரைஞர் Manuel Galvez யை பதவியில் அமர்த்தினார்.

ஆனால் Carias நினைத்ததுக்கு மாறாக, எவரும் எதிர்பாராத விதமாக Galvez செயற்படத் தொடங்கினார். அவர் முதல் வேலையாக அரசியல் சிறைக் கைதிகளை விடுதலை செய்தார். புகலிடம் தேடி போனவர்களை நாட்டுக்கு திரும்பிவர அனுமதித்தார். முதன்முதலாக வருமானவரி திட்டத்தை நாட்டில் கொண்டுவந்தார். அத்தோடு சுகாதாரக் காப்புறுதி, சமூகப் பாதுகாப்பு, 8 மணிநேர வேலை என திட்டங்களை கொண்டுவந்தார். இந் நகர்வானது வாழைப்பழ தொழிலாளர்களின் கிளர்ச்சியை நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் போராட்டத்துக்கும் உத்வேகத்தைக் கொடுத்தது.

1954 இல் மீண்டும் வாழைப்பழ உற்பத்தித் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரியும் தேவையான வேலைவசதிகளைக் கோரியும் கிளர்ச்சியில் இறங்கினர். இது நாடுபூராவும் வேலைநிறுத்தங்கள் நடக்கக் காரணமாகியது. ஊடகங்களும் அரசாங்க அதிகாரிகளும் இதற்கு ஆதரவாக இருந்தனர். UFCO இராணுவத்தை ஏவி வேலைநிறுத்தத்தை முடக்குமாறு Galvez இடம் கோரியது. அவர் மறுத்துவிட்டார். UFCO க்கும் தொழிலாளர்களுக்குமிடையிலான இந்தப் போராட்டத்தில் அரசு நடுநிலையாக நடந்து கொள்ளும் என அறிவித்தார். கொண்டுராசின் சரித்திரத்தில் இவ்வாறான நிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்கவில்லை. விடாப்பிடியான இந்தப் போராட்டத்தில் 21 வீத சம்பள உயர்வுக்கும், தொழிலாளர்களின் குடும்பத்துக்கான சுகாதார பாதுகாப்புக்கும் UFCO ஒப்புக்கொண்டது.

Galvez ஒரு சீர்திருத்தவாதியாக இருந்தார். அதேநேரம் இப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் வகிபாகத்தை தெரிந்துகொண்டபோதும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் அவர் இறங்கவில்லை. ஆனால் அமெரிக்க அரசு இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாக அடையாளம் கண்டது. தொடர்ந்து நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகளும் அமெரிக்கத் தலையீடுமாக கொண்டுராசின் அரசியல் நகர்ந்துவந்திருக்கிறது. அதுகுறித்து இங்கு தொடர்வது தேவையற்றது.

பால்வாதமும் இனவாதமும்

இவ்வாறாக இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பொருளாதார அழிவினையும், ஊழல் நிறைந்த இராணுவ சர்வாதிகார அரசுகளையும், அடிமைவகைச் சுரண்டலையும், உயிரழிவுகளையும், அரசியல் தலையீடுகளையும் உருவாக்கிய வரலாறு கொண்டது, UFCO! 20ம் நூற்றாண்டில் மிகப் பெரிய வாழைப்பழ உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கம்பனியாக அது விளங்கியது. UFCO புதிய முகமூடி அணிந்து 1947 இல் சிக்கீற்றா (Chiquita) என உத்தியோகபூர்வமாக ‘வர்த்தக அடையாளம்’ பெற்றது. இன்று சந்தையில் Chiquita என்ற லேபலுடன் வாழைப்பழங்களை காண்கிறோம். இந் நிறுவனம் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் தன் கால்களை அகலப் பரப்பியதோடு பிராந்திய செல்வாக்கு செலுத்துவதாகவும் உள்ளது. அதனால் இந்த நிறுவனத்தை ஒக்ரோபுஸ் (octopus) உடன் ஒப்பிடுவர்.

UFCO ஆரம்பத்தில் அமெரிக்க வாழைப்பழ பாவனையாளர்களிடத்தில் இந்த தென் அமெரிக்கப் பழத்தை பழமாகவே குறியீடாக்கி விளம்பரப்படுத்தியதுபோல் அல்லாமல், சிக்கீற்றா வரவோடு அது தனது chiquita வாழைப்பழத்துக்கான புதிய குறியீட்டையும் விளம்பரத்தையும் பால்மயப்படுத்தியும் இனமயப்படுத்தியும் வெளிக்கொணர்ந்தது. Miss.Chiquita Banana என்ற வடிவில் இது வெளிவந்தது. பெண்களை பாலியல் கவர்ச்சியாக அதாவது பாலியல் பண்டமாக வாழைப்பழ உடலில் படிமமாக்கியது. 1940 களில் அமெரிக்க பாவனையாளர்களை இந்த விளம்பரங்கள் கவர்ந்திழுத்தன. 1944 இல் முதன்முதலாக “சிக்கீற்றா வாழைப்பழப் பாடல்” என்ற பாடல் வானொலி மூலம் வெளியிடப்பட்டு ஒலிபரப்பாகியது.

கவர்ச்சியான வாழைப்பழ உடல் அமைப்பும் உயர்ந்த குதிக்கால் பாதணியும் நவீன உடையழகும் கொண்ட Miss.Chiquita வாழைப்பழம் அமெரிக்க திரையரங்குகளில் விளம்பரமாக வந்து போகத் தொடங்கியது. அடுத்து “சிக்கீற்றா வாழைப்பழமும் நரமாமிசமும்” என்ற தலைப்பில் கார்ட்டுன்வகை விளம்பரம் வெளிவந்தது. குரங்கு போன்ற அதீதமான தடித்த சொண்டும், கருமையான உடலும் கொண்ட கறுப்பு மனிதனுடன் இக் காட்சி ஆரம்பிக்கிறது. இந்த உருவம் மனித சாயலைவிட குரங்கின் சாயலை அதிகமும் ஒத்திருக்கிறது.

ஒரு பெரிய பானைக்குள் வைக்கப்பட்ட ‘வெள்ளை மனிதன்’ மீது நரமாமிசம் உண்ணும் அந்த கறுப்பு மனிதன் உப்பையும் துண்டாக்கப்பட்ட கரட் இனையும் தூவி சமைக்க முற்படுகிறான். திடீரென Miss.Chiquita பாடலுடன் தோன்றுகிறாள். “உனது உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும், அதன்மூலம் துப்பரவானதாகவும் நாகரிகமானதாகவும் அதை மாற்ற முடியும்” என கறுப்பு மனிதனிடம் சொல்கிற பாடல் வரியுடன் Miss.Chiquita வருகிறாள். பானையை மறையச் செய்து அதற்குப் பதிலாக oven இனை தோற்றுவிக்கிறாள். கறுப்பு மனிதனுக்கு வாழைப்பழத்தில் உணவு ஆக்கிக் காட்டுகிறாள். விழிபிதுங்கும் கறுப்பு மனிதன் தனக்கு முன்னால் தயாரித்து தட்டில் வைக்கப்பட்டிருக்கிற உணவை முள்ளுக் கரண்டியால் ருசித்து ருசித்து சாப்பிடுகிறான்.

அதாவது பழமைவாத கலாச்சாரம் கொண்ட இலத்தீன் அமெரிக்க அல்லது கறுப்பு மனிதனுக்கு நவீனத்துவமான மேற்குலக கலாச்சாரத்தை வெள்ளை மனிதன் போதிக்கிறானாம். குரங்குபோல உருவக் கேலி செய்தும் நரமாமிசம் உண்பவர்களென கறுப்பு மனிதர்களை அடையாளப்படுத்தியும் அப்பட்டமான இனவெறி கக்கும் வெள்ளைக் கருத்தியலை வாழைப்பழத்திலும் ஏற்றிக் காட்டியது அமெரிக்க கம்பனியான UFCO.

(வாழைப்பழமும் நரமாமிசமும் என்ற விளம்பர காணொளியை கீழே காணலாம்)

வாழைப்பழ யுத்தம்

இவ்வாறாக மத்திய அமெரிக்க நாடுகளில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவினது தொடர்ச்சியான அரசியல் தலையீடானது வாழைப்பழத்தை வைத்து, அதன் அமெரிக்க கம்பனிகளின் நலனை முன்வைத்து தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தன. இது “வாழைப்பழ யுத்தம்” Banana War என பெயர்பெற்றது.

 மத்திய அமெரிக்க நாடுகளில் தமது அன்றாட வாழ்வாதார மேம்பாட்டுக்கான, உரிமைகளுக்கான போராட்டங்களின் காலமாகவும் அதற்கான போராட்டக் குழுக்கள் தோன்றி செயற்பட்டுக்கொண்டிருந்த காலகட்டமாகவும் அது இருந்தது.

அமெரிக்கக் கம்பனிகளின் நலனைக் காக்கவும், தமது பொருளாதார சுரண்டலை மேற்கொள்ளவும் அமெரிக்காவானது கொண்டுராஸ், கெயிற்றி, டொமினிக்கன் குடியரசு போன்ற நாடுகளுக்கு அமெரிக்க இராணுவத்தை அனுப்பியது. அது போராட்டக் குழுக்களோடு போர் புரிந்தது. போராட்டங்களை அடக்கியது. நூற்றுக் கணக்கான இராணுவமும் ஆயிரக்கணக்கான மத்திய அமெரிக்கத் தொழிலாளர்களும் இந்த வாழைப்பழ யுத்தத்துக்கு பலியாகினர்.

33 வருடங்களாக இந்த வாழைப்பழ யுத்தத்தில் பங்காற்றிய ஸ்மெட்லி பட்லர் என்பவர் ஒருமுறை இவ்வாறு எழுதினார். “அந்தக் காலகட்டத்தில் மேட்டுக்குடிகளுக்கான பெரும் வியாபாரிகளுக்கும், Wall Street க்கும், வங்கியாளர்களுக்கும் நான் பலம்வாய்ந்த ஆளாக காலத்தைப் போக்கினேன்” என்று எழுதியிருக்கிறார்.

வாழைப்பழ குடியரசு

இந்த அரசியலில் அமெரிக்கா நடத்திய ஆட்சிக் கவிழ்ப்புகள் தமது நலனுக்காக ஊழல் ஆட்சிமுறைகளை ஊக்குவித்தல் போன்றவை மோசமான ஆட்சியாளர்களை ஆட்சியில் இருத்தியது. மக்களை வறுமைக்குத் துரத்தியது. இந்த மேசமான அம்சங்களைக் கொண்ட ஆட்சிமுறையை அவர்களின் தலையிலேயே கட்டிவிட்டு ஏதோ தானாகத் தோன்றிய மோசமான அரசுகள் என்ற கணக்கில் “வாழைப்பழ குடியரசுகள்” Banana Republics என பெயா சூட்டியது.

அச் சொல் இப்போ மோசமான ஊழல் அரசுகளை சுட்டுகிற பொதுச் சொல்லாக விhவிடைந்துமிருக்கிறது. ட்றம்ப் பைடன் இடையிலான தேர்தல் பிரச்சாரத்தில் பைடன் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கா ஒரு வாழைப்பழ குடியரசாக மாறிவிடும் என பிரச்சாரம் செய்தார். (இதேபோலவே பறையா என்ற சாதிய இழிசொல்லை காலனியவாதிகள் காவி வந்து, தனது எதிரிகளை இழிவுபடுத்த “பறையா அரசு” Paraiya State என பாவிக்கின்றனர். ரசிய உக்ரைன் போர் தொடங்கியபின் பைடன் ரசிய அரசை பறையா அரசு என பலமுறை விழித்திருக்கிறார் என்பதை இந்த இடத்தில் நினைவுறுத்தலாம்).

இவ்வாறாக வாழைப்பழ அரசியல் பெரும் சுரண்டலையும் மத்திய அமெரிக்க நாடுகளினதும் -மற்றும் சில ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளினதும்-  தலைவிதிகளை மாற்றியமைத்து அந்த மக்களின் இறையாண்மையை நாசமாக்கியது. உலக வரலாற்றில் நடந்த துயரங்களில் இதுவும் ஒன்று!

  • 29062023

2 thoughts on “வாழைப்பழ அரசியல்”

  1. அருமையான கட்டுரை. வாழப்பழத்துக்குப் பின்னால் இவ்வளவு அரசியல் சதிகள் இருந்ததை அறிந்துகொள்ள உதவியாக உள்ளது. சிறப்பு.

Leave a comment