முத்துலிங்கத்தின் பேய்கள்!

இயக்கத்தை பற்றைக்குள் ஒளித்திருந்து பார்த்து எழுதிய கதை.
கறல் பிடித்த எழுத்துகளால் தாக்குதல் தொடுக்கிறார். இயக்கத்தினுள் இயங்கிய மனிதர்களின் உணர்வுகளை முத்துலிங்கம் செயற்கைக்கோல் அனுப்பி எட்ட முயற்சித்து பரிதாபகரமாக வீழ்ந்து நொருங்குகிறார்.

muthulingam

ஆண் ஒடுக்குமுறைச் சமூகத்துள்ளிருந்து தேசியவிடுதலைப் போராட்டத்துள் பிரவேசிக்கும் ஒரு பெண்போராளியின் துணிச்சலை, மன உணர்வுகளை, மனப் போராட்டங்களை, எதிரியிடம் எதிர்கொள்ள நேரக்கூடிய இரட்டைச் சித்திரவதைகளின் மீதான அச்சங்களை, அது ஏற்படக்கூடிய மனப்போராட்டங்களை எல்லாம் ஊடுருவ முடியாத ஒரு படைப்பாளி எழுதுகோலை கோவணத்துள் சொருகிவைத்துத்தான் தூங்குகிறான். முத்துலிங்கம் முத்தங்களை மேய்ச்சுக்கொண்டு திரிகிறார்.

கொட்டன்களோடு பயிற்சியைத் தொடங்கிய இயக்கங்கள்தான் இறுதியில் உலகின் மிகப் பயங்கரமான பயங்கரவாதக் குழுக்கள் என பெயர் வாங்கியதுவரை, எழுதுகோல்களையும் மௌனிக்கச் செய்ததுவரை, மிகப் பெரும் கெரில்லா இராணுவத் தாக்குதல்களை செய்ததுவரை நகர்ந்தன என்றானபோது கறல் பிடித்த துவக்கையும் தோட்டா இல்லாத துவக்கையும் பற்றி நக்கலடித்து எழுத என்ன இருக்கிறது. ஒருவேளை எடுத்த எடுப்பிலேயே இயக்கங்கள் நவீன ஆயுதங்களோடு வந்து சேறாடியிருக்க வேண்டும் என்கிறாரா முத்துலிங்கம்.

இயக்கங்களை வழிநடத்திய அரசியல் மீதான விமர்சனங்களை ஓரத்தில் வைத்துவிட்டு, இயக்கத்தின் சாதாரண போராளிகளின் அர்ப்பணிப்பு மனத்தை தன்னிழப்புகளை புறந்தள்ளி, தனிமனிதப் பலவீனங்களை ஒழுக்க மதிப்பீடு கொண்டு கீறிக் கிழித்து போடும் எழுதுகோலை தாங்கப் பலர் இருக்கின்றனர். முத்துலிங்கம் இது உங்கள் முறை (turn).

ஒன்றும் புதிசாய் இல்லை. பாரதூரமாய் இல்லை.

புலியழிப்பை (இராணுவ ரீதியில்) ஆதரித்ததால், புலிகளின் சாதாரண போராளிகளை மட்டுமல்ல, பெண்போராளிகளைக் கூட “போராளிகள்” என அழைக்க மாற்றுக் கருத்துப் பேசிய பலருக்கே காலம் பிடிச்சது. என்றானபோது, முத்துலிங்கத்தின் இந்த எழுத்தும் கடக்கப்படும். ஒருவேளை அவராலும்கூட.

முத்துலிங்கம் குற்றவாளிக் கூண்டுக்கெல்லாம் வரவேண்டியதில்லை.

http://www.kalachuvadu.com/issue-181/page86.asp

fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/849101838494245?pnref=story

Leave a comment