என்னவாய் இருக்கக் கோருகிறது?

புத்தாண்டு பிறக்க இன்னமும்

சில மணித்தியாலங்கள் இருக்க,

வாங்க மறந்த சம்பானியாப் போத்தலுக்காக

விரைகிறேன் நான்.

காசா மீதான இஸ்ரேலின் சண்டித்தனத்தால்

துபாய் புத்தாண்டு நிகழ்ச்சிகள் இல்லாமல் போன துயரில்,

தலையில் கைவைத்தபடி

குந்தியிருக்கிறான் ஒருவன்,

நகரின் மையத்தில்.

குறுக்கும் நெடுக்குமாக வெட்டப்பட்டிருக்கும்

பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளோடு காத்திருக்கிறார்கள்

அல்லது பிணமாய்க் கிடக்கிறார்கள்,

இராணுவமும் போராளிகளும்.

போர்ப்பட்ட பெருநிலமெங்கும்

மூடுண்ட வெளியுள் துயருறுகின்றனர் மக்கள்,

சாவில் தொங்கவிடப்பட்ட தம் உயிர்களுடன்.

விடுபட்ட நிலங்களில்

காணாமல் போகிறார்கள் இளசுகளும் முதிசுகளும்.

வெள்ளைவான் இன்னமும் துருப்பிடித்தபாடில்லை.

விமானங்களின் இரைச்சலில்

பயணிகளின் நினைவுக்கு அப்பால் செல்லமுடியாத

என் குழந்தைக்கு

விமானங்கள் குண்டுகள் வீசுவதுபற்றிய

பயங்கரத்தை நான் கதையாய்ச்

சொல்லிக்கொண்டிருந்தேன்.

ஆண்குறிக்கு இராணுவ உடை போர்த்த

ஈரதிகாரத்தின் விறைப்பில்

பெண்ணுடலை குதறுகிறான் ஒரு இராணுவத்தான்.

போதைப்பொருளின் இழுப்பில்

பிசாசறைந்த முகத்துடன் விசர்க்கிறான்

இன்னொரு இராணுவத்தான்.

காவலரணில் விடப்பட்டிருக்கிறான் மற்றவன்

தன்முன்னால் வெடித்தச் சிதறிய தன்

நண்பன் பற்றிய கதையையோ

அல்லது

குற்றுயிராய்க் கிடந்த தன் நண்பனை தானே

உயிரோடு புதைக்கப் பணிக்கப்பட்டதை நினைத்தோ

அவன் சபித்திருத்தலும்கூடும்.

மண்ணுக்காய் என

பறிபோன அல்லது பறித்தெடுக்கப்பட்ட தம் புதல்வர்க்காய்

கடவுளிடம் கையேந்தி நிற்கிறாள் தாய்.

இராட்சதக் குண்டுகளின் குழிகளில்

பிஞ்சொன்றை பிணமாய் வீசுவதில்

துயருறா நெஞ்சங்களுடன் மனிதர்கள் இலர் என

நான் இப்போதும் நம்புகிறேன்.

போர்கள் வேண்டாம், வேண்டவே வேண்டாம்

என்பதெல்லாம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுபோல

பேச்சொழுக்காய்ப் போனது.

அதிகாரம் கழுத்தில் ஓர் சால்வையையோ

அல்லது இடுப்பில் ஓர் துப்பாக்கியையோ

சொருகியபடி திரிய,

களத்தில் உயிர்கள் ஒடிந்துகொண்டிருந்தன.

போரின் வெற்றியை தீர்மானிக்க

பிணங்களின் எண்ணிக்கையை

பிரித்துப் பார்த்தபடி இருக்கிறான் என் நண்பன்.

என்னவாய் இருக்கக் கோருகிறது இந்தப் போர்

என்னை.

சம்பானியாப் போத்தலுடன்

வீடு திரும்பிக்கொண்டிருந்தேன் நான்!

– ரவி (31122007)

Thanks :

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=5654&Itemid=139

Leave a comment