தெருவிழா

 

எங்கள் வீதியில் இடையிடையே
தெருவிழா களைகட்டும்
அதில்
குரங்குகள் சில வீதியில்
வலம் வருவது வழமையாகிற்று
மலர்களை கசக்கி உதிர்த்து
விசிறி நடந்தன ஒய்யாரமாய்.
மலர்களை, மலர்மாலைகளை எறிந்து
களித்தின்புற்றனர்
மனிதர்கள் சிலர்.
குதூகலம் என்றுமாய்
சிரிப்பு கோபம் கத்தல் நளினம்… என
தெருவெல்லாம் தனதினதாய்
பெருமைகொண்டாடின குரங்குகள்.

காற்று வீசிய திசையில்
இலகுவாய் மனிதர்கள்
மூளைமடிப்புகளை பறக்கவிட்டனர்.
இந்தத் திசையில் நகர்வது இலகு.
வீதிக் குரங்குகளும்
அள்ளுண்டு போகிறது இத் திசையில்.

ஆசிரியனின் பிரம்பு நுனியில்
தொங்குகிறான் மாணவன்.
ஆத்திரப்பட்ட கணவனின் பிடியில்
அழுகிறாள் மனைவி
கோவில் கதவு சாத்தப்படுகிறது
இன்னொருவனுக்கு.
எல்லாம் மீறி
பெருங்காற்றை போரும் போரோசையும்
வியாபித்தது
அனுபவங்கள் எல்லாம் சேகரமாகி
புதுப்புது முளைப்புக்கான விளைநிலமாயிற்று
எம் மூளைமடிப்புகள்

ஆனாலும் என்ன
அரைத்தரைத்தே நான்கு வார்த்தைகளுடன்
எடுக்கும் வாந்தியில்
நாறுகிறது
சந்தியில் குடித்த கள்.

கத்தல் கூச்சல் சொறிவு…
இப்படியே
தெருவிழாவில் குரங்குகள் செல்ல
மாலைகள் எறிந்திடுவோரும்
சேர்ந்து நடந்தனர்.
வசதிப்பட்ட இடங்களில்
கோவணத்தை இறுக்கி
வீரம் புரிந்தனர்

மனிதர்கள் இன்னும்
கண்டுகொள்ளா தூரமதில்
அவை நடந்து மறைக,
பகுத்தாயும் அறிவு
வெளிச்சம் கொள்ள!

– ரவி (25122003)

Leave a comment