இலங்கை அரசு சீனாவுக்கு முதற் கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய இருப்பதான செய்தி தற்போதைய பேசு பொருளாகியுள்ளது. சீனா வாங்குகிறது என்றதுமே இறைச்சிக்காகத்தான் என தலைக்குள் எழும் சித்திரம் சரியானதா என்ற கேள்வி இருக்கிறது. எனது ஞாபகம் சரியானால், இலங்கையில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எழுபதுகளின் பிற்பகுதியில் குரங்கு இறைச்சியை விடுதி மாணவர்களுக்கு சமைத்துக் கொடுத்தது தெரியவந்து பரபரப்பாக பேசப்பட்டது. மான் இறைச்சிபோல் மிருதுவானதாக இருந்ததால் மாணவர்கள் இதற்கு “தொங்கு மான்” இறைச்சி என ஒரு பெயரை சூட்டினார்கள். எனவே இறைச்சிக்கான ஏற்றுமதி என ஒரு சாரார் நினைப்பதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ளவும் முடிகிறது.
அவை சீனாவிலுள்ள 1000 மிருகக்காட்சிச் சாலைகளுக்கு அனுப்பப்படுவதாக சொல்வதில் சிலவேளை பகுதி உண்மை இருக்கலாம். 1000 காட்சிச் சாலைகளுக்கு – இனப்பெருக்கமடையும் ஆற்றல் கொண்ட- ஒரு இலட்சம் குரங்கு என்பது அதீதமானது. அதுமட்டுமல்ல ‘முதற்கட்டமாக’ அவை அனுப்பப்படுவதாக சொல்லும் வியாக்கியானம் அந்த பகுதி உண்மையையும்கூட ஆட்டம் காணச் செய்கிறது.
இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். குரங்கை ஒரு இழிசொல்லாக பயன்படுத்தி எழுதப்படுகிற அல்லது பேசப்படுகிற நக்கல்களும் மிருகங்களின் தனித்தன்மைகளின் மீதான அத்துமீறல்கள்!. எதை நியமமாக வைத்து இவ் வசையை நாம் செய்கிறோம்?. தெரியவில்லை.
இன்றைய வளர்ந்துவரும் மருத்துவத்தில் அல்லது மருந்து உற்பத்தி பரகாசுரக் கம்பனிகளில் புதிதுபுதிதாக உற்பத்தி செய்யப் படுகிற தடுப்பூசிகள் உட்பட பல மருந்து வகைகளை பரீட்சித்துப் பார்க்க பெருமளவான குரங்குகள் பரிசோதனைக்கூடங்களுக்கு பலியாக்கப்பட்டவண்ணம் உள்ளன. பூனை, நாய், எலிகள், ஆடுகள் போன்ற எல்லா மிருகங்களை விடவும் குரங்குதான் மனிதரின் உயிரியல்தன்மைக்கு கிட்டவாக அல்லது சமமாக உள்ளன.
அமெரிக்க பரிசோதனைக் கூடங்கள்தான் மிக அதிகளவில் குரங்குகளை வேண்டிநிற்கிறது. அடுத்தது சீனா. அதுவும் கோவிட்.19 இந்த குரங்கு ஏற்றுமதியையும் இறக்குமதியையும் உலகம் நிறுத்தி வைக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த அமளி முடிந்து உலகம் புத்துயிர் பெற்றிருக்கிற இந்த நேரம் குரங்குத் தட்டுப்பாட்டை பரிசோதனைக் கூடங்கள், ஆய்வு கூடங்கள் பெருமளவு எதிர் நோக்கியுள்ளன. நீண்ட வால் கொண்ட macaques உட்பட சில குறிப்பிட்ட வகைகளே பரிசோதனைக்கூடத்துக்கு தகுதியானவையாக விரும்பப்படுகிறது.
குரங்கின் விலையை கேட்கும்போது என்போலவே நீங்களும் அதிர்ச்சியடையக் கூடும். 2016 இல் குரங்கு ஒன்றுக்கு 15’000 யுவான்( அதாவது 2280 டொலர்) ஆக இருந்த விலை 2019 இல் 7000 இலிருந்து 9000 டொலர்வரை எகிறிப் பாய்ந்தது. 2020-2021 இது மீண்டும் 20’000-24’000 டொலருக்கு விலைப்பாய்சல் செய்தது. 2023 இல் குரங்கொன்றின் விலை 30’000-35’000 வரை செல்லலாம் என அமெரிக்காவின் Financial Times எழுதியுள்ளது.
பரிசோதனைக்கூடத்தில் ஒரு பரிசோதனைக்கு ஒரு குரங்கு தேவைப்படுகிறது. ஒன்றில் பல பரிசோதனைகள் செய்யப்பட முடியாது. இதுவும் குரங்குக்கான பெறுமதியை அதிகரிக்கிறது.
உலகிலேயே மிகப் பெரிய குரங்குச் சந்தையை சீனாதான் வைத்திருக்கிறது. 2020 இல் ஏற்றுமதிக்கும் உள்ளுர் பாவனைகளுக்குமாக சேர்த்து 40’000-50’000 குரங்குகள் சீனாவுக்குத் தேவைப்பட்டிருக்கிறது. சீனாவில் 70-80 வீதமான மருந்துவகைகள் பாவனைக்கு விடப்படமுன் குரங்குகளில் முன்பரிசோதனை செய்யப்படுகின்றன. 2019 இல் அமெரிக்காவில் இத் தொகை 108’000 குரங்களாக இருந்தன. நச்சுத்தன்மையுள்ள மருந்துவகைகளின் பரிசோதனைகளுக்கும் குரங்குகள் பலியாகின்றன.
பரிசோதனைக்குப் பின் அவைகளின் கதி என்னவாகிறது என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். போராடுகிறார்கள். அரசுகளுடன் பேசுகிறார்கள். ஆனால் இந்த நாடுகளோ தாங்கள் அவற்றை வைத்து பராமரிக்க மில்லியன் கணக்கான பணத்தை செலவிடுவதாக சொல்கின்றன. உண்மை என்னவென தெரியாது.
இவற்றை வைத்துப் பார்க்கிறபோது இலங்கையின் குரங்குகள் வியாபார நோக்கில்தான் ஏற்றுமதியாகின்றன என ஊகிக்க முடிகிறது. இது ஒரு புதுக் கதையாக, புதிய ஏற்றுமதியாக வருவதால் மக்களிடம் அதிர்ச்சியோ கேள்விகளோ ஏற்பட்டு குழப்பங்கள் வராதவாறு கதையாடல்களை அரசு கட்டவிழ்த்து விடுகிறது. நாட்டில் யுத்தத்தில் பலியாகிப் போனவர்கள், காணாமல் போனவர்கள் என -மனிதர்கள் குறித்த- எந்த புள்ளிவிபரத்தையும் ஒரு முறைமையாகக் கொண்டிராத தேசத்தில் குரங்குகளின் கணக்கெடுப்பை 30 இலட்சம் என அறிவிக்க முடிகிற விந்தையை எப்படி விதந்தோதுவது எனத் தெரியவில்லை. மேலே போய், அவை எத்தனை ஆயிரம் தேங்காய்களை நாசமாக்கினது, எவளவு நட்டமடைந்தோம் என்ற கணக்கு வேறை. நம்புறம்!
குரங்குகள் பெருக்கமடைந்ததா அல்லது அவற்றின் வாழ்விடம் மனிதர்களால் சூறையாடப்பட்டதா என்ற கேள்விக்கு என்ன விடையோ தெரியாது. மிருகங்களால் ஏற்படுகிற பாதிப்புகள் என எடுத்துக்கொண்டால் கூட, மிருகங்களை கூட்டாக அழித்தொழிப்பதால் அல்லது ஏற்றியனுப்புவதால் தீர்க்கப்படுவது இயற்கை விதிகளுக்கு எதிரானது என்பதை சொல்ல முடியும். எல்லா உயிரினங்களும் வாழ்வுச் சங்கிலியில் தகவமைந்து -பெருகியோ தேய்ந்தோ, பிறந்தோ அழிந்தோ- இயங்கிக்கொண்டிருக்கும். அதில் குறுக்கீடு செய்வதில் நாம் யார்?. இதுகுறித்து சொல்லப்படுகிற நியாயங்கள் செல்லுபடியாகுமா என உயிரியலாளர்கள் கொஞ்சம் விளக்கினால் நல்லது.
அதேபோல் மனித உயிரியல் கூறுகளைக் கொண்ட குரங்குகளை மனிதர்களுக்கான முக்கிய மருந்துவகைகள், தடுப்பூசிகளை பரிசோதித்துப் பார்ப்பதற்கு மாற்றீடாக ஏதேனும் வழிவகை உண்டா என்பதை மிருக உரிமையாளர்கள் விளக்கினால் நல்லது. நாமாக தேடிப்போய் இந்த அறிவை வளர்த்துக் கொள்வது எமது கடமையும்கூட. எனக்கு அதில் போதிய அறிவு இல்லை என்பதால் முடிவாக எதையாவது தீர்ப்பு எழுதும் நிலையில் நானும் இல்லை.
இயற்கையின் பெறுமதிமிக்க வளமாக தனிச்சிறப்பாக இருக்கும் குரங்குகள் குறித்த பெருமிதத்தையும், மனிதர்களை மகிழ்ச்சிப்படுத்திய குரங்குச் சேட்டைகளையும், வணக்கத் தலைங்களை -குறிப்பாக புத்தவிகாரைகளை- அலங்கரித்துத் திரிந்த குரங்குகளின் நடமாட்டத்தையும் எதிர்காலத்தில் காணமுடியுமா தெரியவில்லை. இன்னுமொன்று. ஏற்றுமதிக்காகவே உற்பத்தி செய்வது என்பதும், தானாக வாழ்வுச்சங்கிலியில் இயற்கை விதிகளுக்குள் உற்பத்தியாகும் உயிரினங்களை ஏற்றுமதி செய்வது என்பதும் ஒன்றல்ல என்பதையும் சொல்லிவிடலாம்.
போராட்டத்தில் அல்லது போரில் மனித உயிர்களின் இழப்பு தவிர்க்க முடியாதது என்ற வியாக்கியானங்களில் காணப்படுகிற யதார்த்தமும் அதுகுறித்த மனிதநேயமும் ஒன்றல்ல. அதேபோல், எல்லா வியாக்கியானங்களையும் கதையாடல்களையும் மீறி, ஒரு பரிசோதனைக்கூடத்தில் அவதியுறும் ஓர் உயிரின் துயரை கடந்துசெல்ல முடியாமலே இருக்கிறது!.
தெளிவான கருத்துக்களை குரங்குகதை கொண்டிருக்கிறது. பல்வேறு கோணங்களில் சிந்திக்க வைத்திருக்கிறது.
ஆம். காணாமல் ஆக்கப்பட்டோர் கணக்கு சொல்லமுடியாதவர்கள் இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கெடுத்து வைத்திருக்கிறார்கள் !
குரங்கு என்றாலே இகழ்வாக அல்லது ஏளனமாக பேசுதல் வழமையாகிப் போன சமூகத்திலே தான் அனுமார் என்கிற ஒரு சிறுதெய்வ வழிபாடும் இருக்கிறது. காசுக்காக இனிமேல் எல்லா விலங்குகளும் விலைபோகிற காலம் மிகவும் நெருங்கிவிட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கண்ணீரையே கணக்கெடுக்காத ஈழத்திலே விலங்குகளின் பெறுமதி வெறும் சைபர்தான்.
thanks Theva