தோழர் தேவா- நினைவுக் குறிப்பு

ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரும் விமர்சகருமாகிய தோழர் தேவா அவர்கள் கடந்த 25.03.2023 அன்று தனது 70 வது வயதில் எமை விட்டுப் பிரிந்தார். 1983 இலிருந்து சுவிஸ் இல் தொடர்ச்சியாக வேலைசெய்து, பின் ஓய்வுபெற்று தான் பிறந்த மன்னார் மண்ணுக்கு திரும்பி வாழ்ந்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், டொச் (ஜேர்மன் மொழி), சிங்களம் ஆகிய மொழிகளில் ஆழமான புலமையுடையவராக இருந்தார். நீண்ட இழுத்தடிப்புகளோடு குழந்தைப் போராளிகள் என்ற நூலை சுவிஸிலிருந்தபோது முதல் நூலாக வெளிக்கொணர்ந்த அவர் இலங்கையில் இருந்தபோது அம்பரயா, அனொனிமா, நீண்ட காத்திருப்பு, என் பெயர் விக்டோரியா போன்ற முக்கியமான நூல்களை தமிழுக்குப் பெயர்த்திருந்தார். அவரது மரணம் அதிர்ச்சியாக இருக்கிறது. தோழர் தேவாவுடனான நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன்.

1987 இல் சுவிசில் நாம் ஆரம்பித்த வாசகர் வட்டமானது மனிதம் குழு என அடையாளப்படுத்தப்பட்டு இயங்கிய காலப் பகுதியில் தோழர் தேவாவும் எம்முடன் சேர்ந்து பயணித்தார். மனிதம் இதழ்கள் பலவற்றில் அவரது மொழியாக்கங்கள் வந்திருந்தன. மிக முக்கியமான கருப்பொருள்களை அவர் தேர்ந்தெடுத்தார். அவர் தமிழை விடவும் ஆங்கிலத்திலும் டொச் மொழியிலும் நூல்களை மட்டுமல்ல பத்திரிகைகளையும் வாசிப்பதால் எப்போதும் தனது கருத்துகளை இற்றைப்படுத்தியபடி இருப்பார். அக் கருத்துகளை அவர் மாதம் ஒருமுறை நாம் சந்திக்கும் வாசகர் வட்டக் கூட்டங்களில் முன்வைத்து உரையாடுவார். அது எமக்கு பிரயோசனமானதாக இருந்தது. மிக அதிகமும் அவர் மார்க்சியத்தை படிப்பதைவிட அதை விமர்சிக்கிற கருத்துகளை பிற மொழிகளில் படித்துவிட்டு வருவார். அதனால் எமக்கிடையே விவாதங்கள் ஏற்பட்டபடி இருந்தது. அது பரஸ்பரம் சிந்தனையை முன்னோக்கி நகர்த்த உதவியது. அதை அவர் உரையாடல் பண்புடன் முன்வைப்பதால் பகைமுரண்பாடுகள் எதுவும் ஏற்படவில்லை. அதைவிட அவர் ஒரு இடதுசாரியச் சிந்தனையுள்ளவராக இருந்தவாறேதான் தனது விவாதங்களை முன்வைப்பார். அவர் இறுதிவரை (அதாவது 1994 இல் இறுதி மனிதம் இதழ் 30 வரையும்) எம்முடன் இருந்தார்.

“பொப்மார்லியும் றேகே இசையும்”, “நிக்கரகுவா -புரட்சியின் பின்”, “ஜப்பான் -சூரிய சாம்ராஜ்யம்”, “சூறாவளியின் கண்களில் 120 மில்லியன் குழந்தைகள்”, “உளவியல் பார்வையில் நாசிசம்” போன்ற அவரது மொழிபெயர்ப்புகள் முக்கியமானவை. (இதன் விபரத்தை இப் பதிவின் இறுதியில் பார்க்கலாம்).

மனிதம் 1994 நடுப் பகுதியில் நின்றுபோனபின் நாம் உதிரிகளானோம். தொடர்ந்தும் எனக்கும் தேவாவுக்குமான தொடர்புகள் நீடித்தன. அவரது தமிழ் மொழிபெயர்ப்பை தொடர்ச்சியாக நான் செழுமைப்படுத்த உதவுவேன். அதற்கான தொலைபேசி உரையாடலில் பல மணி நேரங்களை நாம் செலவிட்டிருக்கிறோம். மொழிபெயர்ப்பின் சந்தேகங்களை கேட்டு நிவர்த்திப்பதிலிருந்து தொடங்கும் உரையாடல் தொலைபேசியில் காது வியர்க்கும்வரை மணித்தியாலக் கணக்காக நீண்டுவிடும். அவரது வாசிப்பும் அதை பகிர்வதற்கானதுமான ஒரு வெளியை அவர் என்னிடத்தில் கண்டதும், அதை நானும் விரும்பியதும் இந்த நீண்ட உரையாடல்களை அமைத்துவிடுவதுண்டு.

இவ்வாறே அவர் சைனா கெய்ற்றசியின் குழந்தைப் போராளிகள் நூலின் முகவுரையை மொழிபெயர்த்து எனக்கு அனுப்பினார். தனது ஒன்பதாவது வயதில் குழந்தைப்போராளியாய் உகண்டாவின் புரட்சிப்படையான NRA இல் இணைந்த கெய்ற்றசியின் இந்த நூல் கட்டாயம் தமிழில் வரவேண்டும் என நாம் இருவரும் விரும்பினோம். சைனா கெய்ற்றசி அகதியாக டென்மார்க் வந்தவர். அவர் டென்மார்க் மொழியில்தான் முதன்முதலாக அவரது சுயசரிதை நூலாக வெளிவந்தது. அதன் பின் டொச் மொழியில் வெளிவந்தது. உடனேயே தேவா அதை வாசித்திருந்தார். மொழிபெயர்க்கவும் தொடங்கினார். பின்னரே பிரெஞ்சிலும் அதன்பின் ஆங்கிலத்திலும் இந் நூல் மொழிபெயர்ப்புகளாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. துர்அதிஸ்டவசமாக அவரது தமிழ் மொழிபெயர்ப்பிலான நூல் பிறகே வெளிவந்தது. (ஏற்கனவே நாம் பேசிக்கொண்டபடி நடைபெறவில்லை. மொழிபெயர்ப்பு கையெழுத்துப் பிரதி என்னிடம் வரவில்லை. அதனால் செழுமைப்படுத்தலில் எனது பங்கு இருக்கவில்லை. அவர் வேறு பதிப்பக வழியை தேர்ந்தெடுத்திருந்தார்).

தோழர் தேவா ‘செங்காலனில்’ இடதுசாரிகள் சந்திக்கிற ‘கபே’யில்தான் தனது பொழுதுகளை களிப்பார். அங்கிருந்து வாசிப்பார். உரையாடுவார். அவர் திருமணம் முடிக்காமல் இருப்பது பற்றி அடிக்கடி நான் முரண்பட்டு பேசிக் கொள்வேன். கடைசிக் காலத்தில் எமக்கு மனம்விட்டுப் பேசவும், தொட்டுணர்ந்து பெறும் திருப்தியும் அதிகம் வேண்டப்படும் என அடிக்கடி சொல்வேன். நாம் சொல்லி அவர் கேட்பது என்றில்லை. ஆனாலும் அவர் அதை உணர்ந்துகொண்டபோது தனக்கான துணையைக் கண்டடைந்தார். அவர் தன் சமூக, அரசியல் வாழ்வை அதே பாதையில்தான் தொடர்வேன் அதற்கு தடையாக புதிய உறவு இருந்திடக் கூடாது என உறுதியாகவே இருந்தார்.

அவர் எம்முடன் ஒரு விசாலமான உறவை வைத்திருந்தார். மகள் நிறமி 2000 இல் பிறந்தபோது ஒரு நீண்ட வாழ்த்து மடல் எழுதினார். அவள் வளர்ந்த பிறகு அதை வாசிக்க வேண்டும் என்றார். இப்போதும் அது எம்மிடம் பத்திரமாக உள்ளது. அவரது மரணச் செய்தி -எல்லாவற்றையும் மீறி- பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டே இருக்கிறது. நினைவின் அருகாமையை நான் உணர்கிறேன். அவ்வாறேதான் அந்த நெடிய உறவில் நாம் இருந்தோம்.

சென்று வா தோழனே!.

1994 – றஞ்சியுடன்!

1994 – ஆரதியின் முதலாவது பிறந்தநாளன்று !

குறிப்பு :

பொப்மார்லியும் றேகே இசையும்
ஆங்கிலத்தில் ரீற்றா பொறஸ்
மனிதம்-7 பக். 17-21
மனிதம்-8 பக். 43-47
மனிதம்-9 பக். 50-54
மனிதம்-10 பக். 34-39
மனிதம்-11 பக். 37-41

அகதிகள் உருவாக்கமும் அடிப்படை உண்மைகளும்
மனிதம்-12 பக். 46-49
மனிதம்-13 பக். 52-58

நிக்கரகுவா -புரட்சியின் பின்
Race and Class (1991) புத்தகத்தில் Hazel Smith என்ற விரிவுரையாளர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்
மனிதம்-22 பக். 22-27
மனிதம்-23 பக்.18-22

ஜப்பான் – சூரிய சாம்ராஜ்யம்
இக் கட்டுரை Christian Worker -oct.93 இதழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது
மனிதம்-25 பக். 32-35
மனிதம்-26 பக்: 35-37

சூறாவளியின் கண்களில் 120 மில்லியன் குழந்தைகள்
1970 இல் Eduardo Galeano எழுதிய Open Veins of Latin America என்ற நூலின் முகவுரை இது.
மனிதம்-27 பக். 11-14
மனிதம்-28 பக். 36-40

உளவியல் பார்வையில் நாசிசம்
Erich Fromm எழுதிய Escape from Freedom நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது.
மனிதம்-28 பக். 10-14
மனிதம்-29 பக். 28-33
மனிதம்-30 பக். 44-54

*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: