ஜோன் மெயர்ஷைமர் அமெரிக்காவின் ஒரு அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும் சர்வதேச உறவுகளுக்கான நிபுணரும், சிக்காக்கோ பல்கலைக் கழக பேராசிரியரும் ஆவர். அரசியல் சிந்தனையில் தாக்கம் செலுத்துகிற சிந்தனையாளர்களில் இவர் முக்கியமானவர். உக்ரைன் ரசிய பிரச்சினை குறித்து அவர் 2008 இலிருந்தே பேசிவருகிறார். அவர் உட்பட சுவிஸ் வரலாற்றாசிரியர் டானியல் கன்ஸர் போன்ற சிந்தனையாளர்கள் பலரும் உக்ரைன்-ரசிய யுத்தம் ஓராண்டு என்பதை மறுக்கிறார்கள். 2014 இலிருந்து அது தொடங்கிவிட்டதாகவும் அது ஒன்பதாவது ஆண்டில் காலடி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்
இந்தப் போர் எங்கே போய் முடியப்போகிறது என்ற கேள்வியே பலரிடமும் பிரதானமாக இருக்கிறது. நாங்கள் (அமெரிக்கர்) உக்ரைனை போரில் முன்னே சென்று சண்டையிட நிர்ப்பந்தித்திருக்கிறோம். இறுதி உக்ரைன் மனிதன் இருக்கும்வரை போராடுவோம் என்ற நிலைக்கு தள்ளுகிறோம். ஆனால் நாம் களத்தில் நேரடியாக நிற்கப்போவதில்லை. உக்ரேனியர்களே மடியப்போகிறார்கள். நாம் ஆயுதங்களை வழங்கிக்கொண்டிருக்கிறோம். பயற்சிகளை வழங்கிக் கொள்கிறோம். அவற்றில் உக்ரேனை தங்கிநிற்கப் பண்ணியிருக்கிறோம்.
மிக அடிப்படையான கேள்வி ரசியா என்ன செய்யப் போகிறது என்பதே. மேற்குலகில் உள்ளவர்கள் பலரும் உக்ரைன் ரசியப் படைகளை பின்தள்ளப் போகிறது. அதன்மூலம் புட்டின் சரணடைவார் என நினைக்கிறார்கள். அல்லது ரசியாவில் -ஒரு சதிப்புரட்சி மூலம்- ஆட்சி மாற்றம் ஏற்படலாம் எனவும் நினைக்கின்றனர். எனது நீண்டகால அரசியல் புரிதலில் சொல்வதானால், உலகம் இவ்வாறான ஒரு போக்கில் இயங்குவதில்லை. நிச்சயமாக இல்லை.
2008 இல் புக்காரெஸ்ற் இல் நடந்த நேட்டோ மாநாட்டில் ஜோர்ஜியாவையும் உக்ரைனையும் நேட்டோவில் இணைக்க புஷ் தலைமையில் முடிவெடுத்தபோது உடனடியாகவே ரசியா இது தமது பாதுகாப்பின் மீதான அச்சுறுத்தல்; இதை அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துவிட்டது. இப்போ ரசியாவை எப்படி உக்ரைனில் வைத்து தோற்கடிக்கலாம் என முனைகிறோம். இது மிகப் பாரிய மோசமான விளைவுகளை கொண்டுவரக் கூடியது. 2008 தீர்மானம் விளைவித்த மிக மோசமான விளைவே 2014 இன் வரலாறு. (உக்ரைன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரர் யனுகோவிச் இனை 2014 இல் சதிப்புரட்சி மூலம் அமெரிக்கா அகற்றியதோடு தமக்கு சார்பான பேற்றோ பொரசெங்கோவை ஆட்சியிலமர்த்தியது. கிரேமியாவில் நேட்டோவுக்கான இராணுவத் தளம் அமைக்கும் அமெரிக்கத் திட்டத்தை முறியடிக்க திடீர் இராணு நடவடிக்கை மூலம் கிரேமியாவை ரசியா கைப்பற்றியது).
ரசியாவை ஒடுக்கிவிட எம்மால் முடியாது. கீவ் உட்பட எல்லா நகரங்களையும் தரைமட்டமாக்க அவர்கள் பெரும் ஆயுதங்களை உபயோகிக்கவே செய்வார்கள்.
2வது உலக யுத்தத்தின்போது யப்பானிய நகரங்களை தீக்கிரையாக்க அமெரிக்கா முடிவெடுத்தது. டோக்கியோ மீது நெருப்புக் குண்டுகளை வீசினோம். 10 மார்ச் 1945 மிகப் பெரும் மனிதப் படுகொலையை செய்தோம். அணுகுண்டுகளை வீசினோம். மிக திட்டமிட்டபடி நகரங்களை மண்மேடாக்கினோம். ஏனெனில் நாம் யப்பானின் பிரதான பகுதியை ஆக்கிரமிக்க விரும்பியிருக்கவில்லை. ரசியர்களும் இப்போ தமது வெற்றியை சாதிக்க இதையே செய்வார்கள். இப்போ அணு ஆயுதத்தை தயார் நிலையில் வைத்திருப்பதாக ரசியா அறிவித்ததின் மூலம் எமக்கு ஒரு சமிக்ஞையை அனுப்பியிருக்கிறது. தாம் இந்தப் பிரச்சினையை எவளவு தீவிரமாக எடுத்திருக்கிறோம் என்பதே அது.
நாம் ரசியாவை பின்தள்ளி ஒரு முட்டுச் சந்திக்குள் தள்ளுகிற நிலை வருமானால், தன்னை அணுவாயுத வல்லரசாக வைத்திருக்கும் ஒரு நாடு தன் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தலை எவ்வழியிலாவது எதிர்கொள்ள முயலும். அந் நிலையில் இது அணுவாயுத போராக மாறலாம். 1962 இல் சோவியத் யூனியன் கியூபாவில் தனது அணுவாயுதத்தை நிலைகொள்ளச் செய்தபோது நெருக்கடி ஏற்பட்டது. அது எமது பாதுகாப்பை அச்சுறுத்துவதாக இருந்தது. (பின்னர் சோவியத் யூனியன் அதை வாபஸ் பெற்றது). இப்போதைய நிலைமை ரசியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கிறது. 1962 இல் சோவியத் யூனியன் அணுவாயுதத்தை கியூபாவில் வைத்தபோது, அன்றை ஆட்சியிலிலிருந்த கெனடியின் ஆலோசகர்கள் சோவியத் யூனியன் மீது அணுவாயுதத்தை ஏவ தயாராக இருந்தார்கள். ஏனெனில் கியூபாவில் நிலைநிறுத்தப்பட்ட அணுவாயுதம் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என அவர்கள் நினைத்தார்கள்.
இப்போ அணுவாயுதப் போர் என்பது சிறிதளவான சாத்திய நிலையிலேயே உள்ளது. ஆனால் நெருக்கடியை கையாள நாம் எடுக்கும் தொடர் நடவடிக்கைகள் அல்லது வழிமுறைகள் அணுவாயுதப் போருக்கான மிகப் பெரும் சாத்தியத்தை உருவாக்கலாம் என்ற மிகப் பெரிய அச்சம் உள்ளது. எனவே நாம் என்ன செய்கிறோம் என்பது குறித்து மிக அவதானம் தேவை. ஆனால் அது நடக்கும் என நான் நினைக்கவில்லை. எங்களுக்கும் ரசியாவுக்குமான போட்டியில் ரசியா வெல்லும் என்பதே என் கணிப்பு.
ஏன் அப்படி சொல்கிறீர்கள் என என்னை நீங்கள் கேட்கலாம். இப்படிப் பாருங்கள். யார் இந்த நிலைமைகள் குறித்து மிக ஆழமாக கவனத்தில் எடுத்திருக்கிறார்கள். ரசியாவா அமெரிக்காவா?. அமெரிக்கா உக்ரைன் பற்றி கவனத்தில் எடுத்ததில்லை. அமெரிக்கா உக்ரைனை வெற்றியடையச் செய்ய தமது உயிரை கொடுக்கத் தயாரில்லை. ஆனால் மறுகரையில் ரசியா தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறது. அது குறித்து தீவிரமாக கவனத்தில் எடுத்திருக்கிறது. எனவே இப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் முனைப்பின் சமநிலை இருவரிடையேயும் (அமெரிக்கா, ரசியா) ஒன்றில்லை. எனது கணிப்பு -ஆம் எனது கணிப்பு மட்டுமே- என்னவெனில் ரசியாதான் இதனால் பயனடையப் போகிறது. அமெரிக்கா அல்ல.
யார் இந்தப் போரில் தோல்வியடையப் போகிறார்கள்?. அமெரிக்காவுக்கு யார் தோல்வியடையப் போகிறார்கள் என்பதில் கவலையில்லை. நான் நினைக்கிறேன். இந்தப் போரில் தோல்வியடையப் போவது உக்ரைன்தான். நாங்கள்தான் உக்ரைனை நேட்டோவுக்குள் கொண்டுவர அழுத்தம் கொடுத்தோம். மேற்கின் தலையீட்டை ரசிய எல்லைவரை கொண்டுபோக உக்ரைனுக்கு மிகப் பெரும் அழுத்தம் கொடுத்தோம். நீங்கள் ஒரு கரடியின் கண்ணுக்குள் தடியால் குத்தி விளையாட நினைத்தால் கரடி சிரித்து விளையாடப் போவதில்லை. மாறாக அது திருப்பி தாக்கவே செய்யும். அதுவே இன்று நடக்கிறது.
இந்த நிலைக்கு யார் பொறுப்பு. ரசியாவா? நான் அப்படி நினைக்கவில்லை. ரசியா ஒரு மோசமான யுத்தத்தை நடாத்துகிறது என்பதில் எனக்கு கேள்வியில்லை. அந்த உண்மையை மறுக்க நான் தயாரில்லை. இந்த நிலைக்கு ரசியாவை தள்ளியது எது? எனது பார்வையில் அது அமெரிக்காதான்!.
-14032023
- (ஒரு வருடத்தின் முன் மெயர்ஷைமர் கூறியவை இவை. இப்போதைய நிலையின் போக்குகள் அவரது சிந்தனையோடு எப்படி ஒட்டிச் செல்கிறது என்பதை இந்த -குறுக்கப்பட்ட- உரையில் பார்க்கலாம்.)
- Thx : image. Reddit