நெடுமாறனின் பிரபாகரன் கதை
- இப்போ 2023. இடையில் 14 ஆண்டுகள். தலைவருக்கு இப்போ நரைவிழுந்திருக்கிறது. தாடி வளர்ந்திருக்கிறது. விடுதலைத் தீயை அவர் ஏந்தியிருக்கிறார். வெளியுலகிலிருந்து துண்டித்த கூட்டிலிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு வருகிறார். சரியான தருணம். அதென்ன சரியான தருணம் என நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். தலைவர் வருவார். திட்டத்தை அறிவிப்பார். தமிழீழம் கிடைக்கும். தமிழீழப் படம். இயக்குநர் யார் என்பதும் நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். ஊடகங்களெல்லாம் அரைச்சு அரைச்சு தீவனமாக எமக்கு வழங்குகிறது. நாம் எவளவு பெரிய முட்டாள்கள் என நெடுமாறன், காசி கோஸ்டியும் ஊடகங்களும் நினைத்திருக்கலாம். இருக்கட்டும்.
கணிதத்தில் பிரதியீடு செய்வது போல தலைரையும் பிரதியீடு செய்வம். விடுதலைப் போராட்டம் என்பது சினிமாவா என்ன. விடுதலைப் போராட்டம் என்பது ஒரு அரசியல் செயற்பாடு. அது மக்களை மையப்படுத்தியது. அமைப்பு வடிவத்தை வேண்டுவது. அதற்கான அர்ப்பணிப்பு, தொடர் செயற்பாடுகள், மக்களை அரசியல் சிந்தனைக்குள்ளும் விழிப்புணர்வுக்குள்ளும் படிப்படியாக மேல்நோக்கி நகர்த்துகிற அரசியல் வேலைமுறைகள், (ஆயுதப் போராட்டமெனின்) இராணுவக் கட்டமைப்பு, பயிற்சிகள், மனித வளம் என இன்னோரன்ன நடவடிக்கைகளும் மறுபுறம் அதற்கெதிராக புதிதுபுதிதாக தோன்றும் எதிரியின் அணுகுமுறை, அதற்கேற்ப போராட்ட அமைப்பின் அணுகுமுறை என தொடராக ஒரு இயங்கியல் தன்மை கொண்டது போராட்டம் என்பது. மக்களினதும் போராளிகளினதும் தியாகங்களோடு சம்பந்தப்பட்டது அது. தமிழ்ச் சினிமாவில் கதாநாயகத்தனங்களை கண்டு விசிலடிக்கிற மனோபாவத்துடன், ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த தமிழ் மக்களின போராட்டத்தை ஒரு திரைப்படம் போல ஆக்கும் அறிவுபிறழ்ந்தவர்களின் கோமாளித்தனங்களுக்கு இப்படி குந்தியிருந்து எழுத வேண்டியிருக்கிற அவலம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்திய அரசு தமிழக தமிழர்களையும் கண்டுகொள்வதில்லை என பேசி பேசி காலங்கழித்துவிட்டு, இந்தியத் தேசியத்தை மேவி தமிழ்த் தேசியத்தை முன்வைத்த நெடுமாறன் போன்றோர் ஒரு அசல் இந்தியத் தேசியவாதியவாதியாக, இன்னும் சொல்லப் போனால் இந்துத் தேசியவாதிகளாக தம்மை அடையாளம் காட்டுகின்றனர். சீனாவை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கிற இந் நிலையை எதிர்கொள்ள தலைவர் வேணுமாம். அவர் முந்தி இந்தியாவுக்கு பகையான நாடுகளோடு உறவு வைத்துக் கொள்ளவில்லையாம். இந்தியா பக்கம் நின்றாராம்.
ராஜீவ் காந்தி இந்தியாவின் சும்மா பிரதமராகவா இருந்தார், சும்மா கொல்வதற்கு?. இந்திய இராணுவம் இலங்கையில் சும்மா சுட்டு விளையாடியதா, சும்மா கொலைசெய்ததா. கடைசிப் போரில் இந்தியா இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளை அழித்ததும் சும்மாவா? தமிழினவாதம் பேசியபடியே, இவளவும் செய்த இந்திய அரசை ஏற்றுக்கொண்டு தமிழின அடையாளத்தை விட (அல்லது அதோடு சேர்த்து) இந்தியத் தேசியத்தை முன்னுக்கு வைத்து பேசுகின்றனர். முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது தனித்த இலங்கை அரசின் நடவடிக்கையல்ல. இந்தியாவுக்கு சீனாவை விடவும் மிகப் பெரிய திரைமறைவுப் பங்களிப்பு இருக்கிறது. நாம் பேசுவது அரசாங்கங்கள் குறித்தல்ல. அரசு குறித்தது. காங்கிரசு செய்தது என விரல் நீட்ட நாம் வாக்கு அரசியல் பேசினால்தான் முடியும்.
இதை ஏன் சொல்ல வேண்டி வருகிறது. பிரபாகரன், அல்லது -வாரிசு அரசியல் சிந்தனைமுறையில் சித்தரிக்கப்படும்- துவாரகா தலைமையில் தமிழீழப் போராட்டம் தொடரும் என குரலெடுப்பது அந்தப் போராட்டம் ஈழத் தமிழர்களின் அமைப்பற்ற ‘அமைப்பில்’ சாத்தியப்படாது என்பது இயங்கியல் அணுகுமுறை கொண்டது. புலிகள் என்ற அமைப்போ அல்லது வேறு ஆயுதப் போராட்ட இயக்க அமைப்புகளோ வந்துபோன கனவாக போய்விட்டவை. அதன்பிறகும், “பிரபாகரன் வருகிறார் துவாரகா வருகிறார்… பராக்… பராக்” என அறிவித்தால் அவர்கள் இந்திய அரசின் எடுபிடிகளாகத்தான் வர முடியும். ஒரு கோணல் போராட்டத்தைத்தான் எடுக்க முடியும். துரத்தித் துரத்தி ஈழத்து இளசுகளை -இந்திய இராணுவ காலத்தில் ஈபிஆர்எல்எப் இயக்கம் செய்ததுபோல்- பிடித்து கூலிப்படையைத்தான் அமைக்க முடியும். அதற்குக்குக்கூட சாத்தியமான சூழல் தற்போது அங்கு இல்லை.
தமிழகத்துத் தோழர்கள் மன்னிக்க வேண்டும். தமிழக பொதுமனநிலையிலோ தமிழின உணர்வாளர்களிடத்திலோ ஈழத்தின் இன்றைய யதார்த்த நிலை குறித்து இருக்கிற உணர்ச்சிவாத மதிப்பீடுகள் பொய்மை கொண்டது. அங்கு யாரும் மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டத்தை விரும்பவேயில்லை. சிதைத்து எறியப்பட்ட போராளிகள் குடும்பங்களோ முன்னாள் போராளிகளோ ஒரு சராசரி வாழ்வை வாழ போராட வேண்டியிருக்கிற நிலை அங்கத்தையது. நொந்துபொய் இருக்கிறார்கள். சும்மா இருந்து ஒரு action film ஓட்டுவதுபோல பிரபாகரனையோ தமிழீழத்தையோ படமாக ஓட்டுவது கேலிக்குரியது.
இன்றைய பூகோள அரசியல் என்பது நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைப்பாட்டோடு மட்டும் தொடர்புடையதல்ல. உலகமயமாதலோடும் தொடர்புகொண்டது. அதன்வழி கெட்டிதட்டிப்போன உலக ஒற்றை ஒழுங்கின் மீதான தற்போதைய போரோடும் சம்பந்தப்பட்டது. உக்ரைன்-ரசிய போர் என்பது சிக்குப்பட்டிருக்கிற இடமும் அதுதான். அது எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய -நேரம்சமான அல்லது எதிரம்சமான- மாற்றங்களோடு தகவமைந்து கொள்ள அல்லது எதிர்கொள்ள நாடுகள் தம்மை தயார் படுத்த முனைகின்றன. அணிச் சேர்க்கைகள் மாற்றமடைகின்றன.
திருகோணமலையில் ஒரு தளத்தை அமைக்கும் கள்ள நோக்கில் அமெரிக்கா நீண்ட காலமாக முயன்றுகொண்டிருக்கும் மிலேனிய ஒப்பந்தத்தை (Millennium Challenge Corporation (MCC) and Status of Forces Agreement (SOFA) Agreements) ராஜபக்ச ஆட்சிகளில் எற்படுத்த முடியாமல் போய்விட்டது. இனியும் அது நடக்காது என யாரும் உறுதியாக சொல்ல முடியாது. அதுவும் வரப்போகிற ஏதொவொரு அரசாங்கத்தால் கையெழுத்திடப்படுமாக இருந்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் சீனா மட்டுமல்ல அமெரிக்காவும்தான்.
மேற்குலகுகிலிருந்து ஆசியாவுக்கு உலக மேலாதிக்கமும் ஒழுங்கும் இடம்மாறுவதை மேற்குலகு மூர்க்கத்தோடு எதிர்க்கவே செய்யும். இந்த கிடுக்குப்பிடியை எதிர்கொள்ள இந்தியாவுக்கு பிரதேச முக்கியத்துவத்தின் அடிப்படையில் இலங்கை தேவை. குறைந்தபட்சம் தமிழீழ பிரதேசமாவது தேவை. அது தமிழர்கள் மீதான பாசமாக பொங்கி 13 வது திருத்த பானைக்குள் அரிசி போடுற ஆரம்ப நிலையில் உள்ளது.
சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகே திணறும்போது பிரபாகரன் வந்து எதிர்கொள்வார் என்ற அர்த்தத்தில் சொல்ல நெடுமாறனுக்கு அறிவு பெயர்ந்துவிட்டதா என்ன. இல்லை!. அங்குதான் இந்திய அரசின் பூகோள அரசியல் காய்நகர்த்தலை செய்ய இந்தியா வருகிறது. அதன் எடுபிடியாக நெடுமாறன் வருகிறார். இலங்கையில் இந்தியாவுக்கான ஒரு தளம் தேவைப்படுகிறது. அரசியல் தளமோ இராணுவத் தளமோ அல்லது இரண்டுமோ என்பது அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டது. அந்த நிகழ்ச்சி நிரலுக்குள் சுழல்பவர்களே அண்ணாமலை, நெடுமாறன் காசி ஆனந்தன் போன்றவர்கள். அதற்கு துணைபோகிறவர்களாக சிவாஜிலிங்கம் போன்ற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். பிரபாகரன் உயிர்த்த இடமும் அதுதான்.
இந்த நயவஞ்சகத்துக்கு லூசுத்தனமான வாதங்களோடும் வரலாற்றுத் திரிப்புகளோடும், தொப்பூழ்க் கொடி உறவு உணர்ச்சிவாதத்தோடும் ஊடகங்களில் அரசியலாளர்கள், புத்திசீவிகள் முளைக்கிறார்கள். இலங்கை முன்னர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததாம். இந்தியா என்ற நாட்டுருவாக்கம் எப்ப ராசாமாரே உருவாகியது?. 13ம் திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதுதான் இந்தியாவின் நோக்கமாம். தமிழ்ப் பகுதியின் உட்கட்டுமானங்களை இந்திய அரசு நிர்மாணித்து வருகிறது என்கிறார் அண்ணாமலை. தமிழ்ப் பிரதேசத்துடனான பிணைப்பு எதிர்காலத்தில் -வான், தரை, கடல் வழிகளினூடு- இன்னும் இறுகுமாம். நம்புறம். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதையும் நம்புறம். அவர் நாளை காணொளி ஒன்றில் தோன்றி உரையாற்றவும் கூடும். அதையும் நம்புவம். பிரபாகரனோடு தான் உரையாடுவதாக நெடுமாறன் சொல்வதையும் நம்புறம். ஆவிகளோடு பேசும் திறன் கொண்டவர் நெடுமாறன் என்பது எமக்கு இதுவரை தெரியாமல் போய்ச்சு!