மேற்குலக “புலம்பெயர் தமிழர்கள் வசதியான வாழ்வை வாழ்ந்து கொண்டு…” என ஒரு ஆயுதத்தை புலம்பெயர் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு அல்லது நெருக்குதலுக்கு சாமான்ய மனிதஜீவியிலிருந்து, (ஒரு பகுதி) புத்திஜீவிகள் வரை தமக்குள் கைமாற்றிக் கொள்கிறார்கள். இதுபற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. இது உண்மையா மாயையா, இதன் அடிப்படை காரணம் என்ன என்பதே அந்த யோசனை.
உண்மையில் இந்த வசதி என்பதன் அளவுகோல் “நுகர் கலாச்சார மனநிலை” யிலிருந்துதான் மதிப்பிடப்படுகிறது என நினைக்கிறேன். “பொருளாதார அடிப்படை”யில் என வெளித் தோற்றம் ஒன்றை அது கொடுப்பது உண்மை. ஆனால் அது ஒரு மாயை. இந்த நாடுகளில் நாம் செய்யும் தொழில்கள் தேர்ச்சியற்ற தொழிலாளர்கள் (unskilled workers) வகைக்குள் அடங்குவது. தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களில் பலரும் இந்தப் பொறிக்குள்தான் அகப்பட்டிருக்கின்றனர்.
அறிவிக்கப்பட்டிருக்கிற வறுமைக்கோட்டை ஒட்டி சற்று மேலும் கீழுமாக நகர்கிற வருமானம் தான் அவர்களது. இது ரூபாவுக்கு பணப்பரிமாற்றம் அடைகிறபோது பெருகும் தொகையை அடிப்படையாக வைத்து “வசதி” என தீர்மானிப்பது தவறானது. இங்கு வாழ்ந்துகொண்டு இலங்கை இந்திய வாழ்க்கைச் செலவோடு வாழும் ஒரு மாயாஜாலத்தை கண்டுபிடித்தால் அந்த எண்ணம் சரியாக இருக்கும். அது சாத்தியமா?. ஒரு பிராங் ஒரு ரூபாவாக இருக்குமாக இருந்தால் இலங்கைக்கு சுற்றுலா செய்வதோ அங்குள்ள உறவுகள் நட்புகளைப் பார்ப்பதோ கனவை துரத்துகிற செயலாகத்தான் இருக்கும்.
சுவிசில் சராசரியாக 3000 பிராங் சம்பளம் எடுக்கிற ஒரு அகதி கோப்பி குடிப்பதென்றால் சுமார் 5 பிராங் தேவைப்படுகிறது. வாழ்க்கைச் செலவை இந்த சிறு உதாரணத்திலிருந்து கணிப்பிட்டுக் கொள்ளலாம். சம்பளத்தை ரூபாவினால் பெருக்கிப் பார்க்கும் ஒருவர் இந்த கோப்பிக் காசை ரூபாவால் பெருக்கிப் பார்ப்பதில்லை. எனவே பொருளாதார ரீதியில் ‘வசதி’ என்பது ஒரு சாதாரண அகதிக்கு பொருந்த முடியாது.
இந்த வருமானத்துள் ஒருவித ஒறுப்புநிலையை செய்தே இலங்கை வர முடியுமாகிறது. குடும்ப உறவுகளுக்கு உதவமுடியுமாகிறது. இயக்கங்களுக்கு மட்டுமல்ல, போர்ப்பாடுகளில் சிக்கிய மனிதர்களுக்கு, சுனாமியில் அகப்பட்ட குடும்பங்களுக்கு, கொரோனா பரிசளித்த வறுமைக்கு, கல்வி செயற்பாடுகளுக்கு, போர்ப்பட்டவர்களின் வாழ்வாதாரத்துக்கு என இந்த அகதித் தமிழர் உதவிசெய்வதெல்லாம் காசு மிஞ்சியல்ல. அதாவது பொருளாதார வசதி கொண்டல்ல. தன்னொறுப்பு நிலைதான் அவற்றை சாத்தியமாக்குகிறது. போர் நடந்துகொண்டிருந்தபோது தாம் பாதுகாப்பான ஒரு இடத்துக்கு ஓடிவந்ததான குற்றவுணர்வும், இன்றுவரை ஏதோவொன்றை தாம் இழந்ததான ஆத்மார்த்தச் சிக்கலும் அவர்களை இந்த உதவிசெய்யும் நிலைக்கு தள்ளிவிடுகிறது. இதற்கு வெளியிலும் இலக்கியம் அரசியல் என பொதுவாழ்வில் இயங்குபவர்கள் இலங்கை இந்தியாவில் அரசியல், இலக்கிய முயற்சிகளுக்கு உதவிசெய்த, செய்யும் நிலையும் உண்டு.
வசதிப்படும்போதெல்லாம் ஒரு அகதி அடிக்கடி இலங்கை இந்தியாவுக்கு ஓடிப் போவதின் பின்னால் உள்ள பதகளிப்புநிலை என்ன. எதையோ ஒன்றை இழந்ததான அந்த நினைப்பு சதா காலமும் அவர்களை துரத்துகிறது. அங்கு ஒரு ஒத்தடம் அவர்களுக்குக் கிடைக்கிறது. அவர்களால் அங்கும் அந்த ‘ஏதோவொன்றை’ கண்டடைய முடிவதில்லை என்றபோதும் திரும்பவும் திரும்பவும் ஓடுகிறார்கள். இவர்கள் எப்படி வசதியான வாழ்வை வாழ்கிறவர்களாக சுட்டப்பட முடியும். வெளிநாட்டுக்கு வந்துவிடுவதால் -மரபாக தொடரும், மரபணுவினூடு தொடரும்- பண்பாட்டு மனநிலை புதிதாக அழித்து எழுதப்படுவதில்லை. அந்த மனநிலைக்கு இலங்கை இந்தியா தருகிற வெளி இங்கு கிடைப்பதில்லை. மொழியால், நிறத்தால், கருத்தியலால் என அந்நியமாதல் நிலைக்கு விரட்டப்படுகிற ஒரு அகதி மனது எப்படி வசதியான வாழ்வை வாழ்கிறது என சுட்ட முடியும். இங்கெல்லாம் அவர்கள் ‘ஏதோவொன்றை’ இழந்ததான நினைப்பில் அமிழ்கிறார்கள்.
நுகர் கலாச்சார மனநிலை என்பது இலங்கையிலுள்ளவர்களுக்கு இருப்பதைப் போன்றே புலம்பெயர் தமிழர்களிடமும் இருக்கிறது. அது இங்கு -அங்கும் போலவே- அவர்களில் பலபேரை கடனாளியாக்கி வைத்திருக்கிறது. ஊருக்கு வரும்போது பணப்பரிமாற்றத்தின் பெறுமதி மீதேறி பவனி வந்து காட்டியும் விடுகிறார்கள். விதவிதமாக போஸ் கொடுத்து முகநூலையும் நிரப்புகிறார்கள். சாமான்ய அகதி மட்டுமல்ல சமூகம் குறித்து சிந்திப்பதாகவும் இலக்கியம் படைப்பதாகவும் சொல்லிக் கொள்பவர்களும்தான் இதைச் செய்கிறார்கள்.
பொருளாதார ரீதியில் அங்குள்ளவர்களின் வாழ்வியலை இடறுப்பட வைக்குமளவுக்கு காணிவிலையை உயர்த்தச் செய்தவர்களும், சீதனத்தை அழியவிடாமல் உயர்த்திவிடுவதும் புலமைப்பரிசில் பெற்ற பிள்ளைகளுக்கு தேவையற்ற பரிசுகள் வழங்கி படிப்பை பாழாக்குவதும்… என பல சமூகப் பிரச்சினைகளுக்கு அவர்கள் காரணமாக இருக்கிறார்கள் என்ற விமர்சனங்கள் உண்டு.
ஆக, மேற்குலக புலம்பெயர் தமிழர்களின் மீதான இலங்கையர் ஒருவரின் பார்வையோ அல்லது மேற்குலகில் வசிப்பதை ஒரு தகுதியாக்கி புலம்பெயர் தமிழர்கள் காட்டுகிற பவுசோ இரண்டுமே நுகர் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்தே நகர்கிறது. ஏற்கனவே நிலவும் நுகர் கலச்சார மனநிலையை புலம்பெயர் தமிழர்களின் பவுசு இலங்கையிலுள்ளவர்களிடம் அதிகப்படுத்தவும் செய்கிறது. உயிரைக் கொடுத்தாவது மேற்குலகுக்கோ அவுஸ்திரேலியாவுக்கோ சென்றுவிட வேண்டும் என்ற தீவிரத்தை அந்த (நுகர் கலாச்சாரப்) பிசாசு ஓதியபடிதான் இருக்கிறது. மிகக் குறைந்த வாழ்வாதாரத்தோடு போராடும் ஒரு தொழிலாளியுடனோ கூலி உழைப்பாளியுடனோ அன்றாடம் காய்ச்சியுடனோ இந்தப் பிசாசு மினக்கெடுவதில்லை.
*
இந்த நுகர்வுக் கலாச்சாரத்துக்கான தீனியை முதலாளித்துவம் இப்போ உலகமயமாதல் முறைமையினூடாக உலகின் எல்லா மூலைகளிலும் ஒரே வடிவில் வழங்கவும் செய்கிறது. தானும் செழிப்புறுகிறது.