பார்ஹா (Farha)

ஜோர்தான் திரைப்படம்

இஸ்ரேல் நாடு (1947-1949) உருவாக்கத்தின்போது, 1948 இல் இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனம் மீது நிகழ்த்திய பெரும் இனச்சுத்திகரிப்பும் படுகொலைகளுமான சம்பவம் நக்பா (nakba) என -அரேபிய மொழியில்- அழைக்கப்படும். பல கிராமங்களையும் நகரங்களையும் இனச்சுத்திகரிப்புச் செய்து இஸ்ரேல் அப் பிரதேசங்களை தன்வசமாக்கியது. இவ் வரலாற்றுக் கொடுமையின்போது ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட பலஸ்தீன மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற மறுத்தவர்கள் குழந்தைகளிலிருந்து முதியவர் வரை படுகொலை செய்யப்பட்டனர். இக் காலகட்டத்தின் ஓர் இரத்தத் துளியாக “பார்ஹா” திரைப்படம் திரையில் வருகிறது.

ஒரு சிறிய பலஸ்தீனக் கிராமத்தில் தந்தையுடன் வசிக்கும் 14 வயதுச் சிறுமியான பார்ஹா ஆண்களுக்கு இருக்கும் கல்வி வசதி பெண்களுக்கும் இருக்க வேண்டும் என விரும்புகிறாள். ஆணாதிக்க சமூக இறுக்கத்தில் இருக்கும் அந்தக் கிராமத்தில் அது சாத்தியமில்லை எனும்போது நகரத்துக்குச் சென்று படிக்க விரும்புகிறாள். நகரத்தில் வசிக்கும் அவளது மாமா அதற்கு உதவ முன்வருகிறார். பார்ஹாவின் தந்தையை இணங்கவைத்ததோடு, நகரத்தில் அவளது படிப்புக்கான எல்லா உதவிகளையும் செய்வதாக கூறுகிறார்.

ஒரு நெடிந்த மரம். அதில் தொங்கும் ஊஞ்சல். பார்ஹா தனது நண்பியோடு அதில் இருந்தபடி; கதைத்துக்கொண்டு இருக்கிறாள். சிரிப்பொலி… பம்பல் பேச்சுக்கள்!. திடீரென பலத்த குண்டுவெடிப்புப் பேரொலி உலுக்குகிறது. அவர்களை மட்டுமல்ல, அந்த கிராமத்தின் இயல்பு வாழ்வையும் தகர்த்தெறிகிறது, அந்தப் பயங்கர ஒலி. அதிர்ச்சியால் மூடுகிறது. மாமாவுடன் காரில் தப்பியோட பார்ஹாவை அவசர அவசரமாக தந்தை அனுப்பி வைக்கிறார். பார்ஹாவோ தந்தையை தனியாக விட்டு செல்ல மறுத்து அவரிடம் திரும்பி ஓடி வருகிறாள். “எல்லோருமே வெளியேற வேண்டும். வேளியேற மறுப்பவர்கள் கொல்லப்படுவர்” என ஒலிபெருக்கி அலறுகிறது. இஸ்ரேலிய இராணுவம் அண்மிக்கிறது. இராணுவ எடுப்புடன் கொலைப் பிசாசு வீதியில் இறங்குகிறது. அது தனது இராட்சதப் பாதத்தால் ஒழுங்கைகளில் புழுதி கிளப்பி அந்தக் கிராமத்துள் புகுந்துவிடுகிறது.

பார்ஹாவை தகப்பன் வீட்டின் வெளியே இருந்த சேமிப்பு அறைக்குள் விட்டு பூட்டிவிடுகிறார். கணங்கள் யுகங்களாக பாரமுறுகின்றன. பார்ஹா கதறுகிறாள். “நான் திரும்ப வருவேன்… பாதுகாப்பாக அவதானமாக இரு” என்றுவிட்டு துப்பாக்கியொன்றுடன் வெளியேறுகிறார், தந்தை!. பார்ஹா அந்தரிக்கிறாள். நிமிடங்கள் மணித்தியாலமாகின. மணித்தியாலம் நாட்களாக மாறின. தந்தை வரவேயில்லை.

அவளது உலகம் இருட்டறையானது. பகல் ஒரு பொந்து வெளிச்சமானது. இரவு ஒரு லாம்பு வெளிச்சத்தை மொய்த்துக் கொண்டு இருந்தது. எண்ணெய் முடிய லாம்பும் மறைந்தது. சேமித்துவைக்கப்பட்ட ஒலிவன் அவள் சாப்பாடு ஆனது. தண்ணீரின்றி வரண்ட நாக்கு. எதிர்பாராமல் பெய்த மழையினை பொந்தினூடாக ஏந்திக் குடிக்கிறாள். அச்சம், திகில், எதிர்பார்ப்பின் சிதைவு என அவள் உலகம் அல்லாடுகிறது.

அந்த அழகிய கிராமிய வாழ்வின் வெளியை மேய்ந்து, இயற்கைச் சூழல், அருவி, நெடிய மரம், அதில் தொங்கும் ஊஞ்சல் என அழகை இரசித்துக்கொண்டிருந்த கமரா பார்ஹாவுடன் சேர்ந்து சேமிப்பு அறைக்குள் நுழைந்துவிடுகிறது. இஸ்ரேலிய இராணுவம் பார்ஹாவின் வீட்டு முற்றத்தில் குடும்பமொன்றை கொலை செய்வதை கதவு இடைவெளிக்குள்ளால் கமரா கண்பிதுங்கிப் பார்க்கிறது. தப்பியோடி வந்து பார்ஹாவின் வீட்டிற்குள் நுழைந்த அந்தக் குடும்பத்தினை ஓட்டைக்கு ஊடாக கமரா காண்கிறது. இராணுவம் அந்தக் குடும்பத்தை கண்டுபிடித்து விடுகிறது. இழுத்துவந்து முற்றத்தில் வைத்து சுட்டுத் தள்ளுகிறது. பிறந்த சிசுக் குழந்தையை கொதிக்கும் வெயிலில் விட்டுச் செல்கிறான் கடைசி இராணுவத்தான். குழந்தையின் அழுகை ஒலி கேட்டபடி இருக்கிறது.

அந்தக் குழந்தையின் அழுகை ஒலி தொடர்ந்து ஒலிக்குமா… பார்ஹா என்ன செய்கிறாள்… தப்புவாளா இல்லையா… இருட்டு அறையிலிருந்து கமரா வெளியே வருமா… காணாமல் போன தகப்பன் எங்கே… திரும்ப வருவாரா? என பதட்டத்துடன் கதையை முந்திச் சென்றுகொண்டிருந்தது, இஸ்ரேலியப் பயங்கரவாதம் துரத்திய எனது கற்பனை. நீங்களும் அதை அனுபவிக்க வேண்டும்.

ஒளியை மட்டுமல்ல இருளையும் தின்று விழித்திருக்கும் கமரா, அமைதியைக்கூட இசையாக்கும் அற்புதம் வாய்ந்த இசை என்பன உணர்வுகளை நரம்பெல்லாம் ஊரவிடுகின்றன.

நக்பா பிரளயத்துள் அகப்பட்ட றடியே (Radieh) என்ற சிறுமியின் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் பார்ஹா. ஜோர்தானைச் சேர்ந்த டாறின் சல்லம் (Darin Sallam) என்ற பெண் இயக்குனர் இப் படத்தை இயக்கியிருக்கிறார். இப் படம் இஸ்ரேலினால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. தமக்கு நடந்த holocaust போன்றதாக இந்தப் படம் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடந்துகொண்டதான தோற்றத்தை தருவதாக கடுமையாக விமர்சித்தனர். நிதி அமைச்சரும் கலாச்சார அமைச்சரும் இப் படம் திரையிடப்படுவதற்கு எதிராக கிளம்பினர். நெற்பிளிக்ஸ் இல் வெளியிடப்படுவதை எதிர்த்து அவர்கள் காட்டிய எதிர்ப்பை மீறி நெற்பிளிக்ஸ் இப் படத்தை டிசம்பர் 1 இலிருந்து தனது தளத்தில் ஏற்றியுள்ளது. இயக்குனர் சல்லம் அவர்களை ஒரு நாசி எனவும் அரபுப் பயங்கரவாதி எனவும் கடுமையாக சாடினர்.

“1948 இல் பலஸ்தீனத்திலிருந்து ஜோர்தானுக்கு எனது குடும்பத்தையும் நக்பா துரத்தியது. அதனால் நக்பாவை நிராகரிப்பது என்பது எனது இருத்தலை (existance) நிராகரிப்பது போலாகும்” என்கிறார் சல்லம்.

“The film exists, we exist, and we will not be silenced”-Darin Sallam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: