” ஐரோப்பா ஒரு தோட்டம். மற்றவையெல்லாம் காடுகள்”
ஐரோப்பிய ஆணையத்தின் உபதலைவரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கான கொள்கை வகுப்பாளர்களின் உயர் அதிகாரியுமான யோசப் போர்ரல் அவர்கள் இவ்வாறு செப்பியிருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்.
“ஐரோப்பா என்ற தோட்டத்தை நாம் நிர்மாணித்திருக்கிறோம். எல்லாமே சரியாக தொழிற்பாட்டில் உள்ளது. அரசியல் சுதந்திரம், பொருளாதாரச் செழிப்பு, சமூக ஒருமைப்பாடு என்ற மூன்றும் இணைந்ததாக அது செயற்படுகிறது. இவ்வாறான அற்புதமான செழிப்பான சுதந்திரமான ஐரோப்பா இந்த உலகில் விதிவிலக்கானது.
ஐரோப்பா தவிர்ந்த பெரும்பாலான நாடுகளை தோட்டங்களாக பார்க்க முடியாது. அந்தக் காட்டுக்குள் போய் அவர்கள் நாகரிகமடைய உதவ வேண்டும். இல்லையேல் ஐரோப்பா தப்பிப்பிழைக்க முடியாது.
இந்த சிறிய தோட்டத்தை ஒரு சுவரை கட்டி பாதுகாக்க முடியாது. ஏனெனில் காடு பலமான வளர்ச்சி கொண்டது. தோட்டத்தை அதனிடமிருந்து காப்பாற்ற சுவர் போதுமான உயரம் கொண்டதாக இருக்க முடியாது. அப்படியானால் என்ன தீர்வு?. தோட்டக்காரர்கள் காட்டுக்குள் போய் இன்னுமின்னும் செயற்பட வேண்டும். உலகு நாகரிகமடைய உதவ வேண்டும். இல்லையேல் காடு பல வழிகளிலும் எங்களை ஆக்கிரமித்துவிடும்.”
இவ்வாறு பொர்ரல் அவர்கள் 17.10.22 அன்று பேசியிருக்கிறார்.
2019 பெப்ரவரியில் மொஸ்கோவில் ரசிய வெளிநாட்டமைச்சர் லாறோவ் அவர்களை சந்தித்தபோது, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சாய் நவல்னியின் விசக் கருத்துகளுக்கு பலியாகியிருக்கின்றனர் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நம்பகத்தன்மையற்ற கூட்டாளி எனவும் வார்த்தைகளை விட்டெறிந்தார். சர்வதேச ஊடடகங்களில் தலையங்கத்தைப் பிடித்த செய்தியாக அது வந்து சர்ச்சையைக் கிளப்பியது. லவ்றோவ் உடனான அந்த சந்திப்பு முடிந்த சில மணி நேரத்திலேயே ரசியா மூன்று ஐரோப்பிய ஒன்றிய ராஜதந்திரிகளை வெளியேற்றியது.
பொர்ரல் இன் இந்தக் கூற்றினால் அவர் பதவி விலக வேண்டும் என 70 அங்கத்தவர்கள் குரலெழுப்பினார்கள். ஆனால் இப்போ “தோட்டம் – காடு” விவகாரத்தில் அவரைக் கண்டித்து அவர்கள் எழவில்லை. பதவி விலகச் சொல்லி கேட்கவுமில்லை. இடதுசாரியக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஐரோப்பிய ஒன்றிய மன்றினுள்ளும் வெளியிலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். ஐரோப்பிய நாடுகளின் காலனிய கால செயற்பாடுகளையும் ஆபிரிக்க மக்களை அடிமைகளாக நடத்திய வரலாற்றையும் காட்டி ஐரோப்பாவை இப்போதும் நவ காலனிய சிந்தனை முறையே வழிநடத்துகிறது என வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்தனர். ஐக்கிய அரபு இராச்சியம் மிகக் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.
“யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். நான் சொன்னது பிழையாக விளங்கிக்கொள்ளப் பட்டுவிட்டது. இப்போதும் சொல்கிறேன் நான் பேசியது சரி” என வேறு விளக்கம் கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
ஆமாம்… தவறு ஆனால் தவறில்லை !
ஐரோப்பாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காலனிய சூறையாடலை தவிர்த்து எவராலும் விளக்கமளிக் முடியாது. ஜனநாயக வளர்ச்சியான முறைமையை அல்லது கட்டமைப்புகளை தத்தமது நாட்டுக்குள் கொண்டுள்ள அவர்கள் மனதளவில் சக மனிதர்களின் (நாடுகளின்) மீது ஜனநாயகத்தன்மையுடன் நடப்பதில்லை. அவர்கள் அமெரிக்காவுடன் சேர்ந்து நடாத்திய போர்கள் மூலம் சகமனிதர்களின் சுதந்திரத்தை, சக நாடுகளின் சுயாதீனமான இறைமையை மதிக்காத வரலாற்றை ஜனநாயகப் பெறுமதியால் எப்படி விளக்குவது.
உலக அதிகாரத்தையும், வெள்ளையின மேலாதிக்கத்தை (அல்லது ஐரோப்பிய மையவாதத்தை) அவர்கள் இழந்துவிடப் போகிறோமா என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள். சீனாவின் வளர்ச்சி அவர்களை உறக்கமில்லாமல் ஆக்கியிருக்கிறது. அதனால் நேட்டோ விஸ்தரிப்பை ஆசியப் பிராந்தியத்துள் விரிவாக்க அவர்கள் துடிக்கிறார்கள். அது மூன்றாம் உலகப் போருக்கான ஆபத்தைக் கொண்டிருந்தாலும், அணுவாயுதப் போருக்கான சாத்தியத்தை அருகில் கொண்டுவந்தாலும்கூட உலக அதிகாரத்தையும் வெள்ளையின மேலாதிக்கத்தையும் இழக்காதிருக்கும் வெறியில் அவர்கள் இருக்கிறார்கள். இரு நாடுகளுக்கு இடையிலான போர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியபடி அவர்கள் தமது பதட்டத்தை போர்களால் தணிக்க முயல்கிறார்கள்.
ஜோசப் போர்ரல் அவர்கள் விட்டெறிந்த வார்த்தைகளின் விளைநிலம் அதுதான்.
“இந்த காட்டை தோற்கடிப்பதற்கு சமாதானமானத்தை சட்டம் ஒழுங்கை நிர்மாணிக்க விரும்பும் நாம் எல்லோரும் ஐக்கியப்பட்டு ஒன்றாக செயற்பட வேண்டும்” என போர்ரல் அவர்கள் விடுத்த அறைகூவல் அந்த விளைநிலத்திலிருந்து உருவானதுதான்.