கிழக்கு என எதை நீ அறிவிக்கிறாயோ அது எனக்கு மேற்காய்த் தோன்றுகிறது
சூரியன் கிழக்கில் உதிப்பதாக நீ அறிவிக்கிறபோது அது மேற்கிலிருந்து எழுவதாய்த் தோன்றுகிறது.
ஒரு மாலைநேர சூரியன் இழுத்துப் போட்டிருக்கிற வானம் எனக்கு காலைக் காட்சியாகத் தோன்றுகிறது.
தோன்றுதல்களுக்காய் எனை நீ தண்டிக்கவும் செய்கிறாய்.
சொல்லித்தரப்பட்டவைகளை உன்போலவே நானும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விதிக்கிறாய்.
அதை என்னுடன் எடுத்துச் சென்று அடுத்த சந்ததியிடமும் கையளித்துக் கொண்டே இரு
போதித்துக் கொண்டே இரு என்கிறாய்.
கடவுளைக் காட்டி மிரட்டுகிறாய்.
மறுபிறவியைச் சொல்லி மிரட்டுகிறாய்
இருளைக் காட்டி மிரட்டுகிறாய்.
இருளற்ற வெளியில் ஒளிக்கு அர்த்தமேது
மனிதர்களற்ற உலகில் கடவுளுக்கு அர்த்தமேது.
வாழ்தல் அற்ற உலகில் மறுபிறவிக்கு அர்த்தமேது
யதார்த்தத்தை நம்பிக்கைகளால் இடம்பெயர்த்தல்தான் நீ கண்டுசொல்லும் வாழ்வு எனில்,
அது எனக்குத் தேவையில்லை.
மனதின் பிரபஞ்சத்தில் சுழன்று திரிய
நான் ஆசைப்படுகிறேன்.