Enemies of SYSTEM CHANGE !
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவோ ஐரோப்பிய ஒன்றியமோ தனித்தனியான மேற்குலக நாடுகளோ உதவ முன்வராதது ஏன்?. இந்த பொருளாதார நெருக்கடிக்கு முழுக் காரணமுமே ராஜபக்ச குடும்பம்தான் எனவும் போர்தான் காரணம் எனவும் நிறுவிவிட முடியாது. அவை உள்ளகக் காரணிகள் மட்டும்தான். உலகில் ஏழை நாடுகள் எதுவும் முழு இறைமையோடு இருப்பது சாத்தியமற்றதாக்கப்பட்டு பல காலமாகிவிட்டது. அப்படியானால் இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தை இலங்கைக்குள் மட்டும் எப்படி கண்டுபிடித்துவிட முடியும் ?
இன்றைய பூகோள அரசியல் ரஸ்ய – உக்ரைன் போரோடு இன்னொரு வடிவத்துக்குக்கு மாற்றமடைந்துவிட்டது. நிலவும் உலக ஒழுங்குக்குக்கு சவாலாக அந்தப் போர் மாற்றம் பெற்றுள்ளது. உலக ஒழுங்கு மாற்றம் அவளவு சுலபமானதல்ல என்றபோதும், கேள்விக்கிடமில்லாமல் நிலவிய அந்த ஒழுங்கில் கேள்வி அல்லது ஒரு வெடிப்பு மேலெழுந்துள்ளது. ஜேர்மனியில் நடந்த G.7 பணக்கார நாடுகள் மாநாட்டில் (சீன முதலீடு பாரியளவிலுள்ள) வளர்ந்துவரும் நாடுகள் எனப்படுகிற ஏழை நாடுகளில் முதலிட என 600 பில்லியன் டொலர்களை ஒதுக்க முன்வந்துள்ளன. 5 வருடத்துக்குள் இந்த நாடுகளின் கட்டமைப்புகளுக்காக இத் தொகையை முதலிட முடிவெடுத்திருக்கின்றன. இது சீனாவின் -பல ட்றில்லியன் டொலர் பெறுமதியான- BRI (Belt and Road Initiative) க்கு மாற்றாக முன்வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறான திட்டத்தில் சீன முதலீடு பாரியளவிலுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று.
புதிய உலக ஒழுங்கினை ரஸ்யா தனித்து நிறுவிவிட முடியாது. அது அமெரிக்காவுடன் வல்லரசுப் போட்டியில் எழுந்துவரும் சீனா தலைமையில்தான் நிகழ முடியும். இது இன்று அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால். ஆசியாவினதும் ஐரோப்பாவினதும் வாசல்வளைவில் இருக்கும் நாடுகள் ரசியாவும் உக்ரைனும். இந்த வாசலில் நடைபெறுகிற யுத்தம் நேட்டோவானது ஐரோப்பாவுக்குள் மட்டுமல்ல சீன நாடு அமைந்துள்ள ஆசியப் பிராந்தியத்துக்குள்ளும் தனது காலை அகலப் பதிக்க தேவைப்படுகிற முன்நிபந்தனை அல்லது காரணகாரிய உருவாக்கம் எனலாம். உக்ரைன் மீதான கரிசனையில்தான் நேட்டோ நாடுகள் அல்லது மேற்குலகம் தலையிடுகிறது என அப்பாவித்தனமாக புரிந்துகொள்ள முடியாது.
அதன் இன்னொரு முனைப்பு தாய்வான். சீனா தாய்வான்மீது போர் தொடுக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. தாய்வான் மீது சீனா யுத்தம் தொடுத்தால் தாம் நேரடியாகவே தாய்வானுக்கு உதவுவோம் என நேட்டோவின் ஆதிக்கநாடான அமெரிக்காவின் அதிபர் பைடன் அறிவித்திருந்தார். ஆக அடுத்து ஐரோப்பிய-ஆசிய வாசலிலிருந்து நேட்டோ ஆசியாவுக்குள் தலையிடும் முயற்சியில் தாய்வான் பலியாகலாம். இன்னொரு உக்ரைனாக தாய்வானை அமெரிக்கா உருவாக்கும் முயற்சியில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
ரசியப் போரில் பெற்றோ-டொலர் முறைமை ஆட்டம் கண்டுள்ளதானது அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிற ஒரு அதிர்ச்சி. றூபிளிலும் இந்திய ரூபாவிலும் சவூதி றியாலிலும் எரிபொருளை வாங்கவும் விற்கவுமான உடைப்பொன்று நிகழ்ந்திருக்கிறது. யூரோவைப் பாவித்து ரசிய எரிபொருளை வாங்க முடியாத நிலை இன்னொரு புறத்தில் எழுந்துள்ளது. ரசியாவும் சீனாவும் 2022 பெப்ரவரி 4ம் தேதி ஒப்பந்தமொன்றில் சைக்சாந்திட்டது. அதில் என்ன உள்ளடங்கியிருக்கிறது என வெளியிடப்படவில்லை. சீனாவுக்கும் ரசியாவுக்குமான நட்பு எல்லையற்றது என்று மட்டும் சீனா அதை சுருக்கிச் சொல்லிவிட்டது. உக்ரைன் யுத்தம் ரசியா, சீனா, இந்தியாவை ஒன்றிணைத்து வைத்திருக்கிறது. BRICK நாடுகளின் (சீனா, இந்தியா, ரசியா, பிரேசில், தென் ஆபிரிக்கா) அமைப்பை பலப்படுத்த அவை முடிவுசெய்திருக்கின்றன. இதன்மூலம் இந்தியா அமெரிக்காவுக்கு ஒரு Shaky நாடாக தென்படுகிறது.
இந்திய நிலைப்பாடு மாற்றமடையும் நிலையில், தன்னை வல்லரசாக தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான போட்டியில் சீனாவை ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா புதிய வடிவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கை அந்த நிகழ்ச்சி நிரலுக்குள் அடங்குகிறது. 480 மில்லியன் முதலீடு கொண்ட அமெரிக்காவின் MCC (Millennium Challenge Corporation) ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தது இலங்கை அரசு. இலங்கையின் இறைமையை பாதிக்கும் என அதில் ஒப்பமிட மறுத்தது. இந்த நிலைப்பாட்டை எடுப்பதில் சீனாவின் பங்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதில் கையெழுத்திடுமாறு 2019 இலிருந்து அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தை சீனா மட்டுமல்ல, (உக்ரைன் போருக்குப் பிறகு) இந்தியாவும் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என சொல்லி இலங்கை அரசு கையெழுத்திடக்கூடாது என மறுபக்கத்தில் அழுத்தம் கொடுத்து வருகின்றன. தான் ஜனாதிபதியாக வந்தால் ஒருபோதும் இதில் கையொப்பம் இடமாட்டேன் என ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட முன்னரே கோட்டபயா கூறியிருந்தார். இதுவே இன்று இந்தியாவும் கோட்டபயா அரசுக்கு பின்னால் இருப்பதற்கான காரணம்.
MCC ஒப்பந்தத்துள், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கும் திருகோணமலைக்கும் இடையில் ஒரு வேகவீதியை நிர்மாணிப்பதும் அடங்கும். இலங்கை திருகோணமலை துறைமுகத்திலோ அல்லது வேறெங்கோ ஒரு இராணுத் தளத்தை நிறுவும் நோக்கம் அமெரிக்காவுக்கு இருக்க சாத்தியம் உண்டு. சீன முதலீட்டை இலங்கைக்குள் கட்டுப்படுத்தும் நிகழ்ச்சிநிரலும் இருக்கலாம். அதற்கு இலங்கையில் மேற்குலக நலன் சார்ந்த அரசு ஒன்று தேவை. தேய்ஞ்சுபோன றெக்கோர்ட் போல ரணில் மேற்குலகின் ஆள்தானே என எளிமையாக புரிந்துகொள்ள முடியாது. ரணில் சீன சார்பான ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற புறப்பட்ட நடுநிலை கோமாளி என்பது அமெரிக்காவுக்குத் தெரிந்துவிட்டது.
காலிமுகத்திடல் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது சஜித் பிரேமதாசாவை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் ஜேர்மன் பிரான்ஸ் நெதர்லாந்துப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசியிருந்தார்கள். மறுபுறத்தில் இலட்சக்கணக்கானவர்களை வெள்ளமென திரட்டி 3 நாள் ஆர்பாட்ட ஊர்வலத்தை நடத்திய ஜேவிபி காலிமுகத்திடலுக்கு வருகிறோம் என பிரமாண்டம் காட்டினர். ஊர்வலம் காலிமுகத்திடலுக்கு வரவில்லை. இடையில் முடித்துக்கொள்ளப்பட்டது. பிறகான நாளொன்றில் அமெரிக்கத் தூதுவர் அநுரவோடு தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். படம் எடுத்தார். 08.07.22 அன்று இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் ஜேவிபி க்கான சான்றிதழை வேறு வழங்கியிருக்கிறார். அவர்களுடனான சந்திப்பில் நல்ல புரிதல் உள்ளது என்பதை தான் அறிந்ததாகவும், ஜேவிபி பொருத்தமான அரசியல் கட்சியாகும் எனவும் கூறியிருக்கிறார்.
கோட்டா மகிந்தா மட்டுமல்ல, பாராளுமன்ற உறுப்பினர் 225 பேரும் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என போராட்டக்காரர் கோரிக்கையை முன்வைத்தனர். எந்த அரசியல் கட்சிகளையும் காலிமுகத்திடலுக்கு வரவிடாமல் வைத்திருந்தனர். மே 9ம் தேதி ராஜபக்சவின் கட்சி லும்பன்கள் காலிமுகத்திடலுக்குள் புகுந்து வெறியாட்டம் ஆடியபின், அங்கு வந்த சஜித் பிரேமதாச திரும்பிப்போக நேர்ந்தது. ஜேவிபி அனுர மட்டும் வரமுடிந்தது. ஜேவிபி மீது போராட்டக்காரருக்கு நம்பிக்கை இருந்ததாக அதை புரிந்துகொள்ளலாம். அதே ஜேவிபி தமது ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை இடைநடுவில் நிறுத்தியதன் மூலம் காலைவாரியது. தன்னெழுச்சியாக ஒரு இளம் தலைமுறை உச்சபட்சமாக நடத்திய காலிமுகத்திடல் போராட்டத்துக்கு அரசியல் திட்டத்தை முன்வைத்து தலைமை தாங்காதது ஜேவிபி செய்த வரலாற்றுத் தவறு என்ற ஒரு கருத்து பலரிடம் உண்டு. ஜேவிபி ஏதோ புரட்சிகர கட்சியல்ல. ஓப்பீட்டளவில் நடைமுறையில் இந்தத் தருணத்துக்கான நம்பிக்கை கொடுக்கும் சக்தியாக இருந்தனர் என மட்டும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இப்போ… அமெரிக்கத் தூதுவரின் சான்றிதழ் பெற்ற தலைவராக அனுர மாறியிருக்கிறார்.
சீன சார்பாக இயங்கிய, இயங்கும் ராஜபக்ச குடும்பத்தை இந்த இளைஞர் படையின் போராட்டம் துரத்துவது அமெரிக்காவின் நோக்கத்துக்கு சாதகமானது என்பதால் அமெரிக்கத் தூதுவர் “மக்களுக்கு அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை இருக்கிறது… மனித உரிமை… அது இது…” என அமெரிக்கத் தூதுவராலயத்தின் யன்னல்வழியாக ஜனநாயக கோசங்களை ஊதிவிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அமெரிக்கா இந்தப் போராட்டம் சீனசார்பு ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக இருந்ததால் மட்டுமே ஆதரித்தது. ஆனால் சரியான தருணத்தில் இந்த சுயேச்சையானதும், (சிஸ்ரம் சேஞ்ச்) முறைமை மாற்றத்தை கோரியதுமான இந்தப் போராட்டத்தை கட்சி சார்ந்த போராட்டமாக மாற்றிவிடுவதில் குறியாக இருந்தது அமெரிக்கா. அதில் போராட்டக்காரரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அனுரவும் வீழ்ந்தார்.
காலிமுகத்திடலில் எழுந்த போராட்டம் கட்சி கடந்த போராட்டம் என்ற நிலையிலிருந்து இப்போ கட்சிசார் போராட்டமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. அது சென்ற வாரம் பாராளுமன்ற கூட்டம்வரை காட்சியாகியது. பாராளுமன்றத்துள் Go Home Gota என எம்பிக்கள் சிலர் எழுந்துநின்று கோசமிட்டனர். Gota Go Home என்ற உண்மைப் போராட்டத்தை கட்சிகள் கடத்தியிருக்கின்றன என்பதற்கான சாட்சியாக இந்தச் சம்பவம் இருக்கிறது. காலிமுகத்திடலின் சிஸ்ரம் சேஞ்ச் என்பது அமெரிக்காவுக்கும் ஒவ்வாதது. தம்சார்பான ஆட்சியை நிறுவ அமெரிக்கா உட்பட்ட மேற்குலகுக்கும்தான் இந்த சிஸ்ரம் சேஞ்ச் எதிரானது. அதுக்கு ஊழலும் அடிவருடும் தன்மையும் கொண்ட அரச முறைமை தேவை. அதுவே நிலவும் சிஸ்ரம்.
எனவே மனிதாபிமானம் பற்றி மனித உரிமைகள் பற்றி பீற்றித் திரியும் அமெரிக்காவோ மேற்குலகோ ஒரு நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி, அந்த மக்களின் அன்றாட அத்தியாவசியமான சேவைத்துறை எல்லாம் பாதிக்கப்பட்டு, உயிர்வாழும் உரிமையை பசி பறித்தெடுக்கிறபோதுகூட அசையவில்லை. (அவர்கள் அசைவார்கள் எப்போதெனில் தமக்குச் சார்பான அரசு உருவாகும்போது!). அமெரிக்காவின் பொம்மையாக இருக்கும் உலக நாணய நிதியமோ உலகவங்கியோ முன்வைக்கிற காரணங்கள் பொதுப்புத்தியில் சரியாகத் தெரியலாம். அந்த பொதுப்புத்தி மீண்டும் கோத்தபாயவிடம் மட்டும் போய் குற்றச்சாட்டை வாசிக்கிறது.
2019 இல் தேவாலயத்தில் வைக்கப்பட்ட குண்டு இஸ்லாமியத் தீவிரவாதம் என அதே பொதுப்புத்தி வாசித்தது. கிறிஸ்தவ மதம் இலங்கையில் மேலாதிக்கம் மிக்க மதமா என்ன. அல்லது முஸ்லிம் மதத்துக்கு எதிரான மதவாதம் பேசியதா என்ன. புத்த விகாரையையோ கோவில்களையோ தேர்ந்தெடுக்காத அந்தக் குண்டு தேவாலயத்தை தேர்ந்தது தற்செயலானதல்ல. இலங்கைக்குள் வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளும் கிறிஸ்தவர்கள். அடுத்தது முஸ்லிம் மதத்தினர். இந்தக் குண்டு கிறிஸ்தவ சுற்றுலாப் பயணிக்கு இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்ற பயத்தையும்இ முஸ்லிம் மத சுற்றுலாப் பயணிகளுக்கு பயங்கரவாத கண்காணிப்புக்குள் தம்மை அகப்படுத்தும் நாடு என்ற பதட்டத்தையும் கொடுத்தது. இதன்மூலம் இலங்கை சுற்றுலாத் துறை அடித்துவீழ்த்தப்பட்டது. பின்னர் கோவிட் பீதி வந்து ஏறி மிதித்தது. இலங்கை சுற்றுலாத்துறையால் கிடைக்கும் அந்நியச் செலாவணியை முற்றாக இழந்தது. இந்த குண்டுவெடிப்புக்குப் பின்னால் இருந்தது மேற்குலகா அல்லது அதற்கு அன்று பல்லக்குத் தூக்கிய இந்தியாவா என தெரியவில்லை. சீன முதலீடுகளால் பதட்டமடைந்த இந்தியா இப்படியொரு அனர்த்தம் நடக்கலாம் என தனது உளவுத்துறை மூலம் தெரிந்துகொண்டு இலங்கை அரசுக்கு அறிவித்ததாகவும் இலங்கை அரசு வாளாவிருந்ததாகவும் அவர்களேதான் கதையாடினார்கள்.
அடுத்து ரசிய விமானசேவையில் பறந்து திரிந்த ஏரோபுளொற் (Aeroflot) விமானப் பிரச்சினை. ருசிய-உக்ரைன் போர் தொடங்கி ரசியா மீது பொருளாதாரத் தடை விதித்து பல மாதங்களாகிவிட்டது. பொருளாதாரத் தடை விதித்த நாடுகள் தவிர மற்றைய நாடுகளுக்கு ஏரோபுளொற் பறந்து திரிந்தபடிதான் இருந்தன. சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 180 விமானங்களில் பெரும்பாலான விமானங்கள் லீசிங் முறையில் வாங்கப்பட்டவை. இலங்கையில் தரையிறங்கிய ஏரொபுளொற் மட்டும் அதை லீசிங்குக்குக் கொடுத்த ஐரிஸ் கம்பனியின் கண்ணைக் குத்திவிட்டதாம். வழக்குப் போட்டு சட்ட ரீதியில் களமிறங்கி ஆடி இலங்கைக்கும் ரசியாவுக்குமான உறவை திட்டமிட்டே நொருக்க முயற்சி எடுத்தது. ரசியாவின் எரிபொருள் உதவியை சாத்தியமற்றதாக்கியது. அத்தோடு இலங்கைக்கு அதிகரித்தளவில் வரத் தொடங்கியிருந்த ரசிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் இல்லாமலாக்கியது. ஆனால் இந்த பூகோள அரசியல் நகர்வில் இப்போ ரசியா இலங்கைக்கு உதவும் நோக்குடன் தனது பிரதிநிதிகளை அனுப்பிவைத்திருக்கிறது.
இவ்வாறாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபக்ச குடும்ப ஊழலாலும், இனவாதத்தை அடிப்படையாக வைத்த 70 வருடகால அபிவிருத்தி முறைமையினாலும், தொழிற்சாலைகளையோ நவீன தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தியையோ ஏற்படுத்தாமையாலும், கடல்வளத்தை முழுமையாக பயன்படுத்தி ஏற்றுமதிக்கான பாரிய தொழிற்சாலைகளை நிறுவாமையாலும், பாதுகாப்புச் செலவை அதீதமாக வைத்திருந்தமையாலும், ஓர் உள்ளக அரசியல் பிரச்சினையை இவளவு பூதாகாரமாக்கி போர் செய்து அந்நியத் தலையீடுகளை கொணர்ந்தமையாலும் என பல காரணிகளால் படிப்படியாக ஏற்படத் தொடங்கியிருந்தது. ஆனால் ஒரு மண்சரிவு போல panic ஆக இப்படியொரு பொருளாதார சரிவு திடீரென ஏற்பட்டதற்கு இந்த உள்ளக காரணிகள் மட்டும் விடையளிக்காது.
ஐஎம்எப் புகுந்தால்கூட எல்லாம் சரியாகிவிடுமா. அது புகுந்தபின் கிரேக்கம், இத்தாலி எங்கும் புதிய கொந்தளிப்புகள் எழுந்த வரலாறு இருக்கிறது. இலவச கல்வி, இலவச வைத்தியம் போன்ற இலவசங்கள் இல்லாமலாக்கப்பட வேண்டும் என்பதிலும், பணிகளில் ஆட்குறைப்பு செய்யப்பட வேண்டும் என்பதிலும் அவை நிபந்தனைகளை விதித்தல்கூடும். இதன்மூலம் இலங்கை போன்ற வறிய நாடுகளில் அடித்தட்டு மக்களுக்கு இப்போ கிடைக்கும் கல்வி, மருத்துவம் போன்ற உத்தரவாதங்கள் இல்லாமலாக்கப்பட்டு விடும். ஆட்குறைப்பால் வேலையில்லாப் பிரச்சினை பெருகும். இவற்றை விட்டுக்கொடுக்காமல் ஐஎப்எப் நிதியை பெற முடியுமா என்பது சந்தேகமே.
சீனாவின் கடன் பொறியில் சிக்கிய நாடாக மேற்குலகம் செய்யும் பிரச்சார வலைக்குள் இலங்கை இந்திய மக்கள் வீழ்ந்துள்ளனர். இலங்கைக்கு சீனா கொடுத்த கடன் 10 சதவீதம் மட்டுமே. யப்பான் 12 சதவீத கடனை வழங்கியுள்ளது. உலகவங்கி 11 சதவீத கடனை வழங்கியுள்ளது. இங்கும் மேற்குலகம் தனது சீன எதிர்ப்பு அரசியலை கட்டமைத்திருக்கிறது. சீனாவும் இந்தியாவும் இலங்கைக்கு உதவிகளை வழங்கியது என்று பருண்மையாக மட்டும் எடுத்துக்கொள்ளலாம். ரசியாவிடமிருந்து 30 வீத கழிவு விலையில் பெருமளவு எரிபொருளை பெற்று சேமித்துவைத்திருந்த இந்தியாவானது இலங்கைக்கு உதவியாக 40 வீத விலை அதிகரிப்புடன் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை கட்சி அரசியலில் ஆளுமை மிக்க, அறிவார்ந்த, மக்கள் நலன் சார்ந்த தலைவர்கள் எவரும் கிடையாது. இன்றைய அவல நிலை தொடர்வதற்கு அது முக்கிய காரணமாகியிருக்கிறது. காலிமுகத்திடல் போராட்டம் முழு வீச்சாக நடைபெற்று,”இறங்கமாட்டேன்” என முதல்நாள் அறிக்கை விட்ட மகிந்தவை மறுநாள் பதவியிலிருந்து இறங்கவைத்தது. பாராளுமன்றம் செயலிழக்கத் தொடங்கியிருந்தது. மக்களால் நிராகரிக்கப்பட்ட தேசியப்பட்டியலுக்கூடாக எம்பியாக பின்கதவால் பாராளுமன்றத்துள் புகுந்த ரணில் நாட்டின் பிரதமராகி பொலபொலவென்று உதிர்ந்துவிழ இருந்த பாராளுமன்றத்தை ‘தாங்கிப்’பிடித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் 225 பேரும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர் வைத்த கோரிக்கைகளுக்கு பம்மிக்கொண்டு இருந்த எல்லா எம்பிக்களும் ஓடிப்போய் கதிரையை பிடித்து மைக்கையும் பிடித்து கத்தத் தொடங்கி, பாராளுமன்றத்தை மீண்டும் அதே அமளியுடன் ஓடவைத்தனர். திருகோணமலை கடற்படைத்தளத்துக்குள் ஓடிஒளிந்த மகிந்த, நாமல் ஆகியோர் மீண்டும் பாராளுமன்றத்துள் வரத் தொடங்கினர். மகிந்த, பசில், நாமல் பத்திரிகையாளர்களிடம் பேசவும், இந்த ‘சிஸ்ரம்’ என்ற அச்சில் மீண்டும் தத்தி ஏறிக்கொள்ளவும் தடையேதும் இருக்கவில்லை. 29 தேசியப்பட்டியல் எம்பிக்களில் ஒரு பகுதியினரையாவது இராஜினாமாச் செய்ய வைத்து அதற்குள் துறைசார் புத்திஜீவிகளை கொண்டுவரலாம், பிறகு அவர்களை அமைச்சராக்கலாம் என்ற ஒரு குரலை எழுப்பிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இடையில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற கணக்கில் காணாமல் போய் மீண்டும் வந்தார்கள்.
இளம் சந்ததி தமது எதிர்காலத்துக்கான புத்தாக்க அரசொன்றை முறைமை மாற்றம் ஒன்றினூடாகவே சாதிக்க முடியும் என சரியாகவே உணர்ந்து விடாப்பிடியாக போராடினார்கள். எல்லா கட்சி அரசியல்வாதிகளும் அவரவர் பங்கிற்கு நிலவும் சிஸ்ரத்தை காப்பாற்றி தமது இருப்பையும் காப்பாற்றினார்கள். மேற்குலக அரசு வந்தாலென்ன சீனசார்பு அரசு வந்தாலென்ன இந்தியசார்பு அரசு வந்தாலென்ன.. அது வந்தாலென்ன.. இது வந்தாலென்ன எதுவந்தாலும் மந்திரியாவது எப்படி எம்பியாவது எப்படி என அவர்கள் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். மாற்றங்களின் எதிரிகளாக மேற்குலகம் மட்டுமல்ல இவர்களும்தான் இருக்கிறார்கள், இருப்பார்கள்!
- ரவி (08072022)