அவள் பெயர் மரியா. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து உதித்த கொராற்சியா நாட்டை சேர்ந்தவள். அவளுக்கு அப்போ 20 வயதாகியிருக்கவில்லை. 200 பேர் வேலைசெய்யும் எமது தொழிற்சாலையின் உற்பத்திப் பகுதியில் அவள் உட்பட ஓரிரு பெண்கள் மட்டுமே வேலைசெய்தனர்.
மரியா வேலைக்கு வந்தபோது விடலைப் பருவம் முற்றாக நீங்கியிருக்கவில்லை. அவள் பெடியனா பெட்டையா என பலருக்கும் குழப்பம் இருந்தது. எனக்கும்தான். அவளது உடை, நடை, தலைமயிரின் நவீன அலங்காரம் எல்லாமும் இந்த குழப்பத்தை தந்தன. அவளுக்கு மார்பகங்கள் பெண்பாத்திரம் கொள்ளவில்லை. முகம் குழந்தைபோல் இருந்தது. இணைநண்பன் (boy fiend) இல்லை.
காலம் அவளது உடலை மெல்லமெல்ல பெண்போல ஆக்கிக்கொண்டிருக்க அவளது முகம் மகிழ்ச்சியை இழந்துகொண்டிருந்தது. மார்பகங்கள் அவளது உடலை பெண்ணாக அடையாளப்படுத்த தொடங்கியிருந்தது. அவளுக்கு இப்போ ஒரு பெண்இணையர் (girl friend) கிடைத்திருந்தாள்.
இந்த விடயம் வேலைத்தளத்தில் பரவ அவளை லெஸ்பியனாக பலரும் அடையாளப்படுத்தத் தொடங்கினர். இது சுவிஸ் நாட்டவருக்கு பொருட்டாக இருக்கவில்லை. ஆனால் முன்னாள் யூகோஸ்லாவியாவின் உதிர் நாட்டவருக்கு பெரிய விவகாரமாக இருந்தது.
வழமையாகவே பேச்சிலேயே அதிக ‘கெட்ட வார்த்தைகளை’ (ஆண்களும் பெண்களும்) உபயோகித்து உரையாடுபவர்கள் அவர்கள்!. நானும் அவற்றை விளங்கவும் கொஞ்சம் அவர்களுடன் பேசவும்கூட பழகிவிட்டேன்.
சோசலிசம் முன்னாள் யூகோஸ்லாவியாவில் இருந்ததாக அவர்களுடன் வேலை செய்ய ஆரம்பித்தபோது நிலைத்திருந்த எண்ணத்தை “அப்பாவித்தனமான ஆளையா நீ” என காலம் அறைந்து சொன்னது. பிறகு அந்த மாயத்திரை அகன்றுபோனது.
ஆணதிகாரம் கொண்ட குடும்ப அமைப்பும் சிந்தனை முறையும் அவர்களது!.
சோசலிச நாடாக அறிவிக்கப்பட்ட யூகோஸ்லாவியாவின் வழிவந்தவர்களாக இருந்தாலும் சோசலிச பண்புகளில்லை. ஐரோப்பாவுள் உள்ளடங்கினாலும் மேற்குலக ஜனநாயக பண்புகளுமில்லை. திரிபான பண்புநிலை இருந்தது. எம்போல ஒரு கீழைத்தேய மக்களின் பண்புகளும் ஐரோப்பிய குட்டிப் பெருமிதமும் கலந்த கலவை அவர்கள்.
ஸ்லாவிய இனத்தவரான அவர்களின் இந்த வசைச்சொற்களை தமிழில் மொழிபெயர்க்க வார்த்தைகள் போதுமானதாக இருக்காது. அவளவு அதிகம். அப்போதுதான் ஒன்றுவிளங்கியது. ரசிய புரட்சியாளன் லெனினின் உரையினை மொழிபெயர்க்கிறபோது ‘ஓடுகாலிகள்’ என்பதுபோன்ற வார்த்தைகளை மொ.ர் கள் தமிழில் -வழக்கில் வார்த்தைகளில்லாததால்- உருவாக்கி அடிச்சுவிட்டிருக்கிறார்கள் என்பது விளங்கியது.
இப்போ அவர்களுக்கு மரியா நக்கலுக்கு உரிய ஆளாக முதுகுப்புறத்திலும் நண்பியாக சக தொழிலாளியாக முகத்துக்கு நேரிலும் இருந்தாள்.
சென்ற வருடம் அவள் தனது பெயரை உத்தியோகபூர்வமாக மைக்கேல் என்ற ஆண்பெயராக மாற்றினாள். அவள் அவன் ஆனான். முதுகுப்புற நக்கல்கள் அதிகரித்தது. எனக்கு அதை கேட்டு கடந்து போக முடிவதில்லை. இந்த உடல் மாற்றம் பாலியல் தேர்வுகள் குறித்து எனக்கு தெரிந்ததை அவர்களுக்கு சொல்லத் தவறுவதில்லை. பிறகு அவர்கள் எனது முகத்துக்கு நேரே மைக்கலை நக்கலடிப்பதை செய்வதில்லை. ஆனால் முதுகுப்புற வார்த்தைகளை நான் கேட்காமலில்லை. சுவிஸ் நாட்டவரிலும் சிலர் இதே ரகமாகத்தான் இருந்தனர்.
அவனுக்கு இளந்தாடி அரும்பத் தொடங்கியது. அதற்கான கோர்மோன் ஊக்கியை வைத்தியரிடமிருந்து எடுத்திருக்கிறான் மைக்கேல் என நினைக்கிறேன். சத்திரசிகிச்சையும் செய்திருக்கிறான். இப்போ அவன் அதிகம் பேசுவதில்லை என்றபோதும், நான் எந்த வேறுபாடுமற்று ஒரே மாதிரியே பழகினேன்.
ஒருநாள் நேரடியாகவே அவனுடன் பேசினேன். வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தேன். அவனுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்ததாகப் பட்டது. கொஞ்நேரம் இதுகுறித்து பேசினோம். I am proud of you. உனது வாழ்க்கையை உனக்கானதாகத்தானே நீ வாழவேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையை நீ வாழ்வது பொருத்தமில்லைத்தானே. துணிச்சலான முடிவு என்றேன்.
“இப்போதான் எனது உடலை நான் நேசிக்கிறேன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றான், மைக்கேல்!
(பெயர்களை மாற்றி எழுதியிருக்கிறேன்)