நெதர்லாந்து சைக்கிள் கலாச்சாரம் கொண்ட நாடு. 17 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட அந்த நாட்டில் 22 மில்லியன் சைக்கிள் பாவனையில் உள்ளன. பயன்பாட்டு அடிப்படையில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சைக்கிள்களை வைத்திருக்கிறார். குழந்தைகள் தொடக்கம் வயோதிபர் வரை, தொழிலாளி தொடக்கம் அரசியல் தலைவர்கள் வரை சைக்கிளில் பயணிப்பதை நெதர்லாந்தில் காணலாம். நெதர்லாந்து சென்றபோது அந்தக் காட்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். அது ஒரு கலாச்சாரமாக சுழல்கிறது.
இரண்டாம் உலகப் போர் முடிவின்போது யேர்மன் நாசிப்படைகள் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சைக்கிள்களை அந்த மக்களிடமிருந்து பிடுங்கி இராணுவ தேவைக்கு பாவித்தார்கள். அது யேர்மனியுடன் நீண்டகால பகையாக நீடிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது என்கிறார்கள். அதன் பெறுமதியை விடவும் அது அவர்களது கலாச்சார வட்டத்துள் அவர்களுடன் பிணைந்திருந்ததை இதனூடாக உதாரணம் காட்டுகிறார்கள். ஏன் அவர்கள் தலைக்கவசம் அணிவதில்லை என்ற கேள்விக்கு சுவாரசியமான ஒரு பதில் வழக்கில் இருக்கிறது. ஓடின் (மந்திரவாதியான யுத்தக் கடவுள்) நெதர்லாந்தைப் படைக்கிறபோது ஒவ்வொருவரையும் சைக்கிளோடு படைத்தான் என்பதே அது.
70 களில் நகர திட்டமிடல்கள் மக்களின் இந்த சைக்கிள் கலாச்சாரத்தை கவனத்தில் எடுத்து மறுசீரமைக்கப்பட்டன. சைக்கிள் பாதைகள் விசேடமாக உருவாக்கப்பட்டன. பொதுப் போக்குவரத்து நிலையங்கள், பாடசாலைகள் பெரும் வியாபார நிலையங்கள், சினிமா தியேட்டர்கள் என எல்லாமும் சைக்கிளில் பயணித்து அடையக்கூடிய விதத்தில் தூரம் மற்றும் பாதுகாப்பான தனிப் பாதை, சைக்கிள் தரிப்பிட வசதிகள் என நகரக் கட்டுமானத்தில் உள்ளடக்கப்பட்டன. மண் நிறத்தில் விரிந்து செல்லும் இந்தப் பாதைகள் வீதிகளுக்கு சமாந்தரமாகவும் நீண்டு கிடக்கிறது. இப்போ 32000 கிலோ மீற் வரை அந்தப் பாதை வளர்ந்திருக்கிறது.
பன்முக தேவைகளை நிறைவுசெய்யும் விதத்தில் விதவிதமான சைக்கிள்கள் வடிவமைக்கப்பட்டு வீதியை நிறைக்கின்றன. சுற்றுச் சூழல் மட்டுமல்ல வீணான எரிபொருள் தேவைகளை தவிர்ப்பவையாகவும் உடல் ஆரோக்கியத்தை பேணுபவையாகவும் வாகன நெரிசலை தவிர்ப்பவையாகவும் இந்த சைக்கிள் கலாச்சாரம் இன்றைய விரைவான நவீன உலகிலும் செழிப்பாகவே இருக்கிறது.
35 வருடங்களாக குளிருக்கும் பனிக்கும் மழைக்கும் (கடுமையான நிலைமைகள் தவிர) என சைக்கிள் என்னுடன் வேலைத்தளத்திற்கு வருகிறது.. கடைக்கு வருகிறது.. சராசரியாக, என்னைவிட ஒரு சாதாரண சுவிஸ் பிரசை அதிகளவுக்கு சைக்கிளை பாவிக்கிறார். இத்தனைக்கும் நெதர்லாந்துபோல் டென்மார்க் போல் சுவிஸ் ஒரு சைக்கிள் கலாச்சாரம் கொண்ட நாடு அல்ல. சுட்டப்படுகிற ‘நாகரிகம்’ கொண்ட நாடு.
500 மீற்றருக்கு அருகில் இருக்கும் கடைக்குச் சென்று ஒரு கிலோ தக்காளி வாங்க மோட்டார் சைக்கிளை கலைக்கிற நவீன இலங்கையின் நடுத்தர (மற்றும் மேல்தட்டு) வர்க்கமானது மைல் கணக்கில் கூடவே பயணித்துத் திரிந்த சைக்கிள் கலாச்சாரத்தை மோதி வீழ்த்தியிருக்கிறது. போர்ப்பட்ட காலத்தில் சைக்கிளின் தேவையை உணராதவர் யார் இருக்க முடியும். இருந்தும் போர் முடிந்து ஒரு பதின்மூன்று வருடம் போயிருக்கவில்லை. சந்திகளில்கூட சைக்கிள்களை முன்னர்போல் காணவில்லை. அதன் இடத்தில் மோட்டார் சைக்கிள்கள் நிற்கின்றன.
நாகரிகம் சைக்கிளை கொல்வதால் வருவதில்லை என்பதற்கு நெதர்லாந்து ஒரு எளிய சாட்சி. சைக்கிள் கைவிடும் தூரத்துக்கும், தேவைக்கும், உடல்வலுவுக்கும் ஏற்ப மோட்டார் சைக்கிளின் அத்தியாவசிய தேவையை மறுக்க முடியாது. ஆனால் மோட்டார் சைக்கிளோடு “ஓடின்” இனால் படைக்கப்பட்டவர்களல்லவே நாம்!



(image : Thanks : dutchreview)