காலிமுகத்திடல் போராட்டத்தில் ராஜபக்சக்களை அகலுமாறு கேட்டு போராடியது எவரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்காதளவு வெற்றியளித்திருக்கிறது. ஒரு அரண்மனை ஆட்சி வீழ்ந்துகொண்டிருப்பது போல அதை விழிபிதுங்க பார்த்தார்கள் மக்கள். போரை வெற்றிகொண்ட ஒரு மன்னராக கொண்டாடப்பட்ட மகிந்தவின் வரலாறு மகாவம்சத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றளவுக்கு சென்றிருந்தது. இன்று அந்த மன்னன் குறித்த பிம்பத்தை இந்தப் போராட்டம் தகர்த்ததோடு அவரை ஓடிஒளிந்துகொள்ளவும் வைத்திருக்கிறது. இது மிகப் பெரும் சாதனை. மக்கள் போராட்டத்தின் வலுவை உணர்த்திய சம்பவம்.
இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த உள்ளகக் காரணிகளில் முக்கியமானது போர். அது பெரும் மனித, இயற்கை, பண்பாட்டு வளங்களின் அழிவுகளை நிகழ்த்திய பிசாசு. இனியான பாராளுமன்ற கட்டமைப்பு ஒரு அதிகாரப் பரவலை நோக்கி நகர்ந்தால் மட்டுமே அரசுவடிவம் சிறுபான்மை இனங்களுக்கு நம்பிக்கை கொடுக்க முடியும். அவர்கள்தம் பண்பாடு மொழி என்பவற்றுக்கான பாதுகாப்பும் உறுதிப்பாடும் ஏற்பட வழி பிறக்கும். இலங்கை அமைதியடையும்.
தமிழ்மொழி பேசும் பிரதேசங்களில் தமிழ் முதல் மொழியாகவும் சிங்களம் இரண்டாவது மொழியாகவும் இருக்க, சிங்கள மொழி பேசும் பிரதேசங்களில் சிங்களம் முதல் மொழியாகவும் தமிழ் இரண்டாவது மொழியாகவும் இருக்கவேண்டும். இரண்டு மொழி பேசும் மக்களையும் இனவாதம் மூலம் பிரித்துவைத்து ஆட்டிப்படைக்க இந்த பரஸ்பர மொழி ஊடாட்டம் இல்லாமலிருந்தது ஒரு முக்கிய காரணம். அது திட்டமிட்டே பேணப்பட்டது என்பதே பொருத்தம். அது தகர வேண்டும்.
போராட்டக்காரரின் இன்னொரு இலக்கு System Change! படித்த நடுத்தர வர்க்க இளஞ் சந்ததி காலிமுகத்திடலில் இனவாதத்துக்கு எதிரான குரலை எழுப்பியிருப்பது மாற்றத்தின் ஓர் அறிகுறி. 70 வருட காலமாக இனவாதமே தேர்தலில் வெற்றி பெறவும் அரசின் கட்டுமானத்தை நிறுவுவதிலும் பங்காற்றியது. மக்கள் இனவாதத்தால் மந்திரிக்கப்பட்டு உருவாடித் திரிவதை உணர்த்த விளிம்புநிலை மக்கள்வரை போய் இனவாத கருத்தியலழிப்பு செய்ய வேண்டும். எவரொருவரும் இனவாதம் பேசி தேர்தலில் வெற்றிபெறும் நிலைமையை இல்லாதொழிக்க வேண்டும். இனவாதிகளை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
இன்றைய போராட்டக்களம் உருவாக்குகிற கூட்டுப் பிரக்ஞை இந்தக் களம் இல்லாமல் போகிறபோது அதாவது உதிரிகளாகிறபோது அவர்களை முழுமையாக நெறிப்படுத்தும் என நினைத்தால் அது தவறானது. அது தனிமனித வாழ்வுநெறியை நோக்கி கட்டமைக்கப்படுவதல்ல. கூட்டுப் பிரக்ஞையானது குறித்த இலக்கை அடைவதை நோக்கி கட்டமைக்கப்படுவது. அந்த இலக்கோடு அது காலாவதியாகிவிடும். தனிப்பிரக்ஞைதான் தனிமனிதர்களில் மாற்றத்தை பேணிப் பாதுகாக்கும். அதுவே பொதுப்புத்தியில் மாற்றத்தை பேணவும் அதன்மூலம் சமூகப்பிரக்ஞையோடு வாழ்வை அமைத்துக்கொள்ளவும் வழிவகுக்கும்.
கூட்டுப் பிரக்ஞை தனிப் பிரக்ஞையை -அதில் பங்குகொண்ட எல்லோரிடமும்- தக்கவைக்கும் என வரலாறு காட்டியில்லை. புரட்சி நடந்த நாடுகளில் மட்டுமல்ல தமிழீழப் போராட்டத்திலும் இது அவதானிக்கப்படக் கூடியது. தமிழீழவிடுதலைப் போராட்டப் போராளிகளாக இருந்தவர்களின் கூட்டுப் பிரக்ஞை உதிரியாகிப் போனபோது சமூகம் கடைப்பிடிக்கிற ஒடுக்குமுறை கருத்தியல்களை மீள வரித்துக்கொண்டதை நாம் பார்க்கிறோம். தன்னோடு சக போராளியாக இருந்த பெண்போராளியைக்கூட பின்னர் மணமுடிக்கத் தயாராக இருக்காத, அல்லது மணமுடித்தபின் ஆணதிகாரத்தோடு இன்னும் உக்கிரமாகச் செயற்பட்ட பல கதைகள் பாதிக்கப்பட்ட பெண்போராளிகளிடம் உண்டு.
எனவே இனவாதத்துக்கு எதிரான கருத்தியலையும் சமூகப் பிரக்ஞையையும் சாதிக்க பல சுயாதீனமான வெகுஜன அமைப்புகளை உருவாக்கி செயற்படுத்த இளஞ்சந்ததியும் சமூக ஆர்வலர்கள் சமூகப் புத்திஜீகளும் முன்வர வேண்டும்.
இந்த அழகிய இலங்கை இனவாதத்தால் சீரழிந்ததை உணரும் மாற்றத்தை அல்லது இப்போதாவது சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் போரை கொண்டாடியதற்காக குற்றவுணர்வு கொள்ளும் மாற்றத்தை மேலும் போய் அதற்கு மன்னிப்புக் கேட்கும் மாற்றத்தை அழகிய மலரொன்று மொட்டவிழ்ப்பதை பார்ப்பதுபோல சிறுபான்மை இனம் ஆசுவாசமாய்ப் பார்க்கிற உணர்வை மதிக்கத்தான் வேண்டும். அது கலைந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் அவுஸ்திரேலியாவில் இனப்படுகொலை சம்பந்தமான பிரசுரத்தை கமரா முன் ஒரு அரங்கியல்போல் நிதானமாக அந்த நபர் கிழித்தெறிந்ததை ஒரு தனிநபரின் செயல் என்றவாறாக பதைபதைத்து விளக்கம் கொடுக்க முயல்வது எந்தளவு சரியாக இருக்கும். அது நபர் அல்ல மனநிலை.
இந்த மனநிலைக்கு எதிராக போராடி வெற்றிபெறுதலே சிஸ்ரம் சேஞ்ச் க்கு வித்திடும். அதைத்தான் கருத்தியல் போராட்டமாக -இந்த நடுத்தர கிறுக்குத்தனத்திலிருந்து விளிம்புநிலை அறியாமை வரை- எடுத்துச் செல்ல வேண்டும். காலிமுகத்திடல் போராட்டம் அரசாங்க மாற்றத்தை ஏற்படுத்தலாம். பொதுப்புத்தியில் இருக்கும் இனவாத கருத்துநிலையிலும் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தலாம்; ஆனால் புரட்டிப் போடாது. பொதுப்புத்தியே பொது மக்களின் தத்துவக் கருவி. அதனால் அந்தப் பொதுப்புத்தியில் இனவாதத்துக்கு எதிரான கருத்துநிலை மாற்றத்தை முடிந்தளவு கொண்டுவரும் தொடர் வேலைமுறையை இந்த போராட்ட இளஞ் சந்ததி மேற்கொண்டால் அர்த்தம் பெறும். சிங்கள, தமிழ், முஸ்லிம் தரப்பு அரசியல் கட்சி சார்ந்தவர்கள் எவரும் இந்த சிஸ்ரம் சேஞ்ச் இனை விரும்பவே மாட்டார்கள்.
எனவே கிராமம் வரை சென்று இந்த கருத்தியல் போராட்டத்தை செய்யும் நீண்ட அயராத பணியை செய்து முடித்தாலன்றி எந்த சிஸ்ரம் சேஞ்ச் உம் சாத்தியமாகாது. ஏனெனில் அரசு வடிவம் மட்டுமல்ல, தேர்தல் களமும் (சிங்கள மக்கள் மத்தியில்) பவுத்த சிங்கள பேரினவாதத்தை அடிப்படையாகவும், (சிறுபான்மை இனங்கள் மத்தியில்) எதிர் இனவாதத்தை அடிப்படையாகவும் கொண்டு இயங்குவது.
இதுதான் அரச கட்டமைப்பு அல்லது முறைமை… அதாவது சிஸ்ரம். காலிமுகத்திடல் போராட்டம் இதையுணர்ந்து அதன் அடுத்த கட்டமாக இந்த கருத்தியல் போராட்டத் தடத்தில் நகர்ந்தால் உண்டு சிஸ்ரம் சேஞ்ச். இல்லையேல் அது ஒரு மாயை. அந்த மாயை தகர்ந்து அரசுக் கட்டமைப்பானது நிலவுகிற இன்றைய அதே தடத்தில் ஊழல்களோடும் இனவாதத்தோடும் ஓடிக்கொண்டிருப்பதை எதிர்காலத்திலும் பெருமூச்சோடு பார்த்துக்கொண்டு இருக்க நேரும்!
- 16052022
- fb link: https://www.facebook.com/ravindran.pa/posts/7592734797464215