இலங்கையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னால் தீவிரவாதிகளும் புலம்பெயர் தமிழர்களும்தான் இருக்கிறார்கள் என மகிந்த கூறியிருக்கிறார். சிங்கள மக்கள் முன்னிலைப் பாத்திரம் அளித்து தொடங்கிய இந்த எழுச்சியை அவர் இலாவகமாகவே இனவாத அரசியலாக திசைதிருப்புகிறார்.
அவருக்கும் கோட்டபாயவுக்கும் பதவியை நீடிக்க போதிய அவகாசத்தை போராட்ட இழுத்தடிப்பு வழங்கித்தான் இருக்கிறது. எந்தக் கட்சியும் கொடியோடு இங்கு வரவேண்டாம் என காலிமுகத்திடல் பிரகடனம் செய்தது. ஆனால் எதிர்க் கட்சிகள் அரசு வடிவம் ஓடிக்கொண்டிருக்கும் அதே தடத்தில் தம்மை பொருத்திக்கொள்ள முயற்சிப்பதில் அவர்களுக்கும் இந்த நீள் போராட்டகால அவகாசம் உதவித்தானிருக்கிறது. அமெரிக்கா இந்தியா என பூகோள அரசியலின் வித்தகர்களுக்கும் இந்த கால அவகாசம் உதவியபடிதான் இருக்கிறது.
தன்னெழுச்சிப் போராட்டங்களை வழிநடத்த இலங்கையில் எந்த கம்யூனிச கட்சிகளோ அமைப்புகளோ செயற்திறனுடன் இல்லை. பத்தோடு பதினொன்றாக சேர்ந்து கொடி பிடிக்கும் நிலையில் அவை இருக்கின்றன. ஏதோ ஜேவிபி “இந்தா பின்னணியிலென்ன முன்னணியிலும் நாம்தான் இருக்கிறோம்” என அநுராவின் முழக்கத்தோடு எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. இலட்சக்கணக்கான மக்கள் பங்குகொண்ட பேரணியை வீதி அதிர வழிநடத்தியதோடு எல்லாம் அடங்கியது.
காலிமுகத்திடல் இளஞ் சந்ததியின் இந்த போராட்டக் களமும் உழைப்பும் அவர்கள் கோருவதுபோன்று “முறைமை (சிஸ்ரம்) மாற்றமாக” வர எந்த நம்பிக்கையும் இல்லை. ராஜபக்சக்களை பதவிகளிலிருந்து அகற்ற சாத்தியம் உண்டு.
காலிமுகத்திடல் இளமைத் துடிப்பு, போராட்ட முறைமைகள், புத்தாக்க அளிக்கைகள்,உணவு வழங்கல் மற்றும் சேவைத்துறை செயலூக்கங்கள், ஒருவித கூட்டு பிரக்ஞை, கொண்டாட்ட மனநிலை எல்லாம் மக்களை தொடர்ந்து அங்கு வர வைக்கின்றன. ஆனால் இதற்கு மேலால் ஒன்று இருக்கிறது. இதை ஒரு அரசியல் வெற்றியாக நகர்த்தும் வழிமுறை. அதற்கு தலைமைதாங்க எவருமில்லை. திட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த உழைப்பை எதிர்த்தரப்பு கட்சிகள் உபயோகித்து ராஜபக்ச குடும்ப ஆட்சியை வீழ்த்தலாம். ஆனால் முறைமையை மாற்ற முடியாது.
அரசு நிர்வாகத்தைத் தன்னும் பாதிக்கிற அளவிலும் இல்லாத இந்தப் போராட்டங்கள் ஒரு ‘ஒழுங்கான’ பிள்ளையின் நடத்தை போன்று நகர்கிறது. அதனால் இப் போராட்டங்கள் ஒரு அடையாள எதிர்ப்புப் போராட்டங்கள் என்ற அமைவுக்குள் இருக்கிறது. ஒழுங்குகளை மீறுதல் என்பதே கலகம் அல்லது கிளர்ச்சி. அதுவே மாற்றங்களை உருவாக்கவல்லது. வழிநடத்தும் தலைமைகளை உருவாக்கவல்லது. இலங்கை பூராகவும் நடக்கும் போராட்டங்களின் மையப் புள்ளி காலிமுகத் திடல் போராட்டம். அதன் அரசியல் தோல்வி இலங்கை பூராவும் நடக்கும் பொருளாதாரப் போராட்டங்களை இல்லாமல் பண்ணிவிடும்.
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் முற்போக்கு சக்திகள் உதிரிகளாக வைக்கிற கோசங்களும், போர் குறித்து கட்மைக்கப்பட்ட பொய்களை நம்பி ஏமாந்ததான குற்றவுணர்வை வெளிப்படுத்துகிற சிங்கள மக்களின் உரையாடல்களும், இலங்கையர் என்ற அடையாளத்துள் தமிழ் முஸ்லிம் மலையக மக்களையும் அரவணைத்து செல்ல எத்தனிக்கும் குரல்களும் எல்லாமும் இந்த நடுத்தர மக்களுக்கு வெளியே கிராமப்புறங்களில் இருக்கும் விளிம்புநிலை மக்களின் அல்லது சாமான்ய சிங்கள பொதுமக்களின் கருத்து மாற்றம் என எடுத்தால் ஏமாறவேண்டி வரும். அத்தோடு பௌத்த துறவிகள் சிலரின் பங்கேற்பும் கருத்துகளும் பௌத்த மத நிறுவன மேலாதிக்க கருத்தியலை தகர்ப்பவையாக பார்த்தால் அது வெகுளித்தளமாகவே இருக்கும்.
காலிமுகத்திடல் போராட்டங்களில் ‘நல்லவர்களாக’, ஒழுங்குவிதிகளை மதிப்பவர்களாக, அரச வன்முறை இயந்திரத்திடம் அனுமதி கேட்டு நிற்பவர்களாக இருந்தால் அப்படியே இருந்து தாமாகவே படிப்படியாக கலைந்து போக வேண்டி வரும். போராட்டக் கள அளிக்கைகள் ஒரு எல்லைக்குமேல் மக்களை ஈர்க்காமல் கைவிட்டுவிடும். அரசியல் வெற்றி இல்லையேல் சிஸ்ரம் மாறவே மாறாது. ராஜபக்ச குடும்பம் இல்லாத ஒரு ஆட்சி மலரலாம். அது நடக்கவும் வேண்டும். ஆனால் அதே தடத்தில் சஜித்தோ ரணிலோ அல்லது வேறொருவரோ குந்தியிருந்து ஆட்சியை ஓட்டத் தொடங்கியிருப்பர்.
குறைந்தபட்சம், இனவாதத்தால் எமை பிரித்து ஆண்டார்கள் ஆள்கிறார்கள் என்று பேசத் துணிந்த குரலையாவது குக்கிராமங்கள்வரை கொண்டுசெல்லாமல் ஓய்ந்தால், ஆற்றல்மிக்க ஒரு மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டம் விழலுக்கு இறைத்ததாக போய்விடும். அது பெரும் அரசியல் துயரமாகிவிடும்!
- 27042022
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/7503166773087685