காலிமுகத்திடலில் மையம் கொண்டுள்ள எழுச்சி ஒரு அரசியல் விளைவை காண்பதற்கான ஆவலில் பெரும்பாலான மக்களை ஆழ்த்தியிருக்கிறது. எப்பொழுதுமே நேரடி விளைவுகள் குறித்து பேசப்படும் அளவிற்கு அதன் மறைமுக விளைவுகள் கவனிக்கப்படுவதில்லை.
இந்தப் போராட்டத்தின் அடிநாதமே பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து எழுந்தது என்பது முக்கியமானது. எனவே இலங்கையர்கள் என்ற ரீதியில் எல்லா இன மத மக்களையும் அது இதற்குள் இழுத்திருக்கிறது. அதன் சிறப்பு அம்சங்களை பருண்மையாக வகைப்படுத்தலாம்.
- பெருமளவில் இளைஞர் யுவதிகள் என ஒரு சந்ததி எழுச்சியாக இருப்பது
- இதில் சமூகசக்திகளின் முற்போக்கான பாத்திரம் மறைமுகமாக மிதப்பாக வெளிவந்திருப்பது. அதுவே வைக்கப்படுகிற கோசங்களிலும் பிரதிபலிக்கிறது.
- இனவாதத்தை வைத்து கட்சிகள் அரசியல் நடத்துவதை காலதாமதமாகவேனும் உணர தலைப்பட்டிருப்பது. அதை அறிவிலிருந்து பிரக்ஞைக்கு மாற்றுகிற பாதையில் பயணிப்பதாகவும் சொல்லலாம். (மத்தியதர மேல் கீழ் மக்களிடம் இது வெளிப்படுகிறது. கிராமப்புறங்கள் பற்றி தெரியாது.)
- போர் குறித்து சிங்கள மக்களிடம் நிலவிய கருத்தியலையும் ஆதரவு நிலைப்பாட்டையும் கேள்விகேட்க வைத்திருக்கிறது.
- இந்த எழுச்சியை வடிவமைப்பதில் புத்தாக்க சிந்தனை ஆற்றிய பங்கு தொடர்ச்சியாக தொய்வில்லாமல் இதுவரை இந்த எதிர்ப்பை கொண்டுசெல்வதற்கு உதவுகிறது. குறிப்பாக “கோட்டாகோகம” என்ற எழுச்சிக் கிராம வடிவமைப்பு எந்தப் போராட்டத்திலும் காணாத சிறப்பியல்பு.
இந்த எழுச்சிக்கு தலைமைதாங்கி புரட்சியாக மாற்றுகிற சக்திகளோ அதற்கான வாய்ப்போ இல்லை. சமூக மாற்றத்துக்கான மார்க்சிய தத்துவத்தை பேசுகிற இலங்கை இடதுசாரியக் கட்சிகளின் வீழ்ச்சியும் முயற்சியின்மையும் கவலை தருவன. அவர்கள் தலைமை தாங்குகிற தகுதியை இழந்துபோய் பல வருடங்களாகிவிட்டது. எனவே நிலவும் அரசியல் யாப்புக்கு உள்ளேயே ஒரு அரசாங்க மாற்றத்தை கோருவதாக மட்டுமே இதை அணுக முடியும். அது ஒரு இடைக்கால அரசாங்கத்தை தோற்றுவித்து பின் ஒரு தேர்தல் மூலம் வண்டியை அதே தடத்தில் ஓடவைப்பதே நிகழும். ஓட்டுநர்கள் மாறியிருப்பர்.
இதை அறிந்தே வைத்திருக்கிறார்கள் ராஜபக்சக்கள். அதனால் “களைப்புறும்வரை கத்துங்கோ” என்பதுபோல் விட்டுவிட்டு அரசாங்கத்தை ஒட்டுவேலைசெய்து ஓடவைக்கும் முயற்சியில் கவனம் செலுத்துகின்றனர். பொறுமையிழந்து இந்த போராட்டம் வன்முறையின் ஒரு சிறு யன்னலை திறந்துவிட்டால், அதை அரச வன்முறை இயந்திரங்களைக் கொண்டு அடக்கும் வேலையில் இறங்கமாட்டார்கள் என சொல்ல முடியாது. அல்லது எரியிற நெருப்பில் பிடுங்குவது மிச்சம் என்ற தோரணையில் வேறு அரசியல் கட்சிகளோ அல்லது பூகோள அரசியலின் வேட்டைநாய்களோ அந்த யன்னலை உதைத்து திறந்துவிடவும் நேரலாம். போராட்டக்காரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இதற்கிடையில் ஏப்ரல் 17-19 வரை ஜேவிபி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் பேரணியை -பேருவள இலிருந்து கொழும்பு வரை- நிகழ்த்த திட்டமிட்டிருப்பதாகவும் இப்போ நிகழும் மக்கள் எழுச்சிக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கப் போவதாகவும் மக்கள் அதிகாரத்துக்கான (People’s Power) இந்தப் போராட்டத்தை வெற்றியில் முடித்துவைக்கப் போவதாகவும் கூறியிருக்கிறது. இது போராட்ட வடிவத்தை மாற்றியமைத்து விட வாய்ப்பு உண்டு. அரசவன்முறையின் முகம் மீண்டுமொருமுறை வெளிவரலாம்.
அரசாங்கத்தை மாற்றுதல் என்பதும் அரசை மாற்றுவது என்பதும் ஒன்றல்ல. அரசின் மையக் கருத்தியல் பெரும்பான்மை இனமான சிங்கள சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற கருத்தியல்தான். பவுத்த பேரினவாதக் கருத்தியல். அதைத் தாங்கிப்பிடித்திருக்கிற பவுத்த மத பீடங்களிலிருந்து உதிரியாக வந்து இந்த எழுச்சியில் பங்குபெறும் பிக்குகளை வைத்துக்கொண்டு அது கேள்விக்கு உட்படுவதாக கருதினால் அது அதீதமானது.
எப்படியோ அந்தக் கருத்தியலும் பேரினவாத அரசும் கொண்டுள்ள இணைவில் சிறு தகர்வுகளாவது ஏற்பட வாய்ப்பு வரலாம். நிலவும் அரசியல் அமைப்பு யாப்புக்குள் நிகழப்போகிற மாற்றம் ஒரு இடைக்கால அரசு ஏற்கனவே உள்ள அரசியல்வாதிகளின் பங்குபற்றலுடனேயே நிகழும். பிறகு தேர்தல் அறிவிக்கப்படுகிறபோது இன்று தூர வைக்கப்படுகிற அரசியல் கட்சிகள் மீண்டும் களத்தில் வரும். கசப்பாக இருந்தாலும் அதுவே நிகழும்.
அரசு வடிவமானது நிர்வாக கட்டமைப்பாக அரசாங்கத்தையும் மக்களின் மனக் கட்டமைப்பாக கருத்தியலையும் இணைத்தே செயற்பட முடியும். நடைமுறையில் மக்களை அது புறக்கணித்து செயற்படுகிறபோதும், எப்போதுமே மக்களின் பெயரில் எல்லாவற்றுக்குமான நியாயங்களையும் ஜனநாயக முறைமை பற்றிய பசப்புகளையும் உச்சரித்தபடியே இருக்கும். இங்குதான் இந்த இன்றைய எழுச்சியின் பாத்திரம் முக்கியமானதாக இருக்கிறது. இதில் அவை கேள்விகளை எழுப்புகின்றன. புத்திசீவிகள் மட்டத்தில் அல்லது ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இன மக்கள் மட்டத்தில் ஏற்கனவே எழுந்த இந்தக் கேள்விகளும் விளக்கங்களும் இப்போ ஒட்டுமொத்த மக்களின் பொதுப்புத்தி மட்டத்தை எட்டுகின்றன.
பொதுப்புத்தி என்பது பொதுமக்களின் தத்துவம் அல்லது அறிகை. மரபு சார்ந்து வளர்ச்சியடைகிற அதன் மட்டம் விஞ்ஞானம் தொழில்நுட்பம் போன்ற அறிவுசார் தளங்களில் ஒருபுறமும், அரசியல் (சமூக விஞ்ஞானம்) தளங்களில் இன்னொருபுறமுமாக பிணைந்து வளர்ச்சியடைபவை. இந்த அரசாங்கங்களை தேர்ந்தெடுப்பதில் பெரும் பங்கு அவர்களுடையதாகவே இருக்கிறது. எனவே பொதுப்புத்தி மட்டத்தில் அடையும் சீரான மந்தமான வளர்ச்சியை முறித்து இன்னொரு படிநிலைக்கு உயர்த்துவதில் இவ்வாறான கிளர்ச்சிகள் எழுச்சிகள் முக்கியமானவை. இதில் இனங்களுக்கிடையில் நிலவும் முரண்களை அல்லது மனநிலையை மட்டும் சிறுபான்மை இனங்கள் வைத்துக்கொண்டு பின்வாங்கினால் எமது பங்களிப்பை மறுதலித்தவர்களாவோம். சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த முடியாதவர்களாகவும் ஆவோம். விழுந்து விழுந்து மீண்டும் மீண்டும் எழுந்து நடக்க முயலும் ஒரு குழந்தையின் நம்பிக்கை போலவே சமூகத்தின் இயக்கமும் தொடரும்.
இங்கு ‘தமிழ் மக்கள்’ என்பதும் ‘சிங்கள மக்கள்’ என்பதும் பருண்மையான சுட்டல்தான். உதாரணமாக தமிழை தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்குள் அம் மக்களாலேயே தமக்குள் (இயக்கம், மதம் என்ற பெயரால்) நிகழ்த்தப்பட்ட கொடுமைகளும் கொலைகளும் எதேச்சாதிகாரங்களும் வடுக்களாக இருந்தாலும் எம்மை தமிழராக அடையாளப்படுத்துகிறோம். சிங்கள மக்களுக்குள் ஜேவிபி கிளர்ச்சிகளின்போது அதேவகைப்பட்ட துயரம் அதே மக்களால் (ஜேவிபி இனாலும் சிங்கள பொலிஸ், இராணுவத்தாலும்) நிகழ்த்தப்பட்ட வடுக்களையும் சுமந்தே சிங்கள மக்கள் என்ற அடையாளம் வருகிறது. தமிழீழத்தை இப்போதும் நம்புகிறவர்களை விட்டாலும், மற்றையோர் இலங்கையர் என தம்மை அடையாளப்படுத்துகிறபோது முடிந்தளவு இதில் பங்குகொள்வதே சரியானது. அது தமிழ் மக்கள் எதிர்ப்பட்ட வடுக்களை நிராகரிப்பது என்பது ஆகாது.
அதேநேரம் அவர்களின் தயக்கங்களையும் முன்னெச்சரிக்கையையும் அவர்களின் உளவியல் தளத்தில் வைத்து புரிந்துகொள்ளவும் வேண்டும். போரினாலும் அதன் விளைவுகளாலும் நீண்டகால பொருளாதாரத் தடைக்குள் -பசியோடும் மின்வெட்டோடும் எரிபொருளின்மையோடும்- வாழ்ந்து பழக்கப்பட்ட அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. இன்னொருபுறம் போரினால் மனித உயிர்களின் இழப்புகள், தேடியலைதல்கள், இடப்பெயர்வு அலைக்கழிப்புகள், பதுங்குகுழி வாழ்வுகள் என உளவியல் தளத்தில் அவர்கள் எதிர்கொண்ட வரலாற்று ஈரம் இன்னும் காயவில்லை. இப்போதும்கூட இப் போராட்டம் வன்முறையில் முடிந்தால் தாமே அதிகம் பாதிக்கப்படுவோம் என அவர்கள் அஞ்சினால், அதுவும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். இதை புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்புணர்வு சிங்கள மக்களுக்கும் இருக்க வேண்டும்.
அதை புரிந்துகொள்ளாத வரட்டு கோட்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக ஒட்டுமொத்த தமிழ் மக்களை நோக்கி முகநூலில் விரல் நீட்டியபடி இருப்பது அவர்களின் அரசியல் மற்றும் அந்நியத்தன்மையைக் காட்டுகின்றது. இந்த எழுச்சிக்கு எதிராக கோட்டாவுக்கு ஆதரவாக களமிறங்குகிற ஒரு பகுதி சிங்கள மக்களின் குரல்களும் வீதிப்பவனியும் இருக்கிறபோதும், வடக்கு கிழக்கில் யாரும் அந்த எதிர்நிலைக்கு வரத் தயாரில்லை என்ற விடயத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த எழுச்சிக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு மலையகம் என ஆதரவாக அடையாளப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. நடக்கின்றன. கொழும்பிலும்கூட புறநகர்ப் பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்கள் பங்குபற்றுகிறார்கள். கொழும்பு தகவலின்படி முழு அளவில் இல்லைத்தான்.
இந்த எழுச்சியின் பின்னான நேரடி அரசியல் மீண்டும் அதே தடத்தில் ஓடாது என எவராலும் உத்தரவாதப்படுத்த முடியாது. புதிய நம்பிக்கையை கொடுக்கும் சமிக்ஞைகளோ அரசியல் பகுப்பாய்வு விளக்கமோ இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதேநேரம் எழுச்சியான அசைவியக்கங்கள் அற்ற சமூகம் செக்குமாடு போன்றது என சொல்லலாம். ஏற்படுத்தப்படுகிற சமூக அசைவியக்கங்களை கண்டுகொள்ளாமல் வாளாவிருந்தால் அதுவும் அதே செக்குமாட்டுத்தனம்தான். அதை தமது முன்னேற்றத்தை நோக்கி மாற்ற விழையாத மனித சமூகம் உருப்படாது. சமூக மாற்றம் அல்லது வளர்ச்சிக்கான வரம் வானத்திலிருந்து வீழ்வதல்ல!
- 15042022
- fb link: https://www.facebook.com/ravindran.pa/posts/7448094598594903