உக்ரைன் நெருக்கடி !

John J. Mearsheimer (image -thx: reddit.com)

"த எக்கோனமிஸ்ற்" இதழில் 19.03.2022 வெளிவந்த கட்டுரை இது."உக்ரைன் நெருக்கடிக்கு ஏன் மேற்குலகம் முக்கிய பொறுப்பாக உள்ளது" என்ற தலைப்பில் இக் கட்டுரை வெளியாகியுள்ளது. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜோன் மியர்ஸைமர் தனது பார்வையை வெளிப்படுத்துகிறார். நியூயோர்க்கை பிறப்பிடமாகக் கொண்ட மியர்ஸைமர் (75) அரசியல் விஞ்ஞான பேராசிரியரும் அறியப்பட்ட கறாரான விமர்சகரும் ஆவார்.

// சோவியத் யூனியனை ‘மிஸ்’ பண்ணியதாக உணராத எவருக்கும் இதயம் இல்லை. அதை மீளவும் பெற விரும்பும் எவருக்கும் மூளை இல்லை// – புட்டின்

*

1962 கியூப எவுகணை நெருக்கடிக்குப் பிறகு உக்ரைன் போர் மிகப் பயங்கரமான சர்வதேச நெருக்கடி வாய்ந்ததாக உருவாகியிருக்கிறது. இந் நிலைமையை தடுக்க வேண்டும், அல்லது முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என நாம் நினைத்தால் இந்த நெருக்கடியின் மூலக் காரணிகளை நாம் கண்டடைய வேண்டும்.

இந்தப் போரை ஆரம்பித்ததிலும், எப்படியாக இது செயற்படுத்தப்படுகிறது என்பதற்கான பொறுப்பேற்றலிலும் புட்டினுக்கு உள்ள பாத்திரத்தில் எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் ஏன் இப்படி செய்தார் என்பது வேறு விடயம். மேற்குலகின் மையநீரோட்டப் பார்வையானது அவர் ‘அறிவீனமானவர்’, ‘காலாவதியான ஆக்கிரமிப்பாளன்’ என்பதே. சோவியத் ஒன்றியத்தின் மாதிரி வடிவமாக அகண்ட ரசியாவை கட்டியெழுப்ப நினைக்கிறாரா என்பதையே காலாவதியான ஆக்கிரமிப்பாளன் என்ற சொல் சுட்டுகிறது.

இவ்வாறாக அவர் மீது தனியாக இந்த நெருக்கடிக்கான பொறுப்பு சுமத்தப்படுகிறது. ஆனால் இந்தக் கதை பிழையானது. மேற்குலகு, அதிலும் குறிப்பாக அமெரிக்காதான் 2014 பெப்ரவரியிலிருந்து தோன்றிய இந்த நெருக்கடிக்கு மூல காரணம். இந்த நிலை தற்போது ஒரு போராக வடிவமெடுத்திருக்கிறது. அது உக்ரைனை அழிவுக்கு இட்டுச்செல்லும் ஆபத்தை உருவாக்கியிருப்பது மட்டுமல்லாமல், ரசியாவுக்கும் நேற்றோவுக்கும் இடையில் ஒரு அணுவாயுத யுத்தத்தை உருவாக்கக்கூடிய உள்ளமைவையும் கொண்டிருக்கிறது.

உக்ரைன் மீதான பிரச்சினை உண்மையில் 2008 ஏப்ரலில் புக்காரெஸ்ற் இல் நடந்த உச்சிமாநாட்டில் ஆரம்பித்துவிட்டது. ஜோர்ஜ் டபிள்யூ புஸ் நிர்வாகம் உக்ரைனும் ஜோர்ஜியாவும் நேற்றோ கூட்டணி அங்கத்தவர்களாக வருவார்கள் என அறிவிக்கும்படி தனது கூட்டாளிகளுக்கு அழுத்தம் கொடுத்தது. உடனடியாகவே ரசியா எதிர்வினையாற்றியது. இந்த அறிவிப்பு ரசியாவுக்கு எதிராக கிளம்ப இருக்கும் அச்சுறுத்தல் என விளக்கமளித்தது. உக்ரைன் நேற்றோவில் சேருமானால் அது கிறிமியாவும் கிழக்கு பகுதிகளும் இல்லாமல்தான் நடக்கும் என புட்டின் கறாராகவே குறிப்பிட்டார்.

அமெரிக்கா மொஸ்கோவின் இந்த ‘சிவப்புக் கோட்டை’ உதாசீனம் செய்தது. ரசிய எல்லையில் உக்ரைனை ஒரு மேற்குலக அரணாக மாற்ற அமெரிக்கா ஆயத்தமானது. இந்த மூலோபாயம் வேறு இரண்டு விடயங்களையும் உள்ளடக்கியிருந்தது. ஒன்று உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி நகர்த்துதல் மற்றது அமெரிக்க சார்பு ஜனநாயக ஆட்சியை உக்ரைனில் நிறுவுதல் என்பவையே அவை. இந்த முயற்சிகள் இறுதியில் 2014 பெப்ரவரி எழுச்சியின் பின் பகைமையாக வெடித்தது. அமெரிக்காவால் ஆதரவளிக்கப்பட்ட இந்த எழுச்சி உக்ரைனின் ரசிய சார்பு அதிபரான விக்ரர் யனுகோவிச் இனை நாட்டைவிட்டு தப்பியோட வைத்தது. இதற்கு உடனடியாகவே பதிலளித்த ரசியா கிறிமியாவை கைப்பற்றியதோடு, உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொன்பாஸ் இல் ஏற்பட்ட உள்நாட்ட யுத்தம் கொழுந்துவிட்டு எரிய எண்ணையூற்றியது.

அடுத்த பெரும் மோதல் 2021 டிசம்பரில் எழுந்தது. இது தற்போதைய யுத்தத்துக்கு வழிசமைத்தது. முக்கிய காரணம் உக்ரைன் நேற்றோவின் நிழல் அங்கத்தவராக மாறிக்கொண்டிருந்ததுதான். இந்த செயல்முறை 2017 இல் ட்றம்ப் நிர்வாகம் உக்ரைனுக்கு பாதுகாப்பு ஆயுதங்களை விற்க தீர்மானித்ததிலிருந்து தொடங்கியிருந்தது. பாதுகாப்பு என்பது தெளிவான வெளிப்பாடாக இல்லாமல், மொஸ்கோவுக்கும் அதன் கூட்டான டொன்பாஸ் பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தல் தரும் தாக்குதல் நிலை ஆயுதங்களாக ரசியாவுக்கு தெரிந்தன.

மற்றைய நேற்றோ நாடுகளும் இதில் பங்குகொண்டன. உக்ரைனுக்கு ஆயுதங்களை ஏற்றியதோடு, உக்ரைன் இராணுவத்துக்கு பயிற்சியும் கொடுத்தது. கூட்டாக விமானப்படை மற்றும் கடற்படை பயிற்சிகளையும் மேற்கொண்டன. 2021 யூலை கருங்கடலில் அமெரிக்காவும் உக்ரைனும் சேர்ந்து மிகப் பிரமாண்டமான கடற்படை பயிற்சியை அரங்கேற்றியது. இதில் 32 நாடுகள் பங்குபற்றியிருந்தன. Operation Sea Breeze என்ற இந்தப் பயிற்சி ரசியாவை எரிச்சலடைய வைத்தது. ரசியா தனது கடற்பரப்பினுள் வேண்டுமென்றே உள்நுழைந்ததாக பிரிட்டனின் கடற்படைக் கப்பலொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்கு இட்டுச் சென்றது.

பைடன் நிர்வாகத்தின் கீழ் உக்ரைனுக்கும் அமெரிக்காவுக்குமான தொடர்பு தொடர்ந்தும் அதிகரித்தது. இது நவம்பரில் கைச்சாந்திடப்பட்ட முக்கியமான “அமெரிக்க-உக்ரைன் இடையிலான மூலோபாய ரீதியிலான கூட்டு” என்ற ஆவணத்தில் பிரதிபலித்தது. இந்த ஆவணத்தில் அமெரிக்க அரச செயலர் அன்ரனி பிளிங்கனும் உக்ரைன் சார்பில் ட்மிற்றோ குலேபாவும் இதில் கைச்சாந்திட்டிருந்தார்கள். ஐரோப்பிய மற்றும் ஐரோப்பிய-அத்திலாந்திக் நிறுவனங்களுடன் (அதாவது ஐரோப்பிய ஒன்றியம் நேற்றோ என்பவற்றைத்தான் மியர்ஸைமர் குறிப்பிடுகிறார்- மொ.பெ) முழுமையான தகவமைதலை செய்வதும், மிகவும் ஆழமான விரிவான சீர்திருத்தங்களை உக்ரைனில் அமுல்படுத்துவற்கான அர்ப்பணிப்பை உருவாக்குவதும் இந்த ஆவணத்தின் முக்கிய இலக்கு என அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. இந்த ஆவணம் செலன்ஸ்கி-பைடன் இருவராலும் உக்ரைன் அமெரிக்கா இடையில் மூலோபாய ரீதியிலான கூட்டை பலப்படுத்தவதற்கானதும், அதற்கான அர்ப்பணிப்பை கட்டியெழுப்புவதற்கானதுமான -வெளிப்படையான- ஆவணமாக இருந்தது. அத்தோடு 2008 புக்காரெஸ்ற் உச்சிமாநாட்டின் பிரகடனத்தால் இரு நாடுகளும் வழிநடத்தப்படும் என்பதையும் வலியுறுத்தியது.

ஆச்சரியப்பட எதுவுமற்ற வகையில், உருவாகிவரும் இந்த நிலைமை மொஸ்கோவுக்கு சகிக்க முடியாததாக இருந்தது. சென்ற வசந்த காலத் தொடக்கத்தில் வாசிங்டனுக்கு தனது பதிலை வெளிப்படுத்தும் முகமாக உக்ரைன் எல்லையில் மொஸ்கோ இராணுவத்தை குவிக்கத் தொடங்கியது. ஆனால் இது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. பைடன் நிர்வாகம் உக்ரைனோடு இன்னும் நெருக்கமாகத் தொடங்கியிருந்தது.

இந்தப் போக்கு டிசம்பர் மாதத்தில் ரசியாவை முழு அளவிலான இராசதந்திர நிலைப்பாட்டை எடுக்கத் தள்ளியது. ரசிய வெளிநாட்டமைச்சர் சேர்ஜே லவ்றோவ் “நாம் கொதிநிலையை எட்டிவிட்டோம்” என்றார். உக்ரைன் ஒருபோதும் நேற்றோவில் இணையாது என்ற உத்தரவாதத்தையும், உக்ரைனின் கூட்டு நாடுகள் 1997 இலிருந்து கிழக்கு ஐரோப்பிய எல்லையில் குவித்திருக்கும் இராணுவ தளபாடங்களை அகற்றும் என்ற உத்தரவாதத்தையும் ரசியா கோரியது. ரசியா எழுத்துவடிவிலான உத்தரவாதத்தை தரும்படி உக்ரைனை கேட்டது. அதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. அமெரிக்க அரச செயலர் பிளிங்கன் “எந்த மாற்றமும் இல்லை. இனியும்தான்!” என தெளிவாகவே கூறிவிட்டார். நேற்றோவிடமிருந்து எழும் இந்த அச்சுறுத்தலை அகற்ற ஒரு மாதத்தின் பின்னர் புட்டின் உக்ரைனுக்குள் படையெடுத்தார்.

உக்ரைனின் நெருக்கடிகளுக்கு நேற்றோ விரிவாக்கம் பொருத்தமற்ற காரணம் என மேற்குலகு மந்திரம் ஓதியது. மாறாக அந் நெருக்கடி புட்டினின் விரிவாக்க இலக்கை அடிப்படையாகக் கொண்டது என்றது. அண்மையில் ரசியாவுக்கு அனுப்பப்பட்டிருந்த நேற்றோ ஆவணமொன்றின்படி “நேற்றோ என்பது ஒரு தற்பாதுகாப்பு கூட்டு, அது ரசியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது” என கூறப்பட்டிருந்தது. கிடைக்கப் பெறுகிற சாட்சிகளோ இந்த உரிமைகோரலுக்கு முரணானவையாக இருந்தன.

கிழக்கு ஐரோப்பாவின் நிலப்பரப்புகளில் பெருமளவை வெற்றி கொள்ளுதலிலும் அதை கையகப்படுத்தி வைத்திருப்பதிலும் ரசியா கொடுக்கக்கூடிய விலை ரசியாவின் இருப்புக்கு தடையாக மாறும் என்பது புட்டினுக்கு நிச்சயம் தெரியும். அவர் ஒருமுறை சொன்னார் “சோவியத் யூனியனை ‘மிஸ்’ பண்ணியதாக உணராத எவருக்கும் இதயம் இல்லை. அதை மீளவும் பெற விரும்பும் எவருக்கும் மூளை இல்லை” என்றார். ரசியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் இறுக்கமான பிணைப்பு பற்றிய அவரது நம்பிக்கை எதுவாகிலும், உக்ரைன் முழுவதையும் திரும்ப பெற முயற்சிசெய்வது என்பது முள்ளம்பன்றியை விழுங்க முயற்சிப்பது போன்றதாகும்.

மேலும் புட்டின் உட்பட ரசிய கொள்கை வகுப்பாளர்கள் எவரும் திரும்பவும் சோவியத் ஒன்றித்தை மீள கட்டியெழுப்ப அல்லது அகண்ட ரசியாவை உருவாக்க பிரதேசங்களை வெற்றிகொள்ளவது பற்றி எதுவும் சொன்னதில்லை. மாறாக, 2008 புக்காரெஸ்ற் மாநாட்டின்பின் திரும்பத் திரும்ப ரசியத் தலைவர்கள் சொன்னது, “உக்ரைன் நேற்றோவில் இணைவது ரசியாவுக்கு வெளி அச்சுறுத்தலாக இருக்கும், அது தவிர்க்கப்பட வேண்டும்” என்பதையே. ஜனவரியில் ரசிய வெளிநாட்டமைச்சர் லவ்றோவ் “எல்லாவற்றுக்கும் தீர்வாக இருப்பது நேற்றோ கிழக்குப் பக்கமாக விஸ்தரிப்பை மேற்கொள்ளாமல் இருப்பதற்கான உத்தரவாதத்தை வழங்குவது மட்டுமே” என குறிப்பிட்டார்.

ரசியா ஐரோப்பாவுக்கு இராணுவ ரீதியிலான அச்சுறுத்தலாக இருக்கிறது என 2014 க்கு முன் மேற்குலக தலைவர்கள் சொன்னதில்லை. ரசியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் மிக்கேல் மைக்பவுல் அவர்கள் குறிப்பிட்டபடி, கிரிமியாவை கைப்பற்றுகிற புட்டினின் முயற்சி முன்னர் திட்டமிடப்பட்டதல்ல. உக்ரைனில் நடத்தப்பட்ட (2014) சதிப்புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்த ரசிய சார்பு தலைவர் தூக்கியெறியப்பட்ட பின் கிளர்ச்சியுற்ற பதில் நடவடிக்கை அது என்றார்.

எப்படியோ நெருக்கடி உருவாகியபோது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்கள் உக்ரைனை தாம் மேற்குலகினுள் இசைவாக்க முயற்சித்ததன் மூலம் ரசியாவை சீண்டியதை ஒப்புக்கொள்ள முடியாதிருந்தது. மாறாக, அவர்கள் இப் பிரச்சினைக்கான உண்மையான களம் ரசிய பிராந்திய விரிவாக்கம் எனவும் உக்ரைன் வழிக்கு வராவிட்டால் அதன்மீது ஆதிக்கம் செலுத்துவதுதான் ரசியாவின் ஆசை எனவும் விளக்கமளித்தனர்.

இந்த நெருக்கடிகளுக்கான காரணிகள் மீதான எனது விளக்கம் சர்ச்சைக்குரிய ஒன்றல்ல. அமெரிக்காவின் முக்கியமான வெளிநாட்டு கொள்கை நிபுணர்கள் 1990 இலிருந்து நேற்றோ விரிவாக்கம் குறித்து எச்சரித்துள்ளனர். புக்காரஸ் மாநாடு நடந்தபோது அன்றைய அமெரிக்க பாதுகாப்பு செயலர் றொபேர்ட் கேற்ஸ் “ஜோர்ஜியாவையும் உக்ரைனையும் நேற்றோவினுள் கொண்டுவர முயற்சிப்பது உண்மையில் மிகையான செயல்” என்றார். மேலும் அதே மாநாட்டில் ஜேர்மன் தலைவர் அஞ்சலா மேர்க்கர் அவர்களும் பிரான்ஸ் தலைவர் நிக்கோலாஸ் சார்க்கோஷி அவர்களும் உக்ரைனை நேற்றோவுக்குள் இழுப்பதை நோக்கி நகர்வதை எதிர்த்தனர். அது ரசியாவை சீற்றம் அடையச் செய்யும் என அவர்கள் அஞ்சினர்.

எனது பார்வையின் முக்கிய புள்ளியாக நான் குறிப்பிட விரும்புவது, இன்று நாம் ஒரு மிகப் பயங்கரமான நிலைமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதையே. மேற்குலகின் கொள்கை இந்த நிலைமையை அதிகளவில் தூண்டிக்கொண்டிருக்கிறது. ரசிய தலைவர்களை பொறுத்தளவில் தமது ஏகாதிபத்திய நோக்கங்களை முறியடிப்பதில் உக்ரைனின் மிகச் சிறு பாத்திரம் பற்றியதல்ல, அதைவிட ரசிய நாட்டின் இருப்பின்மீது எதிர்காலத்தில் நேரக்கூடிய நேரடி அச்சுறுத்தலை கையாள்வது பற்றியது. ரசிய இராணுவ திறன் பற்றி, உக்ரைனின் எதிர்பாற்றல் பற்றி, மேற்குலகின் பதில் நடவடிக்கையின் வாய்ப்பு மற்றும் துரிதம் பற்றி புட்டின் பிழையான மதிப்பீடுகளை கொண்டிருக்கலாம். ஆனால் இரக்கமற்ற பெரும் வல்லாதிக்க சக்திகள் தாம் நெருக்கடிக்குள் உள்ளாகும்போது எப்படி நடந்துகொள்ளும் என்பதை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

எப்படியோ அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் புட்டினின் அவமானகரமான தோல்வியை நிகழ்த்தவும் முடிந்தால் புட்டினை ஆட்சியிலிருந்து அகற்றுவதுமென இரட்டிப்பான நம்பிக்கையுடன் செயற்படுகின்றனர். அவர்கள் ஒருபுறத்தில் உக்ரைனுக்கான உதவியை அதிகரிப்பதும் மறுபுறத்தில் ரசியாவை தண்டிப்பதான மிகப் பெரும் பொருளாதாரத் தடையை ஏற்படுத்துவதும் என இருப்பதை புட்டின் ஒரு பொருளாதாரப் போராக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவும் அதன் கூட்டும் உக்ரைனில் ரசியாவின் வெற்றியை ஒருவேளை தடுத்து நிறுத்தலாம். ஆனால் உக்ரைன் மிக மோசமாக அழிவுக்கு உள்ளாகும். எல்லாவற்றுக்கும் மேலாக உக்ரைன் நெருக்கடிக்கு அப்பாலான ஒரு மிகப் பெரும் அச்சுறுத்தல் இருக்கிறது. மேற்குலகம் மொஸ்கோவை உக்ரைன் போர்க்களத்திலிருந்து தூக்கியெறியவும், ரசியாவின் பொருளாதாரத்தை நொருக்கும் விதமாக தொடர்ச்சியான மோசமான பொருளாதாரத் தடையை பேணவும் செய்தால் அது ஒரு வல்லாதிக்க சக்தியை அதன் விளிம்புக்கு தள்ளுகிற விளைவை ஏற்படுத்தும். அதன்பின் புட்டின் ஒரு அணுவாயுத யுத்தத்துக்குள் உள்ளடலாம்.

இந்தப் புள்ளியில், மோதல் எவ்வாறு தீர்க்கப்படலாம் என விதிமுறைகளை வைத்து தெரிந்துகொள்வது முடியாத காரியம். ஆனால் இதன் ஆழமான காரணிகளை நாம் புரிந்துகொள்ளாவிட்டால், உக்ரைன் சிதைந்துபோக முன், முடிவில் நேற்றோ ரசியாவுடன் போரை வந்தடைய முன் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர இயலாது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: