நாம் வாழுகிற கிராமம் சுமார் 7000 பேரை சனத்தொகையாகக் கொண்டது. இப்போது இருக்கும் வாடகை வீட்டில் 25 வருடங்களுக்கும் மேலாக வாழ்வு போய்க்கொண்டிருக்கிறது. வேறு இடம் மாற எந்த விருப்பும் வந்ததில்லை. வீட்டின் யன்னலுக்கூடாக தெரியும் அல்ப்ஸ் (Alps) மலைத்தொடரும் முன்-அல்ப்ஸ் (front Alps) மலைகளும் வேலையின் எல்லா களைப்புகளையும் வாரியள்ளி எடுத்துச் சென்றுவிடும். வீட்டின் செற்றியில் இருந்தபடியே அதை பார்த்துக்கொண்டிருப்பேன்.
பருவகாலங்களுக்கு ஏற்ப அதன் கோலங்கள் மாறிக்கொண்டிருக்கும். பல்கனியில் நின்று பார்க்கும் போது அதன் அடிவாரத்தில் இருப்பதுபோல உணர்ந்த ஆரம்ப காலங்கள் இப்போது இல்லை. (உண்மையில் பல கி.மீ தூரத்துக்கு அப்பால் அடிவாரம் இருக்கிறது) நீண்டு பரந்த புல்வெளியுள் ஒவ்வொன்றாக முளைத்த சில கட்டடங்கள் மலையின் அடிவாரத்தை பறித்துக்கொண்டுவிட்டன. ஆனாலும் அதன் இடுப்புக்கு மேலாக உச்சிவரை தெரியும் பகுதிகளையாவது என்னிடமே விட்டுவைத்திருப்பதில் திருப்திப்பட பழகிவிட்டேன்.
இந்த கட்டடங்களை தாண்டி நடைபாதைக்கு வந்துவிட்டால் மலையடிவாரம் மீளக் கிடைத்துவிடும். பல கிளைகளாகப் பிரிந்து கிலோமீற்றர் கணக்கில் நடைபாதை வளைந்து கிடக்கிறது. இந்த நடைபாதைகளில் போவோர் வருவோரெல்லாம் வணக்கம் (“கிறேற்சி” என டொச் மொழியில்) சொல்லிக்கொள்வது வழமை. மகிழ்ச்சி தரக்கூடிய பண்பாடு அது.
இப்படியேதான் இருவர் சைக்கிளில் ஒருநாள் வந்துகொண்டிருந்தபோது எமக்கு சில மீற்றர் முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்த ஒரு தம்பதியினர் “கிறேற்சி” என வழமைபோல் சொன்னார்கள். சைக்கிள்கள் எம்மை நெருங்க நாமும் கிறேற்சி சொன்னோம். “என்ன இந்த ஊர் ஆட்கள் எல்லோரும் கிறேற்சி சொல்கிறார்கள்” என ஆனந்த வியப்புடன் அந்த பெண் மற்றவருக்குச் சொல்லிக்கொண்டு செல்வதும் கேட்டது. ஓகோ இவர்கள் நகர்ப்புறத்திலிருந்து வருகிறார்கள் என ஊகித்துக்கொண்டே நடந்தோம்.
இந்தப் பாதையில் தமிழரை தமிழர் காணும்போது உற்றுப்பார்த்தபடி எதுவும் சொல்லாமல் போவது அல்லது அளந்து தலையாட்டுவது என்பதை நினைக்க எரிச்சல் வருகிறபோதும், நான் ஒருபோதும் வணக்கம் சொல்லத் தயங்குவதில்லை இன்றும் வேலைவிட்டு திரும்பி வரும்போது முதலில் ஒரு தமிழ் அன்பரை சைக்கிளில் கண்டேன். சைக்கிளிலிருந்து எழும் சத்தம் காட்டுக்குள் நடக்கும்போது தெரியாத விலங்கொன்று எழுப்பும் ஒலிபோல ஒரு சுழற்சிமுறை சத்தமாக கேட்டுக்கொண்டிருந்தது. அவருக்கு காதுகள் இருந்தன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவர் அநாயாசமாக சைக்கிளை கலைத்துக்கொண்டிருந்தார். அவருக்குத்தான் முதலில் சத்தமாக வணக்கம் சொன்னேன். மேலும் கீழுமாக சென்ரி மீற்றரில் அளந்து தலையை அசைத்துக்கொண்டு கடந்து சென்றார். அவருக்கு வாய் இருந்ததும் எனக்கு நன்றாகவே தெரியும்.
வழமையாக நான் அதிகம் நடக்கிற பாதை இது. அருகால் லிந்த் (Linth) ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அல்ப்ஸ் மலைத்தொடரும், எண்ணற்ற மரங்களும், பற்றைகளும், கழுத்தில் மணியொலித்தபடி புல்மேயும் மாடுகளும், செம்மரி ஆட்டுக் கூட்டங்களும், எப்போதாவது கேட்கும் பறவைகளின் ஒலிகளும் என சிருஸ்டிக்கப்பட்ட ஒரு சூழலை அவை உருவாக்கித் தந்துகொண்டிருக்கும். புல்வெளியில் புல் அறுவடை செய்யும் ரைக்ரர்களும், அதன் இரைச்சல் சத்தமும், அறுபட்ட புற்களின் பச்சை மணமும், மாட்டுச் சாணியை கரைத்து புல்வெளியில் விசிறும் ரைக்ரர்களும், அதன் மணம் பரவிய காற்றும் என நாற்பரிமாணத்தில் காட்சிகள் நிறைந்து கிடக்கும். பனிக்காலம் எல்லாவற்றையும் வெள்ளையாக்கி தன்பங்குக்கு காட்சிகளை வரைந்து தள்ளிக்கொண்டிருக்கும்.
இப்போ பனி படிப்படியாக விலகும் காலம். ஆனாலும் எப்போதுமே அல்ப்ஸ் கூடவரத் தயங்குவதில்லை. அது இப்போதும் பனித்திரளை மார்பிலும் தலையிலும் அணிந்திருந்தது. என்னை ஆகர்சிக்கும் இந்த காட்சிகளை விட்டு விலகாதிருத்தலே எனது ஏதோவொன்றாக இருந்தது. இக் காட்சிகளை அவ்வப்போது கைபேசியில் எடுக்கும் படங்களை முகநூலில் பகிர்வதுண்டு. எனக்குள் முடக்கிவைக்க முடியாமலிருக்கும். ஆனாலும் படங்களைப் போட்டு அலுப்படிக்கிறேனா என்று யோசிக்கவும் செய்வேன்.
இப்படியேதான் இன்றும் வேலை முடிந்து கால்நடையாக வந்தபோது எடுத்த படம்தான் மேலுள்ளது. விரிந்த புல்தரை பனித்திரளால் சிதிலமடைந்து ஒரு செந்நிறத்தில் வீழ்ந்து கிடந்தது. அதில் ஒரு சிறு குழிவான பகுதியில் முன்னர் பனித்திரள் அடைந்துகிடந்தது. இப்போ நீர்த் தேக்கமாக உருமாறி மலைத்தொடர்த் துண்டொன்றை தனக்குள் இழுத்துவைத்துக் கொண்டிருந்தது. அப்படியே நின்றுவிட்டேன். கையை முடிந்தளவு மேலே உயர்த்தி அந்த நீர்ப்படுக்கையறையை கைபேசியால் எட்டிப் பார்த்தேன்.
இந்த படத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது நம்ம நாட்டவர் ஒருவர் சைக்கிளில் மெல்ல வந்துகொண்டிருந்தார். அவர் சடாரென தரையை திரும்பிப் பார்த்துவிட்டு சூட்டோடு சூடாக என்னைப் பார்த்தார். அவரது பார்வைக்குள் அந் நீர்ப்படுக்கையறை அகப்பட்டிருக்கும் என நான் இப்போதும் நம்பவில்லை. அவர் விழிகள் அகல விரிந்துவிட்டிருந்தன. வந்துகொண்டிருந்தார். எனது உயர்ந்த கைகள். முன்னால் இருப்பது வெறும் புல் அழுகிப்போன பெரும் தரை. “இந்தாள் என்ன செய்யிது?” என யோசித்திருக்க வேண்டும். “மண்டைப்பழுதுபோல” என அவர் யோசித்ததாக அவருடைய விழி குதித்து வந்து எனக்கு சொல்ல அதீதமாக சிரித்தபடி வணக்கம் என்றேன். எந்த அசைவுமற்று அதே முழிசலுடன் கடந்து சென்றால் போதும் என சைக்களை உதைத்தார் அன்பர்.
திருப்பத்தில் திரும்பியபோது முன்னால் தெரிந்த அல்ப்ஸ் வலதுபக்கமாக ஒதுங்கி நின்றுகொண்டது. மம்மல் படத் தொடங்கியிருந்தது. சூரியன் தனது கடைசிக் கதிர்களை மலைமேல் உதறிவிட்டு படுக்கைக்கு இறங்கிக்கொண்டிருந்தது. நேரான நெடிய கிரவல் பாதை. தொடர் மரங்கள் இலையுதிர்த்து நின்றுகொண்டிருந்தன. வலது பக்கம் (பழுப்பேறிய) புல்வெளி திறந்திருந்தது. எவருமே எதிர்ப்படவில்லை. மண்டைப்பழுதாக மாறிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. சத்தமாக சிரித்தேன். வசனம் பேசினேன். பாடினேன். அன்பரின் முழிசலை நினைக்க நினைக்க எனது சிரிப்பு நிற்பதாக இல்லை. ஒருவேளை…?
அல்ப்ஸ் பார்த்துக்கொண்டிருந்தது.






- 16022022
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/7178850302186002
- (குறிப்பு : அல்ப்ஸ் மலைத்தொடர் மிக நீண்டது. சுவிசில் முக்கால்வாசி இடங்களை அது ஊடறுக்கிறது. அதன் மிக அழகான பகுதிகள் எனது இருப்பிடத்திலிருந்து தூர உள்ளன. நான் இங்கு குறிப்பிட்டு எழுதிய பகுதி எமக்கு அருகாமையில் உள்ளது.)