மேற்குலக மையவாதம் தனது பண்பாட்டை நியமமாக வைத்தே மற்றைய பண்பாடுகளை அளவிடுகிறது. அதேநேரம் தனது ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் எல்லா பண்பாடுகளையும் தனிமனித உரிமைகளையும் மதிக்கவேண்டும் என அதே மேற்குலகம் வகுப்பும் எடுக்கும். இந்த மேற்கத்தைய பண்பாடு காலனிய ஆதிக்கங்களுக்கு உட்பட்ட காலத்திலிருந்து இன்று உலகமயமாதலின் இணைய தொடர்பூடகப் புரட்சிவரை எமது தனித்துவங்கள் அடையாளங்களை தக்கவைப்பதை சவாலுக்கு உட்படுத்தியபடியே இருக்கிறது.
விளம்பரங்களை போலியென மறுத்துக்கொண்டிருக்கும் அறிவையும் மீறி, சதா விளம்பரப்படுத்தலின் உத்தியானது மூளைக்குள் அதை உண்மையென புகுத்துவதையே நோக்கமாகக் கொண்டது. அதில் வெற்றியும் அடைகிறது. அதுவே அந்த பொருட்கள் குறித்த எமது தேர்வுகளை சில சந்தர்ப்பங்களில் அறிவை மறுத்து தீர்மானித்தும் விடுகிறது. இவ்வாறாக ‘நாகரிகம்’ என சுட்டப்படும் மேற்குலக பண்பாட்டு விளம்பரங்கள் மற்றைய பண்பாடுகள் தம்மீது காட்டும் அக்கறைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பின்கதவு வழியினூடாக மூளைக்குள் புகுந்துவிடுகிறது. பின் அதுவே மெல்ல மெல்ல ஒரு மனநிலையாக மாற ஆரம்பித்தும் விடுகிறது.
சமூகசக்திகளில் ஆணாதிக்க மனநிலை மிதப்பாக இருப்பதால், மேற்குலக ஆதிக்க மனநிலையோடு கள்ள உறவு ஏற்பட்டும் விடுகிறது. பெண்கள் பண்பாட்டு அடையாளங்களை காவித் திரிய, ஆண்களோ மேற்குலகப் பண்பாட்டுடன் அச்சொட்டாகவோ தழுவலாகவோ உறவு வைத்துக்கொண்டு பழக்கப்படுத்திக் கொள்கின்றனர். பண்பாடுசார் கொண்டாட்டங்களில் கூட (பிக்னிக் களிலும்) இந்த இருநிலை பண்பாட்டை நாம் காண முடியும். எனவே பண்பாடுகளின் தனித்தன்மையை பேணுதல் என்பதற்கான சிரத்தையில் அல்லது போராட்டத்தில் பெண்களை ஆண்கள் முன்நிறுத்தாமல் பேச முடியாதுள்ளனர். பண்பாடுகளுக்குள் நிலவும் இந்த அக முரண்பாடு தத்தமது பண்பாட்டு அம்சங்களை தக்கவைப்பதற்கான போராட்டங்களில் உட்பலவீனமான அம்சமாகவே உள்ளது.
உடை விடயத்தில் பெண்கள் தனித்துவத்தை கடைப்பிடித்தாலும், வாழ்நிலையில் உணவுப் பழக்கவழக்கங்களில், அறிவுத்தேடலில் என பல அம்சங்களில் எல்லா பால்நிலை தரப்பினரிடமும் மேற்குலக மையவாதத்தின் தாக்கம் இருக்கவே செய்கிறது. இவற்றினூடாக பண்பாட்டு அடையாளங்களை அசலாக தக்கவைத்தல் என்பது மிகப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
(ஓர் இடையீடாக) புகலிடத்துக்கு வருவோம். உடல் மொழி பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றிலும் தகவமைய வேண்டிய ஒரு மென்நிர்ப்பந்தம் புலம்பெயர்ந்த எமக்கு ஏற்பட்டிருக்கிற அனுபவங்கள். வீட்டுக்கு வெளியே கையால் உணவு உண்ண முடியாமை, சாப்பிடும்போதான வாயசைவு அளவுகள், சிரிக்கும் முறைகள், கைகளை பின்னால் கட்டி அநாயாசமாக காலாற நடக்க முடியாமை, ஏவறை விடல், வீதியில் துப்புதல், ஒரு சிறு ரிக்கற் துண்டைத்தன்னும் குப்பையாக வீசுதல், சரம் (லுங்கி) அணிதல் என பல பழக்கவழக்கங்களை நாகரிகம் அற்றது என்றவாறான சங்கடத்துடன் மாற்றி ஆகவேண்டியிருக்கிறது. ஒரு தகவமைதலை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பண்பாட்டு ரீதியாக நாம் கடைப்பிடிக்கும் -நல்லதும் கூடாததுமான- பழக்கவழக்கங்கள் கேள்விக்கு உட்படுகிறது. இதில் நாம் இரு பண்பாடுகளிலும் நல்லவை என தீர்மானிப்பவைகளை எடுத்துக்கொண்டு எமக்கான ஒரு பண்பாட்டை உருவாக்கி பேணவும் முடியும். முடிகிறது.
எனவே ஆதிக்கப் பண்பாடுகளை எதிர்த்து நிற்றல் என்பது எமது பண்பாட்டு அம்சங்களை அச்சொட்டாக கடைப்பிடிப்பதா அல்லது எமது பண்பாட்டு அம்சங்களில் மாற்றமுற வேண்டியதை ஏற்றுக்கொண்டு செழுமையாக்குவதும் அடங்குமா என பார்க்க வேண்டியிருக்கிறது. தப்பிப்பிழைத்து நிலைத்துநிற்கும் மொழிகளின் வளர்ச்சி என்பது இந்த அணுகுமுறையினூடே நிகழ்ந்தவை. இந்த இடத்தில் ஹபாயாவையும் அது நவீனவடிவில் வடிவமைக்கப்பட்டு மாற்றமடைந்து வந்துகொண்டிருப்பதையும் புரிந்துகொள்ள முடியும். இதை பண்பாட்டின் வளர்ச்சியாக பார்க்கலாம்.
ஆதிக்கநிலைகளை எதிர்த்து நிற்கும் பண்பாடுகளுக்குள் அல்லது அமைப்புகளுக்குள் நிலவும் பலவீனங்கள் தவறுகள் என்பவற்றை விமர்சித்தல் மாற்றியமைத்தல் என்பதெல்லாம் எதிரியை பலப்படுத்திவிடும் என கருதி மூடிமறைக்க வேண்டியதில்லை. அதற்கான உட்போராட்டங்கள் அவற்றுள் நிகழவேண்டும். அதுவே வளர்ச்சிக்கு உதவும். இல்லையேல் விளைவுகள் ஒருபோதும் நேரம்சமாக இருக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை. எமது ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புகளிலிருந்து நாம் பெற்றுக்கொண்ட முக்கியமான பாடம் இது.
இந்தியாவின் இந்துத்துவ மேலாதிக்க வெளிப்பாடுகளை எதிர்த்து, இந்தியாவையே தாய்நாடாகக் கொண்ட முஸ்லிம் மக்கள் தமது மதப் பண்பாட்டை தக்கவைக்கப் போராடுவதை புரிந்துகொள்ள முடியும். அது பண்பாட்டுக்குள் நிகழவேண்டிய அகவிமர்சனங்களையும், சாத்தியமாகவேண்டிய மாற்றங்களையும் மறுத்தல் என்றாகாது. எல்லா தரப்பு இன மத சக்திகளுக்கும் இது பொருந்தும்.
சகமனிதர்களையும் சக பண்பாடுகளையும் சக மதங்களையும் அதன் மாந்தர்களையும் இயல்பாக எடுத்துக்கொள்கிற எமது மனநிலையை வளமாக்கி -மேற்குலகின் ஆதிக்க மதிப்பீடுகளினூடோ, அடிப்படைவாதங்களினூடோ வடித்தெடுக்காமல்- பாதுகாக்க வேண்டும். பொதுமக்கள் என்பதையும் அடிப்படைவாதிகள் என்பதையும் வேறுபடுத்தி எந்த மத இன அடிப்படைவாதிகளையும் -உள்ளும் புறமும்- நிராகரித்து, பண்பாட்டின் அடையாளங்களை முன்நிறுத்தும் பொதுமக்களோடு நிற்பது அவசியமானது!
- 12022022
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/7156930404377992