ஒவ்வொரு சம்பவங்களும் புதிதாக உருவாகிறது என்பதை விடவும், சமூகவலைத்தளங்களினாலும் இன்றைய தொழில்நுட்ப வசதியினாலும் அவை உடனுக்குடன் வெளிக்கொணரப்படுகிறது என்பதே பொருத்தமானது. எதிர்ப்புக்குரலுக்கு தளமாகவும் அநியாயங்களை காட்சி ரூபத்தில் அம்பலப்படுத்துவதாகவும் இன்றைய சமூக ஊடகங்கள் கிடைத்திருக்கின்றன என்ற அம்சங்கள் முக்கியமானது.
கலாச்சாரத் தளைகளை மீறியும், சமூகத்துக்கு கட்டுப்பட்டு மவுனமாக இருப்பதை மீறியும் பேச முன்வருகிற துணிவை -காலம் வெளியோடு- மாறிவரும் சிந்தனை முறை கொடுக்கிறது. இச் சிந்தனைமுறையானது, பேசப்படாமல் அமுக்கப்பட்டவற்றை பேசுபொருளாக அறிவிக்கவும் அவற்றுக்கான உரிமைக் குரல்களை -குறைந்தபட்சம் தயக்கத்தோடாவது- புரிந்துகொள்ள, ஏற்றுக்கொள்ள அல்லது அதற்காகப் போராட களம் அமைத்திருக்கிறது. அது ஒருபுறம் வெளிப்படைத்தன்மையை அதிகமாக்கவும், பொதுப்புத்தியை படிப்படியாக மேற்தளங்களுக்கு எடுத்துச் செல்லவும் வழிகோலுகிறது.
ஆனால் இந்த சமூக வலைத்தளங்களின் இன்னொரு பக்கத்தில் ஒரே கோரசில் பாடுகிற ஒரு போக்கும் இருக்கிறது. பொறுப்புணர்வுடனும் ஆய்வுத்தன்மையுடனும் கருத்துகளை முன்வைக்கும் ஆற்றல் உள்ளவர்களைக்கூட- இந்த அலை அடித்துச் சென்றுவிடுகிறதை நாம் பார்க்கிறோம். பிம்பங்களை ஊதிப் பெருத்து கட்டமைக்கிறோம். உள்ளார்ந்த போராட்டக் குணாம்சத்தை இதன்மூலம் காயடிக்கிறோம். இதையே ஊடக அரசியல் எதிர்பார்க்கிறது. அதை நாம் நிறைவேற்ற துணைபோய்விடுகிறோம்.
மற்றது, எதற்கெடுத்தாலும் மறுத்தான் விடுவதற்கு எந்த அறிவும் தேவையில்லை. வெறும் தர்க்கமோ குதர்க்கமோ போதுமானது. இருமைகளை கட்டமைத்து இரு முனைகளிலும் நின்று கயிறிழுக்க அணிகளை பிரித்துவிடும் அவலம் சமூகப் பிரச்சினைகளை இன்னும் சிக்கலாக்கிவிடுகிறது.
இப்போ கர்நாடகா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில் மாணவி (முஸ்கான்) இன் துணிச்சலையும் போராட்டக் குணத்தையும் மதித்தே ஆகவேண்டும். அதை ஆதரித்து குரல் எழுப்பவும் வேண்டும்.
இரு மதங்களையும் நம்புவர்களை கயிறிழுத்தல் அணியாக பிரிக்கும் வேலையை செய்வதில்தான் தவறு நேர்கிறது. இந்துத்துவ அடிப்படைவாதிகளையும் இந்து மதத்தை நம்புகிறவர்களையும் வேறுபிரித்தாக வேண்டும். “தனியாக நின்றாள், யாரும் உதவிக்கு வரவில்லை, சிங்கம் சிங்கிளாத்தான் வரும்” என்றெல்லாம் எழுதுகிறார்கள். ஆனால் அவள் சொல்கிறாள் “அங்கு நின்றவர்களில் சுமாராக ஒரு பத்து வீதமானவர்கள்தான் மாணவர்கள். மற்றையோர் வெளியாட்கள்” என்கிறாள். தனக்கு வளாக தலைவர் உட்பட விரிவுரையாளர்கள் ஆதரவாக இருந்து தன்னை உள்ளே கூட்டிச் சென்றார்கள் என்கிறாள். தனது மாணவ நண்பர்கள் எல்லாரும் தனக்கு ஆதரவாக இருந்தார்கள் என்கிறார்.
அவர்கள் ஜெய் சிறீராம் என கத்தியதால் மறுத்தானாக தனக்கான அடையாளமாக அல்லாகு அக்பர் என தான் குரலுயர்த்தியதாகச் சொல்கிறார். வழமையாக தான் வளாகத்துக்கு ஹிஜாப் அணிந்து செல்வதாக சொல்கிறாள். பெரும்பாலும் வகுப்பில் தானே அதை கழற்றிவிட்டு இருப்பதாகவும் சொல்கிறாள். அவள் இந்த கயிறிழுப்பு அணியில் இல்லை. தெளிவாகவே என்.டி.ரிவி க்கு தனது பேட்டியை வழங்கியிருக்கிறாள்.
“மதச்சார்பற்ற ஓர் அரசு என்றால் எனது மதத்தை பண்பாட்டை கடைப்பிடிக்க எனக்கு உரிமை இருக்கிறது என்பதுதானே அர்த்தம்” என அரசை பார்த்து மிகச் சரியாகவே குரலெழுப்புகிறாள்.
இந்த அம்சங்களையெல்லாம் மறைத்துவிட்டு பொதுச்சமூகத்தை இரு அணிகளாகப் பிரிக்கும் அவசரப் புத்தி ஆபத்தானது. இருக்கிற நேரம்சங்களை நாம் காயடித்தால் எந்த முன்னேற்றத்தையும் நோக்கி போக முடியாது. அவற்றை கண்டடைந்து வளர்த்துவிடுவதில்தானே மாற்றங்களை நிகழும். மந்தையிசத்தில் இதை நாம் எந்தளவுக்கு கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்பது திருப்தியான பதிலைத் தருவதாயில்லை. உணர்ச்சி அரசியலும் உணர்ச்சிவாதங்களும் நிரம்பிய ஒரு சமூகம் நாம் என்பதை நிரூபித்தபடியே இருக்கிறோம்.
ஒடுக்கப்படும் சக்திகளோ ஒடுக்கும் சக்திகளோ எவராகிலும் தத்தமது பண்பாட்டின் வடிவங்களையும் கருத்தியல்களையும் பெண்களில் ஏற்றிய ஆணாதிக்கத்தின் வரலாறு கொண்டவர்கள். ஆடை பெண்களின் சுயதேர்வு என்பது எந்தளவுக்கு சரியானது என்பது கேள்விக்குரியது. ஆடை குறித்த தேர்வு அவர்களது அல்ல. ஏற்றுக்கொண்டு வாழப்பழகிவிட்ட ஆடையின் வகைத் தேர்வுகளையே அவர்கள் செய்கிறார்கள். ஆனாலும் எமக்குமுன் வைக்கப்பட்டுள்ள அல்லது ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்ட பண்பாட்டு வடிவங்களை நாம் முன்னிறுத்துவது பண்பாட்டு உரிமையை தக்கவைப்பதோடு சம்பந்தப்பட்டது என்றளவில் முஸ்கானின் குரலுக்கு ஆதரவாக நிற்கவேண்டியிருக்கிறது.
பாஜக வினதோ ஆர் எஸ் எஸ் இனதோ இந்து அடிப்படைவாதத்துக்கும் அதன் நிகழ்ச்சிநிரலுக்கும் எதிராக நிற்பது என்பது மிகப் பெரும் சவாலாக (இந்தியாவில்) உள்ளது. அதன் இயலாமை கர்நாடக பல்கலைக்கழக சம்பவத்தை இந்து அடிப்படைவாதத்தினதும் அதற்கு எதிரான குரல்களினதும் வெளிப்பாடுகளில் (காணொளிக்குள் அகப்பட்ட) ஒன்றுதான் என மதிப்பிடாமல், அடிப்படைவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் குறியீடாக மாணவி முஸ்கானை மிதப்பாக கட்டமைப்பதான அவலம்தான் சமூகவலைத்தளத்தை நிரப்பி உள்ளது. அமெரிக்காவும் மேற்குலகும் மலாலாவை புயலாகக் கட்டமைத்து தென்றலாக ஓயவைத்து காட்சிப்படுத்தியது ஞாபகத்துக்கு வருகிறது.