கல்லூரியொன்றில் நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது கணித ஆசிரியர் கேத்திரகணித தேற்றம் ஒன்றை நிறுவிக்காட்ட வகுப்பை ஏவினார். நான் சரியாகத்தான் நிறுவியிருந்தேன். ஆனால் வகுப்பின் முன்னால் நிற்கவைத்து பிரம்பால் தாக்கப்பட்டேன். “கேத்திரகணித புத்தகத்தில் ABC ஒரு முக்கோணம் என சொல்லி இத் தேற்றம் நிறுவப்பட்டிருக்கிறது. நீ XYZ ஒரு முக்கோணம் என போட்டு நிறுவியிருக்கிறாய். நீ எங்கையோ ரியூசனுக்குப் போகிறாய்” என்று அடித்தார். சிறிமாகால பஞ்சத்தில் இரண்டு வேளை கொஞ்சமாகச் சாப்பிடுவதே போராட்டமாயிருந்தபோது எங்கை ரியூசனுக்குப் போவதாம். இல்லை என்று மட்டும் சொன்னேன். அடியை வாங்கினேன். மாற்றி யோசிக்க நினைத்துப் பார்க்கக் கூடாதா என்ற உள்மனக் கேள்வியுடன் போய் அமர்ந்தேன்.
உயர்தர வகுப்பு படித்தபோது இரசாயனவியல் பாடத்துக்கு ஒரு வாத்தியார் இருந்தார். அவரது வகுப்பில் நாம் எமது சேர்ட் இல் கழுத்துவரை உள்ள எல்லா தெறிகளையும் பூட்டியிருக்க வேண்டும். அதுதான் ஒழுங்கு. அதுதான் அவருக்கு மரியாதை தருகிற செயல் என்றார். வெக்கையில் உள்ளே வியர்வை பாதைபோட்டு ஓடி காற்சட்டைக்குள் கிளைவிட்டுப் பரவும். “என்னிடம் வவுனியாவில் முன்பு படித்தவர்கள் இப்போதும் பஸ் இல் என்னை கண்டால் தெறியை கழுத்துவரை பூட்டிக்கொள்வார்கள்” என்று வேறு சொன்னார். அவர் வகுப்புக்கு நுழையும்போது இந்த தெறிபூட்டல் படலம் வகுப்பில் பரவி அமைதியடைந்திருக்கும். ஒருநாள் நான் கவனக்குறைவால் கழுத்து தெறியை பூட்ட மறந்திருந்தேன். என்னை எழுப்பினார். “சேர்ட் தைச்சவன் என்னத்துக்கு கழுத்துவரை அதை தைச்சிருக்கிறான் என்றாவது யோசி” என்றார். அவர் முழுக்கை சேர்ட் அணிந்திருப்பார். கைமணிக்கட்டளவில் மெல்ல கள்ள மடிப்பொன்றை போட்டிருப்பார். தெறி பூட்டப்பட்டிருக்காது. அப்ப ஏன் சேர் புல்கை சேர்ட்டிலை கடைசியிலை தெறி வைச்சிருக்கிறாங்கள் என்று கேட்டேன். வகுப்புக்கு வெளியிலை நிறுத்திவைக்கப்பட்டேன்.
எழுபதுகளின் பிற்பகுதி என்பதால் தமிழர்விடுதலைக் கூட்டணியின் தமிழீழமும் வண்ணை ஆனந்தனின் தேர்தல் மேடையில் “மரம் பழுத்தால் வவ்வால்கள் தேடி வரும்” என தவறாமல் சொல்லித்தந்த அரசியலுமென நரம்புகளினூடாக இரத்தத்தையும் மேவிப் பாய்ந்த இளமை அப்போது. பின்வாங்கில்காரர் நாம். எங்கடை அரசியலை ஒருநாள் இரசாயன வாத்தியார் நடைபாதையில் வரும்போதே காதை ஒற்றனாக அனுப்பி கேட்டுவிட்டார். எங்களை எழுப்பிவிட்டார். “என்ன… அரசியலோ” என்றவர், “அதெல்லாம் முதலிலை அரசியல்வாதிகள் பேசவேணும். பிறகு பெற்றோர்கள் பேசவேணும். பிறகு நாம் ஆசிரியர்கள் பேசவேணும். அதுக்குப்பிறகுதான் நீங்கள் (மாணவர்) பேச வேணும்” என்று அவிழ்த்துவிட்டார். பின்னரான காலத்தில் இயக்கங்கள் திடீரென வகுப்புகளுக்கு வந்து ‘அரயியல்’ வகுப்பு எடுத்து போயினர்.
உயர்தர வகுப்பில் ரியுசனுக்கு போனேன். ரியூசன் பணத்தில் எந்த அக்கறையுமற்ற அவர் ஒரு பொறியிலாளர். அவர் வேலைசெய்த இடத்தில் தமிழன் என்பதால் முரண்பாடு எழுந்து வேலையிலிருந்து நீங்கி வந்துவிட்டார். அவர் ஒரு இடதுசாரிய போக்கு உள்ளவர். அவரிடம் நாம் பத்தொன்பது பேர் படித்தோம். புலிகளின் கிட்டுவும் ஒரு சக மாணவர். இந்த பத்தொன்பது பேரில் பதினெட்டுப் பேர் வௌ;வேறு இயக்கங்களில் பிற்காலத்தில் இணைந்தோம். ஒருவர் மட்டும் இல்லை. அவர் ரியூசன் வாத்தியாரின் தம்பி.
இவ்வாறாக இளம்பராயத்தை இந்த நிலைமைகள் வழிநடத்தின. அறிவு வழிநடத்தவில்லை. அரசியல் சூழல் வேகமாக மாறத் தொடங்கியிருந்தது. கல்வி பரீட்சையில் சித்தியடையவும் அதுவழியான டொக்ரர் எஞ்சினியர் பயணத்துக்கும் பாதை போட்டது. கல்லூரிகள் அந்த பாதையில் ஓடி வெற்றிபெற்றவர்களின் பட்டியலை அறிவித்தபடி இருந்தனர். அறிவு அங்கே அநாதையாய் பிச்சைப் பாத்திரத்துடன் பசியோடிருந்தது!
- 29012022
- fb link :https://www.facebook.com/ravindran.pa/posts/7079529975451369
பின்னரான காலத்தில் இயக்கங்கள் திடீரென வகுப்புகளுக்கு வந்து ‘அரயியல்’ வகுப்பு எடுத்து போயினர்.
அறிவு அங்கே அநாதையாய் பிச்சைப் பாத்திரத்துடன் பசியோடிருந்தது!