சொற்கள் நேரடி அர்த்தத்தை மட்டும் தருவனவல்ல. அது (வேண்டுமென்றே) சொல்லப்படாத அல்லது தவிர்த்துவிடுகிற அர்த்தங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். சிலவேளைகளில் இந்த அர்த்தம் நேரடி அர்த்தத்தைக்கூட மறுதலிப்பதாக இருக்கவும் செய்யும்.
மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லாடல் எதிர்மறையில் “அவர்கள் உடல் அல்லது உள ரீதியில் இயலாமையுடைவர்கள். அவர்களிடம் மிகுதியான மனித இயல்புகள் திறமைகள் கனவுகள் இருக்கின்றன என்ற பொருளைக்கூடச் சுட்டவில்லை.
அது சக மனிதர்கள் அவர்களை தாழ்த்திவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் அவர்களிடம் மாற்று (!) திறன்கள் உண்டு என சொல்ல முன்வருதலாகும். அதாவது ஓர் எதிர் முன்மொழிதலை வெளிப்படுத்தலாகும்.
வெறும் சொல்லாடலால் அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தைப் பெற்றுவிட முடியாது. அது சமூகம் சக மனிதர்களை மதிப்பது குறித்தானது. உடல் அங்கங்களை அதன் மாறுபாடுகளை பழித்துரைத்து பட்டப்பெயர் வைக்கிற ஒரு சமூக மனநிலையில் சக மனிதர்கள் மீதான மதிப்பு என்பது ஆத்மார்த்தமானதல்ல.(கவுண்டமணி சந்தானம் போன்றவர்களின் நகைச்சுவையை இரசிக்கிற மனநிலை இத் தளத்தில்தான் களைகட்டுகிறது.)
இதன் வெளிப்பாடாகவேதான் “அவர்கள் மாற்று திறனுள்ளவர்கள் அவர்களை குறித்து தாழ்வாக நினைத்துவிடாதீர்கள்” என்ற செய்தியை மறைமுகமாக சொல்லக்கூடிய இச் சொல்லை தேர்வுசெய்து பாவிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
அவர்கள் தமது அங்கவீனத்தை கடந்துசென்று வாழ்தலுக்கான போராட்டத்தில் தம்மை தமது உடலை மறுஇசைவாக்கம் செய்கின்றனர் அல்லது அதற்காக வீரியமாகப் போராடுகின்றனர். இதற்கு சமூக மனநிலை, அத்தோடு அரச கவனிப்புகள் முன்னுரிமைகள் எல்லாம் துணைசெய்பவனவாக அமைய வேண்டும்.
மேற்குலகில் அவர்களுக்கான உரிமைகள் மட்டுமல்ல… வாழ்விடங்கள், போக்குவரத்து, கடைகள்.. என எல்லா வாழ்வாதார நிலைகளிலும் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வசதிகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. கற்கை வசதிகள், அவர்களுக்கான தொழிற் கல்விகள், வேலைவாய்ப்புகள், உடல்மொழி தொடர்பாடல், பொதுப் போக்குவரத்தோ அல்லது பிரத்தியேக வாகன பாவிப்போ அவர்களை கவனமெடுத்து உருவாக்கல், சிக்னல் லைற்றை பார்வையிழந்தவர்கள் தொட்டுணருகிறதுடன் காதால் கேட்டு அறிதலுக்கான விதத்திலும் வடிவமைத்தல், நடைபாதை அமைப்புகள், பொது இடங்களிலெல்லாம் வாகன தரிப்பிடங்கள் சிலதை அவர்களுக்கானதாக மட்டும் பேணுதல், கட்டப்படுகிற வீடுகள் (மாடி வீடாக இருந்தாலும்கூட) பெரும்பாலும் சக்கர நாற்காலியுடன் செல்லக்கூடியதாக அமைத்தல், ஒலிம்பிக் போட்டி வரையான விளையாட்டுகளில் ஈடுபடுதற்கான வசதிகள் (அதற்கான உபகரணங்கள், விளையாட்டு இடங்கள்) .. என அவர்கள் சக மனிதர்களாகவே கணிக்கப்பட்ட வாழ்வியலுக்குள் இயல்பாக இயங்குதற்கான தொடர் முயற்சிகளை மாற்றங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறம் அவர்களுக்கான வாழ்வாதாரமாக அமைகிற அதேநேரம், மிகுந்த தன்னம்பிக்கையையும் அவர்களுக்கு அளிக்கிறது. முக்கியமாக சமூகம் அதற்கு இசைவான மனநிலையை வெளிப்படுத்துகிறது.
உடல் பருமனாக அல்லது ஒல்லியாக இருப்பதை, உயரமாக அல்லது உயரம் குறைந்து இருப்பதை பழித்தல், பட்டப் பெயர் வைத்தல் என இயங்குகிற ஒரு சமூக மனநிலை கொண்டவர்கள் நாம். “ஆடான ஆடெல்லாம் தவிடு புண்ணாக்குக்கு அழ, சொத்தி ஆடு ‘எதுக்கோ’ அழுததாம்” என நக்கலடிக்கிற ஒரு வழக்கு இருக்கிறது. இங்கு எதுக்கோ என்பது பாலியல் தேவையை குறிப்பது. அதை உடலுறவை சுட்டும் வசைச்சொல்லால் நேரடியாகவும் சுட்டப்படுவதுண்டு. ஆக ‘மாற்றுத்திறனாளி’களின் பாலியல் தேவையை அங்கீகரிக்காத மனநிலை என்பதை விடவும், அதை கிண்டல் செய்கிற முட்டாள்தனம்தான் இதற்குள்ளால் வெளிப்படுகிறது.
இவ்வாறான சமூக மனநிலை கேள்விகேட்கப்பட வேண்டியவை. மாற்றத்துக்கு உள்ளாக வேண்டியவை. இந்த மனநிலைக்கு மறுத்தானாகவே மாற்றுத் திறனாளி என்ற சொல்லாடல் உருவாகியதோ என எண்ணத் தோன்றுகிறது.
மாற்றுத்திறனாளி என்ற செயற்கைச் சொல்லாடலை விட “அங்கவீனர்” என்ற நேரடிச் சொல் சட்ட ரீதியிலும் உபயோகமானது. அவர்கள் குறித்து அரசு மட்டுமல்ல, சமூகமும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். மாற்றவேண்டியிருப்பது சொல்லாடல் என்பதை விடவும் அவர்கள் குறித்தான சமூக மனநிலைதான்!
(2018 இதே நாளில் எழுதிய இந்தப் பதிவில் மேலதிகமாக சிலவற்றை சேர்த்திருக்கிறேன்)
- 21012022
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/7015768188494215