என்ன நடக்கிறது, இந்த உலகில்?
பல விடயங்கள் தெரியாது என
நினைத்திருந்தேன் – இப்போ,
எதுவுமே தெரியாது என உணர்கிறேன்.
வெளவாலை கூண்டில் நிறுத்தினார்கள்
வூகானை பிசாசுகளின் தீவாக அறிவித்தார்கள்
உலகின் வைத்தியசாலைகளில் மரணங்களை
திரையில் காட்சியாக்கினார்கள்.
என்ன நடக்கிறது, இந்த உலகில்?
எனது மூளையின் வாசலில் அவர்கள்
குந்தியிருக்கிறார்கள்.
காலை எழுந்ததிலிருந்து நித்திரைக்கு போகும்வரை
அவர்கள் முகத்திலேயே விழிக்கிறேன்.
“பாதுகாப்பாய்ப் போய்வா” என
புதிதாக யாரோ சொல்கிறார்கள்.
வேலைக்குத்தானே போகிறேன்,
எதிரிப்படை சூழ்ந்த
போர்க்களத்துக்கா போகிறேன் நான்.
முகக்கவசத்தை அணிகிறேன்,
அச்சத்தை எடுத்துக்கொண்டு போகிறேன்.
என்ன நடக்கிறது, இந்த உலகில்?
நாளுக்கு தொற்று இத்தனை பேர் என
வானொலி அறிவிக்கிறது,
மரணங்களையும் பட்டியலிடுகிறது.
வாழ்வு ஒரு போதையில் நடப்பவனின் கரத்தில்
போய் குந்திவிடுகிறது.
கண் காது மூளை என எனது எல்லா அங்கங்களையும்
வானொளிகள் வானொலிகள் பத்திரிகைகள்
எல்லாமும் கடத்திப்போய் வைத்திருக்கின்றன.
என்ன நடக்கிறது, இந்த உலகில்?
என்னை அவர்கள் ஊசியின் முனையில் நிறுத்தி
கடவுள் உள்ளே குந்தியிருக்கிறார் என
அறிவிக்கிறார்கள்.
ஒரு கதவு திறக்க, பின் இரண்டாவதில்
அவரை தரிசிக்கலாம் என்றார்கள், இப்போ
மூன்றாவதில்தானாம்!
கதவுகளை திறந்துகொண்டே இருக்கிறேன்.
நான்காவது ஐந்தாவது கதவுகளையும் காண நேரலாம்.
என்ன நடக்கிறது இந்த உலகில்?
கடவுளின் சிற்பிகள் அவர்கள்,
வார்த்தைகளை செதுக்குகிறார்கள் – தங்கள்
உண்டியலையும்தான்!
அவர்கள் செதுக்கிக் காட்டுகிற கடவுளை
நான் காணலாம், காணாதும் விடலாம் -ஆனால்
பொய்களில் தொங்கவிடப்பட்டிருக்கிற வாழ்வு
அச்சத்தோடு அலைகிறது என்பதை மட்டும் காண்கிறேன்.
பொய்களின் பேரரசர்கள் அவர்கள் -தங்கள்
அரண்மனைகளை அகலித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
எனது குடிசை குறுகிக்கொண்டே போகிறது,
மகிழ்ச்சி விலகிக்கொண்டே இருக்கிறது.
என்ன நடக்கிறது இந்த உலகில்?
பேரரசர்களே!
உங்கள் வார்த்தைகளையும் கணக்கிடல்களையும்
நம்பச் சொல்கிறீர்கள் – எனது அச்சம் ஒன்றையே
ஆதாரமாக்குகிறீர்கள், உங்கள் கடந்த காலத்தையல்ல!
எனது காதையும் கண்ணையும் மூளையையும்
என்னிடம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்.
கொரோனா துரத்துகிறது என்பது
எனக்கும் தெரியும்.
அதை நான் எதிர்கொள்வேன்
எனக்கு உங்கள் பிரமையும் தேவையில்லை,
அச்சமும் தேவையில்லை.
நீங்கள் பொய்யர்கள், பாசாங்குக்காரர்!
எல்லாவற்றுக்கும் மேலாக,
நீங்கள் கொலைகாரர்கள், கொரோனாவை விட!
- ரவி (05012022)