எந்த நாடாகிலும் ஆட்சிக்கான தலைவர்களை தீர்மானிப்பதில் எந்தப் பிசாசு நல்ல பிசாசு என மக்கள் முடிவுக்கு வந்து வாக்களிப்பதை இன்றைய ‘ஜனநாயகம்’ அமைத்துத் தந்திருக்கிறது. அது சாதாரண தேர்தல் தொகுதியிலும்கூட நல்ல பிசாசையே தீர்மானிக்குமளவுக்கு மக்களை இக்கட்டான நிலைமைக்குள் தள்ளியிருக்கிறது. ஜனநாயகத்தின் பெறுமதி அதுவாகியிருக்கிறது.
வல்லரசுகளுக்கு வெளியே இருக்கும் எல்லா நாடுகளும் அநேகமாக ஏதோவொரு வல்லரசை சார்ந்து அல்லது அடிபணிந்து இயங்குவது என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஊழலும் கட்டற்ற அதிகாரமும் வல்லரசுகளுக்கு எல்லா வாசல்களையும் இந்த நாடுகளில் தயக்கமின்றி திறந்துவிடுகின்றன. தேசம் குறித்து மக்கள் குறித்து சிந்திக்கிற அரசியல்வாதிகளாக இல்லாமல் அரசியல் தரகர்களாகவே இன்றைய அரசுத் தலைவர்கள் -ஏன் கட்சித் தலைவர்கர்கள்கூட- உருமாறிக்கொண்டுவிட்டார்கள்.
இன்று ஆசியப் பிராந்தியத்தில் வல்லரசாகிக்கொண்டிருக்கும் சீனாவுக்கும், அதுவாகக் கனவுகாணும் இந்தியாவுக்கும் இடையில் இலங்கை ஒரு கண்ணீர்த்துளி போல தொங்கிக்கொண்டிருக்கிறது. சீனா இலங்கையில் பரவிக்கொண்டிருக்கிறது. தொப்பூழ்க் கொடி உறவென்றும் தாய்த் தமிழகம் என்றும் உணர்ச்சிவாத அரசியல் பேசுபவர்கள் இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் காரணத்தை வைத்து இந்தியாவுடன் அடையாளம் காண்கிறார்கள். அதை அவர்களின் ஆதங்கமாக புரிந்துகொள்ளலாம்.
பெங்களுரிலிருந்து வந்த ஒரு வேலைத்தள நண்பர் ஒரு அங்கலாய்ப்பை சொன்னார். சென்னையில் படித்ததால் நன்றாக தமிழ் பேசினார். அவர் சொன்னார் இந்தியா விட்ட பிழை என்னவெனில் தமிழீழத்தை பிடித்து இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்காமல் விட்டதுதான் என்றார். எனது பதிலோ இந்தியாவுடன் இருப்பதைவிட நாம் இலங்கைக்குள் அடிபிடிப்பட்டாவது வாழ்ந்து தொலைச்சிடலாம் என்றேன்.
ஒரு பகுதி தமிழ் மக்கள் இன்று இந்தியாவிடம் அகப்பட்டு வாழ்வதைவிட சீனாவிடம் அகப்பட்டு வாழ்ந்து தொலைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். சீனா பொருளாதார ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியா இந்த இடத்தில் இருந்தால் பொருளாதார ஆதிக்கம் மட்டுமல்ல, (சாதிய, இந்துத்துவ) பண்பாட்டு ஆதிக்கத்தை இலங்கைத் தமிழ் மக்களிடம் விதைத்து அதை பாவித்து தனது நலனை இலங்கைக்குள் தொடர்ச்சியாகப் பேண முயற்சிக்கும் என்கிறார்கள். இந்த அச்சத்தை இந்தியாவால் களைய முடியாது. மதக் கலவரங்களும் சாதிக் கலவரங்களும் வெறிகொண்டு ஆடாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
ஆரம்பத்தில் இயக்கங்களைக் கையாண்டதிலிருந்து, அமைதிப்படைகால அகோரங்கள் ஊடாக இறுதிப் போர்வரை இந்தியா கையாண்ட அரசியல் சூழ்ச்சிகரமானதாகவே இருந்தது. அது எழுதிவைத்த வரலாறு இந்தியாவை நல்ல பிசாசாக நம்பிக்கை வைக்க எந்த முன் உதாரணத்தையும் தரவில்லை. இந்த அரசியல் பிரச்சினை மிக மிக ஆழமானது என்றபோதும் இந்த அச்சத்தைத் தாண்டி அதைப் பேசவும் முடியாது. சீனா தன்னை மோசமான பிசாசு என்பதை நிறுவினாலொழிய இந்தியாவை நல்ல பிசாசாக அடையாளம் காண்பது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
- 20122021
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/6792077884196581