எனது கல்வி தகைமையைக் கேட்கிறாய்,
கொடுப்புக்குள் சிரிக்கிறாய்.
என்னருகில் நின்று உயரத்தைப் பார்க்கிறாய்,
நீ உயரம் என்கிறாய்
மயிரற்றுப்போன எனது தலையைப் பார்த்து
உனது முடியை கோதிவிடுகிறாய்.
நான் நீயாக முடியாது, நீ நானாக முடியாது என்பது
உனக்கு தெரிகிறபோதும்,
இதைச் செய்கிறாய்.
அளவுகோலில் தொங்குகிறது உனது அறிவு.
ஆனால் நானோ வெவ்வேறு நிலைகளில்,
பல ‘நான்’களாக ஆகிவிடுவதாய் உணர்கிறேன்.
நீயும் உன்னை அப்படி உணர்ந்திருத்தல் கூடும்,
இல்லாமலும் இருக்கலாம்.
உனது அளவுகோலை செய்து தரும் கொல்லைப்புறம் – உனது
பலவீனங்கள்தான் என நம்புகிறேன், உன்னை நீ
நிறுவியாக வேண்டும் எனும் பதட்டம் எனவும் நம்புகிறேன்.
எனது எந்த நானை நீ கண்காணிக்கிறாய் என அறியேன்.
பலத்தாலும் பலவீனங்களாலும் ஆனவர்கள் எனது ‘நான்’கள்.
முற்றத்து வெளிச்சத்தில் பலவீனங்களை எதிர்கொண்டபடியும்
கடந்துசெல்லவுமாய்
வாழ்வை பழக்கப்படுத்தியிருக்கிற ‘நான்’கள்
கொல்லைப்புறம் வருவதாயில்லை!
- 19122021
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/6790899260981110