வெண்முகில்களை சீவி
துருவலாய்க் கொட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
இலைகள் சருகுகளாய் உதிர்ந்து கொட்டியிருந்தபோது
மரங்கள் தமது அர்த்தத்தை இழந்திருந்தன – அப்போ
எனது கமராவை நான் உறைக்குள் புதைத்திருந்தேன்.
இப்போ உறைக்குள்ளிருந்து உருவி எடுத்தேன்.
முகில் துருவலை தளிர்த்த மரக் கிளைகள்
இப்போ சடைத்திருந்தன.
புதிதாய் ஓர் அர்த்தத்தை மரங்கள்
சூடியிருந்த அந்தப் பொழுதில், எனது கமரா
புல்வெளியில் தாவியோடிய ஓர் ஆட்டுக் குட்டிபோலானது.
காட்சிகளை தின்று கொழுத்திருந்தது.
எனது நினைவோ
துருவிக்கொண்டிருந்தவளை தேடி மெலிந்திருந்தது.
அவள் தொலைதூரத்தில் இருந்தாள் என
எனது நினைவில் பிரதியீடு செய்தேன் – ஏனெனில்
எனது கற்பனையை பிரபஞ்சமாக்க விரும்பினேன்.
பூமி எனது பாதத்தை தாங்கியிருந்தது.
பனித்திரள் வனத்தில் நான் தனியாக நின்றேன்.
- 14122021
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/6751723678232002