நவம்பர் 27 மாவீரர் கொண்டாட்ட நாள்!. மனிதர்களின் உயிரை மதித்தல் என்பது மிகப் பெரிய அறம். தன்னலத்தைத் தாண்டி பொதுநலனோடு சிந்தித்தல் என்பது மாற்றங்களுக்கான வித்து. அதை செயற்படுத்த முனைபவர்கள், அதற்காக தமது நலன்களை மட்டுமல்ல தமது உயிரைக்கூட அர்ப்பணிக்க முன்வருபவர்களில் பெரும் பகுதியினர் இயக்கங்களில் இணைந்தார்கள். அவர்களை நாம் கொண்டாடுவது தகும்.
அதேநேரம் அவர்களுக்கு ஆதாரமானவர்களாக இருந்தது மக்கள். போராளிகளை இலங்கை அரச வன்முறை இயந்திரங்களிடமிருந்து வேண்டியபோது பாதுகாப்புக் கொடுத்துவிட்டவர்கள் அவர்கள். இயக்கத்துக்கு வெளியே பல்வேறு வழிகளில் தமது பங்களிப்புகள் இந்த மக்கள் திரளுக்குள்ளிருந்தே கிடைத்தன. அவர்களின்றி இயக்கம் உயிர்வாழ்ந்திருக்கவே முடியாது. ஆனால் அவர்களே கடைசிக் காலத்தில் முள்ளிவாய்க்காலில் மனிதக் கேடயங்களாக மாறவேண்டிய அவலமும் நிகழ்ந்தது. அந்த நிலை ஏற்பட்டது ஒரு விபத்தல்ல. தோல்வி. தவறுகள் அழைத்துவந்து விட்ட இடம் அது.
எனவே நினைவுகூர்தல் என்பது இந்த விடுதலைப் போராட்டத்தில் பலியாகிப்போன எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். அது நினைவு கூர்தல் (Remembering Day) தானேயொழிய வருடாவருடம் போராளிகளின் குடும்பத்தார் ஒரு மரணச் சடங்கை கொண்டாடவைப்பதுபோல் இருக்க முடியாது. அது காலம் முழுவதும் போராளிக் குடும்பங்களை துயரத்துள் ஆழ்த்திவைப்பதாகவும், அவர்களை அதைக் கடந்து செல்ல முடியாதவர்களாகவும் ஆக்கிவிடுகிறது. நகர்ந்துகொண்டிருக்கும் நிகழ்கால வெளியை கைப்பற்றி முன்னே பயணிப்பதுதான் வாழ்வு என்பது. போராளிகளின் தாய் தந்தையை குடும்பத்தை கல்லறைமேல் சாய்ந்து அழவிட்டு அந்தக் கண்ணீரை விற்பனைசெய்யும் புகலிடத்து மாவீரர் தினம் போராளிகளைக் கொடுத்த தாய் தந்தைக்கு செய்யும் மரியாதையாக இருக்குமா?
சமூகநலன் சார்ந்து செயற்படுபவர்கள் தனிமனிதப் பிரக்ஞையுடன் (தன்னுருவாக்கம்) இருக்கிறபோது அதிகமும் அதே தடங்களில் பயணிக்கிறார்கள். அது இயக்கவாத கூட்டுப் பிரக்ஞையாக (கூட்டுருவாக்கம்) மாறியபோது, அது தனிப்பிரக்ஞையை சிதைத்து, பெரும் தவறுகளோடு பயணித்ததே எமது ஈழவிடுதலைப் போராட்ட வரலாறு. அது Obey the Order என்பதற்குள் அமிழ்த்தப்பட்டன. கருத்தியல் ரீதியில், கொள்கை ரீதியில், நடைமுறை ரீதியில் மட்டும் தவறிழைத்திருந்தால் அதை திருத்திக்கொண்டு முன்னேற சாத்தியப்பாடு கிடைத்திருக்கும்.
ஆனால் இயக்கவாத எதேச்சதிகாரம், பழிவாங்கல் என்பன பன்முக சிந்தனைகளைக் கொன்றன. தாமே நீதிபதிகளாகி தீர்ப்பு வழங்கின. சாமான்ய மனிதர்களைக் கொன்றன. புத்திஜீவிகளைக் கொன்றன. சக போராளிகளைக் கொன்றன. தலைவர்களைக் கொன்றன. அரசியலை மேவி கட்டுப்பெட்டித்தனமான ‘ஒழுக்கவாதம்’ ஒரு விடுதலையை நோக்கி பயணிக்கவே முடியாது என்பதற்கு விடுதலைப் புலிகள் ஒரு சாட்சி.
போராளிகள் நேரம்சங்களோடும் எதிரம்சங்களோடும் இயங்கினார்கள். அதுவே யதார்த்தம். அவர்களை புரிந்துகொள்ளும் அதே வேளை அதே தராசில் வைத்து தலைமையை புரிந்துகொள்ளலாமா என்ற கேள்வியும் முக்கியமானது. வழிநடத்துபவர்கள் என்ற ரீதியில் அவர்களது சிந்தனைப் போக்கும், அரசியல் வறுமையும், இராணுவவாதமும், உள்ளுறங்கி இருந்த வன்மமும், அதன்வழியான பழிவாங்கல்களும் என இயங்கினால் எல்லாம் வெறும் இழப்புகளாகவே எஞ்சும். இதையே தலைவர் பிரபாகரன் செய்தார் என்பது கடுமையான விமர்சனம்.
இயக்கத்துள் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கறாராக கடைப்பிடிக்கப்பட்டது உண்மையாக இருக்கலாம். ஆனால் விடுதலை குறித்த சிந்தனை மாற்றம் எந்த நிலையில் வளர்க்கப்பட்டது என்பதை நாடி பிடிக்க, சமூகம் திரும்புதலின் பின்னான முன்னாள் போராளிகளே சாட்சிகளாக இருக்கின்றனர். இன்னொருபுறம் அவர்கள் அடைந்திருக்கிற உளவியல் சிதைவுகள் அவர்களது ஒரு சாதாரண சமூகவாழ்வையே பறித்துக்கொண்டுவிட்டது. அவர்களின் முதுகுகள் புகலிட புலிகளை வாய்வீச்சாளர்களாகவும் பணக்காரர்களாகவும் படியேற கேடாகப் பாவிக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு சமூகத்தின் சகல வளங்களையும் ஒன்றுதிரட்டி -அரசியல் விடுதலை என்று இல்லாமல்- போரியலுக்கே செலவுசெய்து அழிந்துபோன இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம். சமூகம் இழந்துபோன வளங்கள் சமூகத்தை பொருளாதார, பண்பாட்டு ரீதியில் பெரிய இழப்புக்கு உள்ளாக்கியுள்ளது. வன்முறை சிந்தனைமுறை பொதுமனநிலையில் தாக்கம் செலுத்தியுள்ளது. குற்றமிழைத்தவர்களை நோக்கி “போட்டுத் தள்ள வேணும்” என்ற வழக்கு மிக சாதாரணமாக மொழியில் வெளிப்படுகிறது. சாதிய மனநிலையில் இயக்கம் அடக்கிவாசிக்க வைத்தததைத் தவிர ஒரு நல்ல மாற்றத்தையும் சமூகத்திடம் ஏற்படுத்தவில்லை. இன்று அது வெளிக்கிளம்பியபடியே இருப்பதை காண்கிறோம்.
இயக்கத்தில் பொறுப்பான இடங்களில் இருந்தவர்கள்கூட இயக்கம் இழைத்த தவறுகளை பேசாதிருக்கின்றனர். “துரோகத்தால் வீழ்ந்தோம்” என ஒற்றை வரியில் எல்லோரும் முடித்துவிடுகிறார்கள். பிரபாகரனின் தலைமைத்துவப் பண்பு அரசியல் தளத்தில் இருக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. அவரது இராணுவவாதம் அதற்கு தடையாக இருந்திருக்கிறது. விடுதலை என்பது ஓர் அரசியல் இலக்கு என்பதையும் அதை சாதிப்பதற்கான ஒரு வழிமுறைதான் ஆயுதப் போராட்டம் என்பதையும் இராணுவவாதம் அனுமதிக்கவில்லை. அது ரஜீவ் காந்தியை கொலைசெய்த அரசியல் தவறை -அரசியல் நீக்கம் செய்யப்பட்ட- ‘துன்பியல்’ என்ற சொல்லால் மட்டுமே விளக்க வைத்த பரிதாப நிலைவரை இட்டுச் சென்றது.
ஒரு விடுதலை அரசியல்சார் தலைமைத்துவ புலமையை வெளிப்படுத்துகிற வீரியமான ஆழமான ஒரு சுய பேச்சையோ, எழுத்துகளையோ, உருப்படியான பேட்டிகளையோ, அவை குறித்த விவாதங்களையோ பிரபாகரன் விட்டுச் செல்லவில்லை. பாலசிங்கம், பாலகுமார் ஆகியோர் எழுதிக் கொடுக்காத மாவீரர் உரை, பாலசிங்கம் இல்லாத ஒரு பத்திரிகையாளர் மாநாடு எல்லாம் சாத்தியமாகி இருக்கவில்லை. கொஞ்ச மேற்கோள்களை -அதுவும் ஏற்கனவே மார்க்சிய ஆசான்கள் சொன்னவற்றை- பிரபாகரனின் பெயரால் மேற்கோள் காட்டுவதுதான் எஞ்சியிருக்கிறது. இதன்மூலம் அவரது பிம்பத்தை கட்டியெழுப்பி காப்பாற்றுவதையே பலரும் செய்கிறார்கள்.
உயர்மட்டம் வரை உலாத்திய ஒருசில புத்திஜீவிகளோ ஆய்வாளர்களோகூட புலிகள் இயக்கத்தின் தோல்வியை அதன் உள்ளகக் காரணிகளை வெளிப்படுத்தி, அலசி ஆராய்ந்து மக்கள்முன் வைத்தது இல்லை என்றே சொல்லலாம். ஈழவிடுதலைப் போராட்டம் ஒருபோதும் எழுதப்படப் போவதில்லை என்று சொல்லுமளவுக்கு ஒருசிலர் போயிருக்கிறார்கள். இதன்மூலம் தலைமை பிம்பங்களையும் இயக்க பிம்பங்களையும் சிதைத்துவிடாமல் ஓடும் விநோதமான புத்திசீவித்தனத்தை அவர்கள் பேணுகிறார்கள். ஒரு நீண்ட நெடிய கடுமையான போராட்டம் ஏன் தோல்வியடைந்தது, அதிலிருந்து என்ன படிப்பினைகளைப் பெறலாம் என தமிழ்ச் சமூகமும், (ஈழ, தமிழக) தமிழர்களும் அறியாமல் அல்லது அறியவிடாமல் வைத்திருப்பதில் இந்தப் புத்திஜீவிகளும், சொகுசுப் புகலிடப் புலிகளும் ஒரே தளத்திலேயே நிற்கிறார்கள்.
போராளிகளின் அல்லது தலைவர்களின் சரிகளையும் தவறுகளையும் வெளிப்படுத்துவது அவர்களது அர்ப்பணிப்புகளை கொச்சைப்படுத்துவதாகாது. மாறாக மனிதர்களை புனிதமாக்குகிற பதமாக போராளிகள் என்று நிறுவ முயல்வதே கொச்சைப்படுத்துவது. மாவீரர் தினம் என்பது நினைவு கூரல் தினமாக எல்லா இயக்க போராளிகளையும் உள்ளடக்கிய ஒரு மாற்று நாளாக உருப்பெறாதவரை அது இயக்கவாத மாவீரர் தினம்தான். விடுதலைப் புலிகளால் துரோகிகளாக வரையறுக்கப்பட்டு அழிக்கப்பட்ட சக இயக்கப் போராளிகள் போராளிகள் இல்லையா. துரோகி என்ற கருத்தாக்கத்தின் அளவுகோலே சூழ்ச்சிகரமானது. தவறுகளால் ஆனது. சக இயக்கங்களை அழித்ததில், அந்தப் போராளிகளைக் கொன்ற முறைமைகளில் எவளவு வன்மம் இருந்தது என்பதை மறைக்க எவராலும் முடியாது. இன்னொருபுறம் இயக்கங்கள் தமக்குள்ளேயே உட்கொலைகளையும் செய்தன. கொல்லப்பட்டவர்கள் போராளிகள் இல்லையா என்ன.
ஆக இந்த தேசிய விடுதலைப் போராட்டம் அள்ளிக்கொண்டு போய் காவு கொண்ட எல்லா போராளிகளும் இயக்கவாதம் கடந்த சமூக சொத்துகள். அதில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூருதல் ஒரு சமூகத்துக்கான பண்பாட்டு அம்சம். அதை ஒவ்வொரு இயக்கமும் தனித்தனியாக செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அது ஒரு நினைவுகூரல் மட்டுமே. போராளிகளை அசாதாரண நிலைக்கு உயர்த்தும் ஒரு பிம்ப நாள் அல்ல அது. அவர்களும் இந்த சமூகத்திலிருந்தேதான் வந்தவர்கள். எந்த சிறு பங்களிப்பும் செய்யாமல் பார்வையாளர்களாக இருத்தலை வசதியானதாக எண்ணுபவர்களுக்கு வேண்டுமானால் போராளிகளை புனிதர்களாக கட்டமைப்பது தேவைப்படலாம்.
ஆயுதம் தாங்கியவர்கள் மட்டுமல்ல இயக்கத்துக்கு வெளியிலிருந்தபடியே தம்மாலான பங்களிப்புகளை செய்தவர்களை, அதற்காய்ச் சிறைப்பட்டவர்களை, இன்னமுமாய் இறந்துபோனவர்களை என்னவாக வரையறுக்கப் போகிறோம். எனவே போராளி என்பது ஒரு படிநிலை மட்டுமே. அது புனிதநிலை அல்ல. நேரம்சங்களோடும் எதிரம்சங்களோடும், சுயபுத்தியோடும் மூளைச்சலவையோடும், சுயத்தோடும் நிர்ப்பந்தத்தோடும், விரும்பியும் விரும்பாமலும் தன்நிலைக்கும் இயக்கநிலைக்கும் இடையில் அலைக்கழிந்தவர்கள் அவர்கள். இதுவே யதார்த்தம்.
இந்தப் போராட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை இயக்க நடைமுறைகள், மாற்று இயக்க அழித்தொழிப்பு, சகோதரப் படுகொலைகள், உட்படுகொலைகள், சக இனங்களின் மீதான நடவடிக்கைகள், அவர்கள் மீதான படுகொலைகள், விடுதலை அரசியலின் வறுமை, களையெடுப்பு நடவடிக்கைகள், மாற்றுக் கருத்தை மறுத்தமை உட்பட்ட உள்ளகக் காரணிகள் பற்றி பேசுவதும் நினைவுகூரல்தான். மனிதர்கள் நேரம்சங்களோடும் எதிரம்சங்களோடும் இயங்குபவர்கள் என்ற அடிப்படையில் எல்லா இயக்கப் போராளிகளையும் விமர்சனபூர்வமாக அணுகுவது என்பதுதான் யதார்த்தமான நினைவுகூருதலின் மதிப்பை உயர்த்துவது. புனிதமாக்குவது போலியானது.
தமிழ்ச் சமூகம் ஒரு பகுதியினரின் உபயகாரத் திருவிழாபோல மாவீரர் நாளை கடந்துகொண்டிருப்பது அர்த்தமற்றது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் முழுமைக்குள் எல்லை பிரிக்கும் வேலை. அது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் நினைவுகூரல் பண்பாடாக மாறுமானால் அதற்கு -விடுதலை கோரிப் போராடிய இனம் என்ற ரீதியில்- ஓர் அர்த்தம் உண்டு. அது ஓரிரு தலைமுறை அழிவின் பின் சாத்தியப்படலாம். இப்போதைக்கு அவளவு இலகுவில் புகலிட கெடுகுடி விடாது. அடுத்தடுத்த சந்ததிகள் புகலிடத்தில் தமிழர்களாகத் தொடர்வார்களோ தெரியாது. சகல இயக்கப் போராளிகளையும் நினைவுகூரும் பண்பாட்டு நாள் ஈழத்து தாய் மண்ணுக்கே சொந்தமானதாக மாறும்.
நினைவுகூரலுக்கான ஒரு பொது நாளை தமிழ்ச் சமூகம் வந்தடைய வேண்டும். (அந்த நாள் போராட்டம் முடிவுற்ற நாளாக இருத்தல் பொருத்தமானது என்பது எனது கருத்து). அதுவும் “மாவீரர் தினம்” என்ற சொற்பதமின்றி, (வருடத்தில் ஒரேயொரு) “நினைவுகூரல்” தினமாக காவுகொள்ளப்பட்ட எல்லா போராளிகளுக்கும் மக்களுக்குமானதாக அது பொதுமையாக இருந்தால் அது ஈழத் தமிழர்களின் ஒரு பண்பாட்டுக் கூறாக அர்த்தம் பெறும். அதுவரை நவம்பர் 27 என்பது ஒரு இயக்கவாத மாவீரர் தினம்தான்.
மறுபுறத்தில், இனப்படுகொலையை நடத்தியதோடல்லாமல், நினைவுகூரும் உரிமையை மறுக்கும் இலங்கை அரசின் செயல் தமிழர்களின் பண்பாட்டுக் கூறின் மீது தொடுக்கும் தாக்குதல், ஒரு பாசிசக்கூறு என்பதையும் இங்கு பதிந்துவிட வேண்டும்!
- ரவி (27112021)