யொஹானியின் பாடல்

யொஹானி!. இலங்கையைச் சேர்ந்த இந்த இளம் பாடகி. அண்மையில் பாடிய “மெனிக்கே மகே கித்தே” என்ற காதல் பாடல் அவருக்கே ஆச்சரியமூட்டக்கூடிய விதத்தில் இன்று 150 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை (views) தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இசைத்துறையில் அவரது இயல்பான ஈடுபாடும் முயற்சியும் ஒருபுறம் இருக்க, இன்றைய சமூகவலைத்தளங்களின் வீச்சு அவருக்கு சாதகமாக அமைந்த சந்தர்ப்பமும் சேர்ந்து அவரை திடீரெனத் தோன்றிய நட்சத்திரமாக ஒளிவீச விட்டுள்ளது. அதற்கு அவர் தகுதியானவர்தான் என்ற மதிப்பீட்டை -அவரது எல்லா பாடல்களையும் பார்க்கிறபோது- வந்தடைய முடிகிறது.

அவரே இந்த சமூகவலைத்தள வியாகத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. அவரது இந்தப் பாடலானது மொழி எல்லையைத் தாண்டி விரவியதற்கு அவரது குரலில் ஒரு மந்திரத்தன்மை இருந்ததும், ‘குளோஸ் அப்’ படப்பிடிப்பும் காரணம் என்பது என் கணிப்பு. மிக எளிமையாக, எந்த பெரிய எதிர்பார்ப்புமின்றி, எந்த காட்சியமைப்புகளுமின்றி, பூச்சுகளுமின்றி எடுக்கப்பட்டிருக்கிறது. சதீசனின் ‘றப்’ இசைக் குரலின் உயிரோட்டமான சொல்லடுக்குகளும் சேர்ந்து இப் பாடலை ஒரு கவர்ச்சி நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. குளோஸ் அப் இல் யொஹானி இரசிகர்களை கவர்ந்திழுக்கும் -இயல்பை மீறாத- நளினங்களைக் கலந்து படரவிடுகிறார். பாடல் சமூகவலைத் தளத்தை வியாபித்துக் கொண்டிருக்கிறது.

இவரது திடீர்ப் பிரபல்யம் தமிழ்ச் சினிமாவில் ஹரிஸ் ஜெயராஜ் இன் இசையமைப்பிலும் மதன் கார்க்கி (வைரமுத்துவின் மகன்) யின் பாடலிலும் முதல் திரையுலக பாடலை பாடுகிற சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. பாடினார்.

நினைத்ததே நடந்தது. தமிழகத்தில் தமிழின உணர்வாளர்களும், சீமான் போன்ற இனவாதிகளும் கிளர்ந்தெழுந்தனர். தமிழினத்தை படுகொலை செய்த இலங்கை இராணுவத்தின் 55வது பிரிவு மேஜர் ஜெனரலாக இருந்து வழிநடத்திய பிரசன்ன டீ சில்வாவின் மகள் யொஹானியை தமிழகம் வரவேற்று பாடவைப்பதற்கு எதிராக களமாடத் தொடங்கியிருக்கின்றனர். சிங்களவர்-தமிழனர் என இனப்பிரிப்புடன் ஈழப் பிரச்சினையை எதிர்முனைகளில் நிறுத்துவது என்பதே அவர்கள் அறிந்துவைத்திருக்கிற அல்லது பாவிக்கிற அரசியல். ஈழப்பிரச்சினையையும் பிரபாகரனையும் தமது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துகிற சூழ்ச்சிகரமான அரசியல் ஒருபுறமும் அவற்றை ஆதரிக்காவிட்டால் தாம் காணாமல் போய்விடுவோம் என்ற அச்சவுணர்வு கொண்ட தமிழுணர்வாளர்களின் அரசியல் இன்னொரு புறமும் போய்க்கொண்டிருக்கிறது.

ஈழப் போராட்டத்தின் மீதான விமர்சனமோ, அதிலிருந்து பெறக்கூடிய படிப்பினைகளோ அற்று, அல்லது அவற்றை வெளிப்படையாக வைப்பதை கறாராகவே தவிர்த்து அவர்களது ஈழ அரசியல் போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தமிழரா திராவிடரா என எதிரெதிராக களமாடும் பல அரசியலாளர்களிடமும் காணக் கிடைக்கிற விடயம் இது. போர் தின்றுபோட்ட ஈழ மக்களின் இன்றைய அரசியல் நிலைகள், நிலைப்பாடுகள், மனநிலைகள், விருப்பங்கள் எதையுமே பிரதிபலிக்காத தமிழக அரசியலாளர்கள் ஈழப் பிரச்சினையை சரியாக படம்பிடிப்பது கிடையாது. அந்நியப்பாடு காரணமாக இருக்கலாம், அல்லது பிழைப்புவாதமாகவும் இருக்கலாம்.

யொஹானி யின் தந்தை ஒரு சாதாரண சிங்களவராக இருந்தாலும்கூட அவர்களின் நிலைப்பாடு அதுவாகத்தான் இருக்கும். ஈழத் தமிழ்மக்களுக்காக அவர்கள் இதைச் செய்வதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இதே யொஹானி வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திலோ மட்டக்களப்பிலோ திருகோணமலையிலோ வன்னியிலோ பெரும் இசைநிகழ்ச்சியை நடத்தக்கூடும் என்பதையும், பெருமளவு தமிழ் இசைப்பிரியர்கள் அதில் பங்குபற்றக்கூடும் என்பதையும் யாரும் சாத்தியமற்றதாகக் கருதிவிட முடியாது.

மிகப் பெரும் போராட்ட, போர்க்கள அலைச்சல்களின் பட்டறிவோடும் களைப்போடும் இருக்கும் ஈழத் தமிழர்களின் மனநிலையை தமிழகம் புரிந்து கொள்வது கடினம். ஈழப் போராட்டம் பற்றியும் பிரபாகரன் பற்றியும் அவர்கள் கொள்கிற மதிப்பீடு உணர்ச்சிவாத அரசியலையும் சாகச மனப்பான்மையும் தாண்டியதாகத் தெரியவில்லை. ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த எந்த விமர்சனபூர்வமுமற்று கதையளப்பதிலும், பிரபாகரன் குறித்த பிம்பம் உடைந்து விழாமல் பாதுகாப்பதிலும் சதா ஈடுபட்டபடியே இருக்கின்றனர். போராட்டத்தின் தோல்வி என்பது வெளிநாட்டு சதியால் மட்டும் நிகழ்ந்ததான விபரிப்புகளுடன் குறுக்கிவிடுகிறார்கள். அகநிலையில் இயக்கங்களையோ போராட்டத்தையோ மதிப்பிடுவதில் அவர்களின் கண்டுபிடிப்பு ‘துரோகம்’ என்பது மட்டுமே.

ஈழவிடுதலைப் போராட்டத்தை நாசமாக்கிய முதல் எதிரி இந்தியாதான். இயக்கங்களை இந்தியாவுக்குள் அரவணைப்பது போன்று வரவேற்று, வளரவிட்டு, பயிற்சியளித்து, ஒற்றர்களை உள்ளே விட்டு என எல்லாவற்றையும் தமது நலன் கருதி கருவறுத்ததிலிருந்து, ஈழத்தில் இராணுவத்தை அனுப்பி குற்றங்கள் கொலைகள் புரிந்து, பின் போரில் இலங்கை அரசுடன் கள்ள உறவில் இருந்தது வரை (2009 வரை) அதைச் செய்தது. அதை செயற்படுத்திய நாசகாரர்களினதோ இந்திய அமைதிப்படையின் தளபதிகளினதோ பிள்ளையாக யொஹானி இருந்தால் இந்த தமிழினவாதிகள் யார் அவரைக் கண்டுகொள்ளப் போகிறார்கள்.

2.

யொஹானி குறித்து எழுந்திருக்கும் பிரச்சினையை எப்படி அணுகுவது என்பது பலருக்கும் சிக்கலாக இருக்கலாம். இசை இரசிகர்களை இலயிப்பாளர்களை அரசியல் சட்டகங்கள் தடுத்துவிடுமா என்ற ஒரு கேள்வி இருக்கிறது. மொழி புரியாதபோதும் உலகம் பூரா பரவிய யொஹானியின் பாடலை பலமுறை கேட்டவர்கள் உண்டு. மொழி கடந்து பண்பாடு கடந்து எல்லை கடந்து இசை பயணிக்கும், பயணிக்கிறது என்பது மிகச் சாதாரணமானது. அதை எவருமே மறுத்துவிட முடிவதில்லை. அது காலம்காலமாக நடந்துவருகிற நிதர்சனம்.

அடுத்தது, அவரது தந்தை அங்கம் வகித்த இலங்கை இராணுவத்தின் 55வது படைப் பிரிவு மோசமான படைப்பிரிவுகளில் ஒன்று. இந்த யுத்தமானது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்றும் தமிழ் மக்களை விடுவிக்க செய்யப்பட்ட போர் என்றும் அரசு கூறியது. அரசின் வன்முறை இயந்திரங்கள் (இராணுவம் உள்ளிட்ட படைப்பிரிவுகள்) இதை செய்துமுடிக்க கட்டளையிடப்படுகின்றன.

“போரில் வெற்றி என்றால் என்னவென்று வரைவுசெய்ய முயன்றேன். ஆனால் அது என்னவென்று எவரும் சொன்னாரில்லை” என ஆப்கானிஸ்தான் போரை வழிநடத்திய அமெரிக்க இராணுவ ஜெனரல் Dan MCNeill   சொன்னார். அதுவே உண்மை. எல்லா அறங்களையும் உண்மைகளையும் காவுகொண்டு நடத்தப்படும் போரில் எத் தரப்புக்கு வெற்றியை அறிவிக்க முடியும்.

இலங்கை அரசு தமது வெற்றியாக அறிவித்ததற்குப் பின்னால் அப்பட்டமான இனவெறியே இருந்தது. 1971 இலும் 1989 இலும் பல்லாயிரக் கணக்கான -சிங்கள இனத்தைச் சேர்ந்த- ஜேவிபி போராளிகளை கொன்றொழித்த இலங்கை அரசு அதை போர் வெற்றியாகக் கொண்டாடியதா என்ன. முழு இலங்கைக்குமான அரசு என சொல்லிக்கொள்ளும் அரசு இந்தப் போரில் (புலிகளை மட்டுமல்ல) இலட்சக்கணக்கான தமிழ் மக்களை அழித்தொழித்தது ஒரு தேசத் துயரமில்லையா. இராணுவமும் அரசு இயந்திரமும் வெற்றியாகக் கொண்டாட, தமிழ் மக்கள் இழவு வீட்டைக் ‘கொண்டாடினார்கள்’. இதன் கட்டமைப்புக்குப் பெயர் ‘ஒரு நாடு ஒரு தேசம்’. 55வது படைப்பிரிவின் தளபதியாக செயற்பட்ட யொஹானியின் தந்தையார் பிரசன்ன டீ சில்வா போர்க்குற்றவாளிகளாக சுட்டப்படுபவர்களில் ஒருவர். அவர் இலண்டனில் இருந்த காலத்தில் இலண்டன் பாராளுமன்றத்தில் அது பற்றிய சர்ச்சை எழுந்தபோது மீண்டும் இலங்கைக்கு நழுவிச் சென்றவர் அவர்.

தந்தை மீதான எதிர் மதிப்பீடுகளை வைத்து பிள்ளைகளை பழிவாங்குவதை எதன் பெயராலும் நியாயப்படுத்த முடியாது. இலங்கை அரசுக்கு பிரபாகரன் பயங்கரவாதியாகத் தெரிந்தார் என்ற காரணத்தை முன்வைத்து அவரது மகனை, குடும்பத்தை கொலைசெய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோலவே இராணுவத் தளபதியின் மகள் என்பதற்காக யொஹானியை இசைத் துறையில் ‘பழிவாங்க’ முடியாது. புறக்கணிக்கவும் முடியாது.

3.

1993 இல் பிறந்த யொஹானி சிறுவயதிலிருந்தே தந்தையைப் பிரிந்து வாழ்வது என்பது குழந்தைமைக்கு நிகழ்கிற ஒரு அவலம். அதை அவர் அனுபவித்திருக்கிறார். அதை ஒரு பாடலாக (Rawwath Dasin) அவர் 2020 இல் ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறார். இப்போதான் (2021) அந்தப் பாடலின் ஒருசில வரிகள் சர்ச்சைக்கு உரியதாக மாறியிருக்கிறது.

தனது ஏக்கங்களையும் விடுபடல்களையும் அவர் பாடுகிறார். நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த உணர்வு மதிக்கப்பட வேண்டியது. இதே உணர்வு இராணுவத்தில் இருந்தவர்களின் குடும்பங்களில் மட்டுமல்ல, போராளிகளின் குடும்பங்களிலும், இதே இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களிலும், அரசியல் காரணங்களுக்காக சிறையில் வாடுபவர்களின் குடும்பங்களிலும் பல வருடங்களாக குழந்தைமை மீது தாக்கம் ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. இருக்கிறது.

அது போரினால் நிகழ்ந்தது என்ற புரிதல் ஒரு கலைஞருக்கு இருக்கவேண்டும். அது அவரிடம் இருக்கவில்லை. இந்தப் பாடல் வெளிவந்த 2020 இல் யொஹானிக்கு 27 வயது ஆகிவிட்டிருந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுக்கத் தவறக்கூடாது. அதேநேரம் போருக்கு எதிராக நிற்கிற, பேசுகிற இளம் பட்டாளங்களைக் கொண்ட ஐரோப்பிய நாடான இலண்டனிலும் அவுஸ்திரேலியாவிலும் இளமைப் பருவத்தைக் கழித்த யொஹானிக்கு இந்த புரிதலின்மை ஒரு கலைஞர் என்ற ரீதியிலாவது கிடைக்காமல் போனது ஒரு குறைபாடுதான்.

போர்க்களத்தில் களமாடும் தந்தையின் வரவுக்காக ஏங்குதல் என்பதை அவர் எல்லோருக்குமான பொதுத்தளத்திற்கு எடுத்துச்செல்வதில் கவனம் இருக்கவில்லை. குறைந்தபட்சம் போரால் பாதிக்கப்படுபவர்களின் மனநிலையை காயப்படுத்தாமல் இருப்பதில் கவனம் இருக்கவில்லை. அவர் தனது தந்தை பயங்கரவாதத்தை ஒழித்த கதாநாகனாகவும் வடக்கையும் தெற்கையும் இணைத்த கதாநாயகனாகவும் நாட்டுக்காக இரவு பகலாக உழைத்த மீட்பனாகவும் அந்த பாடலில் புகழாரம் சூட்டுகிறார். அது ஒருவகையில் போரை கொண்டாடுவதான உளவியலை வெளிப்படுத்துகிறது.

இந்த உளவியல் சிங்கள மக்களுக்கு பெருமளவில் பொதுப்புத்திக்குள் கருத்தியல் ரீதியில் திணிக்கப்பட்டு இயல்பாக்கப்பட்ட ஒன்று. (மறுகரையில் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை கொண்டாடிய நியாயப்பாடுகளில் அதற்குள் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளையும் அராஜகங்களையும் அறமற்ற செயற்பாடுகளையும் தேவையற்ற இழப்புகளையும் தவிர்க்க முடியாததாகக் கண்ட உளவியல் ஒன்றும் இருக்கிறது). அந்த பொதுப்புத்தி உளவியலுக்குள் யொஹானி வளர்வது தவிர்க்க முடியாதது. அதுவும் ஒரு படைத்தளபதியின் குடும்பவளர் சூழலிலும் உக்கிரமான போர்ச்சூழலிலும் தகப்பன் குறித்த குழந்தைமையின் ஏக்கங்களிலும் அவரது உளவியல் இன்னும் அழுந்தியிருக்கும் என்பதை புரியவும் வேண்டும்.

யொஹானி தனது நிலையில் நின்று பாடுகிறார். அது ஒரு இயற்றப்பட்ட பாடலாக குறுகாமல், தனது உணர்விலிருந்து பிரவகிக்கிற பாடலாக விரிகிறது. தனது தந்தையின் போதிய அன்பையும் அரவணைப்பையும் பெறமுடியாமல் வளர்ந்ததை உருக்கமாகப் பாடுகிற இந்தப் பாடலில் சொருகப்பட்டிருக்கிற ஒருசில வரிகள் ஓர் உறுத்தலாக கிளம்பியிருக்கிறன. இலங்கை அரசு தமிழர்களை அல்லது போரை வெற்றிகொண்டதான மனநிலையில் கொண்டாட்டங்களை வீதிவரை வியாபித்தது போல, அதை இந்தப் பாடல்வழி கொண்டாடுகிற அந்த வரிகள் சர்ச்சைக்குரியன.

அதேநேரம் மறுகரையில் அவரது தந்தையார் போன்றவர்களின் போர்க்குற்றங்களுக்கு நேரடியாகவே பலியாகிப்போன குடும்பங்களின் தீராத் துயரின் உளவியலில் நின்று பார்க்கிறபோதும், போர் எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஒருவர் நின்று பார்க்கிறபோதும் அவர்கள் இந்தப் பாடலை இடைமறித்தால் அதையும் நாம் புரிந்துகொண்டே ஆகவேண்டும். இந்த இடைமறிப்பு இன்று யொஹானிக்கு புதிய சிந்தனைகளை வேண்டிநிற்கும் ஒரு ஆரம்ப வாசலாக அமையலாம் அல்லது இன்னும் நீட்சிபெற்று மறுகரையில் அவரை நிறுத்தலாம்.

அவரது இசைப் பயணத்தை அவரது திறமையும் பிரபல்யமும் இன்னொரு தளத்துக்கு எடுத்துச் செல்லும். ஏற்கனவே பொலிவூட் சினிமாவுக்குள் பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. யொஹானிக்கு காலம் காலடியில் நீண்டு கிடக்கிறது. அவர் போர் எதிர்ப்பு மனநிலையை பெற முடியாமல் விட்டாலும்கூட, போர்தின்ற சக மனிதர்களின் உணர்வுகளை சேர்த்தே உட்செரிக்கிற கலை மனநிலையையாவது பெற வேண்டும் என ஒரு சமூக மனிதஜீவி விருப்பப்பட முடியும். இது வேண்டுகோளுமல்ல, முன்நிபந்தனையுமல்ல, திணிப்புமல்ல. நாம் உணர்வதை வெளிப்படையாக முன்வைப்பது. அவ்வளவே !

  • ரவி (29102021)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: