- குறும்படம்
(முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு வாசியுங்கள்)
நோர்வே தமிழ் பிக்கர்ஸ் (N.T Picture) உருவாக்கியிருக்கும் 11 நிமிட குறும்படம் சிற்பி. இது ஒரு abstract வகைமைக்குள் வருகிறதாலும், அநாவசிமற்றவைகள் காட்சிகளுக்குள் அலையாமல் செறிவாக செதுக்கப்பட்டிருப்பதாலும் இதை ஒரு “திரை ஓவியம்” என சொல்லுதல் பொருத்தமாகும்.
பெருங்கதைகளின் ஒரு சிறு துண்டை கேக் துண்டு வெட்டுவதுபோல் வெட்டி பெரும்பாலான தமிழ்க் குறும்படங்கள் சுவைக்கத் தரும் அறியாமைகளை தூக்கி எறிந்துவிட்டு, தன்னை முற்றாக வேறொரு தளத்தில் வெளிப்படுத்தியிருக்கிறது சிற்பி. இவ்வாறான படைப்புகளை ஒற்றைப் பரிமாணத்தில் வாசிக்க முடியாது. எனவே இங்கு எனது வாசிப்பை மட்டுமே நான் வைக்க முடியும்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : ஸ் ரீபன்
தயாரிப்பு, படப்பிடிப்பு, தொகுப்பு, வரைகலை :துருபன்
இசை : வே.இரவிக்குமார்
படத்தின் துல்லியமான காட்சியும் நகர்வும் அதன் பின்புல காட்சியொழுங்கமைப்பும் இசையும் நன்றாக வந்திருக்கிறது. ஒன்றிப்போக வைக்கிற நடிப்பு இருவரினதும்!. அவர்களது இயல்பான நடிப்பிலும் நாடகீயத்தனமாக புகுத்தப்பட்டிருக்கிற “சிரிப்பு” இடறுப்படவே செய்கிறது. ஒரு மிக ஆழமான விடயத்தை சொல்கிறபோது அதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிற ஒரு பார்வையாளரை அது இடைஞ்சல் செய்துவிடுகிறது என்பது எனது பார்வை அனுபவம். அதேபோல் மிக நேர்த்தியான கருத்துகளின் பெண் படைப்புக்கு, ஓரிடத்தில் அவரது (புறவயமான) நடையின் நளினம் ஒத்துவராததாகவே தெரிந்தது. மற்றபடி தீவிர சிந்தனையை பின்தொடர வைக்கிற களத்தில் சேர்ந்தே பயணிக்கவல்லதாக இருவரது நடிப்பும் அமைந்திருக்கிறது.
சுதந்திரம் என்பது நீ எனக்குத் தந்து அதை நான் கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்வதா
“சுதந்திரம் என்பது நீ எனக்குத் தந்து அதை நான் கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்வதா” என்ற பெண் குரல் இந்தப் படைப்பின் மையத்தில் வைத்து பார்க்கக்கூடிய ஒன்று. “நான் எப்பிடி நீ விரும்புறமாதிரி வாழ முடியும்” என ஒரு நியாயமான குரலை (ஆண்) முன்வைத்துக்கொண்டு, அதற்கு முரணாக “எப்படி நீ விரும்புறமாதிரி வாழமுடியும்” என பெண்ணைப் பார்த்து கேட்கும் ஆணதிகாரத்தின் முரண்நகை வசனத்தில் அழகாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் அந்த ஆண் ‘பெண்ணியம்’ என்பதே மிக அதிகமாக நான் வெறுக்கும் வார்த்தை என சொல்ல முடிகிறது அல்லது சகிப்பின்மையாக உள்ளலைகிறது.
இதில் “நான் விரும்புற மாதிரி நீ இல்லை” என ஒரு பெண் சொல்வதோ ஒரு ஆண் சொல்வதோ ஏற்றுக்கொளப்பட முடியாதது. மனிதர்கள் தமக்குள் மட்டுமல்ல தனக்குள்ளும் முரண்பாடுகளைக் கொண்டவர்கள். முரண்பாடுகளுக்குள்ளால் இயங்கக்கூடிய பொதுத் தளத்தில்தான் தனி மனிதர்களோ, கூட்டு வாழ்க்கையோ, கூட்டுச் செயற்பாடுகளோ, அமைப்புகளோ இயங்க எத்தனிக்கும். முடியாது போனால் அது பிரிவுகளை நிகழ்த்தி தப்பிப் பிழைக்கும் அல்லது தன்னழிவை நிகழ்த்தும். ஒருவர் இன்னொருவரது வாழ்க்கையை வாழ்வது அர்த்தமுள்ள வாழ்க்கை அல்ல. சுதந்திரமான வாழ்க்கையுமல்ல. எனவே நான் விரும்புறமாதிரி நீ இல்லை என பெண்குரல் சொல்வது பெண்ணியக் குரலாக ஒலிக்கும் அவளின் தீவிர சிந்தனை முறைக்கு ஒத்துவராதது. சுதந்திரம் குறித்து அவள் முன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை பலமிழக்கச் செய்துவிடக் கூடியது. ஒருவேளை “நீ விரும்பிறமாதிரி நான் வாழவேண்டுமென்கிறாயே… நான் விரும்புறமாதிரி நீ வாழ்கிறாயா” என ஆணைப் பார்த்து ஒரு மறுத்தானாக அந்தப் பெண் குரலை பார்க்க முடியுமோ தெரியவில்லை.
அவள் பிரிந்து தனியாக போகிற முடிவை முன்வைக்கிறபோது ஆண் “அப்பிடியெண்டால் உன்ரை வாழ்க்கையை select பண்ணியிட்டுத்தான் போறியா” என கேட்கிற அதிகாரம் அல்லது உரிமை அல்லது மூக்குநுழைப்பு ஆணதிகாரம் இயல்பாக வைத்திருப்பதை வெளிப்படுத்தியிருப்பது மிக நுட்பமானது. பிடிச்ச வாழ்க்கையை வாழ ஒரு மீறல் செய்கிற துணிச்சல் அவசியம் என்பதை பெண் குரலினூடு பதிவுசெய்ததும் நுட்பமானது. அப்படி மீறல் செய்ய துணியும் பெண்களை கூடாத பெண்ணாகக் காட்டும் கலாச்சாரக் காவலாளிகளாக இருக்கும் ஆண்களைப் பார்த்து (என்னை கூடாத பொம்பிளை என்கிறாயா எனக்) கேட்கும் கேள்வியும் நுட்பமானது.
இயல்பானதாக ஊட்டிவிடப்படுகிற -ஆதிக்கசக்திகளின்- மொழிக் கட்டமைப்பு ஒடுக்கப்படும் சக்திகளின் மீதான ஆதிக்கக் கருத்தியலை வெளிப்படுத்துபவை. இங்கும் ஆணதிகார மொழியின் கட்டமைப்புகள் பெண்களை எப்படி ஒடுக்குகிற கருவியாக செயற்படுகிறது என்பதையும் எங்கும் சூழ்ந்து இருக்கிறது என்பதையும் அதை எதிர்த்துப் போராடவேண்டியிருப்பதை (ஊதித்தள்ளும் எழுத்துகளின் படையெடுப்பாக) காட்சிப்படுத்தியதும் நுட்பமானது.
அதேபோல் அவள் சுதந்திரமாக வெளியேறாதபடி பெருங்கதவு அரணாக தடுத்து நிற்பதை எதிர்நோக்க வேண்டியிருப்பதும் நுட்பமானது. திரும்பத் திரும்ப பெண்களை ஆணாதிக்க சமூகம் செதுக்கிக்கொள்வதிலிருந்து அவள் போராடி வெளியேவர முயற்சிப்பதும் போராடுவதும் மீண்டும் அதற்குள் அகப்படுவதும்.. என தொடரும் ஒரு நிகழ்தலின் குறியீடாக முடிவு அமைகிறது என எடுத்துக் கொண்டேன். ஆனாலும் அந்த இடத்தில் அவள் அரணை (கதவை) உடைத்தெறியும் மூர்க்கத்துடன் போராடுவதான ஒரு காட்சியோடு படம் முடிந்திருக்கக் கூடாதா என்ற ஓர் உணர்வேக்கம் படத்தை பார்த்து முடிக்கிறபோது எழுந்தது.
- ரவி (05102021)
அந்த இடத்தில் அவள் அரணை (கதவை) உடைத்தெறியும் மூர்க்கத்துடன் போராடுவதான ஒரு காட்சியோடு படம் முடிந்திருக்கக் கூடாதா என்ற ஓர் உணர்வேக்கம் படத்தை பார்த்து முடிக்கிறபோது எழுந்தது…..இதையே நானும் நினைக்கின்றேன்.