- டானியல் கன்ஸர்
பிம்பப்படுத்தப்பட்ட நியூயோர்க் இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்து 20 வருடங்களாகிறது. இதையொட்டி 9/11 உம் ஆப்கானிஸ்தான் போரும் என்ற தலைப்பில் அறியப்பட்ட சுவிஸ் வரலாற்றாசிரியர் டானியல் கன்ஸர் அவர்கள் Basel நகரில் (11.9.21) உரையாற்றியுள்ளார். அவ் உரையின் முக்கியமான பகுதிகளின் மொழிபெயர்ப்பு இது.
“என்னளவில் 11 செப்ரம்பர் ஒரு பெரிய பொய்”என்கிறார் அவர். விமானம் மோதியதால் ஏற்பட்ட தீ கட்டடத்தை நொருங்கச் செய்தது என்ற கருத்துடன் அவர் ஒத்துப்போகவில்லை. 1968-1972 இல் கட்டப்பட்ட இந்த இரட்டைக் கோபுரமானது, தாக்குதல் நடந்ததும் செங்குத்தாகவே சமச்சீராக நிலத்துக்குள் இறங்கும் காணொளியை மெல்லசைவில் (slow motion) காண்பிக்கிறார் கன்ஸர். அது குண்டு வைத்து கட்டடங்களை காலாவதியாக்கும் முறையோடு ஒத்துப்போகிறது.
அத்தோடு கட்டடத்தின் கட்டமைப்பை ஆய்வுசெய்த அலாஸ்கா பல்கலைக் கழகப் பேராசிரியர் Leory Hulsey அவர்களின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார்.
“தீ இந்தக் கட்டடங்களை உதிர்ந்து கொட்டவைக்க (collapse) முடியாது. அதன் அத்திவாரத்தில் நிர்மாணிக்கப்பட்ட எண்பத்தியொரு தொடர் இரும்புக் கால்களும் ஒரே சமயத்தில் சமாந்தரமாக உடைந்து நொருங்க சாத்தியமில்லை என Leory Hulsey அவர்கள் தான் செய்த ஆய்வின் முடிவை 3.9.2019 இல் எழுதியிருக்கிறார்.
இரட்டைக் கோபுரம் விமானம் மோதி எழுந்த தீயால் வீழ்ந்தது பொய் என்ற எனது கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும் என்பதில்லை. நீங்களே பகுத்தாயுங்கள் … சரிபாருங்கள்… மீண்டும் சரிபாருங்கள் என்கிறார் டானியல் கன்சர்.
இச் சம்பவம் நடந்தபின் “பயங்கரவாதிகளை” தேடி அமெரிக்கா NATO சகிதம் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது. அப்போது தலிபான்கள் ஆட்சியிலிருந்தனர். போர்க் களத்தில் தமக்குக் கிடைத்த காணொளி ஒன்றை ஆதாரமாக வைத்து தாக்குதலின் சூத்திரதாரி பின் லாடன் என பிறகு அமெரிக்கா அறிவித்தது. ஆனால் பின்லாடன் தனக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அல்ஜசீரா தொலைக்காட்சியில் மறுப்புத் தெரிவித்தார்.
2001 இல் உள்நுழைந்த அமெரிக்கா தனக்கு சார்பான அரசை நிறுவியது. இராணுவத்தையும் காவல்படையையும் கட்டியமைத்தது. 20 வருடமாக நீடித்த இந்தப் போரில் அந்நியப் படை பலியானதைவிட இந்த உள்நாட்டுப் படைகளே அதிகமும் பலியாகினர். அவர்களில் 67000 பேரும், மறுதரப்பில் 120000 தலிபான்களும் பலியாகினர். பொதுமக்கள் உட்பட மொத்தம் 240000 பேரை இந்தப் போர் காவு கொண்டது. 5.5 மில்லியன் பேர் இடம்பெயர்ந்தனர். இத் தகவல்கள் 19.8.2021 சுவிஸ் பத்திரிகையான NZZ இல் வெளியாகியிருந்தது. பின் லாடன் கொல்லப்பட்ட பின்னரும்கூட அமெரிக்காவும் மேற்குலகமும் போரைத் தொடர்ந்தன. ஆப்கானில் பெண்ணுரிமைகளை மீட்டுக் கொடுக்கவும், போதைப்பொருள் உற்பத்தியை இல்லாமலாக்கவும் என இருவேறு பெரும் பொய்களை பிரச்சாரமாக்கி போரை நீடித்தன.
பெண் உரிமைக்காக தலையிட்டது என்பது என்ற பிரச்சாரம் மிகப் பெரிய பொய். 60, 70 களில் அவர்களைப் பார்க்கிறபோது, மேற்குலகுக்கு முன்னரே அங்கு பெண் உரிமை இருந்தது என்றுகூட சொல்ல முடியும்.

“60 களிலும் 70 களிலும் ஆப்கானிஸ்தானில் பெண்கள் சுதந்திரமாக இருந்தனர். ஒவ்வொரு பெண்பிள்ளையும் பாடசாலைக்கோ பல்கலைக் கழகத்துக்கோ போக முடியும். நாம் விரும்பிய உடைகளை அணிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. வெள்ளிக்கிழமைகளில் புதிதாக வெளிவரும் இந்தியப் படங்களைப் பார்ப்பதற்கு திரையரங்குக்கு போவோம். முகாஜிதீன்கள் வென்றபோது எல்லாம் காணாமல் போனது. அவர்கள் மேற்குலகால் ஆதரவு வழங்கப்பட்டவர்கள்” என Saira Noorani என்ற வைத்தியர் கூறுகிறார். இவர் 2001 இல் ஆப்கானை விட்டு வெளியேறியிருந்தார்.
போரின் இன்னொரு இலக்காக ஓப்பியம் போதைப்பொருளை இல்லாதொழித்தல் என்ற கதையும் சொல்லப்பட்டது. ஆனால் 2001 இல் அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமிக்க முன்னரே ஓப்பியம் பயிர்ச்செய்கை கிட்டத்தட்ட பூச்சியத்தை அண்மித்திருந்தது என்பதே உண்மை. (இந்த ஓப்பிய போதைப்பொருள் பயிர்ச்செய்கையை ஆப்கானிஸ்தானில் 1970 களில் அறிமுகப்படுத்தியதே அமெரிக்காதான். பாகிஸ்தான் எல்லையில் இது பயிரிடப்பட்டது. ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் இராணுவத்தை போதைக்கு அடிமையாக்க செய்யப்பட்ட உத்தியாகவே ஓப்பியம் அறிமுகப்படுத்தப்பட்டது.)

ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லை மிக நீளமானது. ஆரம்பத்தில் முகாஜிதீன்களும், பின்னர் அதன் வாரிசுகளான தலிபான்களும் இலகுவாக இந்த எல்லைக்கு இங்காலும் அங்காலும் என நடமாட வசதியாக அதன் எல்லை இருந்தது. ஆப்கான் பெருமளவு மலையும் மலைசார்ந்த நிலப்பரப்புகளாக பள்ளத்தாக்குகளையும் கொண்ட நாடு. முக்கால் பங்கு நிலத்தில் மலைகளையும் மிகுதி பள்ளத் தாக்குகளையும் கொண்டது. அதன் மிக உயரமான மலை 7000 மீற்றர் கொண்டது. பெரும்பாலும் பள்ளத்தாக்குகளில்தான் சண்டை நடைபெற்றது. அதன் தலைநகரான காபூல் கடற் பரப்பிலிருந்து 1800 மீற் உயரமான பகுதி.
ஆப்கான் 38 மில்லியன் சனத்தொகையைக் கொண்டது. 99 வீதம் முஸ்லிம்களைக் கொண்ட நாடு. பெருமளவு சுனி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள். பல மொழிகளையும் இனக்குழுக்களையும் கொண்ட நாடு. பேர்சியன் மொழியும் பாஸ்து மொழியும் ஆட்சிமொழிகள். ஆப்கானில் பேசப்படுகிற எந்த மொழியும் NATO-அமெரிக்க கூட்டு இராணுவத்துக்கு புரியாத மொழிகள். அதேநேரம் ஆப்கானியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இது தொடர்பாடலை சாத்தியமற்றதாகவே வைத்திருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலத்தில் (1977-1981) அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski கார்ட்டரிடம் ஒரு ஆலோசனையை முன்வைத்தார். கம்யூனிச நாடான சோவியத் யூனியனுக்கும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் இடையிலான பனிப்போர் காலம் அது. இந்த பனிப்போரின் ஒரு களமாக சோவியத் உடன் நீண்ட எல்லையைக் கொண்ட ஆப்கானிஸ்தானை ஆக்க, ஆப்கானிஸ்தான் மத அடிப்படைவாதிகளை பாவிக்க Brzezinski திட்டமிட்டார். சோவியத் இனை எதிர்கொள்ள முகாஜிதீனை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு உதவ வேண்டும் எனவும் அந்த உடன்படிக்கையில் குறிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் சோவியத் இராணுவத் தலையீட்டை ஆப்கானுக்குள் வரவைத்து மறைமுகமாக சந்திக்க வாய்ப்பு உருவாகும் என்பது அவரின் கணிப்பாக இருந்தது. அதாவது இன்னொரு வியட்நாமை உருவாக்கும் முயற்சியாக அது இருந்தது. இந்த உடன்படிக்கையில் கார்ட்டர் கையெழுத்திட்டார்.
அமெரிக்கப் பொது மக்களுக்கு தெரியாமல் நடந்த இரகசிய பேச்சு இது. சீஎன்என், நியூயோர்க் ரைம்ஸ் உட்பட எந்த ஊடகத்திலும் இது வெளிவரவில்லை. (ஆப்கானிஸ்தானின் அரசை முஸ்லிம்விரோத அரசாக கண்ட முகாஜிதீன்களுக்கு பாகிஸ்தான் எல்லையில் வைத்து பயிற்சியையும் சி.ஐ.ஏ வழங்கியது.)
முகாஜிதீன்களின் Operation Cyclone என பெயரிடப்பட்ட இந்த இரகசியப் போர் 1979 யூலை மாதம் திடீரென தொடங்கியது. பாகிஸ்தான் எல்லையில் சிஐஏ யினால் பயிற்றுவிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்ட முகாஜிதீன்கள் அதிரடியாக ஆப்கானுக்குள் அதன் (சோவியத் சார்பான) அரசை வீழ்த்த உள்நுழைந்தனர். அமெரிக்கா எதிர்பார்த்தது போலவே 1979 டிசம்பர் மாதம் சோவியத் படைகள் ஆப்கானுக்குள் நுழைந்தன. அதாவது அமெரிக்காவின் பொறியுள் அகப்பட்டது. பனிப்போரின் இன்னொரு களமாக ஆப்கான் மாறியது.
“உத்தியோகபூர்வமான வரலாறு சோவியத்யூனியன் ஆப்கானுக்குள் (1979 டிசம்பரில்) நுழைந்த பின்பே சிஐஏ முகாஜிதீன்களுக்கு ஆதரவு கொடுத்தது என்றவாறாக இருந்தது. ஆனால் உண்மை முற்றாக வேறானது. யூலை 3ம் தேதியே கார்ட்டர் இந்த இரகசிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டுவிட்டார்.” என்கிறார் பாதுகாப்பு ஆலோசகர் Brzezinski. அன்றைய தினமே தான் கார்ட்டருக்கு எழுதிய கடிதத்தில் இது சோவியத் தலையீட்டை தூண்டிவிடும் என்று குறிப்பிட்டிருந்ததாகவும் சொல்கிறார்.
“இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்கு கவலைப்படவில்லையா?” என Brzezinski யை Obsevateur நிருபர் (15.1.1998) கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார். “அது ஒரு அற்புதமான யோசனை. இந்த உலகின் வரலாற்றில் எது முக்கியமானது; தலிபானா அல்லது சோவியத் ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியா?எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில முஸ்லிம்களா அல்லது மத்திய ஐரோப்பாவிலிருந்து விடுதலையடைந்து பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவருவதா?” என Brzezinski பதிலளித்தார்.
அமெரிக்காவும் ஐரோப்பாவும் எப்போதுமே தமது நலன் சார்ந்து மில்லியன் கணக்கான மக்களின் விவகாரங்களுக்குள் மூக்கை நுழைக்கின்றன. தாம் குற்றம் இழைக்கிறபோது அதிலிருந்து பாதுகாப்பு எடுத்துக்கொள்கின்றன. இது ஒரு மோசமான அரசியல்.
“அமெரிக்கா இந்த Operation Cyclone க்கு 6 பில்லியன் பணத்தை ஒதுக்கியது. ஐந்து இலட்சம் டொலர்களை நூறு டொலர் தாள்களாக எடுத்துச் சென்று பழங்குடித் தலைவர்களுக்கு பிரித்து வழங்கியது. பாகிஸ்தான் எல்லைக்குள் வைத்து முகாஜிதீன்களுக்கு பயிற்சியும் வழங்கியது” என அவுஸ்திரேலிய ஊடகவியலாளரும் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான John Piger எழுதினார்.
தோளில் வைத்து ஏவக்கூடிய 2300 ராக்கட் ஆயுதங்களை சிஐஏ முகாஜிதீன்களுக்கு வழங்கியது. ஆப்கானின் மலைப் பகுதிகளில் பதுங்கியிருந்தபடி, பறக்கும் சோவியத் உலங்கு வானூர்திகளை அடித்து வீழ்த்த இது பயன்பட்டது.
அமெரிக்கா முகாஜிதீன்களை பயங்கரவாதிகள் என சொல்வதில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்கள், கிளர்ச்சியாளர்கள் (விக்கிபீடியாவிலும் இதை காணலாம்) என விளிக்கிறது. எதிரி எனில் பயங்கரவாதி, நண்பன் எனில் போராளி என்று தமக்கு ஏற்றமாதிரி வளைத்து வரைவுசெய்யப்படுகின்றது.
கார்ட்டருக்குப் பின் றொனால்ட் றேகன் ஜனாதிபதியாகினார். 2.2.83 அன்று றேகன் முகாஜிதீன் தலைவர்களை வெள்ளை மாளிகையில் வைத்து சந்தித்தார். (அவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என றேகன் விளித்திருந்தார்). முகாஜிதீன்களில் அறியப்பட்ட ஒருவராக ஒசாமா பின்லாடன் இருந்தார். சவூதியைச் சேர்ந்த அடிப்படைவாதி பின்லாடனுடன் சிஐஏ சேர்ந்து செயற்பட்டது.
ஜேர்மனியும் முகாஜிதீன்களுக்கு உதவியது. 1979 இலிருந்து 1989 வரையான காலப் பகுதியில் ஜேர்மன் பயங்கரவாத எதிர்ப்புப் பரிவு GSG-9 எரிவாயு முகமூடிகள், இருளுக்குள் பார்க்கக்கூடிய கருவிகள், போர்வைகள், கூடாரங்கள் என்பவற்றை எல்லையிலுள்ள பாகிஸ்தான் பெசவார் என்ற இடத்திற்கு விமானம் மூலம் கொண்டுவந்து கொடுத்தது என தோமஸ் ஸ்பெக்மான் NZZ இல் (28.7.2011) எழுதியிருந்தார்.
1979 இலிருந்து ஆப்கான் மண்ணில் போர் செய்த சோவியத் யூனியனின் படைகளை கொர்பச்சேவ் கால சோவியத் அரசு திரும்பப் பெற தீர்மானித்தது. 8.2.88 இலிருந்து படைகள் வெளியேறத் தொடங்கின. 15.2.89 அன்று கடைசி சோவியத் இராணுவமும் ஆப்கான் மண்ணை விட்டு வெளியேறினர். இந்த யுத்தத்தில் 15000 சோவியத் இராணுவம் உட்பட ஒரு மில்லியன் பேர் பலியாகினர். பின்னர் ஆப்கானின் ஆட்சியதிகாரம் முகாஜிதீனின் வாரிசுகளான தலிபான்களிடம் போய்ச் சேர்கிறது. (முகாஜிதீன்களில் கணிசமான பகுதியினர் சுதந்திரப் போராட்டம் நிறைவுபெற்றதாக சொல்லி உதிரிகளாகப் பிரிந்து போயினர்).
இப்போ காட்சி மாறுகிறது. இரட்டைக் கோபுர தாக்குதல் நடந்து ஒரு மாதத்துள் (7.10.2001) அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன. விமான மூலம் குண்டுவீச்சுகளை நடத்தின. இதுவும் ஐநா ஒப்புதல் பெறாத தாக்குதல்; அதாவது போர். “அமெரிக்கா தன்னை பாதுகாக்க உரிமை இருக்கிறது” என ஐநா சொன்னது.
நான்கு அமெரிக்க தலைவர்கள் இந்தப் போருடன் சம்பந்தப்பட்டவர்கள். புஸ் தாக்குதலை ஆரம்பித்தார். 8 வருடம் ஜனாதிபதியாக இருந்த ஒபாமா ஆப்கானில் drone தாக்குதல் மூலம் குழந்தைகளை கொன்றவர். சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார். பின் ட்ரம்ப் வந்தார். போரைத் தொடர்ந்தார். கடைசியாக பைடன் வந்தார். அவர் இராணுவத்தை ஆப்கானிலிருந்து திரும்பப் பெற்றார்.
இந்த 20 வருட போரில் 2400 அமெரிக்க இராணுவத்தினர் உயிரிழந்தனர். 240’000 ஆப்கானிய மக்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கண்ணிவெடிகள் விதைக்கப்பட்டிருக்கின்றன. அங்கவீனமடைந்த குழந்தைகள் ஏராளம். மேற்குலகத்தின் அரசியல் தலைமைகள் இந்த போர்க் குற்றங்களை செய்தன. குறிப்பாக இதில் சம்பந்தப்பட்ட அமெரிக்காவின் நான்கு தலைவர்களும் மோசமான குற்றமிழைத்தவர்கள். இந்த போர்க் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. விசாரிக்கப்படவும் இல்லை. ஆனால் julian Paul Assangeஅவர்கள் சிறையில் வாடுகிறார்.
அவுஸ்திரேலியா தன் பங்குக்கு 26000 இராணுவத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. அவர்கள் நாயை பாவித்து ஆட்களை மோப்பம் பிடித்து கொன்றார்கள்.
ஜேர்மன் 12 பில்லியன் யூரோக்களை இந்தப் போரில் செலவுசெய்தது. ஜேர்மன் CDU கட்சி போரை செய்தது. இவர்களுடன் கைகோர்த்து (SPD) சோசலிசக் கட்சியும் பசுமைக் கட்சியும் நின்றது வேதனையளிக்கவல்லது. அஞ்சலா மேர்க்கல் 4.11.2007 அன்று ஆப்கான் போய் இராணுவத்தை சந்தித்தார். நான்கு முதல் ஆறு மாத கால சுழற்சிமுறையில் மொத்தம் 160’000 ஜேர்மன் இராணுவத்தினர் ஆப்கானில் இருந்திருக்கின்றனர். ஆனால் வெறும் 59 இராணுவத்தினர் மட்டுமே உயிரிழந்திருக்கிறார்கள். 20 வருட போரில் இவளவு குறைந்த இராணுவம் பலியாகியது என்பது கவனிக்கப்பட வேண்டியது. அவர்கள் முன்னரங்கில் நிற்காமல் தமது செயற்பாடுகளை முகாமுக்குள் மட்டுப்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. 2006 நவம்பரில் ஜேர்மனியின் Spiegel பத்திரிகை ஜேர்மனிய இராணுவத்தினர் கொலைசெய்ய கற்கவேண்டும் என எழுதியது.
இந்தப் போரில் ஈடுபட்ட Erik Edstrom என்ற இராணுவத்தினன் “நாங்கள்தான் போரை ஆரம்பித்தோம். நாங்கள் அவர்களின் நாட்டை தாக்கினோம். ஆக்கிரமித்தோம். யாருக்குத் தெரியும், நான் அந்த நாட்டுக்காரனாக இருந்தால் எப்படி எதிர்கொண்டிருப்பேன் என!. நானும் ஆயுதம் ஏந்தியிருக்கக் கூடும்” என சொல்கிறார். Un-American: A solidier’s Reckoning of our longest war என்ற தனது நூலில் அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
அமெரிக்க இராணுவ ஜெனரல் Dan MCNeill “நாங்கள் போதுமானளவு பேசியாயிற்று. ஆனால் எங்களிடம் திட்டம் எதுவும் இல்லை. வெற்றி என்றால் என்னவென்று வரைவுசெய்ய நான் முயன்றேன். ஆனால் அது என்னவென எவரும் சொன்னாரில்லை” என சொல்லியிருந்ததாக (11.12.2019) ஜேர்மன் சஞ்சிகை Spiegel எழுதியிருந்தது.
அமெரிக்கா உட்பட்ட அந்நியப் படைகள் வெளியேறியபோது ஆப்கான் ஜனாதிபதி அஸ்ரப் கானி UAE க்கு (15.8.21) பறந்தார். யாரும் எதிர்பாராதபடி பதினொரு நாட்களில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து காபூல் வரை முன்னேறியிருந்தனர். காபூலிலிருக்கும் ஜனாதிபதி மாளிகையை தலிபான்கள் கையகப்படுத்தினர்.
வியட்நாம் போர் போலவே ஆப்கானிஸ்தான் மீதான 10 வருட சோவியத்யூனியனின் போரும் 20 வருட அமெரிக்க கூட்டுப் படைகளின் போரும் அவர்களுக்கு தோல்வியையே பரிசளித்தன.
“தலிபான்கள் மீண்டும் நாடு முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். அது மிக மிக கசப்பான மாற்றம். நாம் திட்டமிட்டபடி எதுவும் நடந்து முடியும் அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை” என அஞ்சலா மேர்க்கல் கூறினார்.
மேலும் அவர் சொல்கிறார், “20 வருடம் நாம் அமெரிக்காவோடு இழுபட்டோம். அது நாம் இழைத்த தவறு. 12 பில்லியன் யூரோக்களை இழந்தோம். இனி ஜேர்மன் இராணுவம் உள்நாட்டுக்குள்தான் நிலைகொண்டிருக்கும். ஜேர்மனின் பாதுகாப்புக் குறித்து மட்டுமே கவனம் செலுத்தும்” எனவும் கூறினார்.
20 வருசத்துக்குப் பிறகு இப்படி தாம் திட்டமிட்டபடி நடக்கவில்லை. அதிர்ஸ்டம் வாய்க்கவில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். இதை அடிக்கோடிட்டு ஒன்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன். எமக்கு சுயசிந்தனை மிக முக்கியமானது. புத்திசாதுரியமானது என நம்பும் எந்த அரசாங்கத்தையும்கூட நாம் நம்புவதற்கு ஒரு காரணமுமில்லை. ஆப்கான் மக்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்போம். எப்படி தெரியும் என கேட்டால் அது பத்திரிகையிலை வந்தது… ரிவி சொல்லிச்சு. அவர் சொன்னார்… இவர் சொன்னார் என பதிலளிப்பதில் அர்த்தமில்லை. ஊடகங்கள் வெளிப்படுத்துவதை அப்படியே நாம் மாற்றமின்றி நுகரக்கூடாது. பகுத்தாயும் தன்மையுடன் சுயசிந்தனையில் நாம் ஒவ்வொருவரும் நடந்துகொள்வது முக்கியம் எனவும் சிந்தனையையும் உணர்வையும் கவனப்படுத்த வேண்டும் எனவும் டானியல் கன்சர் தனது உரையை முடிக்கிறார்.
- ரவி (02102021)
- Thanks : Daniel Ganser
- photos: copied from Daniel Ganser’s VDO
உண்மைகள் உறங்குவதில்லை ! பயனுள்ள பதிவு , தங்கள் முயற்சி தொடர வாழ்த்துகள் .
அருமை, நன்றி