முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக அமர்த்தப்பட்ட ஹிஷாலினியின் மரணம் உயிர்த்தெழும்பியிருக்கிறது. அது ஒரு குறியீட்டு வடிவமாக மாறியிருப்பதே அதன் சிறப்பம்சம். அது ஹிஷாலினிகள் குறித்த கரிசனையையும், பொதுவெளிக்குள் நிகழ்த்தப்படும் எதிர்ப்புணர்வுகளையும் வெளிப்படைத்தன்மையையும்; -தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுள்- நிகழ்த்திக்கொண்டிருப்பது முன்னோக்கிய ஒரு மாற்றம்தான். அது கொலையா அல்லது தற்கொலையா என்பதை அரசியல் தலையீடுகளற்றதும் நேர்மையானதுமான பொலிஸ் விசாரணையும் நீதிமன்றமும்தான் புலப்படுத்த முடியும்.
பல கோணங்களில் இது குறித்த பார்வைகளும் வியாக்கியானங்களும் எழுந்து ஒரு உரையாடற்களமாக மாறியிருக்கிறது நல்ல சகுனம். இந்தவகை சமூக அசைவியக்கம் முக்கியமானது. தமிழ்ச் சமூகத்துள் இருந்த லும்பன் கூட்டமொன்றால் வித்யா என்ற பாடசாலை மாணவி சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டபோது, எல்லா இனங்களையும் சேர்ந்த மக்கள் வீதிக்கு வந்து குரல் எழுப்பினார்கள். பாடசாலை மாணவ மாணவிகள் திரண்டு வீதிக்கு இறங்கினர். முக்கிய சிவில் சமூக நிறுவனங்களில் ஒன்றான பாடசாலையிலிருந்து -மொழி, மதம், இனம் கடந்து- இந்தக் குரல் ஓங்கி ஒலித்தது. அரசியல் பயன்படுத்தலுக்கு வெளியே இலங்கைச் சமூகத்துள் இந்த உள்ளுடன் உயிர்ப்போடு இருப்பது போற்றுதற்குரியது. இப்போ ஹிஷாலினிக்கும் வீதியில் கணிசமானளவு மக்கள் இறங்கிக் குரல் கொடுக்கிறார்கள்.
இன்னொருபுறம், மறுதலையாகவும் சமூகத்துள் ஒரு போக்கு உள்ளது. ஓர் அநியாயம் நடக்கிறபோது அதில் பாதிக்கப்படுபவர்களை குற்றவாளியாக்குகிற மனோபாவம் -இந்த சமூகத்தில் ஒரு பகுதியினருக்கு அல்லது ஒரு பகுதி அறிவுசீவிகளுக்கு- இருக்கிறது என்பதே அது. அந்த யுவதியின் பெற்றோரின் பொறுப்பின்மை, அவர்களது ஒழுக்கம் அது இது என சப்பைக்கட்டு கட்டுவது அபத்தமானது. அரசியல் அதிகாரம் மற்றும் மேல்வர்க்கக் குணாம்சம் அல்லது திமிர் என்பவற்றின் பிரதிநிதிகளில் ஒருவராக இருக்கும் பதியுதீன் மாதிரிகளுக்கும், வறுமை கொணர்ந்து பணிப்பெண்ணாக நிறுத்திய விளிம்புநிலை மாந்தரான ஹிஷாலினிகளுக்கும் இடையில் நின்று பேசுவது ஒரு சமரசமான தளமாக இருக்க முடியாது. இரு வேறு தளங்கள் அவை. அதை சமப்படுத்தி “இங்கும் பிழை அங்கும் பிழை” என சமப்படுத்த முடியாது. இன்னும் சொல்லப் போனால், சட்ட ரீதியிலும் அரசியல் யாப்பிலும் சமூக பொறுப்புணர்விலும் சிறுவர் உரிமைகளை உயர்த்திப்பிடிக்க கடமைப்பட்டுள்ள அரசின் பிரதிநிதிகள் அல்லது அதில் அங்கம் வகிப்பவர்கள் செய்கிற தவறுகளுக்கான எதிர்வினை பலமானதாக இருக்க வேண்டும். அழுத்தம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். அதற்கான சமூக எழுச்சிகள் வீதிக்கு மக்களை இறங்கவைத்து குரல்கொடுக்க வைக்க வேண்டும். அது ஹிஷாலினி விடயத்திலும் நடப்பது ஒரு சிறு ஆறுதல்.
தமிழ் முஸ்லிம் சிங்கள அரசியல்வாதிகளில் கணிசமான பகுதியினர் இது குறித்து கள்ள மௌனம் சாதிப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. தங்களது கோடிப்புறத்துள்ளும் யாராவது லைற் அடிச்சுப் பார்த்துவிடுவாங்களோ என்ற அச்சம் அவர்களது மூளைப் பொந்துகளுக்குள்ளால் ஓடித்திரியத்தான் செய்யும். அதேபோல மதம் கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து சிந்திக்க வலுவற்றவர்கள் இன்னமும் வால் புகுந்து கொள்ள முடியாமல் இடறுப்பட்டுக்கொண்டிருக்கும் எலியை பார்த்தபடி இருக்கிறார்கள்.
பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் ஒப்பீட்டளவில் உயர்ந்த உத்தரவாதத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கும் மேற்குலகம் சட்ட ரீதியில் இயற்றிவைத்திருக்கும் சிறார்களுக்கான உரிமைகள், கல்வி வாய்ப்புகள் என்பன கீழைத்தேய விளிம்புநிலை சிறார்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. வயதெல்லை அடிப்படைகள் உடலுழைப்பிலும் உளவளத்திலும் பொருந்துவதில்லை. அதாவது எதற்கும் உத்தரவாதமற்ற நிலையில் சிறார்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் இருக்கிறது. அதனால் அந்த ஒழுங்குகளை மட்டும் முன்வைத்து ஹிஷாலினியிடமும் அவளது பெற்றோரிடமும் பேச முடியுமா என யோசிக்க வேண்டியிருக்கிறது. நிராகரிக்கப்பட முடியாததும் பொதுமைப்படுத்தப்பட்டதுமான ஒரு அளவையாக அதை நாம் எடுத்துக்கொண்டாலும், கீழைத்தேய நிலைமையில் அது இடறுப்படுவதையும் (அதாவது அதன் பொருத்தப்பாடின்மையையும்) நாம் கணக்கில் எடுத்தாக வேண்டியிருக்கிறது.
வேளாவேளைக்கு தீவனம் போடுவது முந்திப் பிந்தும்போது வயிற்றினுள் உணர்வதை ஒரு பணக்கார (அல்லது மேற்குலக) மனிதஜீவி ‘பசி’ என புரிந்துவைத்திருப்பதற்கும், வயித்தைக் கட்டி வாயைக் கட்டி வயிற்றினுள்ளிருந்து மூளைக்கு போகிற வழியெங்கும் போராட்டம் நடத்தும் உணர்வாக ஒரு ஏழை பசியை புரிந்து வைத்திருப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.
ஹிஷாலினி சிறுமியாக இருக்கும்போது வேலைக்கு அனுப்பியது பிழை, பாடசாலைக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பியது பிழை என்றவாறாக பெற்றோர் மீது அதாவது பலியாகிப்போனவர்கள் மீது ஒருவர் நொந்துகொள்வது என்பது அதிகபட்சம் அவர்களது வறுமை நிலையை கவனத்தில் எடுத்து பேசுவதை உள்ளடக்கி இருக்கலாம். ஆனால் இவைகளை பொறுப்பின்மை என்பதோ, குற்றச்சாட்டாக முன்வைப்பது என்பதோ பசியையோ ஏழ்மையையோ உணர்வுபூர்வமாக புரிந்துகொள்ளாத தன்மை கொண்டது. தனது பிள்ளையை ஒருசில டொலர்களை பெற்றுக்கொண்டு ‘வாழ்வுமாற்று’ (Adoption) செய்யுமளவுக்குக்கூட வறுமை தரகராகப் போய்விடும் அவலம் நிகழ்கிறது. வறுமை கொடியது. ஹிஷாலினியின் வாழ்வும் அதே வறுமைத் தடத்தில் பயணித்தது. வறுமையின் கொடுமையை அறிவால் வியாக்கியானப்படுத்தத்தான் முடியும், புரிந்துகொள்ள முடியாது.
கீழைத்தேய நாடுகளில் மில்லியன் கணக்கான சிறார்கள் ஆலைகளில், கல்லுடைப்பதில், கட்டுமானப் பணிகளில், கம்பளம் பின்னுவதில் என பலவித வேலைக் களங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இதை செய்கின்ற அல்லது கண்டும் காணாமல் இருக்கின்ற அரசாங்கங்களையும் அரசு அமைப்பு முறைகளையும் -உச்சபட்ச சனநாயகம் பேசும்- மேற்குலகமும் பயன்படுத்துகின்றன அல்லது கண்டும் காணாமல் இருக்கின்றன. அவர்களேதான் மிக அதிக அளவில் சிறார் உரிமைகள் பற்றி பேசுகிறார்கள். சிறார்களுக்கான சட்டம் ஒழுங்கு மனித மேம்பாடு பற்றியெல்லாம் வகுப்பு எடுக்கிறார்கள். அந்த மதிப்பீடுகளை மட்டும் வைத்து நாம் கீழைத்தேய ஹிஷாலினிகளை ஆய்வுசெய்வதில் போதாமை ஏற்படும்.
தனது பிள்ளை கல்வி கற்று மேலே வர வேண்டும் தாம் வறுமையிலிருந்து மீள அது உதவலாம் என்ற ஆசை எந்தப் பெற்றோருக்குத்தான் இல்லை? குழந்தைகளை வேலைக்கு அனுப்பி பிழிய எந்தப் பெற்றோருக்கு (குறைந்தபட்சம் எந்தத் தாய்க்கு) ஆசை இருக்கிறது? அப்ப பிரச்சினை எங்கு இருக்கிறது. இந்த வக்கற்ற அரசுகளும், (குடும்பம், பாடசாலை போன்ற) சிவில் சமூக நிறுவனங்களும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை.
விளிம்புநிலை மனிதரை இவ்வாறான வேலைக்கு அமர்த்துவதன் மூலம் ஒரு நவீனகால அடிமை முறையை வீட்டுக்குள் பேண பணக்கார அல்லது அதிகார வர்க்க பங்காளிகள் வெட்கப்படுவதில்லை. மாறாக வேலைகாரர்களின் எண்ணிக்கையை வைத்து தமது பவுசு நிலையை அடையாளப்படுத்துகிறார்கள். அதுமட்டுமன்றி, அதிகார நிலையில் தமக்கு மேலானவர்களுக்கு -விருப்பமின்றியே- நான்கு சுவருக்குள் கைகட்டி நின்று வளைந்து நெளியும் இவர்களுக்கு அந்த ஆற்றாமையை குடும்ப நிறுவனத்துள் பின்னிணைப்பாக உள்ள பணிப்பெண்களின் மீது நிகழ்த்தி திருப்தி காணும் களமாகவும்கூட இந்தவகை செயற்பாடுகள் இருந்துவிடுகின்றன.
மிக மலிவான கூலி, அதிக வேலை, கட்டளைகளுக்கு கீழ்ப்படிதல், எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாமை, தனிமைப்படுத்தப்பட்ட நிலைமை என வீழ்த்தப்பட்டிருக்கும் விளிம்புநிலை மனிதர்களை குறிவைக்கும் பணக்கார வர்க்கத்தின் இந்த பணியாள் முறைமை சட்ட ரீதியில் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். மேற்குலகில் பணக்கார குடும்பங்களில்கூட நிரந்தரமாக வீட்டில் பணியாட்களை அமர்த்தும் முறைமையே கிடையாது. வழமையான வாழ்வில் அவர்களே ரொயிலற் துப்பரவாக்கல் உட்பட (இதை குறிப்பிட்டு எழுதுவதில் ஒரு சாதிய மனநிலை இருப்பதாகவே படுகிறது) எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ரொயிலற் கழுவி மேற்குலகில் தமிழர்கள் உழைப்பதாக டயலக் விடும் மனநிலை உள்ள ஒருவர் பணக்கார வர்க்க அல்லது அதிகார வர்க்க அந்தஸ்தைப் பெறும் சந்தர்ப்பங்களில் இந்த வேலைகளுக்கு நிரந்தர பணியாளை அமர்த்தவோ கீழ்நிலையில் நடத்தவோ பின்நிற்கப் போவதில்லை.
வெறும் மனிதாபிமான அடிப்படையில் ஹிஷாலினியின் பிரச்சினைக்கு குரல் கொடுப்பதையும் தாண்டி நாம் சிந்திக்கும்போதே தனிநபர் மனநிலையை மட்டுமல்ல சமூக மனநிலையையும் நாம் கேள்விக்கு உட்படுத்தி சரிசெய்து முன்செல்ல முடியும்!
*
இணைப்பு :
மலையகத்தைச் சேர்ந்த ஹிஷாலினி என்ற 16 வயதுச் சிறுமி றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக தரகர் ஒருவர் மூலம் கொண்டுவரப்பட்டவள். 2021 யூலை மாதம் 3ம் தேதி அவள் உடலில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். காலை 06:45 க்கு ஏற்பட்ட இந்த கொடுமை அவளை 08:20 க்குத்தான் வைத்தியசாலைக் கட்டிலில் கிடத்த அனுமதித்தது என செய்திகள் தெரிவிக்கின்றன. அவள் 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். அவள் தன்னைத் தானே எரியூட்டி தற்கொலை செய்ய முயற்சித்தாள் என்று முதலில் வந்த செய்தி உடைந்துபோயிருக்கிறது. அந்த உடைப்பு இது கொலையா தற்கொலையா என நீதிமன்றத்தில் வழக்காட வந்திருக்கிறது. நீதி எழுமா வீழுமா அல்லது ‘வரும் ஆனால் வராது’ என்றாகுமா?
- ரவி 31072021