மேற்குலகம் நோக்கி நாம் (தமிழர்கள்) போரினால் புலம்பெயர்ந்து அதிக பட்சம் முப்பத்தியேழு வருடங்களாகிறது. இந்த முதல் சந்ததி இப்போ இரண்டாவது முன்றாவது சந்ததிகளாக விரிடைந்திருக்கிறது. முதலாம் சந்ததி குறித்து பருண்மையாக சொல்வதெனில் ஓர் ஒடுங்கிப்போன சமூகமாக தமக்குள் குறுகியே அது இயங்கிவந்திருக்கிறது. இந்த ஒடுங்கிப் போதலுக்கு கணிசமானவர்கள் தமிழன் என்ற பெருமிதத்தை அல்லது (இந்துப்) பண்பாட்டை தமக்குள் உயர்த்திப்பிடிப்பதானது உளவியல் ரீதியில் சுயதிருப்திகொள்ள வைக்கிறது. செவ்வாய்க் கிரகத்தை றோவர் தரைதொட்டபோது உலகம் குதூகலித்துக் கொண்டிருக்க, நாம் (தமிழிச்சியாக இல்லாதபோதும்) ஸ்வாதி மோகனின் நெற்றியில் பொட்டைக் கண்டு குதூகலித்தோம்.
ஒடுங்கிப்போன சமூகமாய் வாழும் நாம் (மூத்த தலைமுறை) இந்த மேற்குலக சமூகத்தை ஊடுருவி பெறும் அனுபவங்களும் அறிவும் கொண்ட இளம் தலைமுறையிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
மேற்குலக மனிதர்களோடு பண்பாட்டோடு ஒரு தகவமைதலை (integration) தமிழ் அகதிகள் சமூகம் ஏற்படுத்துவது என்பது தேவைகளின் எல்லைக்குள்ளேயே நகர்கிறது. தகவமைதலின் போதான ஒத்திசைவையும், முரண்பாட்டையும் கொண்டு தமிழ்ச் சமூகம் மேற்குலக சமூகத்துள் போதியளவு ஊடாட்டம் கொண்டதாக இல்லை. தன்னை வளர்த்துக்கொண்டதாக இல்லை எனலாம். அது பொருளாதாரத் தேவை, கல்வித் தேவை, நிர்வாகத் தேவை, வாழ்வாதாரத் தேவை என்பவற்றுள் மொழியறிவை குறுக்கிவைத்திருக்கிறது. கலை இலக்கியம், தத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் சார்ந்த அறிவுத்தள மொழித் தேர்ச்சி அடையவில்லை. அதற்கான முயற்சி அல்லது விருப்புக் கொண்டதாக அது இருக்கவில்லை.
இந்த நாடுகளின் அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கிறவர்களும், அரங்கியல் சார்ந்த கலைத்துறையில் கூட்டாக ஈடுபடுகிறவர்களும் மூத்த தலைமுறையில் மிகச் சிறிய பகுதியினராக இருக்கிறார்கள். அவர்கள் ஒப்பீட்டளவில் அதிகளவுக்கு தகவமைதல் (integration) களத்துள் இயங்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அவர்கள் பண்பாட்டு முரண்பாடுகளையும் நிறவெறியின் இயங்குதலையும் அனுபவங்களினூடு பெறும் சந்தர்ப்பம் அதிகளவில் இருக்கிறது.
நம்மில் பெரும்பாலானவர்களும் இலங்கையில் போதிய கல்வியைக் கற்றிருந்த போதிலும் மொழியின் அவசியம் குறித்த அறிவு போதாமையாகவே இருந்தது. இது எமது கல்விமுறைமையின் குறைபாட்டால் விளைந்தது என நினைக்கிறேன். மிகச் சிலரே தாம் வந்தமர்ந்த நாட்டின் மொழியை கற்றறிந்தனர். இந்த மொழியறிவை கூலித்தொழிலுக்கான எல்லைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருக்க சில நாடுகள் சூட்சுமமாக நடந்துகொண்டது என்பதை மறுப்பதற்கும் இல்லை. என்றபோதும் அதைத் தாண்டிப் போய் தேடிப் படிக்க எமக்கு எல்லா வசதிகளும் வாசல்களும் திறந்தே கிடக்கின்றன. ஆனால் நாம் காலடியை எடுத்து வைக்கவில்லை.
இப்போ இரண்டாம் சந்ததி இந்த எல்லையை தகர்த்து போயே ஆகவேண்டும் என்பதால் போய்க்கொண்டிருக்கிறது. அது தனது அறிவின் எல்லையை விசாலமாக்கிக்கொண்டு எம்மை (மூத்த தலைமுறையை) தாண்டி போகிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பயணம் தலைமுறை இடைவெளியை விசாலமாக்குவதால் கதியால் வேலிக்குள் சுழன்று திரியும் மூத்த தலைமுறையைச் சேர்ந்த நாம் பிள்ளைகளை கையாள முடியாமல் அல்லது புரிந்துகொள்ள முடியாமல் அவசியமற்ற முரண்பாடுகளை ஏற்படுத்திவிடுகின்றோம். பல்வேறுபட்ட துறைகளில் படிப்பதற்கான வசதிகளும் அதுசார்ந்த வேலைவாய்ப்புகளும் உத்தரவாதங்களும் இருக்கிறபோதும் பொறியிலாளர் அல்லது வைத்தியர் என்ற இலக்கை நோக்கி மட்டும் பிள்ளைகளை ஏவும் விருப்புடையவர்களாக பலரும் காணப்படுகிறோம். இதுபற்றி விரிவாக நாம் பேசவேண்டிய விடயங்கள் உள்ளன. (இப் பதிவு அதற்கானதல்ல).
ஒடுங்கிப்போன சமூகமாய் வாழும் நாம் (மூத்த தலைமுறை) இந்த மேற்குலக சமூகத்தை ஊடுருவி பெறும் அனுபவங்களும் அறிவும் கொண்ட இளம் தலைமுறையிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அவர்களிடமிருந்து மட்டுமல்ல வாழ்வு நெடுகிலும் நாம் கற்றுக்கொண்டே இருக்கும் இயங்கியல் நிலை ஒன்றுதான் இருக்க முடியும். அடியையும் முடியையும் யாரும் எட்டவே முடியாது. இந்தப் புரிதல் மனிதர்க்கு முக்கியம். எல்லாம் தெரிந்ததுபோல் மேவி கதைப்பவர்களும், ‘சும்மா அதிருது பார்’ என்றவாறான வசனங்களை உதிர்க்கும் இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் என்னளவில் அறிவதிகாரம் கொண்டவர்கள் அல்லது ஏமாற்றுக்காரர்கள். “எனக்கு ஒன்றேயொன்றுதான் தெரியும். அது என்னவெனில் எனக்கு ஒன்றுமே தெரியாது என்பதுதான்” என்று சொன்னவர் சோக்கரட்டீஸ். இது தன்னடக்கம் அல்ல. தேடலின் அவசியத்தையும் அதன்மூலம் புதிதுபுதிதாக பெறப்படும் அறிவையும் இற்றைப்படுத்துதலையும் முக்கியத்துவப்படுத்துகிற கூற்று. தமிழில் “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு” என அழகாகவே சொல்லிவைத்திருக்கிறார்கள்.
பெருநகரங்களுக்குள் தமிழர்கள் ஒன்றாக செறிந்துவாழும் பிரதேசங்களுக்குள் ஒடுங்கி வாழ்வை வாழ நேர்ந்தவர்களுக்கு மேற்குலக பண்பாட்டோடு வெள்ளை மேலாதிக்கத்தின் நுண்களங்களோடு உரசும் சந்தர்ப்பம், அதனூடாகப் பெறும் அனுபவம், உணர்வுநிலை மிகக் குறைவாகவே இருக்கும். இதுவல்லாது, சில மேற்குலக நாடுகளின் சமூகங்களுக்குள் எமது சுயவிருப்பின்றி கிராமப்புறங்கள் வரை பரத்தி உதிரியாக விடப்பட்டவர்கள் நேரடியாக மேற்குலகச் சமூகத்துள் அனுபவங்களையும் முரண்களையும் பெறும் சந்தர்ப்பம் -ஒப்பீட்டளவில்- அதிகம் என்றபோதும், அவர்களும் ஒருவித ஒடுங்கிய உதிரிச் சமூகமாக வாழ்வதை அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில் புகலிட இலக்கியத்தின் கதையாடற் களம் பிளேன் ஏறி வன்னிக்கும் தமிழர் பகுதிக்கும்தான் போக முடியும். அது போகட்டும். பிரச்சினையில்லை. அவை போர் இலக்கியம் என சுட்டப்படுகின்றன. ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அது புகலிட இலக்கியம் ஆகுமா என்பதே கேள்வி. போரிலக்கிய முயற்சிகள் மறுதலிக்க முடியாதவை. அது அவசியம் பதியப்பட வேண்டியவை. அதையெல்லாம் புகலிடத்திலிருந்து எழுதக்கூடாது என்று சொல்ல முடியாது. மாறாக அதற்கு மேலதிக ஒரு பரிமாணமும் தோன்றலாம் என்பதால் தமிழிலக்கியத்துக்கு அது ஒரு வரவுதான். ஆனால் அது உள்ளடக்கத்தில் புகலிட இலக்கியமாகா.
விடுமுறைக்கு இலங்கைக்குப் போகிற நாம் திரும்பி புகலிடம் வரும்போது வீடேகும் உணர்வு வருவதில்லையா என்ன. இலங்கைக்கு போகும்போது வீடேகும் மனநிலை இருக்கிறதா சுற்றுலா மனநிலை இருக்கிறதா என நேர்மையாகப் பேசப் பழக வேண்டும். சுற்றுலா என்பது இலங்கையை சுற்றிப் பார்த்தல் என்ற அர்த்தமல்ல. அது உளவியல் தேவையை நிறைவுசெய்ய இலங்கைசார் சூழலையும் உறவுகளையும் தேடிப் போதல் என்பதாகும். ஆக இருப்புக்கான இடமாக மேற்குலகத்தில் சிக்குப்பட்டு (அல்லது நாமே தேர்வுசெய்து) இருந்தாலும், எமது மனக்கட்டமைப்பு இலங்கைவாழ் மனநிலையிலிருந்து அதிகம் மாற்றம் பெறாததாகவே இருக்கிறது. அதனால் எமது இலக்கியமும் இலங்கைக்கே கவண் எறிகிறது.
ஆனால் நாட்டில் வாழ்ந்ததை விடவும் அதிக காலம் (அதுவும் இளமைக்காலம்) புகலிடத்தில் இருக்கிறோம். அந்தந்த நாடுகளில் பிரசாவுரிமையும் பெற்றுவிட்டோம். ஏன் காணிநிலம் வீடுவளவும் கூட வைத்திருக்கிறோம். பெரும்பாலானவர்களும் ஊருக்கு திரும்பிப் போய் வாழத் தயாரில்லை. அதாவது இருப்பு உத்தரவாதப்படுத்தப் பட்டிருக்கிறது. மனித இனத்தின் போராட்டம் என்பதே இருப்புக்கானதுதான். அது வேர்களாகப் பரவி தலைமுறைகளுக்கூடாக பரவத் தொடங்கிவிட்டது. அதை பெயர்த்து இலங்கைக்கு எடுத்துச் செல்வது அவளவு இலகுவானதுமல்ல. வேண்டுமானால் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் திரும்பிப் போதல் சாத்தியமாக இருக்கலாம்.
நாம் வாழுகிற இந்த மண்ணில் எதிர்நோக்குகிற (பண்பாட்டு முரண், நிறவெறி, வெள்ளையின மேலாதிக்க சிந்தனை அல்லது ஐரோப்பிய மையவாத மனக்கட்டமைப்பு போன்ற) பிரச்சினைகளை நுண்ணுணர்வோடு பெற்றுக்கொள்ள நாம் தவறிவிடுவதால் புகலிட இலக்கியமும் தவறிவிடுகிறது. அவ்வாறான இலக்கியங்கள் குறைந்தளவிலேயே வந்திருக்கிறது. அடுத்த சந்ததியினூடாக ஒருவேளை புகலிட இலக்கியம் அதன் அர்த்தத்தில் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
புகலிடத்தில் இருக்கும் இலக்கியவாதிகளில் பலபேருக்கு அந்தந்த நாட்டின் இலக்கியம் குறித்த அல்லது இலக்கியவாதிகள் குறித்த அறிவு மிகவும் குறைவு அல்லது இல்லை. பெயர்களைக்கூட தெரியாமலும் பலர் இருக்கிறார்கள். காரணம் மொழி அறிவு இல்லாததும் ஒடுங்கி வாழ்வதும்தான். உலக இலக்கியங்களைப் படிப்பது என்பது பெரும்பாலும் தமிழ்நாட்டிலிருந்து வரும் தமிழ் மொழிபெயர்ப்பு மூலம்தான். மூலமொழிகளில் அல்லது ஆங்கிலத்தில் படிப்பது ஒரு சிறிய பகுதியினரே. இந்த மேற்குலக நாடுகளில் இருந்துகொண்டு இங்கே தோன்றி வளர்ந்த தத்துவங்கள் குறித்த நூலைக்கூட தமிழக மொழிபெயர்ப்புக்குள்ளால் படிக்கிற நிலையே நிலவுவது வருத்தத்துக்குரியதன்றி வேறென்ன.
யேர்மன், பிரெஞ்சு, இத்தாலி போன்ற மூல மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு பின் தமிழுக்கு என -ஏற்படக்கூடிய திரிபுகளுடன்- வரும் நூல்களை நாம் படிப்பது தவிர்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால் இவளவு தொகையான தமிழர்கள் மேற்குலகத்தில் வாழ்ந்துகொண்டு மூலமொழிகளிலிருந்து நேரடியாக தமிழுக்கு பெயர்ப்பது என்பது நமக்கு தரப்பட்டிருக்கிற நல்ல சந்தர்ப்பம். ஆனால் அது நடைபெறுவதில்லை. அத் தளத்தில் பாரிய முயற்சிகள் நிறைவேறினாலும் அதை நம்மில் எத்தனைபேர் கண்டுகொள்வோம் என்பதும் கேள்விக்குறியே. உதாரணமாக, பிரெஞ்சில் வாசித்து தேடலை மேற்கொண்டு வாசுதேவன் அவர்கள் தமிழில் எழுதிய பிரெஞ்சுப் புரட்சி போதிய கவனம் பெறவில்லை. (ஆனால் அது தமிழுக்கு புகலிடத்திலிருந்து கிடைத்த சொத்து). இதேபோல் வேறும் சில நூல்கள் மூலமொழிகளிலிருந்து நேரடியாக தமிழுக்கு பெயர்க்கப்பட்டிருக்கிறதா என எனக்குத் தெரியாது.
திரும்பத் திரும்ப நமது எழுத்தையும் அதைச் சுற்றிய விளக்கங்களையும் அளித்துக்கொண்டிருக்கிற நாம் எமது இலக்கியத்தில் எமது எல்லைகளை சரியாக மதிப்பிட்டால் எமது போதாமைகள் தெரியும். மொழியின் அவசியம் புரியும். அதுவே தேடலையும் வளர்ச்சியையும் தரும். தமிழுக்கும் தமிழிலக்கியத்துக்கும் வளம் சேர்த்தவர்களாவோம். அதிர்ச்சி மதிப்பீடுகளுக்காக வசவுச் சொற்களையும் மறுத்தோடுவதையும் இலக்கியத்தில் புனைவுகளாக கைக்கொள்வதே இன்றைய trend ஆக இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. புனைவு, அபுனைவு, உண்மை, யதார்த்தம் என்பவற்றுக்கிடையில் எல்லா மொழி இலக்கியப் பரப்பிலும் தொடர் விவாதங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கின்றன. அவை எம்மை எட்டுவதில்லை. இலக்கியக் கோட்பாடுகள் குறித்து, அழகியல் குறித்து, புனைவு குறித்து, நாம் சார்ந்த நாட்டின் எழுத்தாளர்கள் அவர்கள்தம் எழுத்துகள் என்றெல்லாம் பேசுவதற்குப் பதிலாக எமது எழுத்தைப் பற்றியே இடம்கிடைக்கும் போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மடையைத் திறக்கிறோம். அது பாத்திக்குள் தேங்கிவிடுகிறது.
80களிலும் 90களிலும் புகலிடத்தில் இருந்த விமர்சனப் பண்பாடு இல்லாமல் போய்விட்டதா என எண்ணத் தோன்றுகிறது. தமிழில் வரும் நூல்களுக்கான அறிமுகங்களே பொதுவாக எழுதப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்போதும் விமர்சனங்களை வைக்கிறவர்கள் சிறியளவில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு அவர்கள் பெற்றுக்கொள்ளும் பதில் ‘காழ்ப்புணர்வு’ என்பதுதான். அது அந் நூலை எழுதியவர்களின் வாசக இரகசிகர்களால் பெரும்பாலும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் நிலவும் எச்சசொச்ச விமர்சனப் பண்பாடும் இல்லாமலாக்கப்படுகிற நிலைதான் இருக்கிறது. விமர்சனத்தை எதிர்நோக்குபவர்கள் -விரும்பினால்- முன்வந்து பதிலளிப்பதற்குப் பதிலாக, வாசக இரசிகர்கள் பதிலளிக்க முன்வருவதையும் காண்கிறோம். உரையாடல்களின் இடத்தில் பதில்களை மட்டும் முன்வைப்பவர்கள் குறித்தே கூறுகிறேன்.
இலக்கியவாதிகள் தமது பிம்பங்களை தாமே செதுக்குவதைவிட அவர்களின் எழுத்துகள் செதுக்கட்டும். வாசகர்கள் நூல் குறித்த வாசிப்பைத் தொடங்கும்போது -தமக்குத் தெரிந்த- நூலாசிரியரோடு கைகுலுக்கிவிட்டு உள்ளே போவதை கைவிட்டு, சுதந்திரமாக முன் அனுமானங்களை சுமக்காமல் படைப்புக்குள் நுழைந்தால் “விமர்சனம்” பிறக்கும். இல்லையேல் நூலாசிரியரை மகிழ்ச்சிப்படுத்தல், குறைந்தபட்சம் பகைப்படாதிருத்தல் அல்லது மறுதலையாக படைப்பினுள் ஒவ்வாமையைத் தேடுதல், வலிந்து தாக்குதல் என ‘கிமர்சனம்’தான் பிறக்கும் !
குறிப்பு: நாம் தற்போது சரியெனவோ உண்மையெனவோ நம்புவதன் அடிப்படையிலேயே பேசிக்கொள்ள முடியும். பேசியிருக்கிறேன் – என்னையும் உள்ளடக்கியதாக! – ரவி
- 27022021
இதில் நீங்கள் தவறவிட்ட ஒரு பகுதி இருக்கிறது என்று நினைக்கின்றேன்.
நான் சுவிசில் அதிகம் விற்கப்பட்ட ஒரு விறுவிறுப்பான நாவலை தமிழ் மொழிபெயர்க்க தொடங்கி இடையில் இருக்கிறது. அதே போல் இன்னும் ஒரு புத்தகம் இடையில் இருக்கிறது.
தொடங்கியது முதல் ஆயிரத்தியெட்டு நடைமுறை சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கும்.
10-11 மணி நேரம் வேளைக்கு செலவிட்டு பின்னர் கிடைக்கின்ற நேரத்தை மொழிபெயர்ப்பதற்கு செலவிடுவது குடும்பஸ்தர்களிற்கு பிரச்சனையாக இருக்கும். மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் போதே இப்படி ஏற்கனவே மொழிபெயர்த்து வந்த புத்தகங்கள் அல்லது படைப்புகள் பொருளாதார ரீதியில் வெற்றிபெறாமல் போனது கண் முன் வந்து போகும்.
இதனை ஒரு “பகுதி” நேரமாக செய்வது மிகவும் கடினமானது. ஒரு வேலை தமிழர்களிற்கு என்று ஒரு அரசாங்கம் இருந்திருந்தால் இந்த வேலைகள் முக்கியமாக பொருளாதார ரீதியில் இலகுவாகாவும், உதவியாகவும் ஊக்கமாக இருந்திருக்கும்.