கொரோனாவும் சீனாவும்

  • டானியல் கன்ஸர்
Dr.Daniele Ganser, Historiker, Philosophie, Publizist

சுவிசின் அறியப்பட்ட வரலாற்றாசிரியர் டானியல் கன்ஸர் அவர்கள் 5 பெப்பரவரி இல் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று கொரோனா குறித்தான மிக முக்கியமான ஆய்வாக வந்திருக்கிறது. அந்த ஒன்றே முக்கால் மணி நேரக் காணொளியில் சொல்லப்பட்ட விடயங்களின் சுருக்கத்தை இங்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.

2020 இல் கொரோனாவால் மற்றும் கொரோனாவுடன் இறந்தோர் தொகை உலகளவில் 1.8 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. இது உலக சனத்தொகையில் 0.03 வீதம் மட்டுமேயாகும். தொடர்பூடகங்கள் உலக வரைபடத்தை சிவப்புப் புள்ளிகளால் நிறைத்து பயங்காட்டியளவுக்கு, ஒரு பெருந்தொற்று (pandemic) அல்ல கொரோனா!. அதேநேரம் முதுமை, புற்றுநோய், இதயநோய் போன்ற நோய்களாலும், போர்களாலும், விபத்துகளாலும் இறந்தோர் தொகை 50 மில்லியனாகும். இதேநேரம் 130 மில்லியன் குழந்தைகள் 2020 இல் பிறந்திருக்கிறார்கள். ஆக 130-50 = 80 மில்லியன் மக்கள் தொகை உலகளவில் அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை (80 மில்லியன்) யேர்மனியின் சனத்தொகைக்கு சமமானதாகும். இவற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும் என்கிறார்.

அவர் தனது ஆய்வுரையை

  1. வைரஸ் மீதான பயம்
  2. சர்வாதிகாரப் போக்கின் மீதான பயம்
  3. வறுமை மீதான பயம்
    என்ற வட்டங்களுக்குள் வரைவுசெய்கிறார். வைரஸ் மீதான பயத்தை மட்டும் வைத்துக்கொண்டு மற்றைய இரண்டையும் கவனத்திலெடுக்காமல் விடுவது தவறானது. மூன்றும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். இந்த மூன்று பயங்களும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுடனொன்று இணைந்தோ ஒவ்வொருவரிலும் செயற்படும். இதுபற்றிய கருத்துக்கணிப்பு எடுக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் இம் மூன்றினதும் சமநிலையை கணக்கிலெடுத்து அரசுகள் கொரோனாவுக்கு எதிரான திட்டமிடல்களை செய்ய வேண்டும் என்கிறார். சர்வாதிகாரப் போக்கு என்பதை சிவில் உரிமைகள் மறுப்பின் நீட்சியாக அவர் முன்வைக்கிறார். இது சர்வாதிகாரத்தை நோக்கிய பாதையாக போய்விடலாம் என்ற அச்சம் அவர்களை கொரோனா நிலைமையிலும் வீதிக்கு கொண்டுவந்து குரல் எழுப்ப வைத்திருக்கிறது என்பதே இதன் செய்தியாகும்.

வறுமை மீதான பயம் ‘லொக் டவுணினால்’ ஏற்படுகிற தொழிலாளவர்க்கத்தின் வேலையிழப்பினால் எற்படுகிறது. மிகவும் கட்டுப்பாடான வாழ்க்கை முறை கொண்ட யப்பானில் 2020 ஒக்ரோபர் மாதத்தில் மட்டும் 2153 தற்கொலைகள் வறுமை மீதான பயத்தினால் நிகழ்ந்திருக்கின்றன. இதேநேரம் அங்கு கொரோனாவால் இறந்தோர் தொகை ஜனவரியிலிருந்து ஒக்ரோபர் வரை 2087 ஆகும். அதாவது கொரோனாவை விட வறுமை மீதான பயத்தினால் ஏற்பட்ட இறப்பு மிக அதிகமாகும். இந்த தற்கொலையில் அதிகமும் வேலையிழந்த பெண்களே பலியாகியிருக்கிறார்கள்.

டென்மார்க், பிரான்ஸ், யேர்மன்,ஒஸ்ரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சர்வாதிகாரப் போக்குக் குறித்த அச்சத்தை வெளிப்படுத்தி கொரோனா காலத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடந்திருக்கின்றன. முழு சிவில் உரிமைகளை ஒரு நெடிய போராட்ட வரலாறினூடு பெற்ற இந்த சமூகங்கள் அவற்றை இழக்க தயாரற்ற நிலையில் கொரோனாவின் பெயரில் சிவில் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதை எதிர்க்கின்றன. வீட்டுக்குள் முடக்கப்படுவதையும் ஒன்றுகூடல் உட்பட சமூக அசைவியக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் தமது சிவில் உரிமைகள் மறுக்கப்படுவதை அவர்கள் எதிர்க்கிறார்கள். இதை வெளிப்படுத்துகிற விதத்தில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

பிலிப்பைன்ஸ் இல் சர்வாதிகாரி றொட்றிக்கோ டுற்றேர்ரே 2016 இலிருந்து ஆட்சிசெய்கிறார். போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களையும் அரசியல் எதிரிகளையும் சுட்டுத்தள்ளும் அவரது அணுகுமுறைக்கு கொரோனா கால லொக் டவுணை பாவிக்கிறார். சீனா தனது அதியுயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முகப் புலனாய்வு (FACE DETECTION) முறையை பாவித்து ஒவ்வொரு நபரதும் நடவடிக்கையை கண்காணித்தபடி இருக்கிறது. இதனால் அரசுக்கு எதிராகவோ அல்லது ஒரு கட்சி ஆட்சிமுறைக்கு எதிராகவோ மக்கள் செயற்படுவதை உயர் கண்காணிப்பின் மூலம் கொரோனாவின் பெயரில் செய்கிறது.

இதற்கு ‘லொக் டவுண்’ முறைமை பெரிதும் உதவுகிறது. 2020 ஜனவரியில் முதன்முதலில் லொக் டவுண் முறைமையை தொடக்கிவைத்தது சீனா. 23 ஜனவரி 2020 இலிருந்து 76 நாட்களுக்கு லொக்டவுண் முறைமைக்குள் வூகான் மாகாணத்தைக் கொண்டுவந்தது. 11 மில்லியன் சனத்தொகை கொண்ட இம் மாகாணத்தில் இது சாத்தியமா என பலரும் கேள்வியெழுப்பியபோது, ஒருவரது நடமாட்டம்கூட இல்லாமல் வூகான் வெறிச்சோடிக் கிடந்தது. காரணம் ஏற்கனவே இருந்த FACE DETECTION உம், SICIAL CREDIT SYSTEM என்ற முறைமையுமாகும். ஒவ்வொருவரது முகத்துக்கும் ஒவ்வொரு இலக்கத்தை வழங்கி அவர்களின் முழு நடமாட்டத்தையும் ARTIFICIAL INTELLIGENCY இனைப் பாவித்து கணனிகள் மூலம் தானியங்கியாக கண்காணிக்கும் முறை இதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. (சுருக்கம் கருதி அதிர்ச்சிதரும் SOCIAL CREDIT SYSTEM பற்றி இங்கு நான் எழுதவில்லை. இதுவிடயத்தில் கன்ஸர் முன்வைக்கும் தகவல்களை சரிபார்க்க வேண்டியிருப்பதே காரணம்).

முகப் புலனாய்வு பற்றி இலண்டனில் வசிக்கும் சீனக் கலைஞர் AIWEIWEI அவர்கள் குறிப்பிடுகையில், சனத்தை கூட்டாக கண்காணிப்பதையும், முக அடையாளத்தைப் பெற்று ஒவ்வொரு தனிமனிதரையும் கண்காணிப்பதையும் சீனா தொழில்நுட்பம் மூலம் நடைமுறைப்படுத்துகிறது. இதன்மூலம் மக்களது நடவடிக்கைகளை வேவு பார்க்கிறது, கட்டுப்படுத்துகிறது. அதேநேரம் ஐரோப்பாவும் அமெரிக்காவும் தனது மையநீரோட்ட தொடர்புசாதனங்களால் இதை இன்னொரு வடிவில் செய்கிறது. கேளிக்கை நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மூலம் அவரவர் தனது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கும் படியாக முழு மக்களையும் மூளைச்சலவை செய்துகொண்டிருக்கிறது. ஒருசில மனிதர்களே இங்கு சுயசிந்தனையில் இயங்குகிறார்கள் என AIWEIWEI குறிப்பிடுகிறார். “சீனாவில் மட்டுமல்ல எங்களது கவனமும் திசைதிருப்பப்பட்டே இருக்கிறது. வானொளி சொல்கிறது, பத்திரிகை சொல்கிறது, அரசு சொல்கிறது என எந்தவித கேள்வியுமின்றிஅவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைமைதான் பெருமளவில் இங்கு இருக்கிறது” என குறிப்பிடுகிறார் கன்ஸர். அதேநேரம் இங்கும் பெருமளவில் கமராக்கள் பொருத்தப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

செப்ரம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் என்.எஸ்.ஏ (NSA) உலகின் ஏழு பில்லியன் சனத்தினதும் தகவல்களை சேகரிப்பதில் ஈடுபட்டிருக்கிறது. அதேபோல அமெரிக்காவில் கையடையாளம், விழியமைப்பு போன்ற BIOMATRIC தரவுகளுடன் (2017 இல்) ID2020 என்ற அடையாள அட்டை முறைமையை உருவாக்கும் நோக்குடன் ஒரு தனியார் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. டிஜிற்ல் முறையிலான தகவல் சேகரிப்பைச் செய்யும் இந்த அடையாள அட்டையை உலகின் 7.8 பில்லியன் மக்களுக்கும் வழங்குவது பற்றிய திட்டமொன்றை அறிவித்தது. அதற்கு MICROSOFT உம் ROCKFELLE FOUNDATION உம் அனுசரணை வழங்கமுன்வந்தது. இந்த அட்டையில் ஒருவரது கல்வித்தரம், பதவி, நிதிநிலைவரம், ஏற்றப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் முகநூல் கணக்கு விபரங்கள் எல்லாம் பதிவாகியிருக்கும். (இது கொரோனா காலத்துக்கு முன்னான திட்டம் என்பது கவனிக்கத்தக்கது). இத் திட்டத்தை மறுத்து அன்று கரிஸ்பேர்க் இல் பெரும் பேரணி நடந்தது. தகவல் தொழில் நுட்பம் பெருமளவு வளர்ச்சியடையாமல் இருந்த காலத்திலேயே சுவிசில் 1948 இலிருந்து தனிநபர் குறித்த தகவல்களை சேரிக்கத்தொடங்கியிருந்தார்கள். 9 இலட்சம் பேரினது தகவல்களை தாள்களில் கோப்பு வடிவில் சேகரித்திருந்த விடயம் தெரியவந்தபோது, அதை எதிர்த்து 1990 இல் சுவிஸ் பேர்ண் இல் பெரும் பேரணி நடந்தது.

28.01.20 அன்று சீனாவுக்கு விஜயம் செய்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ரெட்றோஸ் சீனாவிலிருந்து திரும்பும்போது லொக்டவுண் முறைமையையும் எடுத்துக்கொண்டு வந்தார். 11.03.20 அன்று கொரோனாவால் இறந்தோர் தொகை உலகளவில் 4613 ஆக இருந்தது. இதில் சீனாவில் மட்டும் 3173. அதாவது மூன்றில் இரண்டு மடங்கு. இந் நிலையில் ரெட்றோஸ் மற்றைய நாடுகளுக்கு லொக் டவுண் முறையை அறிவுறுத்தி விசாலமாக்கினார். ஆனால் இந்த லொக் டவுண் முறைமை எந்தளவில் சரியானது என்பது கேள்விக்குரியது.

முகக் கவசம் உட்பட லொக் டவுண் முறைமையைக் கடைப்பிடிக்க ஆர்வம் காட்டாத சுவீடனில் இறப்பு வீதமானது லொக் டவுணைக் கடைப்பிடித்த நாடுகளைவிட மிகக் குறைவாகவே இருந்தது என புள்ளிவரங்களை கன்ஸர் ஆதாரமாக முன்வைக்கிறார். டிசம்பர் 23 இலிருந்து 28 வரையான காலப் பகுதியில் யேர்மனியில் 3504 பேர் கொரொனாவுக்குப் பலியாக, சுவீடனில் 381 பேர் பலியாகியிருக்கிறார்கள். இந்தக் கணக்கெடுப்பு ஒரு மில்லியன் பேருக்கு இத்தனை பேர் என்ற அளவீட்டில் எடுக்கப்பட்டது.

கொரோனா அரசியல் ஆயுதமாகவும் அதேநேரம் அதன் லொக் டவுண் முறைமை உளவியல் ரீதியில் தற்கொலை வரை அழைத்துச் செல்லுமளவுக்கு மனஅழுத்தங்களையும் உருவாக்கி வைத்திருக்கிறது. சுவிசில் கடுமையான மன அழுத்தங்களுக்கு உள்ளாகும் இளம் சந்ததியனரின் தொகை அதிகரித்திருக்கிறது. பிரான்சில் தற்கொலைக்கு முயற்சிக்கும் மாணவர்களின் தொகை 50 வீதத்தால் அதிகரித்திருக்கிறது என பிரான்சின் இளஞ்சந்ததிக்கான உளவியலாளர் நிபுணர் SERGE HEFEZ ஜனவரி 2021 இல் சுவிஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஜனவரியில் லொக் டவுண் முறைமையை அறிமுகப்படுத்திய சீனா ஓகஸ்டில் பல ஆயிரம் பேர் பங்குபங்குபற்றும் POOL PARTY இனை வூகானில் நடத்துமளவுக்கு போனது. ஆனால் இங்கு சுவிசில் இன்று 5 பேர் மட்டும் கூடலாம் என்றளவுக்கு நிலைமை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காணொளியை அதாவது இந்த ஆய்வுரையை கன்ஸர் தனது மனைவி மற்றும் கமரா படப்பிடிப்பாளர் உட்பட நான்கு பேருக்கு முன்னிலையில் செய்திருக்கிறார். அதாவது அவருடன் சேர்த்து 5 பேர்.

கொரோனா தடுப்பூசியைப் பொறுத்தவரை தான் ஒரு வரலாற்றாசிரியர் என்ற எல்லைக்குள் ஒரு முடிவுக்கு வர முடியாது எனவும் சில தகவல்களை மட்டும் தர முடியும் என்றார். 12.4.20 அன்று பில் கேற் இன்னும் 18 மாதங்களுக்குள் 7 பில்லியன் மக்களுக்கான தடுப்பூசியை உருவாக்கிவிட முடியும்; எனச் சொன்னார். ஆனால் அதையும்விட மிக மிக விரைவாக 10 மாதத்திலேயே அது சாத்திமாக்கப்பட்டது. நோர்வேயில் பைசர் கொம்பனியின் முதல் தடுப்பூசியை எடுத்த சில நாட்களுக்குள் அவர்களில் 23 பேர் இறந்ததாகவும், அதில் 13 பேரின் மரணம் பரிசோதிக்கப்பட்டபோது தடுப்பூசியின் பக்கவிளைவால் நிகழ்ந்தன என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் பேர்லினர் செய்தித்தாள் (BERLINER ZEITUNG) அறிவித்தது.

அதேநேரம் (ஓஸ்ரியா) INSBRUCK பல்கலைக்கழக மருத்துவநிலைய ஆய்வுத்துறைத் தலைவர் புளோரியான் டைஸன்கம்மர் (FLORIAN DEISENHAMMER) அவர்கள் தமது ஆய்வின்படி கொரோனாவை எதிர்க்க தடுப்பூசி தேவையில்லை எனவும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்தல்தான் சிறந்த வழி எனவும் முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கிறது என்றும் சொல்லியிருந்தார். கொரோனாவால் தாக்கப்பட்ட 29 பேரை (சராசரி வயது 44) ஆராய்ந்து பெறப்பட்ட முடிவு இதுவாகும். 9.12.20 அன்று டைஸன்கம்மர் இதை தெரிவித்திருந்தார். தடுப்பூசி குறித்தவைகளை தான் தரவுகளாக மட்டுமே இங்கு முன்வைப்பதாக தனது உரையை முடிக்கிறார் டானியல் கன்ஸர்.

  • ரவி (13022021)

இந்தக் காணொளியைப் பார்த்ததும் சில கீற்றுகள் தெரிந்தன. படிப்படியாக உருவாக்கப்பட்ட மேற்குலகின் கண்காணிப்பு முறைமைகளையும் சீனா சுவீகரித்து, அதை தனது உயர் தொழில்நுட்பத்தினூடாக வடிவமைத்து செயற்படுத்துகிறது. இரு தரப்பினரதும் போக்கு ஒவ்வொரு தனிமனிதரையும் கண்காணிப்புக்குள் கொணர்ந்து ஒரு சர்வாதிகார நிலையை நோக்கி உலகை வழிநடத்துவதாகவே உணரவைத்தது. அதுமட்டுமல்ல, மேற்குலகு சீனாவை பின்பற்றுகிற நிலையை நோக்கி நகருவதற்கு உதாரணமாக, கேள்விகளற்று லொக் டவுண் முறைமையை ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிடலாம். ஒருசில மாதங்களில் சீனா லொக்டவுணைக். கடந்து போய்விட்டது. மேற்குலகோ கடக்க முடியாமல் அல்லது கடக்காமல் இப்போதும் இழுபட்டுக்கொண்டிருப்பது கேள்விகளை தொக்கிநிற்க வைக்கிறது. எது எப்படியோ சீனா, மேற்குலகு என எல்லா நாசமறுப்பாரும் உலகை எங்கை கட்டியிழுத்துக் கொண்டு போறாங்களோ தெரியயில்லை ! – ரவி

One thought on “கொரோனாவும் சீனாவும்”

  1. அவரின் இந்த ஆய்வில் உண்மை இல்லமையில்லை. பயனுள்ள பதிவு .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: