எனது வாசிப்பு
பச்சைக் குதிரை ஒரு விளையாட்டு. அது இங்கே படிமமாக நாவலில் விரிகிறது. குனிஞ்சு நிக்கணும். ஒவ்வொருவரா தாண்டணும். குனிஞ்சு நிக்கிறவங்க மெல்ல உயரத்தைக் கூட்டினாலும் அவங்களைத் தாண்டிற வெறியோடு அவங்க முதுகை அமத்தி பாய்ந்து கடக்க வேண்டும்.
“பச்சைக் குதிரைகள் விளையாட்டை இப்போ யாரும் விளையாடுவதில்லை. ஆனால் பச்சைக் குதிரைகள் இருக்கின்றன. பச்சைக் குதிரைகளின் நிறம்தான் மாறியிருக்கிறது. ஆனால் பச்சைக் குதிரைகள் மாறவில்லை. அம்மா மகள் மனைவி காதலி பாட்டி தோழி என அவை ஓடிக்கொண்டிருக்கின்றன” என்கிறார் புதிய மாதவி. இந்த மையத்திலிருந்து விரிகிறது நாவல்.
நான்கு பிரதான பாத்திரங்கள் கல்லூரி விடுதி வாழ்க்கை என்ற கூட்டுவாழ்க்கைத் தளத்திலிருந்து பிரிந்து, அதன் பகிர்ந்துவாழும் வாழ்வனுபவங்களிலிருந்து பிரிந்து தனி மனிதர்களாக இச் சமூகத்துள் முற்றுமுழுதாக விடப்படுகிறபோது அவர்களை இந்த ஆணாதிக்க சமூகம் பச்சைக் குதிரைகளாக பாவிப்பதும், அதற்குள்ளிருந்து எழும் மீறல்களும், அந்த மீறல்கள் அவர்களை சிதைக்க முற்பட்டுவதும், அதை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற மனித இருப்பின் தவிர்க்க முடியாத நியதியும் அதன்வழியான நிமிர்வுகளையும் சாதனைகளையும் உள்ளடக்கிய பல பரிமாணங்களில் நாவல் விரிந்து செல்கிறது.
சமா (சமாதானம்), சங்கீதா (சதா), செந்தா (செந்தாமரை), கண்மணி (கமா) என நான்கு பிரதான பாத்திரங்களும், சமூக உறவுநிலைகள் உருவாக்கும் கிளைப் பாத்திரங்களுமாக நாவல் படைப்பாக்கம் பெறுகிறது.
சமா அதே கல்லூரியில் மாணவியாகி பின் பேராசிரியையாக வந்து பின் விடுதி மேற்பார்வையாளர் பதவியையும் இணைத்துக் கொண்டு பயணிக்கிறாள். சாதி அவளது காதலை பிடுங்கி அவளை இறுதிக் காலம் வரை தனித்து விட்டுவிடுகிறது. சங்கீதா டாக்ரர் ஆகிறாள். அவளது படிப்புக்கு உதவிய அத்தை தமது மருமகளாக்குகிறாள். மாமன் ஒரு டாக்டர். அவருடைய மருத்துவ மனையை கவனித்துக்கொள்ளும் நோக்கத்தில் ஒரு வாரிசாக சங்கீதா மருமகளாக்கப்படுகிறாள். சங்கீதா அந்த வாழ்வை தனதாக்கிக் கொள்ளுகிறாள்.
செந்தாவின் தந்தை ஆளும் கட்சி அரசியல்வாதி. அவரது அடியாளாக இருந்த சந்திரனின் துணை அவருக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது. எனவே அவனை மருமகனாக்குகிறார். சந்திரன் சாராயம் காய்ச்சும் கோஸ்டியின் தலைவன். பின்னர் மணற் கொள்ளை, தண்ணீர் கேன் விநியோகம் என அவன் முன்னேறுகிறான். செந்தா திருமணமாகி இரண்டு வருடத்தில் கோஸ்டிச் சண்டையில் சந்திரன் கொல்லப் படுகிறான். அரசியல்வாதிகளை விமர்சித்த காலேஜ் செந்தா இப்போ அரசியலை கையில் எடுத்து எம்.எல்.ஏ ஆக மாறும் செந்தாமரை ஆகிறாள். அந்த வாழ்வை அவள் தனதாக்குகிறாள்.
கண்மணி தனது வளர்ப்புத் தகப்பனை (செல்வவிநாயகம்) சொந்தத் தகப்பனாக நினைத்தே வளர்கிறாள். அவளின் உண்மையயான தகப்பன் இவள் 7 மாதக் குழந்தையாக இருந்தபோது சிறைசென்றதால் கண்மணிக்கு அது தெரியாமலே வளர்க்கப்படுகிறாள். கண்மணியின் அம்மா செல்வவிநாயகத்துடன் வாழ்வதால் அது சாத்தியமாகிறது. செல்வவிநாயகம் மும்பை தாதா முதலியாரின் துணையாள். கணவன் சிறையிலிருந்து வந்தபின் செல்வவிநாயகத்தின் சாரதியாக வரும் சந்தர்ப்பம் வருகிறது. செல்வவிநாயகத்துக்கு அவரை கண்மணியின் அம்மாவோ அவரோ அறிமுகப்படுத்தாமல் இருந்தார்கள். இன்னொரு பச்சைக்குதிரை ஓடுகிறது.
இந்த நாவலின் கிளைப் பாத்திரங்களாக வரும் விடுதி தோட்ட கண்காணிப்பாளர் முகமதுகனியின் பாத்திரம் ஒரு விளிம்புநிலை மனிதனின் எளிமையையும் நேர்மையையும் இயற்கையுடனான அவனது வாழ்தல் வேட்கையையும் அருமையாக தொட்டுச் செல்கிறது. அதேபோல நாவலின் கடைசியில் வரும் வின்னியின் சமூக நேசிப்பையும் சாதனையையும் எளிமையாகவும் உணர்வுநிலையிலும் வெளிப்படுத்திவிடுகிறது. விடுதியில் சமா முன்பிருந்த அதே அறையில் இருந்த சர்மிளா பச்சைக்குதிரையாக மறுக்கிற மீறல் மனநிலை கொண்டவளாக இருக்கிறாள் என்பதையும் அதை சமா காணாதவள்போல் அனுமதித்தாள் என்பதையும் காண்கிறோம்.
சர்மிளா கருச்சிதைப்புச் செய்தது தெரியவந்து பிரச்சினை அவளது வீட்டுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. சர்மிளாவின் அம்மா வருகிறாள். மகளை சபிக்கிறாள். துயருறுகிறாள்.
சமா சொல்கிறாள் “சர்மிளா புத்திசாலிப் பொண்ணு. சொல்றமாதிரிச் சொன்னால் புரிஞ்சுப்பா. உங்க பொண்ணு வாழ்க்கையை நீங்களே அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி கெடுத்துடாதீங்க” என்கிறாள்.
ஒரு அறிமுகத்தில் கதையை இந்தளவு சொல்லிச் செல்வதில் எழும் தயக்கத்துடன் இப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இந் நாவலை கருத்தியல் தளத்தில் பார்த்தால் ஒரு பெண்ணிய நாவலாக வரையறுக்க முடியும். இச் சமூகம் பெண்களை பச்சைக்குதிரைகளாகவே வைத்திருக்கிற ஆணதிகார கருத்தமைவுகளால் (பண்பாடு, நாகரிகம், வழமை, ஒழுங்கு… என்ற பெயர்களில்) வகுத்துவைத்திருக்கிற எல்லைக் கோடுகளில் படைப்பாளி நின்று நடத்துகிற போர் இது. இயல்பான பாலியல் வேட்கை, அது உந்துகிற மீறல் மனநிலை என்பவற்றினூடாக ‘கற்பு’ என்ற கருத்தாக்கத்தை உடைத்துப் போடுகிறது. கருச்சிதைப்பு என்பது பெண்ணின் தீர்மானிக்கிற உரிமை என்பதை கண்மணியினூடாக பேசிவிடுகிறது.
ஆண்கள் தாம் தீர்க்க விழைகிற பாலியல் வேட்கையை, அதற்காக தாம் பெண்களை தேடுகிற அங்கீகாரத்தை பெண்களுக்கு மறுத்துவிடுகிறது. தமது காமத்தை தீர்க்க பல பெண்கள் வேண்டும் ஆனால் எல்லா பெண்களும் கற்போடு இருக்கவும் (பண்பாடு) வேண்டும். என்னவகையான ஒரு குருட்டுத் தர்க்கம் இது. இந்த மீறல்களை சர்மிளா, செந்தாமரை, கல்யாணி ஆகியோர் செய்வது ஒன்றும் செயற்கையான கலகமல்ல. அது அவர்களது வாழ்வின் உணர்வுகள் உணர்ச்சிகள் சார்ந்த இயல்பை செயற்படுத்துதல் ஆகிறது. இதை நாவல் ஆர்ப்பாட்டமின்றி சொல்லிச் செல்கிறது.
“அன்றிரவு கண்மணிக்கு ஓர் ஆணின் ஸ்பரிசம் முதல் அனுபவம். அம்மா அப்பா என்ற நெருக்கமான உறவுகள்மீது ஏற்படும் உறவுச் சிக்கல்கள் மனப்பிறழ்வுகள் எளிதாக பெண்ணை பிறிதொரு ஆணிடம் விழ வைத்துவிடுகிறது. உடலுறவு அம் மனநிலையில் அவளுக்கு ஒரு தற்காலிக நிம்மதியைத் தர முடியும் என்கிற மாதிரி இருந்தது”. இவ்வாறு உளவியல் தளத்தில் நின்று பேசுகிறார் ஆசிரியர். ஆணுக்கோ பெண்ணுக்கோ இந்தமாதிரியான நிலைமைகளில் சொற்களாலோ அல்லது உடலாலோ தொடுகைகளும் அரவணைப்பும் ஆறுதலும் அமைதியும் தேவைப்படும். அது கிடைக்காதபோது பிறழ்வுகளாக மதுவோ போதைப்பொருளோ அந்த இடைவெளியை நிரப்பும். தற்கொலைகளும்கூட இறுதிப் புகலிடமாக அமையவும்கூடும்.
செந்தா கணவனை இழந்த நிலையில் அரசியலிலும் தனது ஆளுமையை நிறுவிக் காட்டுகிறாள். சங்கீதா ஒரு மருத்துவராக சுயமாகச் செயற்படுகிறார். சமா கல்லூரி விடுதிக் காப்பாளராகவும் விரிவுரையாளராகவும் இருக்கிறார். இந்த ஆளுமைகள் பச்சைக்குதிரையின் நிமிர்வை மெல்ல மெல்ல நிகழ்த்துகிறது. முழுமையாக நிமிர்தல் என்பதன் சாத்தியம் நோக்கி நகர்தலே பெண்ணியத்தின் இலக்கு. அதன் சமிக்ஞைகளையே சமூகத்தில் நாம் காண்கிறோம். நாவலும் அந்த யதார்த்தத்தை தழுவிச் செல்கிறது. வெளிப்படையாக முன்வைக்கிறது.
மனிதர்கள் பண்பு ரீதியில் இருமைகளால் வரையறை செய்யப்படுபவர்களாகவே இருக்கிறார்கள், நல்லவர்-கெட்டவர் என்பதுபோல! ஆனால் மனிதஜீவி மிகவும் சிக்கல் நிறைந்த ஒன்றுக்கொன்று முரணான பாத்திரங்களைக்கூட வகிக்கக்கூடியது. இது உளவியல் சார்ந்த விசயம் மட்டுமல்ல, எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்கள், பிரச்சினைகள், விருப்புவெறுப்புகள் என நீளும். எல்லாமே அடிப்படையில் தனது இருப்பை மையப்படுத்தியே இயங்கும். அது உயிர்வாழ்தல் குறித்ததாகவும் இருக்கலாம். பிம்பங்களைக் கட்டமைப்பதாகவோ அல்லது மேலாதிக்கத்தை, அதிகாரங்களை தக்கவைப்பதாகவும்கூட இருக்கலாம். இந்த பன்முகச் சிக்கலுக்கு வெளியே பாத்திரங்கள் படைக்கப்படும்போது அது இருமை நிலைக்குள் வருகிறது. கதாநாயகர்களையும் வில்லர்களையும் புனைந்து முன்வைக்கிறது. இந்த குருட்டுத்தனம் வாழ்வின் சிக்கல்களை அவிழ்த்துக் காட்டும் பாத்திரங்களை தர தவறிவிடுகின்றன. இத் தவறை நூலாசிரியர் செய்யவில்லை. பச்சைக்குதிரையில் வரும் பாத்திரங்கள் இந்தச் சிக்கலுள் நுழைந்து வெளியேறுபவையாக இருப்பது கவனிக்கத்தக்கது.
“மனிதர்கள் எப்போதும் இப்படித்தான். நல்ல அப்பாக்களாக இருப்பவர்கள் எல்லோருமே நல்ல கணவர்களாக இருக்கிறார்களா என்ன. நல்ல அம்மாவாக இருக்கும் பெண்களும் நல்ல மனைவியாக இருக்கிறார்கள் என சொல்லிவிட முடியுமா. வெளிச்சத்தில் தெரியும் முகம் இருட்டில் அப்படியே தெரியும் தெரிய வேண்டும் என எதிர்பார்ப்பது சரியா தவறா” என வாசகரிடம் பதில் பொதிந்த கேள்வியாக விட்டுச்செல்கிறார் நூலாசிரியர். இங்கு நல்ல என்ற சொல்லுக்கு ஆணாதிக்க நோக்குநிலையும் பெண்ணிய நோக்குநிலையும் வெவ்வேறு அர்த்தங்களை தம்மகத்தே கொண்டிருக்கும் என்பதை ஒரு மேலதிக குறிப்பாக பதிந்துவிடுகிறேன்.
சாதியை எதிர்க்க முடியாமல் சமாவை கைவிட்ட வின்சன்ற் பிறகு தனது மகளின் (சாதி சிக்கலுக்குள்ளான) காதலை அங்கீகரித்து அவர்களை பிரிய நேர்கிற துயரத்தோடு கண்காணா இடத்துக்கு அனுப்பிவைக்கிறான். அவர்களை சமா எதேச்சையாக சந்திப்பது ஒரு -சினிமாத்தனமான- செருகல் போல தெரிய வாய்ப்பு உண்டு. என்றபோதும் இந்த முரண்நிலையின் களத்தையும், வின்சன்ற் க்குள் எழுந்திருக்கக்கூடிய -தனது காதலை இழந்த- உள்மனப் போராட்டத்தையும், அதன்வழியான குற்றவுணர்வையும், வாழ்வு குறித்த முதிர்ச்சியின்மையையும், அதேபோல சமாவின் இலட்சியவாதத்தின் அர்த்தமின்மையையும் இன்னொரு சூழலுக்குள் வைத்து இணைத்துக் காட்டுகிற களமாகக் கொள்ள இடமுண்டு.
இந்த இலட்சியவாதத்தை அவள் சமூக யதார்த்தத்தின் தர்க்கங்களோடு பொருத்தி சரிபார்க்கிறாள்.
“இவர்கள் எல்லோரும் ஏன் திருமணம் செய்துகொண்டார்கள் என்று யோசித்துப் பார்த்தால் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை. திருமணம் என்ற ஒரு சடங்கு கட்டாயமில்லை என்ற நிலை இருந்தால் இவர்களில் யாராவது திருமணம் செய்துகொண்டிருப்பார்களா என்று யோசித்துப் பார்த்தாள்” (பக்.36)
இது குடும்ப அமைப்புக் குறித்த அதன் போலிமைகள் குறித்த ஒரு கூற்றாகவும் புரிந்துகொள்ளப்பட முடியும்.
செல்வவிநாயகத்தின் வக்கிரமான மனநிலை தன்னுடன் வாழ்ந்த கல்யாணியின் அம்மா மீண்டும் அவனது அசல் கணவனுடன் உடலுறவு கொண்டதை சகிக்க முடியாமல் போகிறது. அந்த உளவியல் தாக்கத்தை ஈடுசெய்ய செல்வவிநாயகம் கல்யாணியின் அம்மாவையும் கணவனையும் தன் முன்னால் புணரவைத்து பார்த்து இரசிக்கும் அளவுக்கு சென்று விடுகிறது. அவரை சார்ந்து வாழ்ந்த அந்த கணவன் மனைவி தனது உடல்சார்ந்த உரிமையையும், அந்தரங்கத்தையும், கொண்டாடலையும் விட்டுக்கொடுக்காத இருப்பை கையிலெடுத்து ஓடிவிடுவதில் போய் முடிகிறது.
கண்மணியின் அம்மா, கண்மணி, ரபீக், செல்வவிநாயகம் என்பவர்களின் உறவுநிலைகள் அதற்குள் இயங்கும் கொந்தளிப்பான சம்பவங்கள் எல்லாம் பாத்திரக்கட்டமைப்பில் ஆசிரியருக்கு சவால் நிறைந்த பகுதிகளாகவே இருந்திருக்கும். அவை ஒரு எளிய தர்க்கத்துக்குள் அகப்படாதவையாக உளவியல் தளத்திலும் சார்ந்து இயங்குபவையாக இருக்கின்றன. செல்வவிநாயகத்தின் தொழில்முறை எதிரியாக ரபீக் இருந்ததால் ரபீக் மீதான காதல் தனது (வளர்ப்புத்) தகப்பனை இன்னமும் எரிச்சலூட்டும் என அவளுக்குத் தெரிகிறது. அந்த எரிச்சல் ஒரு தீயாக பற்றியெரிய வேண்டும் என கண்மணி விரும்பினாள். தனது பெற்றோரின் அந்தரங்கத்தையும், உடலையும், உணர்வுகளையும் அவர்களின் இச்சையை காமத்தை எல்லாம் அசிங்கப்படுத்திய வளர்ப்புத் தகப்பனை அடியோடு வெறுத்தாள். அதனால் இன்னும் தீவிரமாக கண்மணி ரபீக்கை காதலித்தாள் என்ற உளவியல் ஈர்ப்பு அழகாக வந்து விழுகிறது.
பாத்திரங்களின் உள்ளுணர்வை பேசுவதில் பல இடங்களில் அழகியல் புதைந்திருக்கிறது. உதாரணத்துக்கு ஒன்றை குறிப்பிடலாம்.
“சமா வின்சென்றை கடைசியில் காண்கிறாள். அவன் போனபின் அவளது உள்ளுணர்வு பேசுகிறது. ஏன் அதை நான் செய்யவில்லை. எது அப்படி செய்யவிடாமல் தடுத்தது.யாருக்குப் பயந்து நான் அவனை விலக்கினேன். நான் அவனைச் சந்தித்திருந்தால் என்ன குடிமுழுகிப் போயிருக்கும். ஒருமுறை அவனுடன் ஒரு காபி ஸ்டாலில் எதிர் எதிர் உட்கார்ந்து டீ சாப்பிட்டிருக்கலாம். அப்போது எதுவும் பேசமுடியாமல்கூட போயிருக்கலாம். ஆனால் இருவருக்கும் இடையில் இருந்த கனத்த மவுனம் நிறைய பேசியிருக்கும்தானே. சமா கண்களை மூடிக் கொண்டாள்.”
நாவலை இதே மவுனத்துடன் மூடிக்கொள்ள வைக்கிறார் நூலாசிரியர். பச்சைக்குதிரை அழைத்துச் செல்கிறது!
// உண்மைக்கோ பொய்க்கோ பயப்படுவதைவிட மனிதர்கள் உண்மை கலந்த பொய்க்கோ பொய் கலந்த உண்மைக்கோதான் பயப்படுகிறார்கள்.// – புதியமாதவி
- ரவி 17012021
*
நூலாசிரியர் கனத்துக்கு…
இரண்டு சொல்லாடல்கள் மாதவியின் எழுத்தில் அவரது சிந்தனைக்கு மாறாக அவரைத் தெரியாமலே உட்கார்ந்துவிடுகின்றன.
- நிறம்
ஐரோப்பாவில் மனிதர்களின் நிறம் என்பது வெள்ளை தவிர்ந்தததாகவே பாவிக்கப்படுகிறது. ஐரோப்பியர்களால் அடிமைகொள்ளப்பட்ட இலங்கை இந்தியாவில் மனிதர்களின் நிறம் என்பது வெள்ளையாக அடையாளப்படுத்தப்படுகிறது. நிறம் என்பது மனிதர்களுக்கான அடையாளமாக இருக்கவே கூடாது என்பது நிறவாத எதிர்ப்பின் கருத்தமைவு. ஆனால் மாதவி அதை (பக்.50, 76, 118) காணத் தவறிவிடுகிறார். - ஆண்மொழி
ஆண்மொழி குறித்த எச்சரிக்கை ஆசிரியரிடம் இருப்பதை அவர் எல்லா இடங்களிலும் ஆண்நோக்கில் பொதுச்சொல்லாக பாவிக்கப்படும் “மனிதன்” என்ற சொல்லை “மனிதர்” என அவதானமாகவே எழுதிச் செல்வது வெளிப்படுத்துகிறது. அதையும் மீறி ஒருசில இடங்களில் ஆசிரியரை அச் சொல் ஏமாற்றி உள்நுழைந்துவிட்டிருக்கிறது. உதாரணமாக பச்சைக் குதிரை பற்றி செந்தா சொல்லும்போது, “ஒருத்தரை குனிய வச்சு குனிய வச்சி ‘குனியிறவன்’ நிமிர முடியாம ‘அவன்’ முதுகிலே ஒரே அமுக்கா அமுக்கி தாண்டுறது ஒரு விளையாட்டாக்கும்” என்று வரும். ‘குனியிறவன்’ என்ற ஆண்மொழி (ஒடுக்கப்படும் சக்தி என்ற வகையில் பொதுவாக) ‘குனியிறவர்’ என வருதலே பொருத்தமானது. மாதவி நூலின் ஆரம்பத்தில் பச்சைக்குதிரைகளாக அம்மா, மனைவி, காதலி, மகள், பாட்டி, தோழி என பெண் பாத்திரங்களை தனது நாவலின் களத்துக்குள் போகிற வாசலில் நின்று சொல்லி அனுப்புகிறார். அதற்கு ‘குனியிறவன்’ ‘அவன்’ என்ற சொல்லாடல்கள் முரணாக அமைகின்றன.
பச்சைக் குதிரை
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
41 கல்யாணசுந்தரம் தெரு
பெரம்பூர்
சென்னை 600 011
அலைபேசி 94 446 409 86
நூலாசிரியர் : புதியமாதவி
(இந் நூல் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)