கோவிட்-19 இலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
12 நவம்பர் 2020. வழமைபோல் வேலைசெய்து கொண்டிருக்கிறேன். உடலில் ஒரு சோர்வு தெரிகிறது. மதியச் சாப்பாட்டின் பின்னர் மீண்டும் தயக்கத்துடன் வேலையைத் தொடங்குகிறேன். உடல் பலமிழப்பது போலவும் மனம் எதிலும் பற்றற்று நழுவுவது போலவும் தெரியத் தொடங்குகிறது. இடையில் வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வருகிறேன். விழுந்து படுக்கிறேன். அன்றிரவே உடலின் மூட்டுகளை கழற்ற எத்தனித்துக் கொண்டிருக்கிற உளைவுப் படை உடலை உலுக்கி உலுக்கி அடித்துப் போடுகிறது. சுகவீனகால வழமையான அனுபவமல்ல இது. தெரிந்துவிட்டது. கொரோனாதான்.
ஏற்கனவே நண்பர்கள் தமது அனுபவத்தை சொல்லியிருந்தது நினைவுக்கு வர ‘ரபல்கான்’ வலி மாத்திரையை போடுகிறேன். தொடர்ந்து ஒவ்வொரு 5 மணித்தியாலத்துக்கு ஒருமுறை போடத் தொடங்குகிறேன். அடுத்தடுத்த நாட்களான சனி ஞாயிறு உடல் நடுக் கடலொன்றில் தனித்த வள்ளத்தில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறது. முகங்கொடுத்து மீளும் வலிமையை மனம் இழக்கவில்லை.
சன்ரியாகோ, அந்த வயது முதிர்ந்த மீனவன் முழு நம்பிக்கையோடு ஆழ்கடலில் நிற்கிறான். சிறிய படகு. தனிமை. தனது உடலின் பலத்தில் நம்பிக்கை. மனதில் ஓர்மம். தனது கனவை சாத்தியமாக்கியே தீரவேண்டும் என்ற வெறி. கடந்த பல நாட்களாக அனுபவம் முதிர்ந்த அந்த மீனவனுக்கு அதிர்ஸ்டம் இல்லையென்றாகியிருந்தது. 84 நாட்களாக மீன் எதுவும் பிடிபடவில்லை. அவனோடு ஒன்றாக ஒட்டியிருந்த சிறுவனை அவனது வறிய பெற்றோர்கள் வேறு மீனவர்களுடன் சேர்ந்து போகச் சொல்கிறார்கள். சிறுவன் தனது மனத்தை சன்ரியாகோவிடம் விட்டுவிட்டு புதிய மீனவ படகோடு இணைந்து போகிறான். அவனை சந்தோசமாக விடையனுப்பிவிட்டு, சன்ரியாகோ ஒரு முடிவுடன் தனது அனுபவத்தை அழைத்துக்கொண்டு தன்னந்தனியாக ஆழ்கடலுக்கு துடுப்பை வலித்து வந்து நிற்கிறான்.
திங்கள் காலை வள்ளத்தை மெலிதாய் சூரிய ஒளி தொடுகிறது. வைத்தியரிடம் தொடர்பு கொள்கிறேன். கொரோனா சோதனை செய்து மறுநாள் முடிவு ‘பொசிற்றிவ்’ என வருகிறது. தெரிந்ததுதான். அந்த மூன்று நாட்களும் உடலை முறித்தபோதும், எனது நம்பிக்கையை அசைக்க முடியாமல் கடந்து போனது. பரீட்சை எழுத முன்னே பரீட்சை முடிவை ஊகித்திருந்த மாணவனின் நிலை. ஒன்றும் அதிர்ச்சி தரவில்லை. மாறாக நம்பிக்கையை கருவியாக இறுகப் பற்றியது. கடந்த 3 நாட்களின் முறிப்பு கொஞ்சம் தணிந்து, மிதந்த சிறு ஆசுவாசம் அந்த நம்பிக்கையின் கீற்றாக அமைந்திருந்தது. இன்னும் பத்து நாட்கள் அறைக்குள் முடங்க வேண்டும். மருந்தேதும் தேவையில்லை என்றார் வைத்தியர். என்ன செய்ய வேண்டும் என்றும் சொன்னாரில்லை. இருமல் இருக்கவில்லை. காய்ச்சல் வரவில்லை. மணம் குணம் எல்லாவற்றையும் உணர்வதில் கோளாறு எதுவுமில்லை. இடையிடையே உடல் குளிர்வது போலாகி மயிர்க்கூச்செறியும். காய்ச்சலா என அளந்து பார்த்தால் அது ஒருபோதுமே அந்த எல்லையைத் தொடவில்லை. அந்த நேரம் படுக்கையில் சரிவேன். பின் கொஞ்ச நேரத்தில் எழும்புவேன்.
சன்ரியாகோ காத்திருக்கிறான். ஆம், அவனின் நம்பிக்கையை உண்மையாக்கி பெரிய மீன் தூண்டிலில் மாட்டிவிடுகிறது. ஒரு லாம்பு வெளிச்சம்கூட சன்ரியாகோவிடம் இல்லை. இருளினுள்ளிருந்து ஒளியிடுக்குகளை அவன் கண்கள் ஊடுருவி, இமைக்காமல் நின்றன. ஒரு இரவும் ஒரு பகலுமாக மீன் படகை தன் போக்கில் இழுத்துச் செல்கிறது. இன்னமும் அவன் மீனைக் காணவில்லை. அவன் வெகுதூரம் வந்துவிட்டான். ஹவானா புள்ளி வெளிச்சங்கள் மறைந்துவிட்டன. மூன்றாம் நாள் பகல். தூண்டிற் கயிறு வள்ளத்தை சுற்றத் தொடங்குகிறது. மீன் களைத்துவிட்டது. இனி மேலெழும் என காத்திருந்தான். தூண்டிற் கயிறு உரசிய அவனது கைகளிலிருந்து இரத்தம் வழிகிறது. கயிறை தன் முதுகுப் பக்கத்தால் சுற்றிக் கொணர்ந்து கையில் பிடித்திருக்கிறான்.
அந்த இராட்சத மீன் முதன்முறையாக கடற்பரப்பிலிருந்து துள்ளி மேலெழுந்தது. அவன் பிரமித்துப் போனான். நீர்ச் சங்கிலிச் சிதிலங்கள் மீனின் பிரமாண்டத்தோடு விரிந்து, பின் சிதையும் காட்சி சூரிய ஒளியில் வியாபகமாய்த் தெரிகிறது. இராட்சத மீன் திரும்ப கடலுள் வீழ்ந்தது. திரும்பத் திரும்ப நிகழ்கிறது இது. மீனின் உருவம் படகைவிட பெரியது. “நானும் நீயும் நண்பன். என்னை மன்னித்துவிடு. துர் அதிஸ்டம் நான் வாழ்வதற்கு நீ தேவையாயிருக்கிறது”. மீனோடு கதைத்தான். அவனே மூன்றாமாளாகவும் இரண்டாம் ஆளாகவும் மாறிமாறி படர்க்கையிலும் முன்னிலையிலும் உரையாடல்களை செய்தான். சிறுவனோடும் கதைத்தான். சன்ரியாகோ சிறுவனை நினைத்தான். அவன் தன்னுடன் கூட இருந்தால் உதவியாக இருக்கும் என்று யோசித்தான். யோசித்து யோசித்து எதையும் தவறவிட்டதாக சோர்வடையக்கூடாது. நான். எனது இருப்பு. எனது வாழ்வு. எல்லாம் எனது கைகளில் என்று உணர்வான். இருப்புக்காக நடத்துகிற அவனது போராட்டம் தொடர்கிறது.
ஒவ்வொரு நாளும் காலையும் மாலையுமான எனது உடற்பயிற்சி மூச்சுப் பயிற்சியாகவும் இருந்தது. சுமார் 20 நிமிடங்கள் வரையான எளிமையான பயிற்சி புத்துணர்ச்சியை தரத் தவறவில்லை. இரு முறை வேடு பிடிப்பதை வழமையாக்கினேன். பகலில் படுப்பதை தவிர்த்தேன். எனது அறைக்குள்ளிருந்து புழங்குபாதை (கொரிடோர்) க்கும் திரும்ப அறைக்கும் என தேய்ந்த நடை. சலிப்பூட்டும். ஆனாலும் நடந்தேன், முகக் கவசத்துடன்!. உடல் குளிர்வது நீங்குகிற இடை நேரத்தில் நன்றாக தலையில் முழுகுவேன். முழு புத்துணர்வுடன் நாளைத் தொடங்க முயற்சிப்பேன்.
சன்ரியாகோவின் அனுபவமும் நுட்பமும் விடாமுயற்சியும் பலமும் மீனை அருகில் கொண்டுவருகிறது. ஈட்டியை எடுத்து அதன் நடு நெற்றியில் குத்துகிறான். திரும்பத் திரும்ப குத்துகிறான். கடல்நீர் சிவப்பாக மாறுகிறது. மீன் இறந்துபோகிறது. அதை தனது படகோடு அருகாக சேர்த்து கட்டுகிறான். தனது வாழ்வுக்கான ஆதாரம் அது. மூன்றுநாள் போராட்டம் இலக்கை அடைந்தது. ஆனாலும் மீனை கரைவரை கொண்டு சேர்ப்பதில் அடுத்த போராட்டம் தொடர்கிறது. அதுதான் துர்ப் போராட்டம். தனது வாழ்வின் ஆதாரத்தை -அந்த மீனை- அவன் இழக்காதிருக்க வேண்டும். இரத்தவாடைக்கு ஒரு இராட்சத சுறா மேலெழுந்து வந்து மீனின் வாலை அண்டிய பகுதியை கடித்து விழுங்கிவிடுகிறது. அதனோடு போராடி ஈட்டியை அதன் தலையில் செலுத்துகிறான். திரும்பத் திரும்ப குத்துகிறான். சுறா கடலுள் மறைந்துவிடுகிறது. அது நிச்சயம் இறந்துவிடும். பின் இரண்டு சுறாக்கள் வருகின்றன. ஒன்று மீனின் கீழ் வயிற்றுப் பகுதியை கடித்து இழுப்பதில் படகு ஆட்டம் காண்கிறது. அதை அவன் கண்டானில்லை. மற்றது வயிற்றுப் பகுதியைக் கடித்து விழுங்குகிறது. வெளித்தெரிந்த அந்தச் சுறாவை ஈட்டியால் குத்துகிறான் சன்ரியாகோ. அது கடலுள் ஈட்டியுடன் மறைந்து போகிறது. கொஞ்சம் அமைதி. அவன் கணக்குப் பார்த்த தசைகளின் நிறை குறைந்து போனது.

இப்போ கூட்டமாக சுறாக்கள் தாக்குதல் அணிபோல வருகிறது. அவனிடம் ஈட்டியில்லை. துடுப்பில் கத்தியை இறுக இணைத்து தாக்குதல் கருவியாக்குகிறான். அடுத்தடுத்து தாக்குகிறான். துடுப்பின் முனை முறிந்து நாராக கிழிந்து போய்விடுகிறது. இனி அவனால் போராட இயலாது. அவன் இப்போ கரையை வந்தடைவதுதான் இலக்காக இருந்தது. இரவுப் பொழுதில் வந்து சேர்கிறான். மீண்டுவந்த நிம்மதியுடனும் பெருமூச்சுடனும் குடிசையை அடைகிறான். ஆழ்ந்து உறங்கிவிடுகிறான். கண்விழித்தபோது அருகில் சிறுவன் குந்தியிருப்பதைக் காண்கிறான்.
சலிக்காமல் எல்லாவற்றையும் செய்து தந்தாள் றஞ்சி. தொடர்ச்சியாக ஒரு தாதிபோல் என்னை கவனித்த அவளையும் ஏழாம் நாள் கோவிட்-19 எட்டியது. அவளது பிறந்தநாளை அது முந்திக் கொண்டது. நெருடலும் துயரமுமான அது எமது எல்லா தற்காப்புகளையும் மீறி நடந்து முடிந்தது. எனக்கு நேர்ந்தது போலவே அறிகுறிகளோடு அது அவளையும் தாக்கியது.
நான் நான்கு சுவருக்குள் இல்லை. எனது நூலக அறை அது. சுவரின் பெரும் பகுதியை நூல்கள் மறைத்திருந்தன. அவை வாசல்களைத் திறந்தே வைத்திருந்தன. ஒன்பது நாட்களின்பின் இருமல் தொடங்குகிறது. உலர் இருமல். காட்டுத்தனமான இருமல் தொண்டையையும் நெஞ்சுப் பகுதியையும் உலுக்கியது. ஒருவித புதிய தலையிடி தொடங்குகிறது. நெற்றிப் பகுதி தவிர நடுஉச்சி, பக்கவாடு, பிடரி பகுதியெங்கும் வலையிழுப்பதுபோல் நரம்புகளை இழுத்தது அது. கைவிரல்கள் குறுக்குமறுக்காக தலையை வார்வதில் கொஞ்சம் சுகமாக இருக்கும். ‘ரைகர் பார்ம்’ இனை தலைமுழுவதும் பூசி விரல்களை அங்கேயே விட்டிருந்தேன். இரண்டு நாட்களின் பின் அதுவும் கடந்து போனது. இருமல் இப்போ கொந்தளிப்பை இழக்கத் தொடங்கியது. கரையை தொடும் தூரத்துக்கு வந்துவிட்டது. இன்னும் முற்றாக நிற்கவில்லை. நிற்கும்.எனது நிறை இரண்டு கிலோவை இழந்திருந்தது.
என் மீது எனக்கான நம்பிக்கையும் பயமின்மையும் துணைவருவது போல் எதுவும் வராது என்பதை உணர்ந்த காலமாக இருந்தது. கொரோனாவுக்கு என்ன மருந்தை கொடுப்பது என மருத்துவம் குந்தியிருந்து யோசிக்கிறது. உடலின் எதிர்ப்புச்சக்தியை மட்டுமே நம்பினேன். அதை பலப்படுத்த எனக்கு கிடைத்ததெல்லாம் எமது பாரம்பரிய மூலிகைகள்தான். வருட ஆரம்பத்தில் கொரோனாவின் முதல் பரவல் தொடங்கிவிட்டிருந்தபோது வழமையான மூலிகை பாவிப்பை இன்னும் மேலாக உயர்த்தியிருந்தோம், நானும் றஞ்சியும். இப்போது இன்னும் அதிகமாக்கினோம். தொடர்ந்தோம்.
இருக்கும் எதிர்ப்புச் சக்தியை பலவீனப்படுத்த விடாமல் மனதை ஓர்மமாக வைத்திருந்தேன். பயமற்று இருக்கப் பழகினேன். மனதை வாசிப்பு வெளிக்குள் உலவவிட்டு புத்தகத்துடன் இருந்தேன். இப்படியாகத்தான் எதிர்கொண்டேன். சரியான வழி என என்னளவில் நினைத்தேன். அவ்வளவுதான். எல்லாவற்றையும் எதிர்கொண்டு, கடந்து, முன்னேறி, ஒருவாறு நாம் இருவரும் மீண்டு வந்துவிட்டோம்.
அனுபவங்களும் நுட்பமும் எதிர்கொள்ளலும் துடுப்பையும் ஆயுதமாக மாற்றி போராடுதலும் என ஆழ்கடலில் நின்ற சன்ரியாகோவும் கரை வந்து சேர்ந்தான். மீனின் இராட்சத எலும்புக்கூடு படகோடு பிணைந்தபடி இருக்கிறது. வால் நிமிர்ந்து இருக்கிறது. தலைப் பகுதி சிதைந்தபடி இருக்கிறது. அவன் தனது இருப்புக்கான தேவை ஒன்றின் மீதான ஒரு தோல்வியாக அந்த இராட்சத எலும்புக்கூட்டை காண்கிறான். ஆனால் தான் தோல்வியடைந்ததாக உணரவில்லை. இருப்புக்கான தனது தொடர்ச்சியில் அடுத்தடுத்த போராட்டங்கள் வரும். வெல்லும் தோற்கும். எல்லாம் கடந்துபோகிற ஒவ்வொரு நிகழ்வுகளின் பின்னும் நம்பிக்கை துலங்கியபடி இருக்கும் உறுதி சன்ரியாகோவிடம் இருந்தது.
காலையில் படகை ஆட்கள் சுற்றி வேடிக்கை பார்க்கிறார்கள். துறைமுக வாசலில் வெளியே கீழ்த்திசைக் காற்று கடலின் அலைகளை எழுப்பிக்கொண்டிருந்தபோது, ஒரு பெரிய மீனின் வெள்ளை முதுகெலும்பும் முனையில் பெரிய வாலும் கடல்நீரில் ஆடி அசைந்துகொண்டிருப்பதைக் காண்கிறாள், ஒரு உல்லாசப்பயணி. “என்ன அது” எனக் கேட்கிறாள், ஒரு பணியாளரிடம்! நடந்ததை விளக்கிச் சொன்னான் அவன். “சுறாக்களுக்கு இவளவு அழகான வால் உண்டு என எனக்குத் தெரியாது” என்றாள் அவள்.
சாலைக்கு அப்பால் தனது குடிசையில் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான் கிழவன். குப்புறப் படுத்துத் தூங்கும் அவனை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன். கிழவனின் கனவில் சிங்கங்கள் வந்துகொண்டிருந்தன.
ஹேமிங்க்வேயின் “கிழவனும் கடலும்” புத்தகத்தை மூடி வைக்கிறேன். சன்ரியாகோவின் அருகில் இருந்தேன்!
- ரவி (28112020)
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/4850751544995901
- fb link – 2 : https://www.facebook.com/oodaru/posts/3624202857659489