முகநூலில் நடந்த சாதிய கதையாடல்களை முன்வைத்து…
பகுதி-1
இந்த உலகம் ஓர் இனவாத உலகம். இனவாதம் தொன்றுதொட்டு வெவ்வேறு வடிவங்களில் நிலவிவருகிறது. ஜோர்ஜ் புளொய்ட் கொலை நிறவெறி வடிவிலான அமெரிக்க இனவாதத்தினதும், மறுதலையாக அந்த இனவாதத்துக்கு எதிரான மக்கள் மனநிலையினதும் ஓர் குறியீடு. அது அதிர்வலையை மட்டுமல்ல, பல கேள்விகளையும் எமது சிந்தனையில் எழுப்பியிருக்கிறது. அடிமை வாழ்வின் இழிவுபடுத்தல்களோடும், தனித்துவமான ஆபிரிக்கப் பண்பாடுகளின் அழிப்புகளோடும், வெள்ளை மேலாதிக்கத்தோடும் இயங்கிய இனவாத காலகட்டமானது கறுப்பின மக்களை மனிதப்பிறவிபோல நடத்தாத ஓர் வரலாற்று குரூரம் வாய்ந்தது. இந்த மனநிலையுடன் கறுப்பின மக்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு அமெரிக்காவினுள் கொண்டுவரப்பட்டார்கள். சுமார் நூற்றியைம்பது வருடங்களின் முன்னர் மிகமிகச் சிறிதான வெள்ளையர்கள் மட்டுமே -அதுவும் குறிப்பாக கத்தோலிக்க மதத்தை தமது ஆத்மாவில் ஏற்றுக்கொண்ட வெள்ளையர்களே- மனிதாபிமான அடிப்படையில் அடிமை முறைமையை தமது வலுவுக்குள் நின்று எதிர்த்தார்கள். கறுப்பின அடிமை வாழ்விலிருந்து உதிரிகளாக தப்பியோடிய கறுப்பின மக்களை கனடாவுக்குள் எல்லை கடந்து செல்ல உதவினார்கள். பொதுப்புத்தி என்பது முற்றாகவே வெள்ளை மேலாதிக்க கருத்தியலோடும் கற்பிதங்களோடும் வெள்ளையின சமூகத்தை இயக்கியது.
நூற்றி எழுபது ஆண்டுகளுக்கு முன் (1872) Harriet Beecher Stowe என்ற வெள்ளையின கத்தோலிக்கப் பெண் நாவலாசிரியரால் எழுதப்பட்ட கறுப்பு அடிமைகளின் கதை (Uncle Tom’s Cabin) இதை தெளிவாக பதிவுசெய்திருக்கிறது.
இந்த வெள்ளையின பொதுப்புத்தியை கருத்திலெடுத்த மல்கம் எக்ஸ் அறுபதுகளில் நிறவாதத்துக்கு எதிரான தமது போராட்டம் உச்சநிலையை அடைந்திருந்த நேரத்தில், ஆதரவு தர முன்வந்த மனிதாபிமானம் கொண்ட -சிறு பகுதி- வெள்ளையர்களை சந்தேகித்தார். தமது போராட்ட இயக்கங்களில் அவர்களை அங்கத்தவராக ஏற்க மறுத்தார். கடைசிக் காலத்தில் இந்த தீவிர போக்கு மீது அவருக்கு கேள்வியெழும்பியிருந்தது. இன்று புளொய்ட் இன் சம்பவத்தினூடாக வெளிக்கிளம்பிய நிறவெறிக்கெதிரான போராட்டம் இன்னொரு பரிமாணத்தை எடுத்திருந்தது. வெள்ளையின பொதுப்புத்தியின் மாற்றத்தை (தகர்வை அல்லது பிளவை) அது எதிரொலித்திருக்கிறது. Black Lives Matter என்ற அமைப்பின் பதாகையின் கீழ் வெள்ளையர்கள் பலர் இணைந்துகொண்டு அமெரிக்காவை உலுக்கிக் காட்டினார்கள். இன்றைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சி அல்லது போட்டி, அதோடு தொடர்புடைய உற்பத்தி உறவுமுறைகள், மனித உரிமைகள் ஜனநாயகம் குறித்தான கருத்தாக்கங்கள், அறிவியல் வளர்ச்சி, கறுப்பின மக்களின் சாதனைகள், ஒன்றுகலத்தல்கள் என இன்னோரன்ன காரணிகளின் கூட்டு இயங்குநிலை இந்த நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் பங்காற்றியிருந்தன. உலகமயமாதலின் விரிவுநிலை அல்லது ஆதிக்கநிலை ஏற்கனவே இலங்கைவரை நீண்டு செயற்படத் தொடங்கிவிட்டது. முதலாளித்துவ அரசியல் கருத்தாக்கங்கள், உலகின் மூலைமுடக்குகளுக்குள் ஒரு நொடிக்குள் பரவக்கூடிய தொடர்புசாதன தொழில்நுட்ப வசதி பரம்பல்கள் என்பன பாரிய தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கின்றன. உலகை குலுக்கும் எழுச்சிகளின் அதிர்வலைகளையும் முன்னுதாரணங்களையும் இவை வழங்கியபடி இருக்கின்றன. இது சாதியக் கட்டுமானத்திலும் தளர்வை அல்லது தகர்வை படிப்படியாக ஏற்படுத்த வல்லது. (இதை, உலகமயமாதலை ஆதரித்தல் என மொழிபெயர்க்காமல் இருப்பீர்களாக)
சாதியம் என்பதும் ஒரு இனவாதத்தின் (racism) இன்னொரு வடிவம் எனலாம். சாதிய அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களிடமும், நிறவெறி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களிடமும் அந்த வடிவம் தீண்டாமை, கருத்தியல் என இரு பெரும் தளங்களில் இயங்கியது. இயங்குகிறது. தீண்டாமை வடிவத்தில் இரண்டு ஒடுக்குமுறைகளும் பெரிதும் ஒத்தவை. மேலாதிக்க சக்திகள் நிறவெறியிலும், மேல்நிலை சாதிய சக்திகள் சாதியவெறியிலும் இந்த மக்களை கீழ் மக்களாக வரைவுசெய்து கையாண்டன. அதற்கேற்ப கருத்தியல்களை உருவாக்கின. பொது இடங்களில் தீண்டாமை வடிவங்கள் வெளிப்படையாகவும் வீச்சாகவும் இயங்கின. பொது போக்குவரத்துகள், போக்குவரத்து தரிப்பிடங்கள, இருக்கைகள், வணக்க ஸ்தலங்கள், பாடசாலைகள், உணவகங்கள் என எல்லாமும் வேறுபடுத்தப்பட்டு இருந்தன. கல்வி மறுக்கப்பட்டது. வளர்ச்சிநிலைகள் புறக்கணிக்கப்பட்டன. ஏழ்மையில் உழல விடப்பட்டார்கள். பெரிய விசயங்களில் ஆசை கொள்ள முடியாதவாறு எல்லாமும் மறுக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவில் மாட்டின் லூதர் கிங் உம் மல்கம் எக்ஸ் உம் நிறவெறிக்கெதிரான போராட்டங்களை வீச்சாக முன்னெடுத்தனர். இலங்கையில் சணமுகதாசன்; தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்து தீண்டாமையின் பல கூறுகளை நொருக்கியது. இரண்டுமே அறுபதுகளில் நடந்த போராட்டங்கள்.
இன்றைய அமெரிக்க நிறவெறிக்கு எதிரான கிளர்ச்சி சாதியப் போராட்டத்திற்கு சில பாடங்களை தரவல்லது. உலகம் அறுபதுகள் போல் இல்லை. இன்னும் முன்னோக்கி அடிவைத்திருக்கிறது. நிறவெறிப் போராட்டத்தில் வெள்ளையின மக்கள் பெருமளவில் இறங்கியதுபோல் இலங்கையில் சாதியப் போராட்டத்தில் ஆதிக்க சாதியில் உள்ள மக்களும் இணைய சாத்தியம் உண்டு. இதற்கு Black Lives Matter போராட்டங்களை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளலாம். இந்தப் போராட்டம் நேரடி நிறவெறியையும், மறைமுக (நுண்களங்களில் செயற்படும்) நிறவெறியையும் எதிர்த்தவையாக இருந்தன. பொலிஸ் கட்டமைப்பில் நிலவிய நேரடி இனவாதத்தை எதிர்த்து தொடங்கிய போராட்டம் பொதுப்புத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது கொண்டாடப்பட்ட அடிமைவாழ்வின் சின்னங்களை வீழ்த்துவதுவரை சென்று ஒரு நிலையில் ஓய்ந்திருக்கிறது. அது இதுவரை கொண்டாடப்பட்ட கொலம்பஸ்ஸைக்கூட வீழ்த்தி காலடியில் போட்டது. எதிர்காலத்தில் தேவையேற்படுகிறபோது நிறவெறிக்கெதிரான போராட்டம் இத் தொடர்ச்சியனூடு பயணிக்கும். வரலாறு பின்னோக்கி சுழல்வதில்லை என்பதன் அடிநாதம் இது.
நுண்களங்களில் இயங்கும் நிறவெறியை ஏற்கனவே கோட்பாட்டு உருவாக்கம் செய்திருந்தது இந்த நிலையை எட்டுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று. இந்த கோட்பாட்டுப் புரிதல் நிறவெறியின் நுண்களங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் சிந்தனைமுறையை ஒரு உள்ளோட்டமாக இச் சமூகங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறது என்பது மிகையான மதிப்பீடு அல்ல. இந்த எழுச்சியில் மனிதாபிமானம் ஒரு பாத்திரம் வகித்தது என்பது உண்மை என்றபோதும், தனி மனிதாபிமானம் ஒரு நிறவெறியெதிர்ப்பு சிந்தனைமுறையல்ல. அதை கோட்பாடுதான் வழங்க முடியும். இதேபோல நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கும் சாதியத்தின் இயங்குநிலைகளை கண்டறிந்து புதிய கோட்பாட்டு உருவாக்கம் செய்வது முக்கியமானது. தீண்டாமையைப் பொறுத்தவரை சாதிய அடுக்குகளின் எண்ணிக்கையும் அவற்றுள் நிலவும் சிக்கலான உறவுமுறைகளும், தீண்டாமையின் தீவிரமும், அதுகுறித்த பொதுப்புத்தி மட்டமும் இந்திய சமூகத்துள் இருப்பதுபோல் இலங்கையில் இல்லை. இந்திய விஸ்தரிப்புவாதம் குறித்து அப்போதே சண்முகதாசன் அவர்கள் எச்சரித்திருந்தார். அது பண்பாட்டு விஸ்தரிப்புவாதமாக சாதியத்தையும் இந்துத்துவத்தையும் இலங்கைத் தமிழ்ப் பண்பாட்டுக்குள் தீவிரமாக்குகிற வேலையில் இறங்கியிருக்கிறது என ஒரு மதிப்பீடு உண்டு. (மறவன்புலவு சச்சி அதன் ஓர் சாட்சி). இந்த வித்தியாசங்களை கவனத்தில் கொண்டால் இந்திய சூழலில் உருவாகிய தலித்தியம் இலங்கை சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் என்ன பொருத்தப்பாடுடையது என விவாதிக்க வேண்டியிருக்கும். இதை சொன்னாலே தலித் விரோதி, சாதிவெறியன் என கிளம்புவதில் அர்த்தமில்லை. அத்தோடு இந்த விவாதப் புள்ளியை புறங்கையால் தள்ளிவிட்டு தலித் என்பதை ஒரு வார்த்தைப் பிரயோகமாகக் குறுக்கி, அதன் இறக்குமதியை அல்லது கடன்வாங்கலை எதிர்ப்பதாக இட்டுக்கட்டி, மார்க்சியம் சோசலிசம் கம்யூனிசம் என்றெல்லாம் சொற்கள் இறக்குமதி செய்யப்படவில்லையா என பட்டிமன்ற பாணியில் தர்க்கம் புரிவது ஓர் அபத்தம்.
எண்பதுகளின் நடுப் பகுதியில் நாம் இங்கு (சுவிஸ்) வந்தபோது நேரடி நிறவாதத்தை அனுபவித்தவர்கள். வீட்டின் கதவை திறந்து கீழே இறங்கும்போதே நான் “கறுப்பன்” என்ற (புதிய) அடையாளம் மூளைக்குள் இயங்கத் தொடங்கிவிடுமளவுக்கு அது இருந்தது. இன்று அது பெருமளவில் மறைமுக இனவாதமாக உருமாறியிருக்கிறது. (குறைந்தளவில் நேரடி நிறவாதம் செயற்பட்டபடியும் இருக்கிறது). அது structural racism, passive racism, cultural racism… என்றவாறாக கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்பட்ட தளங்களில் வைத்து புரிந்துகொள்ளப்படக் கூடியதாக இருக்கின்றன. அது இனவாதத்தைக் கட்டுடைக்கும் விதமாக ஆற்றல் கொண்ட இளம் சமூகத்தில் ஒரு சிந்தனைமுறையை உருவாக்கியுமிருக்கிறது. இது இலகுவில் புலப்படாதது. சாதியக் கட்டமைப்புக்குள் வாழ்ந்து பழகிய மனநிலையை கேள்விகேட்காத எம்மவர்கள் எவரும் இந்த நிறவெறி இயங்கும் நுண்களங்களை புரிந்துகொள்ள முடியாது. வெளித்தெரியும் இனவாதத்தின் ஒரு வடிவமான நிறவெறியை ஏற்கவோ அல்லது சகித்துக்கொள்ளவோ அவர்கள் தயாராக இருப்பர். இந்த பொதுப்புத்திக்குள் அகப்பட்டிருக்கிற தமிழர்களில் ஒரு பகுதியினர் “இப்ப எங்கை நிறவெறி இருக்கு” என கேட்கிறார்கள்.
இதேபோலவே “இப்பவெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்” என கேட்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இதை அவர்கள் தெரியாமல் சொல்வதாக புரிந்துகொள்வது அப்பாவித்தனமானது. புகலிடத்தைப் பொறுத்தவரை இந்தக் கூற்றை நேரடி சாதிவெறியை பிரயோகிப்பதில் அறிவுத்தளமும் புறநிலையும் சாதகமாக இல்லாமையின் வெளிப்பாடு என எடுத்துக் கொள்ளலாம். புகலிடத்தின் புறநிலையானது, நிலவும் ஜனநாயகச் சூழல் தனிநபர் உரிமைகள் மீதான கரிசனை மற்றும் அகதிநிலையிலிருந்து இந்த நாட்டின் பிரஜைகளாக அடைந்த அடையும் மாற்றம், இவ்வகை ஒடுக்குமுறைகளுக்கெதிராக பிரயோகிக்கப்படக்கூடிய சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் என பல காரணிகள் இந்த அடக்கிவாசிப்பை அவர்களிடம் நிர்ப்பந்தித்திருக்கிறது.
இங்கு பிறந்து வளரும் இரண்டாம் சந்ததிக்கு சாதி பற்றி சொல்லி வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சாதியச் சிந்தனையுடையவர்கள். இவர்கள் சாதி பார்த்து திருமணம் செய்து வைப்பவர்களாக இருக்கிறார்கள்.
அத்தோடு ஒடுக்கப்பட்ட சாதிய அடுக்குகளுக்கு (படிநிலைகளுக்கு)
இடையிலுங்கூட திருமணம் என்று வருகிறபோது கலத்தல் தவிர்க்கப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது. இன்னொரு பகுதி புகலிடத் தமிழர் தமது பிள்ளைகளுக்கு சாதி பற்றி எதுவும் சொல்லாமல் தவிர்த்துவிடுபவர்கள். இவர்கள் சாதியச் சிந்தனையை புறக்கணிப்பவர்கள் அல்லது தவிர்ப்பவர்கள் என வகைப்படுத்தலாம். இன்னொரு பகுதியினர் சாதியை மறுத்தல் அல்லது கடந்து செல்லுதல் என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பவர்கள்.
ஒடுக்கப்பட்ட சாதிய அடையாளம் கொண்டவர்கள் தமது சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தத் தேவையில்லை என்ற ஒரு பகுதியினரும், சாதிய அடையாளத்தை ஒளிக்கக்கூடாது (மறைக்கக்கூடாது), அதை முகங்கொடுத்து சமனாக நிமிர்ந்து நின்று காட்ட வேண்டும் என்ற இன்னொரு பகுதியினரும் எதிர்ப் போக்குகள் கொண்ட அணுகுமுறை கொண்டவர்களாக இருக்கின்றனர். அதற்கு கறுப்பர், நீக்ரோ என்ற அடையாளங்களை அதன் இழிவுக்கு எதிராக முன்னிறுத்தி கறுப்பின மக்கள் போராடியதை உதாரணம் காட்டுகிறார்கள். அந்த அடையாளத்தோடு அவர்கள் எழுந்துநின்று காட்டியதற்கு போராட்டம் கொதிநிலையில் இருந்ததும், அதற்கு அடித்தளமாக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகளும் செயல்திறனுள்ள தலைவர்களும் இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கன. அதுமட்டுமன்றி விளையாட்டு இசை நடனம் போன்ற தளங்களில் அவர்கள் படைத்த சாதனைகளும் அவற்றில் வெளிப்படுத்திய கூட்டுப் பிரக்ஞையும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. இந்தவகை நிலைகள் அல்லது தளங்கள் இல்லாதபோது சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தி முகங்கொடுப்பது நேரம்சமான விளைவைத் தருமா என சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் சாதிய அடையாளத்தை உதிரிநிலையில் நின்று மறைப்பது ஒருவகை சாதிய மறுப்பாக ஏன் கருதப்படமுடியாது என்ற கேள்வியும் எழுகிறது. எது எப்படியோ இந்தப் போக்குகளெல்லாம் மனந்திறந்த காழ்ப்புகளற்ற குழுவாதமற்ற உரையாடலுக்குரிய முக்கிய புள்ளிகள் எனலாம்.
ஒழுங்குபடுத்தப்பட்ட சாதியப் போராட்டம் என்று எதுவும் நிகழாத இந்த நேரத்தில்கூட நேரடி சாதிவெறியின் பலவீனம் வெளிப்பட்ட ஒரு உதாரணமாக தேரை இழுப்பதற்கு ஜேபிசி இயந்திரத்தை பாவித்த செயலை எடுத்துக்கொள்ள முடியும் என்பது என் கணிப்பு. அவ்வாறாக இது சாதிய மனநிலையில் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்த ஒரு பின்வாங்கல் என்று எடுப்பதா அல்லது சாதிவெறிக்கான ஓர் உதாரணமாகக் கொள்வதா என்பது குறித்தும் உரையாடப்பட முடியும். இன்னொரு சம்பவத்தில் இராணுவத்தை மட்டும் பாவித்து தேரிழுத்ததும் பொறியைக் கிளப்பியது. இதில் பின்வாங்கலும் இருக்கக் கூடும், அல்லது அரச இயந்திரத்தின் காவலர்கள் என்றளவில் அதில் அரசியலும் இருக்கக்கூடும். தமிழ்க் குறுந்தேசியவாதிகளுக்கு இது அதிர்ச்சியளிக்கலாம். பேரினவாத அரசையும் போரையும் ஆதரித்தவர்கள் ஆதரிப்பவர்கள் அல்லது ஒரு மென்போக்கை கடைப்பிடிப்பவர்கள், புலியெதிர்ப்பாளர்கள் என்று சுட்டப்படுபவர்கள், நாத்திகர்கள் பலரும் இராணுவம் தேரிழுத்தது குறித்து ஏன் பரபரப்பானார்கள் எனத் தெரியவில்லை. அதேநேரம் தோற்றமளிக்கும் சாதிய மிதவாதப் போக்கு அல்லது அடக்கிவாசிப்பு சாதிய எதிர்ப்புப் போராட்டத்தால் சீண்டப்படும்போது, தனது உண்மை முகத்தை வெளிப்படுத்தும். அது வந்தடைந்திருக்கிற இடம் தெரியவரும்.
சாதியெதிர்ப்புப் போராட்டத்தை செயலில் வரைய முனைபவர்கள்(!) எதிரியின் பின்வாங்கல் வெளிகளை அடையாளங்கண்டு ஊடறுத்து முன்னேறிச் செல்வதை விட்டுவிட்டு, சாதியத்தின் வீச்சை தமக்கு பாதகமில்லாததும் செயலற்றதுமான வாய்வீச்சு எல்லையில் நின்று பேசிக்கொண்டிருப்பது, மீம் எழுதிக்கொண்டிருப்பது ஒரு பலவீனம். அது செயலுக்கான ஒரு சாதகமான வெளி மறைந்து கிடப்பதை அடையாளம் காணத் தவறுகிற அல்லது சாதுரியமாகத் தவிர்த்துவிடுகிற ஒரு பலவீனம். புலிகளால் சமூகவிடுதலைப் போராட்டம் தடைப்பட்டது என்பது எந்தளவுக்கு சாத்தியமான மதிப்பீடோ, அந்தளவுக்கு சாத்தியமான உண்மை, சாதிய எதிர்ப்பாளர்களின் செயலூக்கமின்மையும்தான் என்பதை -புலிகளின் அழிவு நடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த அசுமாத்தத்தையும் காட்டாத- வரலாற்றுவெளி நிரூபித்திருக்கிறது.
பகுதி-2
முப்பது வருடங்களுக்கு முன் நாட்டைவிட்டு வெளியேறி முற்றுமுழுதான வேறொரு சூழலில் புகலிடத்தில் வாழ்பவர்கள் அன்றிருந்த பண்பாட்டை, சிந்தனைமுறையை, காட்சிப் படிமங்களை தம்முடன் காவிவந்தது மட்டுமல்ல, அன்றைய தகவல்களோடு மட்டுப்பட்டு நின்ற அவலமும் நடந்தேறியபடி இருக்கிறது அது எல்லா தளத்திலும் நடந்தேறுகிறது. முகநூலில் இன்று கேட்கும் இரைச்சல் பெருமளவுக்கு புகலிடத் தமிழர்களினது இரைச்சல்தான். அதுகூட மிகச் சிறு பகுதியினரினது குரல்தான். இலங்கையிலிருந்தும் புகலிடத்திலிருந்தும் சாதிய ஒடுக்குமுறை குறித்து கருத்துரைக்கக்கூடியவர்களும், ஒடுக்கப்பட்ட சமூகசக்திகளாக இருப்பவர்களும், நடைமுறை அனுபவங்களையும் அவதானிப்புகளையும் அன்றாடம் சந்திப்பவர்களும் இந்த விவாத இரைச்சலுக்கு வெளியே பெரும்பான்மையாக இருக்கிறார்கள். மவுனமாக இருக்கிறார்கள். ஒரு சமூக ஒடுக்குமுறை குறித்த உரையாடலிலிருந்து அவர்களை வெளியே தள்ளிய அல்லது உள்ளிழுக்கத் தவறிய விவாத அணுகுமுறை -தனிநபர் தாக்குதல், அறிவதிகாரம், செயலின்மை, அந்நியத்தன்மை என்பன- பற்றி இந்த சிறு பகுதியினர் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
அண்மையில் முகநூலில் களைகட்டிய சாதியம் குறித்த கருத்துகள் தேவையான விவாதங்களாகவும் அதேநேரம் வெறும் தர்க்கங்களாகவும் பட்டிமன்றமாகவும்கூட அமைந்தன. அவை உரையாடல் தளத்தில் இருக்கவில்லை. அதற்கான காரணம் குழுவாதம் என்பது என் அவதானிப்பு. ஒருசில புத்திசீவிகளின் அறிவதிகாரம் மொழிவழியே தெறித்தது. passive racism மனநிலையை கொண்ட வெள்ளையர் ஒருவர் கறுப்பினத்தவர் ஒருவரின் உணர்வுநிலையை எட்டமுடியாத நிலையில் அவர்கள் (inferiority complex) தாழ்வுச் சிக்கலில் அவதிப்படுவதாக விளங்கிக்கொள்கிறார். தாழ்வுச்சிக்கலை உருவாக்கியது எது. வெள்ளை மேலாதிக்கக் கருத்தியல்தான் என்பதை அவர் சிந்திப்பதில்லை. தவறை பாதிக்கப்பட்ட கறுப்பினத்தவரிடமே சுமத்திவிடுகிற இந்த சூழ்ச்சியை “நல்ல மனிதர்” சிலவேளை புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். ஆனால் தம்மை சமூகப் புத்திஜீவியாக அடையாளப்படுத்துபவர்கள் அதைப் புரியவில்லை என்பதை சந்தேகித்தே ஆகவேண்டும். சாதிய அடுக்கில் கீழடுக்கில் வைத்து வகைப்படுத்தப்பட்டவரை நோக்கி “மேலிருப்பவர்” வீசுகிற வார்த்தைகள் அதை எதிர்கொள்பவருக்கு எந்தளவுக்கு வலியை ஏற்படுத்தும் என்பதை உணர வாய்ப்பில்லாமல் போகலாம். ஆனால் சுட்டிக்காட்டுகிறபோதாவது விளங்கிக்கொள்ள முடியும். குற்றத்தை பாதிக்கப்பட்டவர்மீதே தாழ்வுச்சிக்கல் என்பதாக சுமத்திவிடுகிற ஒருவரைக்கூட அதிகபட்சம் ஒரு “நல்ல மனிதராக” காண முடியும். ஆனால் அவரிடம் சாதிய மனநிலை இருந்ததால்தான் அவர் வார்த்தைகளை அப்படி எதிர்கொள்கிறார் என்பதாக பாதிக்கப்பட்டவரை குற்றவாளியாக்கும் ஒருவரில் அதிகபட்சமாக ஒரு “நல்ல மனிதரை”க்கூட காண முடியாது.
இன்னொரு விதத்தில் இந்த அறிவதிகாரம் ஆங்கிலத்தை (மேல்நிலையில்) வைத்து உரையாடும் இன்னொரு வடிவிலும் செயற்படுகிறது. தமிழில் ரைப் பண்ணுவது என்பது இன்று ஒரு மூன்றாம் வகுப்பு பிள்ளைக்குக்கூட ஒரு ஐந்து நிமிட பயிற்சியில் வரப்பெறுமளவுக்கு தொழில்நுட்பம் இலேசாகிப்போயிருக்கிறபோது, தமிழ்ப் புத்திசீவிகளுக்கு மட்டும் தமிழ் தட்டச்சுச் செய்ய வருகுதில்லை என்பதை நாம் நம்ப வேண்டும். அத்தோடு தமிழ்ப் பரப்பினுள் இந்த ஆங்கில வழி உரையாடல் மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள்தான் சென்றடையும் அல்லது பங்குபற்ற வைக்கும் என்பதை அவர்கள் உணரவில்லை என்பதை விடவும், அதை அவர்கள் விரும்புகிறார்களோ என சந்தேகிக்க வைக்கிறது.
யாழ் நூல்நிலைய புதிய கட்டடத் திறப்புவிழா குறித்த செல்லன் கந்தையன் அவர்களின் பிரச்சினையிலிருந்து இந்தப் பொறி முகநூலில் கிளம்பியது. அதுக்கு ஒரு சாராரிடம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட, ஏற்கப்பட்ட, கேள்விகேட்கப்பட முடியாத பதில் இருந்தது. இன்னொரு சாராரிடம் புலிகள் அமைப்பு சாதி பார்க்கவில்லை அல்லது குறிப்பிட்ட விவகாரத்திற்கு சாதிப்பிரச்சினை காரணமாக இருக்கவில்லை என்ற ஆதாரப்படுத்தல் முயற்சி இருந்தது. அந்த இரு பக்கத்தையும் கவனப்படுத்தும் விதத்தில் விவாதங்கள் ஆதாரப்படுத்தல்கள் வெளிவந்தன. இந்த சாராரை மட்டுமல்ல -புலிகளின் அரசியல் போக்கோடு இணைத்துப் பார்த்து- இந்த இரண்டு போக்குக்குள்ளும் அகப்படாத உரையாடல்களை முன்வைத்தவர்களையும் சேர்த்து சாதிவெறியர்கள் என முத்திரை குத்தப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. அதுமட்டுமல்ல சாதி என்று வருகிறபோது புலியெதிர்ப்பாளர்களே புலியாதரவாளர்களாக மாறினார்கள் என வேறு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்கள். ஆக தியாகி-துரோகி என்ற இருமை வகுப்பைப்போல இந்த விவாதத்தை தீர்மானகரமாக முடித்து வைத்திருக்கிறார்கள், தம்மை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதாக உரிமை கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள்! இந்த இலட்சணத்தில் அமெரிக்க நிறவெறிப் போராட்டத்திலிருந்து எதை நாம் கற்றுவிடப் போகிறோம் என்ற சலிப்பே எஞ்சுகிறது.
(புரட்சிகர அல்லது சமூகமாற்றம் குறித்த) அரசியலில் சாத்தியப்பாடுகள் பற்றி மட்டுமே பேச முடியும். நீதிமன்ற முறைமையிலான அத்தாட்சிப்படுத்தலினால் அல்ல என்ற (சமூக) விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையை கவனம் கொண்டால், இந்த குறித்த விவகாரம் இவளவுக்கு பிரித்து குலைத்துப் போடப்பட்டது அதீதம் என்றே தோன்றுகிறது. அதற்குள்ளால் எழுந்த தன்முனைப்புகளின் எச்சில் அவரவர் மூஞ்சியிலேயே பறந்ததைக்கூட அவர்கள் கவனியாதிருத்தல் கூடும். வாசகர்கள் அறிவர்.
புலிகள் ஒரு ஆயுத அரசியல் இயக்கம். அது சாதியத்தை அடிப்படையாக வைத்து போராட்டத்தை எடுத்த அமைப்பல்ல. தமிழ்த் தேசியத்தை முன்வைத்து போராட்டத்தை எடுத்த அமைப்பு. அதன் அரசியலுக்குள்ளிருந்து சாதியப் பிரச்சினையை தனியாக பிரித்தெடுத்து ஆய்வு செய்வது முழுமையாக இருக்காது. அது அரசியலை ஆணையில் வைத்த அமைப்பல்ல. ஆயுதத்தை ஆணையில் வைத்த அமைப்பு. அது சமூக ஒடுக்குமுறைகளை கையிலெடுத்து தமிழரை பிரித்துவிடாமல், தமிழீழ இலக்கை நோக்கி ஓடவேண்டும் என சூட்சுமமாக இயங்கியது. தமிழீழ சட்டங்களில் சாதியத்துக்கு எதிரான தண்டனை முறைகளை வரைந்து வைத்தது. தமிழீழத்தை எடுத்தபின் அவைகளைப் பற்றி யோசிக்கலாம் என குறுக்குவழியை கடைப்பிடித்தது அது. (மற்றைய இயக்கங்கள் சிலவும் சோசலிச தமிழீழம் கிடைத்தபின் இதை கையாளலாம் என்ற போக்கை கொண்டிருந்ததுண்டு.) அதன் விளைவு சாதிய ரீதியில் மட்டுமல்ல, ஆணாதிக்க கருத்தில் ரீதியிலும் புலிகள் தனது போராளிகளைக்கூட அநாதரவாக கைவிட்டுச் செல்வதில் முடிந்துபோனது.
அவர்களுக்கு நூல்நிலைய எரிப்பின் சிதைவானது அரசை அல்லது பேரினவாதத்தை அம்பலப்படுத்தும் ஒரு பிரச்சாரப் படிமமாகத் தெரிந்தது. அதனாலேயே சந்திரிகா நூல்நிலையத்தை கட்டியமைக்க முன்வந்தபோது சாத்தியமற்ற கோரிக்கையொன்றை வைத்து அரசு தரப்பே கைவிட்டதான ஒரு தோற்றப்பாட்டை உருவாக்க முயற்சித்தார்கள். 74 இல் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த கொலைகளுக்கு விசாரணைக்குழு அமைத்து அப் பிணக்கைத் தீர்த்தபின், நூல்நிலையம் கட்டுவது பற்றி பேசலாம். அதுதானே முதலில் நடந்தது எனவே அதிலிருந்து தொடங்கலாம் என ஒரு தர்க்கத்தை முன்வைத்தனர். (குணா கவியழகனின் காணொளித் தகவல் இது). பிறகு அரசு நூல்நிலையத்தை கட்டியதும் இவர்களது நோக்கம் ஆட்டங்கண்டது. அதை திறக்காமல் வைத்திருக்க ஆடிய ஆட்டத்துக்கு ஆனந்தசங்கரி, செல்லன் கந்தையன் ஆகியோர் பகடைக் காய்களாயினர். இந்த சந்தர்ப்பத்தை வெள்ளாள ஆதிக்க மனநிலை கொண்டோர் பாவித்திருக்க சாத்தியம் உண்டு என்பது என் பார்வை. இல்லை, சாதிய அடிப்படையில் புலிகளால் திட்டமிடப்பட்டே அணுகப்பட்டது என்ற இன்னொரு சாராரின் பார்வை பலமாக இருக்கிறது. அதுவும் சாத்தியப்பாடுகளைக் கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை அப்படி மட்டும்தான் பார்க்க வேண்டும் இல்லையேல் நீ ஒரு சாதிவெறியன் என்ற கணக்கில் கிளம்புவது என்ன மனநிலை எனத் தெரியவில்லை. வேளாளத் தலைமைக்கு வெளியே புலிகளின் தலைமை உருவாகியது என பிரபாகரனை “தலித்” அடைப்புக்குள் உட்படுத்திக் கொள்ளும் ஒருவர், மறுபுறத்தில் புலிகள் சாதிய அடிப்படையில் நூல்நிலையத் திறப்பு விவகாரத்தை அணுகினார்கள் என்ற கருத்தை முன்வைப்பதில் எழும் முரண்நிலைக்கும் அவர்களிடம் விளக்கம் இல்லாமல் போகாது. இருக்கும். எடுத்த முடிவை ஒருவர் பரிசீலிக்கத் தயாராக இல்லாதபோது, முடிவை நியாயப்படுத்த அவர்கள் விளக்கங்களை உற்பத்தி செய்துகொண்டே இருப்பர்.
“செல்லன் கந்தையன் அவர்கள் ஒருக்கால் அப்பிடி சொல்லுறார், ஒருக்கால் இப்படி சொல்லுறார்” என்று அவர்மீது தனிப்பட்ட வழக்குத் தொடுத்ததும், இருவேறு காணொளிகளை எதிரெதிர் அத்தாட்சியாக முன்வைக்க கிளம்பியதும் நடந்தன. அவரிடம் எழுந்த முரணான சாட்சியத்துக்கான காரணிகளை மிகச் சிலராவது முன்வைக்கத் தவறவில்லை. அரசியல் சூழல், இருப்புச் சார்ந்த ஊடாட்டங்கள், புறநிலை அழுத்தங்கள், தனிநபர் உளவியல் முரண்கள், அரசியல் தொடர்ச்சியின்மை, முதுமை என்பவற்றை கணக்கில் எடுக்காமல், நீதிமன்றத்துள் வைத்து தீர்ப்பு வழங்குகிற நிர்வாகத்தனமான முறைமையில், சாட்சியமாக்கி நிரூபிக்கும் கோதாவில் காணொளியாளர்கள் இறங்கினர். இதன்வழி ஆம் இல்லை பாணியில் நிறுவ முற்பட்ட அறிவார்த்தம் நாம் எங்கே நிற்கிறோம் என்பதை தெளிவாகவே காட்டியிருக்கிறது.
முதுமையை காரணம் காட்டி அல்லது கவனத்தில் எடுத்து விவாதங்கள் முன்வைக்கப்பட்டபோது, செல்லன் கந்தையன் அவர்களைவிட வயதான சம்பந்தன் அவர்களுக்கு முதுமை இல்லையா? கருணாநிதிக்கு முதுமையில்லாமலா இருந்தது என்றவாறான எதிர்க் கேள்விகளும் எழுந்தன. இதில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியன. ஒன்று, தனிநபர்களின் உடல் உள கட்டமைப்பை சமப்படுத்துவது தவறானதாக அந்த தர்க்கத்தை வைத்தவர்களுக்கு புரியவில்லை. இன்னொன்று சம்பந்தனோ கருணாநிதியோ தொடர்ச்சியான அரசியல் வாழ்வுக்குள் பேசியதையே திரும்பத் திரும்ப பேசி தகவல்களை திரும்பத் திரும்ப முன்வைத்து பயிற்சிக்கு உள்ளானவர்கள். அவர்களது நினைவிலி மனதில்கூட அவை இறங்கிச் சென்று அமருமளவுக்கு அது இருந்திருக்க வாய்ப்பு உண்டு. நோம் சொம்ஸ்கியைப் பார்த்தால் உலகத் அரசியல் தகவல்கள் சம்பவங்கள் கூற்றுகள் விமர்சனங்கள் என எல்லாமும் பிசகின்றி இந்த முதுமையிலும் வெளிவருவற்கு அவரது துறைசார் அறிவு மட்டுமல்ல, தொடர்ச்சியும் வெளிப்படுத்தலும் ஈடுபாடும் அதனூடான பயிற்சியும் காரணமாக இருக்கின்றது. நினைவு மனத்திலிருந்து நினைவிலி மனத்துக்குள் உட்சென்றுவிடுகிறளவான பயிற்சி கொண்ட நீண்ட வாழ்வு அவரது. அப்படியானவர்களின் முதுமையால் முடியுமெனின், (அவைகளெதுவுமற்ற) செல்லன் கந்தையன் அவர்களின் முதுமையால் ஏன் முடியாது என தர்க்கம் புரிவது அர்த்தமற்றது.
பகுதி-3
தீண்டாமை அல்லது ஒடுக்குமுறை வடிவங்களையும், கருத்தியலையும் இரு பெரும் பிரிவாக ஆய்வு ரீதியில் வகைப்படுத்திப் பார்க்காமல் நாம் முன்னே நகர முடியாது. பெண்கள் மீதான ஒடுக்குமுறை வடிவங்கள் தகர்ந்த அளவுக்கு ஆணாதிக்கக் கருத்தியல் முற்றாகத் தகர்ந்தது கிடையாது. வளர்ச்சியடைந்ததாகச் சொல்லப்படுகிற இந்த மேற்குலகிலும் அதுதான் நிலை. கோட்பாட்டு வகைப்படுத்தல் இல்லாமல், எல்லாவற்றுக்கும் பொத்தாம் பொதுவாக விளக்கமளிக்கும் எமது அறிவு முகநூலில் தற்போது நடந்த சாதியம் குறித்த விவாதத்தை சிக்கலாக்கி எதிரணிகளாக பிரித்து வைத்துள்ளது ஒரு பெரும் அவலம்! குறைந்தபட்சமாக, பலர் தீண்டாமையையும் கருத்தியலையும் வேறுபடுத்தி பேசக்கூடத் தவறியதாகவே படுகிறது.
தேசிய இனப் போராட்டத்தை மொத்தத்துவமாக தமிழர் என்ற அடையாளத்துள் வைத்து அதன் உள்ளார்ந்த ஒடுக்குமுறைகளை மறைத்து அல்லது பேசாப்பொருளாக்கி தேசியவிடுதலைப் போராட்டம் நகர்ந்தது. கடைசியில் அது தேசியவிடுதலையில் மட்டுமல்ல, சமூக ஒடுக்குமுறை தகர்ப்பிலும் எதையும் சாதிக்காது ஓய்ந்தது. இப்போ தலித் என்ற மொத்தத்துவத்துள் சாதியப் படிநிலைகளை, அவற்றுக்கிடையிலான உறவுமுறைகளை, கலவாமை போன்ற உப தீண்டாமைக் கூறுகளை மறைத்து அல்லது பேசாப்பொருளாக்கி நகர்தலும் சரியானதுதானா என சிந்திக்க வேண்டியிருக்கிறது. இவைகளை இப்போதைக்கு பின்போட வேண்டும். அதைப் பேசுவது சாதியெதிர்ப்புப் போராட்டத்தை பலவீனமாக்கும் என நினைத்தால் நாம் எமது இயக்க வரலாறுகளிலிருந்து பாடம் படிக்கத் தவறியவர்களாவோம் என்பதை இங்கு பதிவுசெய்துவிடலாம். இந்தக் கருத்தை சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொதுமையை அதன் ஆதாரத்தன்மையை நிராகரிப்பதாக மொழிபெயர்க்காமல் இருந்தால் சரிதான்.
பிறப்பால் வெள்ளாளர்களாக இருந்தவர்களையும் உள்ளடக்கி சாதிய எதிர்ப்புப் போராட்டத்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி நடத்திக் காட்டியது வரலாறு. இன்றோ புகலிடத்தில் “தலித்தியம்” பேசுபவர்கள் மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ளத் திராணியற்ற சந்தர்ப்பங்களில் “வெள்ளாளர்” என்ற சுட்டலை பாவித்து வாயடைக்கச் செய்வது வசதியாக இருக்கிறது. தலித் என்ற சொல்லாடல் குறித்து வைக்கப்படும் மாற்று கருத்துகளை உரையாடலுக்குள் கொண்டுவரும் இயலாமையற்ற நிலையில், “தலித் என்ற சொல்லை வெள்ளாளர் சொல்லவே விடுறாங்களில்லை” என கடப்புப் பிரித்து அவர்களால் கடந்துசெல்ல முடிகிறது. “தலித்துகளே தலித் மக்களின் பிரச்சினை குறித்து பேச முடியும் ஏனெனில் தலித்துகளே தலித் மனநிலையை புரிந்துகொள்ளலாம்” என தத்துவம் பேசுவதில் என்ன புதிசாக இருக்கிறது. (ஆணானவன் பெண் மனநிலையை உணர முடியுமா? வெள்ளையர் ஒருவர் கறுப்பினத்தவரின் மனநிலையை உணர முடியுமா? என்ன). இந்த அடையாள அரசியலை பேண தம்மை இயன்றவரை தலித் என போலியாக அடையாளம் காட்டி நகர்ந்த உயர்சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் என்ன நேர்மை இருந்துவிடப் போகிறது. குழுவாதம் இறுகிப்போயிருக்கும் நிலையில், தமது குழுவைச் சேர்ந்த வெள்ளாளர்களிடம் தலித் மனநிலையை எட்டும் அதீத உச்சபட்ச பிரக்ஞை இருப்பதாக சப்பைக்கட்டு கட்ட அறிவுக்கூச்சம் வரவேண்டும். புகலிடம் வந்து 30 வருசமாக ஊருக்குப் போகாதவர்களும்கூட இலங்கையின் சாதிய ஒடுக்குமுறை குறித்து இலங்கையிலிருப்பவர்களை பேச விடாமல் சொற்களை வீசுவது எவளவு அபத்தம். புகலிடத்திலுள்ள “தலித்திய” குழுவால் அல்லது அமைப்பால் தாய் அமைப்பு தளத்தில் இல்லாதபோது எதை சாதித்துவிட முடியும். எப்படி செயற்பட முடியும். குறைந்தபட்சம் அந்த அமைப்புகள் குழுக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து என்ன ஆய்வை வெளியிட்டிருக்கின்றன, என்ன வேலை முறைகளை அறிவித்திருக்கின்றன, என்ன செயற்திட்டங்களை செய்கின்றன, பொருளாதார ரீதியில் என்ன பங்களிப்பைச் செய்கின்றன என எந்த விபரமுமே பார்வைக்கு எட்டவில்லை.
இந்து மதம் சாதிய மதம். அது அழிய வேண்டும் என சொல்லிக்கொள்ளும் ஒருவர் அதை தனது குடும்பத்துள்ளாவது ஒழிக்க போராடுதல் வேண்டும். அதை தனிநபர் சுதந்திரத்தில் தலையிட முடியாது என விளக்கமளிப்பதில் நேர்மை இருந்துவிடவா போகிறது. இந்துமத சடங்குகளிலிருந்துகூட இவர்களில் சிலரால் விலகிப்போக முடியவில்லை என்பது நாமறியாததல்ல. போராட்டம் என்பது அறம், பிரக்ஞை என மனவளத்தை அகநிலைகளில் வேண்டி நிற்பது. அதற்கு நாம் நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் போராடுதல் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். அதற்கு ஆதாரமான நேச சக்திகளை இல்லாமலாக்குகிற வாய்வீச்சுகளால், தடாலடிகளால், தனிநபர் தாக்குதலால், கிண்டல் கேலிகளால் எந்தப் பிரயோசனமுமில்லை. மாறாக அது சாதியெதிர்ப்புக் குரலுக்கு பின்னடைவையே பரிசாக வழங்கும். சமூகம் குறித்து அக்கறையுடன் சிந்திக்கும் வட்டம் எப்போதுமே சிறியதாகவே இருக்கிறது. அதற்குள் நாம் எதிரிகளைப் புனைந்து களமாடுகிறோம். சமூகசக்திகளிடம் இருக்கும் நேரம்சங்களை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, எதிரம்சங்களாக மாற்றி அல்லது ஊதிப் பெருப்பித்து களமாடும் வீரத்துக்கும் சக்தி விரயத்துக்கும் பொருள்தான் என்ன. தன்முனைப்பே நமது முதல் எதிரி. தன்முனைப்பை நாம் ஆணையில் வைக்காமல் உரையாடுவதும், அதற்கெதிராக எமக்குள் போராடியவண்ணமும் செயற்படுதல் அவசியம். அது எம்மை வெற்றிகொள்ள விடாமல், அதை நாம் வெற்றிகொள்வது முடியாதா என்ன!
-ரவி (12072020)
கனதியான பதிவு. காலத்திற்கு தேவையானது.
நல்லதொரு பதிவு இரவி.
முழுமையாக உடன்படுகின்றேன்.
ஓரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றுக் கருத்து உண்டு.
கறுப்பின அடையாள அரசியலை சாதிய அடையாள அரசியலுடன் ஒப்பிட முடியாது. கறுப்பினமோ பெண்ணினமோ தனதுஅடையாளத்தை உயர்த்திப் பிடித்துப் போராடலாம். தனது அடையாளம் ஒடுக்குபவர்களின் அடையாளத்துடன் எந்தவகையிலும் குறைந்தது அல்ல எனக் கூறிப் போராடலாம்…
ஆனால் சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் அவ்வாறு போராடுவது அவர்களுக்கே எதிரானது என்பதே எனது புரிதல். ஏனனில் இன்றைய சாதிய அடையாளங்கள் என்பது ஒடுக்கும் சாதிகளால் சாதிய ஒடுக்குமுறைகளால் உருவாக்கப்பட்ட அடையாளங்கள். இந்த அடையாளங்களை காவித்திரிய நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். செயற்கையான அடையாளங்கள். ஆகவே இவர்கள் இந்த அடையாளங்களுக்கு எதிராகப் போராடுவதும் தம் மீதான அடையாளங்களை களைவதுமே சாதிய விடுதலையை சாத்தியமாக்கும் என்பது எனது புரிதல்.
மாறாக கறுப்பின பெண்ணி அடையாளங்கள் இயற்கையான அடையாளங்கள். இந்த அடையாளங்களுக்காகவே ஒடுக்கப்படுகின்றார்கள். அந்தவகையில் இவர்கள் தமது அடையாளங்களை உயர்த்திப் பிடித்தலே அவசியமானது.
நன்றி உங்களின் விரிவான பதிவுக்கு.
நட்புடன்