நிகழ்காலத் துயரம்

மேற்குலகில் கொரோனா மரணங்கள் ஏற்படுத்தியிருக்கிற மோசமான நிலைமை தொடர்கிறது. கொரோனா யுகம் அரசியல் ரீதியில், பண்பாட்டு ரீதியில் எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகிற மாற்றங்கள் குறித்து நாம் அதிக அறிதல் பெறவேண்டியிருக்கிற காலம் இது.
கொரோனா மரணங்களில் தமிழர்கள் ஒரு பகுதியினர். இந்த இறப்புகளில் அவர்கள் தனித்து விசேட காரணங்களால் மரணமடையவில்லை. பெருமளவு இளைஞர்கள் சாகிறார்கள் என எந்த புள்ளிவிபரமுமற்ற அறிதலோடு எழுதப்படும் பதிவுகளும், புகலிடத் தமிழர்களின் சிந்தனைப் போக்கை சாடி இந்த மரணங்களை அணுகும் போக்குகளும் அபத்தமானது மட்டுமல்ல மனிதாபிமானமற்றதுமாகும்.

உடல் எதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் கொரோனா குழந்தைகளிலிருந்து முதியவர்வரை இலகுவாக தாக்கி மரணத்தை விளைவிக்கிறது என மருத்துவத்துறையினர் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். அதற்கு தமிழர்கள் விதிவிலக்காக இருக்க முடியாது. இந்த காரணத்தால் இளம் வயதினர் சிலர் இறந்துபோனது உண்மை. அதற்கு அவர்கள் மக் டொனால்ட் போன்ற உணவுவகைகளை அதிகம் உண்பதாக எடுத்துக்கொண்டு விளக்கம் அளிப்பது நகைப்புக்குரியது. ஐரோப்பிய வாழ்நிலையில் எந்த நாட்டு இளசுகள் மக்டொனால்ட் பக்கம் போகாமல் இருக்கின்றனர். (இதை மக்டெனால்ட் உணவுவகை ஆரோக்கியமானதென மொழிபெயர்க்காமல் இருந்தால் சரிதான்.)
‘புகலிடத் தமிழர்கள்’ என்ற ஒற்றை அடையாளத்துள் நின்று பேசுவதே பிரச்சினைப்பாடானது. அது நாட்டுக்கு நாடு தமிழர்கள் செறிந்துவாழும் நகரங்களுக்கும், புறநகர்களில் அல்லது கிராமங்களில் வாழும் தமிழர்களுக்குமிடையே ஏற்படுகிற சிறிதளவிலான பண்பாட்டு வித்தியாசங்கள், இரசனைகள், சிந்தனை முறைகள், பழக்க வழக்கங்கள் என பல அம்சங்கள் அடங்கலான முரண் தொகுதியை உள்ளடக்கிய பதம். இன்னொரு பக்கம் முதல் தலைமுறைக்கும் இரண்டாம் தலைமுறைக்குமான இடைவெளி, முரண்கள், சிந்தனைப் போக்குகள் என்பன இந்த பொதுப் பதத்துள் அடிபட்டுப் போகின்றன. உயர் பதவிகள் பெற்று குடிபெயர்ந்தவர்களுக்கும் அகதியாக வந்து சேர்ந்தவர்களுக்குமான வித்தியாசங்கள் அடிபட்டுப் போகின்றன. அடிப்படையில் தமிழர்கள் (குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்கள்) என்ற அடித்தளத்தில் வைத்துத்தான் ‘புகலிடத் தமிழர்கள்’ என்ற பதம் பேசப்படுகிறது. ஒட்டுமொத்த புகலிடத் தமிழர்கள் சார்ந்து ஒருவர் பேசுவது சாத்தியம் என நான் நமபவில்லை. ஆனால் பொதுவான சில விடயங்களை அடையாளம் காண முடியும்.
கொரோனாவுக்கு முன்னரே முதல் சந்ததியின் (அகதித் தமிழர்களின்) இறப்பு ஐம்பது வயதைத் தாண்டி அல்லது அறுபது வயதை அண்மித்து பெருமளவில் நிகழ்ந்து வருகிறது. காரணம் உடல் உள ரீதியிலானது. ஐரோப்பியர்களின் வாழ்காலத்தோடு ஒப்பிடுகையில் 65/67 வயதில் ஓய்வூதியம் பெறுவதுவரை வாழ்வது என்பது ஒரு சவாலாகவே பலருக்கும் இருக்கிறது.
எமது உடல் கட்டமைப்பு ஒரு வெப்பவலய மண்டலத்துக்குரியது. மரபு ரீதியாக மரபணுக்கள் அந்த கட்டமைப்பில் மாற்றம்பெற்று வந்தவை. திடீரென இந்த குளிர்ப் பிரதேசங்களில் விடப்படுகிறபோது இந்த உடல் திடீர் மாற்றத்துக்கு தன்னை தகவமைக்க நேர்கிறது. அதன் வெளிப்பாடுகளாக தோல், சொண்டு எல்லாம் வரண்டு வெடிப்புகள் எற்படுகிறது. சாதாரண குளிருக்கு உதறுகிற உடல் பெரும் குளிர் வரை தன்னை தகவமைக்க போராடுகிறது. இது உடலில் ஏற்படுத்தியிருக்கிற மாற்றம் மருத்துவத்துறை சார்ந்த அறிவினூடு பார்க்கப்பட வேண்டியது.
இரண்டாவது விடயம். பலரும் இதை கண்டுகொள்வதில்லை. ஐரோப்பியாகளின் இயல்பான உடலசைவும் எமது இயல்பான உடலசைவும் ஒன்றல்ல. எங்கோ அவசரமாக போவதுபோல் அவர்கள் நடந்துசெல்வதோ வேலைசெய்வதோ அவர்களின் இயல்புக்கு உட்பட்டது. ஸ்லோமோசனில் இயல்பாக இயங்கும் நாம் அந்த இயல்பான விரைந்த உடலசைவுக்கு மாற போராட வேண்டியிருந்தது. இல்லையேல் வேலை கிடைக்காது அல்லது வேலையிலிருந்து துரத்தப்படுவோம். மாறினோம். உணவகங்களினுள் அல்லது தொழிற்சாலைகளில்
வேலைக்கு புகுந்தால் ஒரு இயந்திரம்போல் உடல் அசையத் தொடங்கிவிடும். வீட்டில் தமிழர்களின் இயல்பான உடலசைவு மீளும். இந்த இருவேறு அசைவுகள் உடலின் மீதான பாதிப்பை உணரவைக்கிறது. உடலை அயர்ச்சிக்கு உட்படுத்துகிறது என்பது எமக்குக் கிடைத்த புது அனுபவம். அது ஓர் பட்டறிவு.
மூன்றாவது எமது உணவு முறையும் மனப்பான்மையும்! வேறு நாட்டவரின் உணவு வகைகளை விட எம் (மிளகாய்த் தூள்) உணவு வகை உருசியானது என அப்பாவித்தனமாக நினைப்பது அல்லது அவரவர் உணவுப் பழக்கவழக்க தனித்துவத்தை மறுக்கும் போக்கு ஒன்றும் உள்ளது.காலநிலை மாற்றங்கள் அதாவது வெப்பநிலை வேறுபாடுகள் தாய்நாட்டிலிருப்பது போலன்றி மிகப் பெரும் வித்தியாசங்களை முன்னறிவிக்கிற ஒரு நாட்டில் வருடம் 365 நாளும் ஒரே மாதிரியான உணவு வகைகளை சமைத்து உண்பது பெருமளவு தமிழர்களின் வழமையாக இருக்கிறது. அத்தோடு நேரத்துக்கு உண்பதில்லை. ஐந்தரை மணிக்கு அல்லது ஆறு மணிக்கு இரவு உணவு உட்கொள்கிற ஒரு பண்பாட்டுச் சூழலில் எம்மில் பலரும் ஊர் போலவே மிக தாமதமாக உணவை உட்கொள்வது. வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு நித்திரைக்குப் போவது என அசல் தமிழ் மனோநிலையில் வாழ்கிறார்கள். தமிழர்களை தாக்குகிற இரு பெரும் நோயாக நீரிழிவு, இதயநோய் இருப்பதற்கு இந்த உணவுப் பழக்கவழக்கம் ஒரு காரணமாக இருக்கிறது.
அதையும்விட, உடற்பயிற்சியில் ஆர்வம் இல்லாமை, நடத்தல் அல்லது ஓடுதல் போன்றவைகளைக்கூட கிரமமாக மேற்கொள்ளாமை எல்லாம் உடலை எதிர் அம்சங்களாக தாக்குகிறது. இந்த நாட்டவர் இளம் வயதினரிலிருந்து முதியவர் வரை வெயில் காலமானாலும் சரி பனிக்காலமானாலும் சரி இவ்வகைபயான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க எம்மில் பலரும் அதிலிருந்து விலகியே இருக்கிறோம். அளவுக்கதிகமான குடிகளிலும், கொண்டாட்டங்களின்போது போதை ஏறும் வரை ‘தண்ணியடிச்சிட்டு’ தாமதமாக உணவை உண்பதாலும் மூத்த தலைமுறையினரில் கணிசமானவர்கள் உடலுக்கு எதிராகவே செயற்படுகின்றனர்.
அதேநேரம் ஒரு விடயத்தை இங்கு பதிவுசெய்ய வேண்டும். மலிவான தொழிலாளர்களாக இருந்த இந்தத் தலைமுறையினர் இந்த நாட்டவர் போன்று உணவகங்களில் சாப்பிடுவது, அல்லது அந்த உணவுவகைகளை மட்டும் தொடர்ச்சியாக வாங்குவது என்பது பொருளாதார ரீதியில் சாத்தியப்பாடாக இருப்பதில்லை. தமிழ்க்கடைகளை தொடர்ந்து நாட வேண்டியிருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.
இந்த விடயங்கள் குறித்து மிகப் பெரும் ஆய்வுகள் தேவையாக இருக்கிறது. புகலிட இலக்கியங்கள் என சொல்லப்படுபவையிலும் பெரியளவில் இதை தரிசிக்க முடியாது.
நுகர்கலாச்சாரம் என்பது நாட்டிலோ இங்கோ ஒரே மனநிலை கொண்டதுதான். இங்கு வந்தவர்கள் அதை பவுசாக காட்ட முடிகிறது. காட்டுகிறார்கள் அவ்வளவுதான். ஒரு பிராங்க் அல்லது யூரோ ஒரு ரூபா என இருந்தால் இந்த பவுசு செத்துப்போயிருக்கும். இந்த நுகர்வுக் கலாச்சாரம் ஒரு பகுதியினரை அவர்களது பொருளாதார பலத்தையும் மீறிய வகையில் பெருந்தொகை கடனில் வீடு வாங்க வைத்து, அந்த கடனை கட்ட இரண்டு மூன்று வேலையென ஓடவைத்துவிடுகிறது. உடலின் மீதான எதிரம்சங்களை அது தோற்றுவித்துவிடுகிறது.
அறிவுத்தளத்தில் எல்லா வசதிகளும் திறந்துவிடப்பட்டிருக்கிற நாட்டில் தமிழ்த்தனமான சூழல்களும், தமிழ் அரசியலும், சினிமா சீரியல் பொழுதுபோக்குகளும், கலாச்சார காவல்களும் அதன்வழியான கொண்டாட்டங்களும் ஒரு புத்தகத்தைத் தன்னும் கையில் எடுத்து வாசிக்க பலரையும் விடுவதில்லை. இது அறிவுத்தளத்தில் மட்டுமன்றி உடல் உள ரீதியிலும் எதிர் அம்சங்களை தோற்றுவிக்கிறது.
அவர்கள் தாங்கிவந்த பண்பாட்டை, அடையாளத்தை காக்க நிர்ப்பந்திக்கும் நிறவெறி, பாரபட்சம் போன்ற புறநிலைக் காரணிகளும், அது ஏற்படுத்துகிற உளவியல் சிக்கல்கள், மொழிவழி எதிர்நோக்கும் போதாமைகள் போன்றவற்றை (தமிழ்த்தனத்துடன்) வெற்றுப் பிரமைகளைக் கொண்டு நிரப்ப முயற்சித்தார்கள். அதேநேரம் சாதிய மனநிலையும், வெள்ளையர்களை உயர்ந்தவர்களாக கருதும் காலனிய எச்சங்களும் ஒரு நவீன அடிமைத்தனத்தின் கீற்றுகளை அவர்களின் சிந்தனைத்தளத்தில் பேணி வைத்திருக்கிறது. நாட்டில் போய் இறங்கும் சந்தர்ப்பங்களில் அது அவர்களிடம் பவுசை பரிசளித்துவிடுகிறது.
இன்னொரு வகை அவலம் உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்ட இந்த மூத்த தலைமுறை நாட்டிலுள்ளவர்களால் பொருளாதார பிராணியாக (காசுமரம் உலுப்புபவர்களாக) பார்க்கப்படுவதாகும். நாட்டில் நடக்கிற துன்பகரமான நிகழ்வுகளுக்கு பதறியடித்து விசாரிப்பதும், பொருளாதார உதவி செய்ய உந்துவதுமாக இயங்கும் அவர்களுக்கு, இப்போ இங்கு ஏற்பட்டிருக்கிற கொரோனா நிலைமையில், வாழ்வின் சாத்தியம் பகுதியளவு கேள்விக்குள்ளாகியிருக்கிற நிலைமையில் நாட்டிலிருந்து, ஏன் குடும்ப உறவுகளிடமிருந்துகூட விசாரிப்புகள் அரவணைப்பாகக் கிடைப்பது அபூர்வமானதாக இருக்கிறது. இந்த பாராமுகத்துக்கு புகலிடத் தமிழர் பணம் சுரப்பவர்களாக பார்க்கப்படுகிற மனநிலையே காரணம்.
புகலிடத் தமிழர்களின் நிகழ்காலத் துயரம் கொரோனா மரணங்கள் !

 

-16042020

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: