பகடிவதையின் வேர்கள் குடும்பம், பாடசாலை போன்ற சமூகநிறுவனங்களில் பரந்து விரிந்திருக்கிறது. குடும்பத்துக்குள்ளோ பாடசாலையிலோ உறவு முறை அதிகாரம் சார்ந்தே செயற்படுகிறது. பெற்றோருடன் ஒரு பிள்ளை சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. பாடசாலையில் ஆசிரியருடன் சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. தமது கருத்துகளை அச்சமின்றி முன்வைக்க முடிவதில்லை. அவர்களது ஆலோசனைகள் கருத்தில் எடுக்கப்படுவதுமில்லை. இந்த நிறுவனங்களுள் கல்வி சார்ந்த அடக்குமுறையும் அழுத்தமும் (பாடசாலையாலும் குடும்பத்தாலும்) இணைந்தே செயற்படுத்தப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரன்கூட “போய்ப் படியடா” என்று பிடரியில் தட்டுகிற உரிமையைக் கொண்டுள்ளான் என்பது எவளவு துயரமானது.
அவன்(ள்) இளைஞனாகி அல்லது யுவதியாகி பல்கலைக் கழகம் போகிறபோதுதான் தன்னை கல்விசார் ஒடுக்குமுறையிலிருந்து சுதந்திரமானவனாக(ளாக) உணர்கிற நிலை வருகிறது. சமூகமானது, கலாச்சாரம், மதம் என்பவற்றினூடாக பெண்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறையை வெவ்வேறு வடிவில் பேணுகிறது. இளைஞனோ தன்னை சுதந்திரமானவனாக உணர்கிறபோது சமூகத்தின் ஆணதிகார மனநிலையின் அதிகாரத்தை வரித்துக்கொள்கிறான். அதுவே சமூக ஒழுங்கு என்பதால் அது அங்கீகரிக்கவும் படுகிறது. பல்கலைக் கழகம் செல்லும் அவன் தனது சுதந்திரத்தை மட்டுமல்ல, அவன் இதுநாள்வரை வாழ்ந்த அடக்குமுறையை அதன் வலியை இன்னொரு வடிகாலினூடு அதிகாரம் சார்ந்து நிகழ்த்தும் ஒரு சந்தர்ப்பத்தை பகடிவதையினூடு ஏற்படுத்திக் கொள்கிறான். இதில் பெண்களின் நிலையும் ஆண்களின் நிலையும் ஒன்றல்ல. (அதுகுறித்து பேசினால் நீளமாகிவிடும்).
இம்முறை புதிய மாணவனாக பம்மிக்கொண்டு துயரப்பட்டுக்கொண்டு இருப்பவன் அடுத்தமுறை இதே பகிடிவதையை செய்கிறவனாக மாறுகிறான். பகிடிவதை வெறும் சம்பவங்கள் அல்ல. அது ஒரு கட்டமைப்பு. அதிகாரக் கட்டமைப்பு. அந்த அதிகாரத்தை ஒரு புதிய மாணவன் அடுத்த ஆண்டே எட்டிப்பிடிக்கிறான். சுகிக்கிறான். இது அவனது உளவியல் சார்ந்த பிரச்சினையாக உருவாகிறது.
இதை ஏற்படுத்துவதில் பாடசாலையே முன்னணியில் இருக்கிறது. ஆசிரியர் மாணவர் உறவு என்பது ஜனநாயமயப்பட்டதாக இல்லை. அதற்கான மொழிகூட இல்லை. அந்த உறவு உரையாடலுக்கூடாக வருவதற்கு ஆசிரியருக்கும் மாணவருக்குமான அறிவுத்தளம் விரிவாக இருக்க வேண்டும். அது பரீட்சையை மையமாக வைத்த கல்வித் தளம் மட்டுமல்ல. அதையும் தாண்டியது.
திண்ணைப் பள்ளிக்கூடத்தின் ஒரு நீட்சியாக பாடசாலையில் ஆசிரியர் மாணவர் உறவு இருக்கிறது. பாடசாலைக்கு வெளியிலான (ஆசிரியர் மாணவர்) கூட்டுச் செயற்பாடுகள் போதாமையாக அல்லது இல்லாமலிருக்கிறது. வகுப்பில் மட்டும் வைத்து ஒரு ஆசிரியர் மாணவரை மதிப்பிடுவதும் மாணவர் ஆசிரியரை மதிப்பிடுவதும் ஒருபோதும் முழுமையாக இருக்க முடியாது.
தொழிலை மையப்படுத்துகிற கல்விமுறையும் அதுவே சமூக அந்தஸ்தாக உயர்த்தப்படுகிற பவுசு நிலைமையும் அதிகார மனநிலை வாய்ந்த நிர்வாகப் புத்திசீவிகளையே உருவாக்குகிறது. சமூக சிந்தனையுள்ள மனித உயிரியை (சமூகப்புத்திஜீவியை) உருவாக்குவதில் பாடசாலைகள் ஏதாவது அணுகுமுறைகளை வைத்திருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதில்.
மேற்குலகில் இவையெல்லாம் அதிசயிக்கத்தக்க அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆசிரியரை நீ என்று விளிக்கவும் எதிர்க் கருத்துகள் வைத்து உரையாடவும் சமூகப் பிரச்சினைகள் குறித்து உரையாடவும் அவைகுறித்து தமது பாடசாலையில் அல்லது பல்கலைக் கழகத்தில் வெளிப்படையாக முன்வைக்கவும் முடிகிற நிலை இருக்கிறது. நிறவெறி உள்ள ஒரு நாட்டில் நிறவெறியை (Racism) தமது பட்டப்படிப்புக்கான “தீஸிஸ்” ஆக எடுக்கவும் (இலங்கை முறைப்படி ஒப்பிட்டால்) 95 புள்ளிகளை எடுக்கவும் முடிகிற நிலை இருக்கிறது. இங்கிருக்கும் எமக்குக்கூட இது வியப்பளிக்கிறது.
இன்றைய தொடர்புசாதன நவீன உலகு ஒவ்வொரு சந்ததிக்குமான அறிவு இடைவெளியை இன்னமும் பெரிதாக்கியிருக்கிறது. பிள்ளைகளிடமிருந்து பல விடயங்களை கற்கவேண்டிய நிலைக்குள் எமை இட்டுச் சென்றுள்ளது. புள்ளிகளை உற்பத்தியாக்குகிற இயந்திரமாக மாணவர்களை பிழிந்தெடுக்கும் பாடசாலைகள் எதிர்கால சந்ததியை சமூகப்புத்திஜீவியாக மாற்றும் உள்ளடக்கத்தை வரித்துக்கொள்ளவில்லை.
மாணவ உலகத்துக்கான சுயமான வாழ்வு ஒன்றுள்ளது என்பதை மறுப்பதுபோல அவர்களுக்கான பொழுதுகள் கல்வி நடவடிக்கைக்குள் மட்டும் குறுக்கப்பட்டுவிடுகிறது. பாடசாலை பிறகு ரியூசன் என ஒருவரது பொழுதை களவாடுகிறது. அவர்களை சுயமாக சிந்திக்க நேரத்தை ஒதுக்க மறுக்கிறது. பொதுவேலைகளில் இணைந்து செயற்படும் நேரத்தை விழுங்குகிறது. படிப்பதற்காகவே மனிதர் பிறந்ததுபோல் அது மாணவர்களை சிப்பிலியாட்டுகிறது. ஒருவரது புத்தாக்கமான படைப்பாற்றல் என்பது சுயசிந்தனையை முதன்மையில் வைப்பதாகும். அதை நமது கல்வி முறை அங்கீகரிக்கப் பழகியிருக்கிறதா என்ன.
இன்றும் ஆண்களுக்கான கல்லூரிகளையும் பெண்களுக்கான கல்லூரிகளையும் தனித்தனியாக நடத்தும் நிலை ஒரு சாபக்கேடு. ஆண் பெண் என்பதை உடல் ரீதியாக மட்டும் பிரித்து வைத்து இரு மனிதஜீவிகளுக்கான ஊடாட்டத்தை, இயல்பு வழக்குகளை தடுத்துவிடுகிறது. ஆண்-பெண் க்கு இடையிலான இயல்பான பேச்சுகளை நாணம், வெட்கம், படபடப்பு எல்லாம் அழித்தொழிக்கிறது. கண்டதும் காமமுற வைக்கிறது. காதலுற வைக்கிறது. இன்னொரு பகுதியினரை வக்கிரமுற வைக்கிறது. அந்த நாணத்தையும் வெட்கத்தையும் ஒரு பெண்ணின் அழகியலாக வரையறுக்கிற புத்திசீவிகளைக்கூட நாம் காண நேர்கிறது. ஒரு தாயுடன் சகோதரியுடன் இயல்பாக பேச முடிகிற ஒரு இளைஞனுக்கு இன்னொரு பெண்ணுடன் இயல்பாக பேச முடிவதில்லை. இதை தடுப்பது எது? தடுப்பவர் யார்?. சிறுவயதிலிருந்தான இந்த தொடர்பாடலை கலவன் பாடசாலைகள் கல்லூரிகள் மட்டும் தரவல்லது.
பாடசாலைகளோ பல்கலைக் கழகங்களோ சமூகத்தின் உழைப்பிலிருந்தும் அது அமைத்துத் தருகிற சூழலுக்குள்ளாலும் இயங்குபவை. இந்த சமூகச் சொத்தை பாவித்தே கல்விச் சமூகம் உருவாகிறது. இதே கல்விச் சமூகம் தமது அதிகாரங்களை கட்டமைக்கவும் சமூகத்துக்கான சேவைகளை மறுக்கவும் முடிகிற நிலை எவளவு துயரமானது. இதைத்தான் எமது பாடசாலைகள் தொடர்ந்து செய்யப் போகின்றனவா.
உலகத்தில் கல்வியில் முன்னிலையில் நிற்பதோடு மட்டுமன்றி படைப்பாற்றலுள்ள மாணவ சமூகத்தை உருவாக்கிக் காட்டிக்கொண்டிருக்கிற பின்லாந்து போன்ற நாட்டில் ஒரு டொக்ரராக வருவதை விடவும் பொறியியலாளராக வருவதை விடவும் ஆசிரியராக வருவது மிக மிகக் கடினம். அவளவு படிநிலைகளை அவர்கள் தாண்டவேண்டியுள்ளது. அர்ப்பணிப்புள்ள சமூக நலன்சார்ந்த ஆசிரியர்களைக்கூட அவர்களின் பாதைக்குக் குறுக்கே போய் நிர்ப்பந்தமும் இடையூறும் செய்யும் ஆசிரியர்கள் இலங்கையைப் பொறுத்தவரை அதிகமாக இருப்பதாகவே தெரிகிறது. அரசியல் செல்வாக்குகளினால் ஆசிரியர்களாக வந்தவர்கள் இன்னொரு பகுதியினராக உள்ளனர்.
புகழ்பெற்ற கல்லூரிகளோ டிசிப்பிளின், பங்சுவாலிற்றி, மசிர் மட்டையென அவற்றை பிரக்ஞை சார்ந்து மறு உருவாக்கம் செய்வதற்குப் பதிலாக இந்த சமூக அமைப்புமுறையின் பிற்போக்கான ஒழுங்குகள் கட்டுப்பாடுகளை மினுக்கி மாணவ சமூகத்தை உருவாக்கி பெரிதாக பீற்றிக்கொள்கின்றன. இங்கு எங்கே வாழும் சமூகப் பிரக்ஞை?.
இன்னுமொன்று. இன்றைய இளம் சந்ததியைப் பொறுத்தளவில், அவர்கள் இந்த சிவில் சமூக நிறுவனங்களுக்கு வெளியே அரசியல் ரீதியிலும் அரசாலும் போராட்ட குழுக்களாலும் கட்டுப்படுத்தப்பட்ட அடக்குமுறைச் சூழலுக்குள் பிறந்து வளர்ந்த உளவியல் நசிவு கொண்டவர்கள். இந்த உளவியல் நசிவு தமக்கான அதிகார விளைநிலத்தை சுகிக்க ஆசைப்படவும் செய்யும். அதற்கு பகடிவதை அப்படியொரு விளைநிலமாக இருக்கவும் முடியும். போரும் போராட்டமும் சமூகத்தின் பல விழுமியங்களை சமூகப் பெறுமதிகளை அழித்தொழித்திருக்கிறது. அதற்கும் இந்த இளம் சந்ததி பலியாகிப்போன நிலையொன்றும் இருக்கிறது. கல்விக்கூடங்கள் அன்றும் இன்றும் மார்க்கண்டேயராக இருக்க விரும்பினால் எதுவுமே செய்ய முடியாது. பகடிவதையும்கூட அவளவு இலகுவில் அழிந்துபோகா.
10022020