நாவலின் முடிவும் தொடக்கமும் ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு ஆலாவின் வாழ்வை வட்டமாக, நாவலின் வடிவமாக வரைகிறது. இந்த வட்டத்துள் ஆலாவின் வாழ்வு சிக்கிச் சுழல்கிறது. நூலாசிரியரின் மொழியாளுமையும் படிமங்களும் வாசகரை இந்த வட்டச் சுழியுள் உள்ளிழுத்துவிடுகிறது. இந்தப் போரானது எப்படி ஒரு விளம்புநிலை மனிதரை வந்தடைகிறது என்பதையும், அது அந்த மனிதர் சார்ந்து மற்றவர்களையும் உள்ளிழுத்து துன்பப்படுத்துகிறது என்பதையும் நாவல் பேசுகிறது.
1989 இல் பிறந்த வெள்ளிப்பாவை என்ற கிராமப்புறச் சிறுமியானவள் ஆலா என்ற போராளியாகி, பின் தற்கொலைப் போராளியாக மாறுகிறாள். பின் சிறைசெல்ல நேர்கிறது. அவள் அனுபவிக்கிற அந்த நரக வாழ்க்கையை அவள் சிறைக் குறிப்புகளாக ஒவ்வொரு நாளும் சங்கேத மொழியில் எழுதுகிறாள். இந்த ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய ஏப்ரல் ஈஸ்ரர் குண்டுவெடிப்பில் அந்த முன்னாள் சிறை பொறுப்பதிகாரி இறந்துபோகிறாள். இதற்கு முதல் அவள் பாரிஸ் வந்தபோது “இச்சா” எழுத்தாளரைச் சந்தித்து அந்த குறிப்புகளை ஒப்படைக்கிறார். அதன் சங்கேத சொற்களை உடைத்து அதை தொகுப்பாக்கி வெளியிட்டிருப்பதாக நாவலாசிரியர் ஒரு போர்வையை போர்த்து இந்த நாவலை உருவாக்குகிறார்.
நாவலின் வடிவமும் சோபாசக்தியின் எழுத்தாளுமையும் இந்த நூலில் இன்னொரு பரிணாமத்துக்கு மாறியிருக்கிறது. சோகத்தை கண்ணீராலும், பயத்தை நடுக்கத்தாலும் என வெளிப்பாடுகளை வௌ;வேறு வர்ணிப்புகளில் பலரும் மாற்றிமாற்றி முன்வைத்து மினக்கெடும் ஒரு எழுத்துப் போக்கை விட்டெறிந்து, அதன் ஆன்மாவுக்குள் ஊடுருவி பேசும் மொழி பல இடங்களில் திரும்பத் திரும்ப வாசித்து பரவசமடைய வைக்கிறது.
//நான் தலைசுற்றிக் குப்புற விழுந்தேன். எனது உடல் தம்பியின் உடலுக்கு மேலால் கிளம்பிப் போவதை உணர்ந்தேன். வாயில் முட்டிய மண்ணை விழுங்கினேன்.//
// தம்பியின் தலையை கழுத்தோடு சேர்த்து பெத்தப்பாதான் பொருத்தித் தைத்தார். பொருத்தப்பட்ட இடத்தை கற்பூரத்தைத் தூள் செய்து பூசி அடைத்தார். எனக்கு இப்போதும் தம்பியை நினைத்தால் கற்பூரமே உறைக்கிறது. எழுதிக்கொண்டிருக்கும் இந்தத் தாளில் இதோ கற்பூரம் நாறுகிறது.//
ஆலா என்ற பெண் போராளியை பெண்நிலையில் நின்று எழுதும் கடுமையான முயற்சியை எழுத்தாளர் மேற்கொண்டிருக்கிறார் என சொல்ல முடியும். ஆங்காங்கு ஆண்மொழி வெளிப்படவே செய்கிறது என்ற போதும், இந்த முயற்சி தூக்கலாகவே வெளிப்பட்டிருக்கிறது. அத்தோடு அம்பாறையை பின்புலமாகக் கொண்ட பேச்சுமொழியை வெளிக்கொணர்வதில் முயன்றிருக்கிறார். அதில் அவர் எந்தளவு வெற்றிபெற்றிருக்கிறார் என்பதை அந்த பிரதேச மக்களின் மொழி பரிச்சயம் உள்ளவர்கள்தான் கூறவேண்டும்.
வெள்ளிப்பாவையின் (ஆலாவின்) அறிமுகமானது அவள் சார்ந்த கிராமிய வாழ்வு, அதன் சமூக பண்பாட்டு அம்சங்கள், சிங்கள மக்களுக்கிடையிலான வாழ்வும் ஊடாட்டமும் என ஒரு வரலாற்றுப் பின்னணி அல்லது புனைவோடு
நகர்கிறது. வாசிப்பில் ஒரு வேகத்தை எட்டமுடியாத பரப்பாக எனக்கு அது இருந்தது. அடுத்த பரப்பாக அவள் போராளியாக மாறுவது என தொடர்ந்து, சிறை அவளை இல்லாமலாக்குகிற அந்தக் கொடிய கட்டம் வரை வருகிறது. மிக மன எழுச்சியான வாசிப்பை இப் பரப்பு திறந்துவிட்டது. மொழிக் கையாள்கையானது ஆலாவின் ஆன்மாவுக்குள் ஊடுருவி வெளிப்படுத்தும் முறை சோபாசக்தியை தவிர்க்க முடியாத ஓர் எழுத்தாளனாக உறுதிப்படுத்திவிடுகிறது.
ஓர் எழுத்தாளர் என்பவர் மிகப் பெரிய வாசகராக இருப்பது அவசியம். தனக்கு வசதியான அல்லது தனது அரசியலுக்கு ஒத்துப்போகிற எழுத்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிப்பது என்ற எல்லையை உடைத்தெறிய வேண்டும். பொதுப்புத்தியின் ஜனரஞ்சக கொசுறுத் தத்துவங்களை நாவலில் பொருத்தி எழுதுகிற எழுத்துகள் சலிப்புத் தருவன. அந்த கொசுறுகள் கேள்விகேட்கப்பட வேண்டியவை என்பதை உணராத எழுத்தாளர்கள் நமக்கு வாய்திருக்கிறார்கள். அதற்கு கோட்பாட்டுப் பலமின்மை முக்கிய காரணம். அத்தோடு மேற்கோள்களின் மூலத்தை அறியாமல் தனது அரசியல் பரப்புக்குள் தாம் கொண்டாடுபவர்கள்தான் அந்த மேற்கோள்களை செப்பியதாக நம்பி எழுதுகிற அசட்டுத் துணிவும்கூட வெளிப்பட்டுவிடுகிறது.
இந்த பலவீனங்களைத் தாண்டிய எழுத்துகள் சோபாசக்தியினுடையது. பரந்த வாசிப்பைக் கொண்டிருப்பவர் அவர். இலக்கியம் மட்டுமல்ல, ஓரளவு அரசியல் கோட்பாடுகள் தத்துவங்கள் குறித்தான வாசிப்பும் அவரது இந்த எழுத்தாளுமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நுண்மையான வாசிப்பை வாசகரிடம் கோருகிறது.
ஒரு பெண் பாத்திரத்தை தேர்வுசெய்து அவளை ஆளுமை மிக்கவளாகவும், தனித்து முடிவு எடுக்கக்கூடியவளாகவும், உடல்வலு கொண்டவளாகவும், அதேநேரம் மனித இயல்பின் பாலியல் வேட்கையை அவளிடமிருந்து ஒளித்து ஒரு ‘வகைமாதிரிப் பெண்ணாக’ அல்லது ஆணாதிக்க மனோபாவத்தின் பாலியல் பண்டமாக இல்லாமல் எழுத்தாளர் கையாண்டிருப்பது குறித்துக்கொள்ள வேண்டியது.
தனது உடலை அவள் வித்துடலாக புனையவில்லை. அர்த்தமுள்ள ஒரு ‘வீரச் சாவுக்கான’ உடலாக பார்க்கிறாள். (இந்த வீரச் சாவு என்பது ஒன்றும் இயக்கம் கடந்த சிந்தனைக்கு வெளியில் இல்லை). இரு அமைச்சர்களை அழித்தொழிக்கும் தற்கொலைத் தாக்குதலின் அந்த இறுதிக் கணத்தில் தலைமையால் எடுக்கப்படுகிற முடிவானது அவளை பின்வாங்கச் சொல்கிறது. அந்த ‘வீரச் சாவு’ (அழித்தொழிப்பு) தவிர்க்கப்பட்டு, அவள் இப்போ அந்தப் பாலத்தின் வெறும் மதிலோடு மோதும்படி கட்டளையிடப்படுகிறாள். அவள் அதைச் செய்தாளில்லை.
வாழ்தல் அல்லது இருப்பு என்பது தன்னைச் சூழவுள்ள நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைப்பதில் இருக்கும் பக்குவத்துடன் சம்பந்தப்பட்டது. ஆளுமையுடன் சம்பந்தப் பட்டது. அது சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தனது கிராமத்தில் வெறும் நான்கு தமிழ்க் குடும்பத்துக்குள் ஒருவராக இருந்தபோதும் சரி, (சிங்கள) ஊர்வகாவல் படையின் அட்டகாசத்துள் வாழ்ந்தபோதும் சரி, இயக்கத்தில் இருக்கும்போதும் சரி, சிறையில் இருக்கும்போதும் சரி, புகலிட (புனைவு) நாட்டில் அரசியல் தஞ்சம் கோரி குடும்ப வாழ்வு வாழ்ந்த போதும் சரி ஆலா தனது இருத்தலுக்காக ஆளுமையுடன் போராடுகிறாள்.
வேர்கள் நாவலில் வரும் குன்ரா கின்ரேயின் பாத்திரம் போல தனது இயல்பான செழுமையான பண்பாட்டு வாழ்வுக்குள் வாழ்ந்து துள்ளித் திரிந்த சிறுமியின் வாழ்வு எதிர்பாராத திருப்பங்களுக்கும் திகிலுக்கும் உள்ளாகிறது. வெள்ளையர்களினால் அடிமையாகப் பிடித்துச் செல்லப்பட்டதோடு முறித்தெறியப்பட்ட கின்ரேயின் இயல்பான வாழ்வுபோல இலங்கையை ஆட்டிப்படைத்த அரசியல் கொந்தளிப்புகளால் இச் சிறுமியின் வாழ்வு முறித்தெறியப்படுகிறது.
நூலின் ஆரம்பம் ஒரு புனைவு மொழியை “உரோவன்” என்ற பெயரில் அறிமுகமாக்கி, (இச்சா உட்பட) சில சொற்களை புனைந்து, அதற்கு தமிழ் அர்த்தத்தையும் புனைந்து, இதெல்லாம் தெரியாவிட்டால் நாவலை விளங்கிக்கொள்ள முடியாது என்ற தோரணையில் வாசகருக்கு ஒரு போலி அச்சத்தை உருவாக்குகிறது. நாவலை வாசித்து முடிக்கிறபோது -பொய் மீதான- இந்த அச்சம் செத்துப்போய்விடுகிறது. ஓரிடத்தில் ‘உரோவன்’ வசனத் தொகுதியே ‘புனையப்படுகிறது’. அவை தமிழ்ப் படுத்தவே தேவையில்லை என்ற நிலையானது அதை புனைவாக அன்றி தேவையற்ற பொய்யாக அறிவிக்கிறது. BOX நாவலிலும் வன்னிக் காட்டுக்குள் உள்ள மூலிகைச் செடிகள் என சுமார் 30 க்கு மேற்பட்ட பெயர்கள் ‘புனையப்பட்டன’.
கவிதைக்குப் பொய் அழகு என கவிஞர் வைரமுத்து ஒருமுறை சொன்னார். பொய் என்பதையும் இலக்கியத்தில் புனைவு என்பதையும் போட்டுக் குழப்புகிற இந்த நிலை பல எழுத்தாளர்களிடமும் இருக்கிறது. சோபாசக்தியும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதை உரோவன் சொல்லிச் செல்கிறது.
முடிவில் தனது புனைவுலகத்துள்ளிருந்து நூலாசிரியர் வெளிவந்து தனது நிஜ நண்பரை சந்தோசப்படுத்தும் சோபாசக்தியாக எந்த இலக்கிய அழகியல் கதவால் வந்தார் என்பதை யோசித்தபோது கொஞ்சம் துருத்தலாக இருந்தது.
ஆலா ஊர்காவல் படையால் பிடிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்கு அழைத்துச் செல்லப்படும்போது எதிர்ப்பட்ட (புலிப்போராளிச்) சிறுவனின் பிஸ்ரல் அவளை மரணத்திலிருந்து விடுவிக்கிறது. புலிப் பெண் போராளியின் துவக்கு ஆலாவை பாலியல் ரீதியிலான குடும்ப வன்முறையிலிருந்து விடுவிக்கிறது. ஆயுதம் மீது அவளது காதலும் நம்பிக்கையும் நாட்டப்படுகிறது. போராளியாகிய பின் அந்த குறளியை (ஆயுதத்தை) அவள் தனது அங்கமாக உணர்கிறாள். தனது புகலிட (புனைவு) நாட்டில் அவளின் முடிவும் அந்தக் குறளியோடுதான் நிகழ்கிறது. ஒரு திரைப்படம் போல அந்த சாகசக் காட்சி நாவலின் ஓட்டத்தை விழுங்கிவிடுகிறது.
அவளது முடிவு அவ்வாறுதான் நடந்ததா அல்லது சிறையிலேயே நடந்ததா என வாசகர்கள் இப்போ தெரியத் தேவையில்லை. வாசியுங்கள்.
என்னைப் பொறுத்தவரை சிறையிலிருந்து அவள் பொதுமன்னிப்புப் பெற்று பின் புகலிட நாட்டுக்கு வந்து வாழ்வது வரையான எழுத்துலகம் தனிச் சிறுகதையாக நாவலின் பின்னிணைப்பாக தொங்கிக்கொண்டிருக்கிறது என்பேன். ஒரு புத்தியுள்ள வாசகர் நாவலை ஆலாவின் சிறைவாழ்வோடு மூடிவைத்துவிடுவார் என எழுத்தாளர் எழுதத் தவறியிருக்கலாம். ஆனால் நாவலை வாசித்து முடித்தபோது அதை நான் கண்டெடுத்தேன்.
– ரவி 01122019