2013 இல் பிரிட்டிஸ் சபையானது (British Council) பிரித்தானிய மக்களிடம் எடுத்த ஒரு கணீப்பீட்டின்படி முதலாம் உலக யுத்தத்தில் மேற்கு, கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபட்டதாக பலரும் நினைப்பது தெரியவந்தது. 17 வீதமானவர்கள் ஆசிய மக்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டதை தெரிந்து வைத்திருக்கின்றனர். 11 வீதமான மக்கள் ஆபிரிக்க மக்கள் ஈடுபடுத்தப்பட்டதை தெரிந்து வைத்திருக்கின்றனர். பிரித்தானியாவுக்காக இராணுவம் மற்றும் சேவைத்துறைக்காக எகிப்து, பிரான்ஸ், யேர்மனி, இந்தியா, இரசியா, துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பும் இந்தப் போரில் பெறப்பட்டிருந்தது.
பிரித்தானியாவுக்காக இந்த போரில் மடிந்த கறுப்பு மற்றும் பிரவுண் மனிதர்களின் பெரும் பங்களிப்பு வரலாற்றிலிருந்து மறையத் தொடங்கியிருக்கிறது. ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட இந்திய இராணுத்தினர் பிரித்தானியாவுக்காக போரிட்டனர். இவர்களை sepoys (indian soldiers serving for britain) என அழைப்பர். இந்தப் போரில் தமக்காக போரிட்டால் இந்தியாவை காலனியாதிக்கத்திலிருந்து தாம் விடுவித்துக் கொள்வோம் என ஒரு இமாலயப் பொய்யை, ஒரு வாக்குறுதியை பிரித்தானியா வழங்கியது. இதனால் இந்திய இராணுவத்தினர் (செப்போய்கள்) தமது இந்திய நாட்டின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிப்பதாக எண்ணி பிரித்தானியாவுக்கு வந்தனர்.
அவர்களது பிரித்தானிய பயணம் மிக கடுமையானதாக இருந்தது. முற்றான காலநிலை மாற்றமுள்ள பிரித்தானிய நாட்டுக்கு அதற்கேற்ற உடைகள், தயாரிப்புகள் ஏதுமின்றி கப்பலில் பயணம் செய்து வந்துசேர்ந்தார்கள். அவர்களில் பலரும் குளிருக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அவதிப்பட்டார்கள். சிலர் இறந்தும் போனார்கள்.
போரின்போதுகூட அவர்கள் பிரித்தானியாவால் முறையாக கௌரவமாகக் கவனிக்கப்படவில்லை. செப்போய்களின் உயர் அதிகாரியின் அந்தஸ்து பிரித்தானியாவின் கடைநிலை இராணுவத்தினது அந்தஸ்துக்கு கீழானதாக கையாளப்பட்டது. போரில் காயப்பட்ட செப்போய்களை தனிமைப்படுத்தப்பட்ட Brighton Pavilion and Dome Hospital இல் வைத்து வைத்தியம் செய்யப்பட்டது. இந்த வைத்தியசாலையைச் சுற்றி முட்கம்பி வேலி போடப்பட்டது. காயமடைந்த செப்போய்கள் பிரித்தானிய மக்களுக்குள் கலந்துவிடக்கூடாது என்ற நோக்கில் இந்த முட்கம்பி வேலி படர்ந்திருந்தது.
74,000 செப்போய்கள் இந்தப் போரில் மரணித்தார்கள். அவர்களின் இந்திய விடுதலைக் கனவும் அவர்களோடு புதைக்கப்பட்டது. காலனித்துவவாதிகளின் அரசியல் விளையாட்டு காலனிய நாடுகளை குரூரமாக நடத்தி குதூகலித்த வரலாற்றுக்கு இதுவும் ஒரு சாட்சி.
இதேபோலவே பிரான்ஸ் நாட்டுக்காக மில்லியன் கணக்கான அல்ஜீரிய மக்கள் போரிட்டு மடிந்தார்கள். இந்த வரலாறுகளை அறியாத நாம் “இவங்களெல்லாம் வந்து இந்த மேற்குலக நாடுகளை பழுதாக்கிறாங்கள்” என்றும் “எங்களை அகதியாக வரவேற்று நடத்துறதுக்கு -உரிமைகளை விட்டுக்கொடுத்தாகிலும்- நாம் நன்றி விசுவாசமாக இருக்க வேண்டும்” என்றும் வெள்ளை மேலாதிக்க கருத்துநிலைக்கு துணைபோகிற மனநிலையில் வாழ்கிறோம்.
Infos : “Why I am No Longer Talking To White People About Race” book. – Reni Eddo-Lodge