சிவா சின்னப்பொடி அவர்களின் நூல்
சமூக ஒடுக்குமுறைகளான சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை, நிறவெறி என்பன குறித்தான குரல்களுக்கு ஓய்வு இல்லாமலிருப்பதானது அவற்றின் ஒடுக்குமுறையை பிரதிபலித்துக் காட்டுவதான ஒன்று. எனவே இவைகளைப் பற்றி பேசுவதை எதிர்ப்பது அல்லது இதை பேசுவதால்தான் அவை வாழ்கிறது என வைக்கப்படுகிற பொதுப்புத்தி கதையாடல்கள் அர்த்தமற்றது. அனுபவத்தை தமிழில் பட்டறிவு என்ற சொல்லால் சுட்டுவர். எமது அறிவுத்தளம் விரிவடைய வேண்டுமானால் அனுபவங்களை கேட்பதும் கிரகிப்பதும், அதை தர்க்க விஞ்ஞானத்துக்கும் கோட்பாட்டு ஆய்வுக்கும் உட்படுத்தி புரிந்துகொள்வதும் பயனுடையது.
இங்கு இந்த நூல் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் உள்ளார்ந்த நிலைமைகளை களமாகக் கொண்டும், அதன் மீதான புறநிலை (உயர் சாதியினரின்) அதிகாரத்துவங்களை சந்தித்துக்கொண்டும் வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை சொல்கிறது. பகுதியாகவேதான் அது இருக்கும். முழுமையை நாம் விரித்துக் கண்டடைவது அறிவுச் செயற்பாடு. விதிவிலக்கென்று இதை அணுகாமல், பொதுநிலைமைக்குள் வைத்து இந்த எழுத்தை சமூக வாசிப்புச் செய்வது வாசகர்களாகிய எமது கைகளில் இருக்கிறது.
எந்த ஒடுக்குமுறையும் அல்லது அதிகாரத்துவமும் வன்முறையை மட்டும் வழியாகக் கையாள்வதில்லை. அதை நியாப்படுத்துகிற கருத்தியலை ஒடுக்கும் சக்திகளிடமும், பணிந்துபோதலுக்கான அல்லது ஏற்றுக்கொள்தலுக்கான கருத்துநிலைகளையும் உளவியலையும் ஒடுக்கப்படுகிற சமூகத்திடமும் தோற்றுவிக்கும் கூட்டுச் இயங்குநிலை கொண்டது.
நிறவெறியிலோ சாதியவெறியிலோ ஆணாதிக்கவெறியிலோ அதற்குள் பலியாகி உழல்பவர்களின் உளவியலை ஆதிக்கசக்தியாக இருக்கும் நிறவெறியர்களோ சாதிவெறியர்களோ ஆணாதிக்கவெறியர்களோ முழுமையாக உணர்வதற்கான சாத்தியம் இல்லை. காரணம் அதற்கான வாழ்நிலை அனுபவம் அவர்களுக்கு கிடைக்கப்பெறாது. இங்கேதான் மனிதாபிமானம், நீதி, சமத்துவம், சக மனிதரிடம் தன்னைக் காண்பது போன்ற மனப்பான்மைகள் இந்த அனுபவங்களின் அருகாமையை நெருங்க உதவுகிறது.
மனிதாபிமானம் என்பது சார்புநிலை கொண்டது என்றபோதும், அது மனிதர்களுக்கு அடிப்படையில் அவசியம் இருக்கவேண்டிய ஒன்று.
ஆதிக்க சக்திகளில் மனிதாபிமானம் கொண்டவர்களாக இருப்பவர்கள் ஒடுக்கப்படுபவர்களுக்கு தம்மளவில் நேர்மையாக ஆதரவு கொடுக்கின்றனர். அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கின்றனர். களத்துக்கு வரும் நிலையும் உண்டு. போராட்ட வரலாறுகளை திரும்பிப் பார்ப்பவர்களுக்கு இது தெரியும். அதேநேரம் அவர்களிடம் சாத்தியமற்ற இந்த (ஒடுக்கப்பட்ட மக்களின்) உணர்வுத்தளம் அவர்களை ஒருவித passive racism க்குள் வைத்திருக்கும் சாத்தியத்தையும் ஏற்படுத்துகிறது. (உதாரணம் “நீ மனிதன்தான்” என்பதற்கும் “நீயும் மனிதன்தான்” என்பதற்குமான நுண்மைக்குள் அது புதைந்திருக்கும்). நேரடியான ஒடுக்குமுறைகள் நிலவும் சூழலில், ஒரு பொதுமானிடரின் மனிதாபிமானத்தை இந்த நுண்மையான பார்வையால் குறைத்து மதிப்பிட முடியாது. (அந்த ஒடுக்குமுறை நேரடி நிலையிலிருந்து நுண்களத்துக்கு மாற்றமடைகிறபோது இந்த passive racism பற்றி பேசப்பட வேண்டிய நிலை உருவாகும்.)
ஒரு குழந்தையாக பிறக்கிறபோது குடும்ப சூழல், அதன் மீதான புறத்தாக்கம், சமூகச் சூழல் என்பன ஒரு தாழ்த்தப்பட்ட சமூகப் பிள்ளை மீது எவ்வாறு தாக்கம் செலுத்தத் தொடங்குகிறது என்பதை “நினைவழியா வடுக்கள்” புரியவைக்கிறது. இந்த உலகத்தை தரிசிக்கும் ஒரு குழந்தையின் அப்பழுக்கற்ற உள்ளத்தை, எல்லோரிடமும் அன்பைப் பெற துடிக்கிற எல்லாவற்றையுமே கூர்ந்து கிரகிக்கிற எந்த எல்லைகளுமற்ற அதன் உலகை துவம்சம் செய்வது நாகரிகமடைந்ததாக பீற்றும் மனித சமூகம் செய்யும் மிகப் பெரிய அநியாயம். அதுவும் பிறப்பால் சாதியை வரைவுசெய்துவிடுகிற சாதிவெறி கருத்தியலுக்குள்ளால் அதன் வன்முறைக்குள்ளால் தனது இருப்பை, கனவை, எதிர்பார்ப்பை நிகழ்த்த சிவா என்ன பாடுபடுகிறார். அடிப்படையில் ஒரு மனிதஜீவிக்கு இந்த இயற்கை வழங்கியிருக்கிற கொடையைக்கூட பெற போராடவேண்டியிருக்கிற இந்த உலகம் கொடுமையானது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கல்விகற்பதற்கான மிக அடிப்படையான உரிமைக்கு போராடவேண்டியிருக்கிறது. பொருளாதார தளத்தில் என்பதையும் விட சமூகத்தளத்தில் இதற்கான இடர்ப்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன. இழிவுகள், மறுப்புகள், புறக்கணிப்புகள் என எல்லாவற்றையும் உடல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சிறுவயது மாணவனாக சிவா சின்னப்பொடி எதிர்கொண்ட இந்த அனுபவங்கள் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் மேல் திணிக்கப்பட்ட நிலைமையின் வகைமாதிரி எனலாம்.
ஒரு சாப்பாட்டுக் கடையில் சாப்பிட்டுவிட்டு கைகழுவும்போது தகப்பனாரின் (மரமேறுவதால் ஏற்படும்) சிராய்ப்புகளை, வடுக்களை கண்ணுற்று அவரது சாதியை அடையாளம் கண்டு தாக்குகிறார்கள். தண்டனையாக ஒரு லொறி கொள்ளளவு கொண்ட மரக் குத்திகளை கோடரியால் கொத்தி விறகாக்க பணிக்கப்படுகிறார். அதை எடுத்து ஒழுங்காக அடுக்க சிறுவன் சிவா பணிக்கப்படுகிறான். தகப்பன் முடியாமல் தளர்ந்துபோகிறபோது பிள்ளையை அடித்து தகப்பனை இயக்குகிறார்கள். தகப்பனுக்கும் பிள்ளைக்கும் உடல் உள ரீதியில் ஏற்படுத்தப்படுகிற பாதிப்பை வாழ்நாள் பூராவும் எதனால் ஈடுசெய்துவிட முடியும்.
இரண்டாம் வகுப்பில் சாதிவெறியனாக இருந்த கதிர்காம வாத்தியிடம் அகப்பட்டு அவனது கல்வி கற்கும் கனவு உருக்குலைக்கப்படுகிறது. ஆதிக்கசாதி மாணவர்கள் மேசை கதிரை என குந்தியிருக்க, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் தரையில் இருத்தப்படுகின்றனர். வகுப்பில் பாடம் நடக்கும்போது துப்பரவுப் பணிக்கு பாடசாலை வளவுக்குள் விடப்படுகின்றனர். “உங்களுக்கெல்லாம் என்னத்துக்கு படிப்பு மரமேறப் போங்கோ… மாடு மேய்க்கப் போங்கோ” என உளவியல் ரீதியில் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இந்த நிலைமையில் ஒரு பிள்ளை எப்படி கல்வி குறித்த தனது கனவை அணுக முடியும். இந்த சிதைப்புகள் குறித்து இந் நூலில் வாசிப்பை நிகழ்த்த முடியும். அதற்குள்ளாலும் அவன் கல்வியை பற்றிப் பிடிக்க சந்தர்ப்பம் கிடைத்துவிடுவது தற்செயலானதாக அமைந்துவிடுகிறது.
ஆறுமுகநாவலரின் சாதிவெறி கருத்தியலுக்கு எதிரான மரபை கொண்டிருந்த அறிஞர் கந்தமுருகேசனார், பசுபதி வாத்தியார் ஆகியோரின் அரவணைப்புகளும் மனிதாபிமானம் கொண்ட பருத்தித்துறை மெதடிஸ் பாடசாலை தலைமை ஆசிரியை, உடுப்பிட்டி அமெரிக்கன் கல்லூரி தலைமை ஆசிரியை போன்றவர்களின் மனிதாபிமானமும், அரவணைப்புகளும் அவரது ஆரம்பக் கல்வியை சாத்தியமாக்க உதவியிருக்கிறது.
அதேநேரம் பெயர்பெற்ற காட்லிக் கல்லூரியின் ‘டிசிப்பிளின்’ (ஒழுக்கம் கட்டுப்பாடு) என்ற வரையறை அவருக்கான கல்வியை மறுத்திருக்கிறது. ஒழுக்கம் கட்டுப்பாடு எல்லாமும் ஆதிக்கசக்திகள் தமது இருப்பை மையமாக வைத்து சமூகத்தில் நிறுவிப் பேணுபவை. பின்னர் அது நிறுவனமயமாகி கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பதற்கேற்ப மனிதரை மாற்றியமைக்க முயற்சித்தபடி இருக்கும். என்னதான் கல்விமான்களாக இருந்தாலும் அவர்கள் சமூக அறிவுஜீவியாக தன்னை இருத்திக்கொள்ளாவிட்டால் அதற்கு என்ன சமூகப் பெறுமதி இருக்கப் போகிறது. பருத்தித்துறை மெதடிஸ்ட் கல்லூரியில் கூடிய மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு காட்லிக் கல்லூரிக்கான மாணவர் தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படுவது வழமையாக இருந்தது. இது எழுதப்படாத விதியாக இருந்தது. அப்படியிருக்க தேவைக்கு மேலதிகமாக 30 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், ஒரு தாழ்த்தப்பட்ட சமூகப் பிள்ளை ‘டிசிப்பிளின்’ என்ற அளவுகோலால் நிராகரிக்கப்படுகிறான். அது அவனுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
முதலாம் உலக யுத்தத்தின் பின் தோற்றம் பெற்ற யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ்.. பின்னரான கம்யூனிஸ்ட் கட்சியின் வரவு அதன்வழியான பொன் கந்தையா போன்றவர்களின் செயற்பாடுகள் சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் சாதியப் போராட்டங்கள் (குறிப்பாக கோயில் நுழைவுப் போராட்டங்கள்) என்ற தொடர்ச்சி தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தீண்டாமைகள் மறுப்புகள் இழிவுகள் மீதான தாக்குதல்களைத் தொடுத்தன. இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் கருத்தியல் தளத்திலும் ஆற்றிய பங்களிப்புகள் முக்கியமானவை.
அவற்றோடு பயணிக்கிற நூலாசிரியரின் எழுத்துகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அத் தொடர்ச்சியில் வைத்துப் பார்க்கிறது. அதில் ஒரு பகுதி உண்மை இருக்கலாம். தீண்டாமை குறித்த இயக்கத்துக்குள் நிலவிய கட்டுப்பாடுகள், தமிழீழச் சட்ட ரீதியிலான வரைபுகள் என்பவற்றை கவனம் கொள்ளலாம். இவை ஓரளவு தீண்டாமை மீதான நெருக்குதலை உண்டாக்கியிருக்கலாம். அது ஓரளவு கருத்துநிலையில் குறைத்தாக்கம் செலுத்தியுமிருக்கலாம். ஆனால் கருத்தியல் தளத்தில் செயற்படும் எந்த முயற்சியும் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை. அவர்களின் நிழலரசு நிலவிய காலத்திலும் பின்னரும் கோவில் கதவுகள் பலவும் அந்த மக்களுக்காக திறக்காமல் அப்படியேதான் இருந்தன.
அதனால் இதை கருத்தியல் தளத்திலும் அரசியல் தளத்திலும் கோட்பாட்டுத் தளத்திலும் அணுகிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொடர்ச்சியில் வைத்து நோக்க முடியாது. மாறாக சாதியம் குறித்து புலிகள் அடக்கி வாசித்தார்கள். அது தமிழர் என்ற அடையாளத்தை அல்லது ஒற்றுமையை சிதைத்துவிடும் என அஞ்சினார்கள். இதையே பெண்விடுதலை குறித்தும் செய்தார்கள். அதன் விளைவுகள் 2009 இன்பின் சமூகத்தில் எவ்வாறு வெளிப்பட்டது அதுவும் தமது போராளிகள் மீது (குறிப்பாக பெண்கள் மீது) என்னமாதிரியான தாக்கத்தை கொணர்ந்தது என்பது நாம் அறிந்த ஒன்று.
தமிழ்த் தேசியம் அடிப்படையில் சைவ வேளாள கருத்தியலோடு அல்லது யாழ் மையவாதத்தோடு முன்னெடுக்கப்பட்ட ஒன்று. அது தவிர்க்க முடியாமல் விளிம்புநிலை மக்களையும் பெண்களையும் ஆளணிகளாக உள்வாங்கி, அவர்களின் இயல்பான ஒடுக்குமுறைக்கெதிரான விடாப்பிடியான போராட்டக் குணாம்சத்தை தன்னகப்படுத்தியது. 2009 இன்பின் அவர்கள் சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாக ஆனார்கள். காரணம், சமூகம் எந்த கருத்தியல் மாற்றத்தையும் -சீர்திருத்தவாதத் தளத்துக்கு மேல்- எட்டவில்லை. தமிழீழம் கிடைத்தால் சாதியம் இல்லாமல் போய்விடும் என சொன்ன கனவு கலைந்து அநாதரவானார்கள்.
புலம்பெயர்ந்து வந்தவர்கள் சாதியத்தை காவி வந்தார்கள். அவர்கள் அதை தமிழ்ப் பண்பாட்டின் ஓர் அம்சமாகப் பார்த்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் வேற்றுப் பண்பாட்டுக்கு எதிரான கவசமாகப் பயன்படுத்தினார்கள் என ஆசிரியர் கூறுவதுடன் உடன்பட முடியவில்லை.
// இங்குள்ள மாற்றுக் கலாச்சார பண்பாட்டுச் சூழலில் தமது இருப்பையும் அடையாளத்தையும் தக்கவைப்பதற்கு சாதியம் ஒரு கவசமாகப் பயன்பட்டது. குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டை மீறாமல் இருக்க குழந்தைப் பருவத்திலிருந்தே சாதியப் பெருமைகள் போதிக்கப்பட்டன// என நூலாசிரியர் சொல்கிறார். உண்மையில் தமிழ்த் தேசியம்தான் இந்தப் பணியை செய்தது. தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், தமிழ்ப் பெருமை குறித்து போதித்துக்கொண்டிருந்தது தமிழ்த் தேசியம்தான். அது தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவளிக்காதவரை ‘தமிழிச்சியின் வயிற்றில் பிறக்காதவர்கள்’ என சுட்டியதிலிருந்து, ‘வெள்ளைக்காரன் மண்டைகெட்டவன்’ என சொல்வதுவரையாக வெறியுடன் இயங்கியது. ஒருபுறத்தில் வெள்ளைக்காரனிடம் அங்கீகாரம் பெறுவதை பெருமையாக எண்ணிக்கொள்வதும், மறுபுறத்தில் அடையாளம் என்று வருகிறபோது மண்டைகெட்டவன் என தூற்றுவதும் என்ற முரண்நகையுடன் தமிழ்த்தனம் செயற்பட்டது.
சாதிவெறியும் பேரினவாதமும் ஒரே தன்மையானது என நூலாசிரியர் சொல்வது பொருத்தமும் பொருத்தமின்மையும் கொண்டது. ஆனால் சாதிவெறியும் நிறவெறியும் ஒரே தன்மையானது. ஒன்றுக்கொன்று நிகரானவை. சாதிய மனநிலையுடன் மேற்குலகுக்கு புலம்பெயர்ந்த ஆதிக்கசாதியினர் ஆபிரிக்க இனத்தவர் மீதான நிறவெறி மனோபாவத்தை இதனடிப்படையிலேயே கொண்டுள்ளனர். மறுபுறத்தில் வெள்ளை மேலாதிக்கக் கருத்தியலை ஏற்றுக்கொண்டு பணிந்து நடக்கும் சொகுசு அடிமை மனோபாவத்துடன் இருக்கின்றனர். ஒரு தமிழ்ப் பாடலை வெள்ளைக்காரர் கொச்சைத் தமிழில் பாடினால் கொண்டோடித் திரிபவர்களாகவும், ஆபிரிக்கர் பாடினால் நகைச்சுவையாக கடந்து செல்பவர்களாகவும் இருக்கின்றனர். சாதிய மனநிலையிலிருந்து விடுபடாத எவரும் நிறவெறிக்கு பணிந்துபோகிற தமது மனநிலையை தாண்டமுடியாதவர்களாகவே இருப்பர்.
நூலாசிரியர் இடையில் வந்த ‘தலித்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘பஞ்சமர்’ என்ற சொல்லையே பாவிக்கிறார். இது கவனிக்கப்பட வேண்டியது. தலித் என்ற வியாபகமான சொல் ஒடுக்குமுறைக்கு உட்பட்டவர்கள் என்ற அர்த்தத்தை கொண்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் அது தாழ்த்தப்பட்ட சமூகத்தையே சுட்டுகிற பயன்பாட்டில் உள்ளது. இந்திய பெரும் சாதிய அமைப்புமுறை, சிக்கலான பல சாதியப் படிநிலை அமைப்பாக்கம், அதன் கடைக்கோடித்தனமான தீண்டாமை முறைகள், அதன்வழியான வன்முறைகள் பாலியல் தண்டனைகள், மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் அளவுக்கான சாதியச் செயற்பாடுகள், ஆணவக்கொலைகள் என்ற கொடுமைகளின் ஓர் உண்மை பிம்பத்தை தலித் என்ற சொல் எம்முன் கொணர்ந்து நிறுத்துகிறது.
சிக்கலற்ற குறைந்த சாதியப் படிநிலைகளும், பெருமளவு தகர்ந்துபோன தீண்டாமைகளும் கொண்ட ஈழச் சாதியச் சூழலை இச் சொல்லின் பிம்பத்துக்கு பலியிட முனைவது பொருத்தமற்றது என்ற கருத்து கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த தீண்டாமைத் தகர்வுகள் சும்மா வந்ததல்ல. அந்த மககளின் நீண்ட நெடிய போராட்டங்களுக்கூடாக சாதித்தவை.
ஒரு போராட்டம் என்பது நாம் வந்தடைந்திருக்கிற நிலையிலிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும். இன்றைய நேர், எதிர் அம்சங்கள் குறித்து கவனம் கொள்ள வேண்டும். முந்தைய வரலாறு என்பது சாதியத்தை விளங்கிக்கொள்ள அவசியம் தேவை. அந்த உதாரணங்களும் வெளிப்பாடுகளும் இன்றைய நிலைமைகளின் சாட்சிகளாக முடியாது. இந்திய தலித்திய சாட்சிகள் ஈழத்துக்கு பொருத்திக்கொள்ள முடியாதது. எதிர் அம்சங்களை இனங்காண்பதும் அதற்கெதிரான கருத்தியல் போராட்டங்களை எடுப்பதும் இன்றைய தேவை.
இந் நூலிலிருந்தும் ஏற்கனவே அறிந்த சாதியப் போராட்ட வரலாறுகளிலிருந்தும் சாதியப் போராட்டங்களில் முன்னோக்கி சிந்திக்கும் ஆற்றல் கொண்ட ஆதிக்க சாதியினரின் பங்கு மறுக்கப்படாததாக இருக்கிறது. வெள்ளாளர் எதிர் ‘தலித்’ என்றோ ஆண் எதிர் பெண் என்றோ வடம்பிடித்து ஒன்றுமே சாதிக்க முடியாது. இதுகுறித்த விமர்சனங்களை முன்வைக்கிறபோது அதை விமர்சனமாகவே எதிர்கொள்வதற்குப் பதிலாக வெள்ளாள மனநிலை என எல்லா சந்தர்ப்பங்களிலும் எதிர்கொள்வது அல்லது மறுத்தான் விடுவது ஒரு கருத்தியல் பலவீனமாகும். தமது அடையாளத்தை பிம்பத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரில் நின்று பேணும் குறுக்கு வழியிலான மனநிலை கொண்டது. ஒருவகை துஸ்பிரயோகம் அதற்குள் உள்ளடங்கியிருக்கிறது.
இந் நூல் இந்த குறுக்குவழிகளில், தடாலடிகளில் பயணிக்கவில்லை. அது உயர்சாதி வெறியர்கள் குறித்து பேசுகிறது. உயர்சாதிய மனநிலை குறித்து பேசுகிறது. உயர்சாதியில் மனிதாபிமானத்துடன் இயங்குபவர்கள் பற்றியும் பேசுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் (அப்பாவித்தனமான அல்லது இயலாமையான) ஏற்புகள் குறித்து பேசுகிறது. அவர்களிடமிருந்து வெளிப்படுகிற தவிர்க்க முடியாத அல்லது தேவையான மறுப்புகள், போராட்டங்கள் குறித்து பேசுகிறது.
*
சாதியத்தின் புகலிட இயங்குநிலை மேற்குலகின் புறநிலையை (ஜனநாயக மனநிலைகளை, நடைமுறைகளை, சட்டங்களை, தனிமனித பொருளாதார சமூக பாதுகாப்பு உத்தரவாதங்களை) தவிர்த்து பயணிக்க முடியாது. தமிழர்கள் கும்பலாக சேர்ந்து வாழும் நகரங்களுக்கும், பரந்து இங்கத்தைய சமூகத்தடன் சேர்ந்து வாழும் சமூகங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தாலும், அதன் அழிவு மூன்றாவது நான்காவது சந்ததிகளில் நிகழ்வதற்கான வாய்ப்பே உள்ளது. ஏன் தமிழ் அடையாள இழப்புகளும்கூட நிகழவே செய்யும். அதனால் சாதியம் குறித்து பேசுவது பழசை கிளறுவதாக இரண்டாம் சந்ததியினர் சிலரின் முறைப்பாடாக இருக்கிறது. அது புரிந்துகொள்ளப்படக் கூடியதாக உள்ளது.
இந் நூலின் முடிவில் தனது அடுத்த சந்ததிகள் அடையும் மாற்றங்கள் குறித்து நூலாசிரியர் இதன் அடிப்படையில் பேசுவதாக நான் விளங்கிக்கொள்கிறேன்.
இருந்தபோதும் வரலாறு நிகழ்காலத்தால் மறுக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ உதாசீனம் செய்யப்பட்டோ சமூகம் முன்னோக்கி செல்வதில்லை. வரலாறு ஓர் ஆசான். அதிலிருந்து தொடர்ச்சியாக கற்றல்கள் நிகழும். நிகழ்காலமும் நாளை கடந்தகால வரலாறு என்றாகும். எனவே சாதியம் குறித்த வரலாற்றை இங்குள்ள இரண்டாம் சந்ததியர் அறிந்துகொள்வது அறிவுத் தளத்தில் தேவையானது. பல சந்தர்ப்பங்களில் இந் நாட்டவர் அறிந்திருக்கிற அளவுக்கு எமது இரண்டாம் சந்ததி சாதியம் குறித்து அறியாதிருப்பது ஒரு சுவாரசியம்.
“நீ எந்த நாட்டிலிருந்து வந்தனி” என்ற கேள்வியை ‘மற்றவர்கள்’ (others) என்ற அடையாளத்துள் வைத்து நோக்கும் மனநிலை கொண்டது என விரிந்து செல்கிற ஒரு அறிவுப் புலமும், ஜனநாயக மனநிலை நுண்புலமும் மேலோங்குகிற ஒரு மேற்கத்தைய சூழலில் “நீ என்ன சாதி” என்ற கேள்விக்கு பதிலளிப்பதை மறுத்தல்தான் பொருத்தமானது. அதாவது இதை சாதியை ஒளித்தல் அல்லது மறைத்தல் என்றும் சொல்லலாம். உண்மையில் அந்த மறுப்பு ‘கடந்துசெல்லல்’ என்றே பொருள்படத் தக்கது. இதை எமது சமூகத்தவர் தமது சாதியை ஒளிக்கிறார்கள் என்றும், அவர்கள் ‘நான் இதுதான் சாதி’ என சொல்லி முகம்கொடுக்க முன்வர வேண்டும் என்பதும், அதை ஒரு போராட்ட குணமாகக் காண்பதும் அபத்தமான சிந்தனை முறையாகும். சாதியத்துக்கு எதிரான போராட்டம் நிலவாத புகலிடச் சூழலில் சாதியை அடையாளப்படுத்தல், முகங்கொடுத்தல் என்ற பிரதியீடுகள் அர்த்தமற்றது. கடந்துசெல்லல் என்பதே அணுகுமுறையாக இருக்க முடியும். அதற்கான சாதகமான புறநிலைமை (சட்ட ரீதியிலும் சிந்தனை முறையிலும் அரசியலமைப்பு அடிப்படையிலும், பொருளாதார ரீதியிலும்) போதியளவு புகலிடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.
இந் நூல் ஒரு ஆவணமாக, சுயவரலாறாக, சமூக வரலாற்றின் பகுதியாக ஒரு இடத்தை தனக்கென எடுத்துக் கொள்ளும்.
ரவி (20102019)
One thought on “நினைவழியா வடுக்கள்”