கலைஞன் சண்முகராஜாவுடனான சந்திப்பு – சுவிஸ்
பாடசாலை மாணவனாக இருக்கும்போது இரவில் ரியூசன் முடிந்து சைக்கிளில் டபிள் வருகிறோம், நானும் நண்பனும்! பொலிஸ் மறிக்கிறது. கன்னத்தில் பலமாக அறைந்தான் ஒரு பொலிஸ். எனது தலைக்குள் வெள்ளிகள் தோன்றி மறைந்தன. நான் மண்ணுக்கு திரும்பி வந்தபோது நண்பனை சைக்கிள் ரியுப் இனுள்ளிருந்து காற்றை திறந்துவிட பணித்திருந்தான் மற்ற பொலிஸ்.
அன்று தொடங்கிய பொலிஸ் மீதான வெறுப்பானது இயக்க போராளிகளை தேடுதல் வேட்டை, கைது சித்திரவதை, விசாரணை, உளவுபார்த்தல் என பொலிஸ் களமிறங்கியபோது பன்மடங்கு கடுப்பாக்கிவிட்டிருந்தது. தவறுசெய்யாமலே பயப்பட வேண்டி வைத்த காக்கிச் சட்டை அரச வன்முறை இயந்திரத்தின் குறியீடாய், தகர்த்தெறியப்பட வேண்டிய ஒன்றாய், வெறுப்புக்குரிய ஒன்றாய் மாறிவிட்டிருந்தது. இப்போதும் சினிமாவில் காக்கிச் சட்டையைக் கண்டால் எனக்குள்ளிருந்து ‘ஒருவன்’ சிலிர்த்தெழுந்துவிடுவான்.
தமிழ்ச் சினிமாவில் அதே காக்கிச் சட்டையுடன் வந்து கடுப்பேற்றிய சண்முகராஜா அவர்கள் எனக்கு அருகில் இருக்கும்போது, ஒரு கலவையுணர்வு ஏற்பட்டது. அந்தக் கலைஞனை விட்டு பொலிஸ் காணாமல் போயிருந்தது. அதிகாரம் காணாமல் போயிருந்தது. புன்னகையைக் கொன்ற கடுப்பேறிய பார்வை இல்லாமல் போயிருந்தது. எல்லாம் எதிர்மாறாய்இ தலைகீழாய் இருந்தது.
கண்டவுடன் நெருங்கிப் பழகவைக்கும் ஓர் பண்பும், புன்சிரிப்பும், எளிமையும் அவரிடம் குடிகொண்டிருந்தது. இந்த மனிதனால் எப்படி கடுப்பேத்துற பொலிஸாக வர முடிகிறது என்று நான் வியந்து நின்றபோது, அந்தக் கலைஞனின் “நடிப்பாற்றல்” எனது அப்பாவித்தனத்தின்மீது கண்சிமிட்டிவிட்டுச் சென்றது. தமிழ்ச் சினிமா அந்தக் கலைஞனை இவ்வாறுதான் எமக்கு அறிமுகமாக்கியிருந்ததை நொந்துகொண்டேன். இருந்தபோதும் அதற்குவெளியில் வேறு பாத்திரங்களில் அவரது நடிப்பாற்றல் திமிறிக்கொண்டு வெளிவந்தபடிதான் இருக்கின்றன.
ஓர் அரங்கியல் கலைஞனாக புலமைத்துவம் பெற்று, அதை -நிர்மாணிக்கப்படும்- மேடை அரங்கிலிருந்து, ஈழ அகதி முகாம் தரையரங்கு வரை எடுத்துச் சென்றவர் அவர். அரங்கியல் கலையில் முழு ஈடுபாட்டுடன் இருந்த அவர் ஒரு விபத்தாக சினிமாவுக்குள் அடுத்த கலைவாழ்வை தரிசிக்க நேர்ந்தது. விருமாண்டியில் முதன்முதலில் தொடங்கிய அந்தப் பயணம் 70 க்கு மேற்பட்ட படங்களினூடு பயணித்துக் கொண்டிருக்கிறது. சினிமாவில் தான் சம்பாதிக்கும் பணத்தை அரங்கியலுக்குள் கொட்டித் தீர்க்கும் ஒரு கலைஞன் அவர்.
இராமநாதபுரத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தார். அவருடைய தாத்தா (இலங்கை) மலையகத்திற்கு தொழிலாளியாக கொண்டுவரப்பட்டவர். பின்னர் அவர் கங்காணியாக வேலை பார்த்தார். 1970 இல் அவர் மீண்டும் இந்தியா திரும்புகிறார். சண்முகராஜாவின் அப்பா கலையில் ஈடுபாடு கொண்டிருந்தார். அது மகனைப் பற்றியது. அப்பா தனக்கு ஓர் ஆதர்சம் என அவர் நினைவுகூர்கிறார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நாடக பயிலரங்கில் கற்ற சண்முகராஜா 1992 இலிருந்து அரங்கியல் துறைக்குள் இயங்கத் தொடங்குகிறார். டெல்லி தேசிய நாடகப் பள்ளியில் நடிப்பு, நாடகம் ஆகிய துறைகளில் மூன்று ஆண்டுகள் பயில்கிறார். தொடர்ச்சியாக அரங்கியல் துறையுள் முழுமையாக இயங்குகிறார். பல இளைஞர்களுக்கு அத் துறையில் உதவிபுரிகிறார். ஈடுபடவைக்கிறார்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த Maya Koene என்பரால் மதுரையில் உருவாக்கப்பட்ட CESCI அமைப்பினூடான பரிச்சயமும் பங்களிப்பும் சண்முகராஜாவை இந்தியாவுக்கும் சுவிசுக்கும் இடையிலான கலைப் பயணத்தைத் தொடக்கி வைத்தது. இந்த கலைவழியினூடாக 70 க்கு மேற்பட்ட சுவிஸ் அரங்கியல் கலைஞர்கள் மதுரைக்கும் சுவிசுக்குமிடையில் பயணித்தபடி இருந்தனர். இருக்கின்றனர்.
சண்முகராஜாவும் சுவிசுக்கு சில தடவைகள் வந்திருக்கிறார். இம் முறை நாம் அவருடனான சந்திப்பை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. “வாசிப்பும் உரையாடலும்” குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்த அவர், இச் சந்திப்புக்கான ஆர்வத்தை காட்டிய காரணிகளில் அதை முக்கியமானதாகச் சுட்டினார்.
அவரது சினிமாப் பாத்திரங்களின் நடிப்பாற்றலை வெளிக்கொணரும் எட்டு காணொளி நறுக்குகளை திரையில் காட்டுவதற்காகக் கொணர்ந்திருந்தார். 50 நிமிடம் ஒரு மினி திரையரங்காக மாறியிருந்த சூழலை பின்னர் ஒரு நீண்ட உரையாடல் அரங்காக மாற்றியிருந்தோம். தமிழக அரங்கியல் போக்குகள் குறித்தும் சினிமாப் போக்குகள் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து உரையாடல் நடைபெற்றது. ஒரு பிரயோசனமான பொழுதாக அதை அவரும் உணர்ந்திருத்தல் கூடும் என உறுதியாக சொல்ல முடியும்.
அவர் இனி காக்கிச் சட்டையுடன் வந்து எனது ‘அவனை’ கடுப்பேத்த முடியாது!
– ரவி (10102019)