நிலாவொளியை இரகசியமாய் முத்தமிட்டு
கிறங்கிப் போய்விடுகின்ற
கடல் அலைகளின் கள்ள அசைவுபோல்
அவளின் தோல் சுருக்கங்களுக்கு இடையே
வாழ்ந்துபட்ட அனுபவம் துலங்கிக்கொண்டிருந்தது.
தன்னைத் தாங்குவதில் மூன்றாவது காலாய்
ஒரு கைத்தடியைத் தன்னும் அவள் மறுத்திருந்தாள்.
அனுபவத்தின் பாரம் அவளை
மெல்ல நடந்துகொள்ள அனுமதித்தது.
காணும்போதெல்லாம்,
ஒரு புன்னகையை அவள் சிந்தியபடி
எனை எதிர்கொள்வாள்.
எனது கைமணிக்கட்டை பிடித்து பேச தொடங்குவாள்.
எனது அவசரம் மணிக்கட்டின் பிடியை கடிந்துகொள்வதால்
செல்லுபடியாகிற ஒரு காரணத்தோடு
ஒவ்வொரு முறையும் அவளை கடந்து செல்வேன்.
என்றாவது ஒருநாள்
அவளுடன் ஆறஅமர இருந்து பேச வேண்டும்.
அவள் காட்டுகிற இன்னொரு உலகத்தை தரிசித்துவிட வேண்டும் என்ற
கனவு எனது அறிவின்மையால் கலைந்து போனது.
அவள் தனியாக வாழ்ந்து கழித்த அறை
வெறுமையாய்க் கிடந்தது.