பண்பாட்டுச் சுவைப்பதக் கூறுகளின் பகிர்வு
தமிழ் திரைப்பட நடிகர், நாடக இயக்குனர் மற்றும் மதுரை நிகழ் நாடக மைய இயக்குனர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சண்முகராஜா அவர்களின் சுவிஸ் வருகையின் ஒரு அங்கமாக Kulturzentrum, Thalwil அமைப்பும் சுவிஸ்- இந்திய கலாச்சாரத் திட்டம் (SICP)அமைப்பும் ஒரு கலாச்சாரச் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தது.
இச் சந்திப்பில் தமிழ் சினிமா குறித்த மற்றும் அரங்கியல் கலை குறித்த ஆழமான கருத்துக்களை அழுத்தமாகவும் அதேநேரம் நகைச்சுவையாகவும் ஒரு தேர்ந்த கலைஞனுக்கேயுரிய பக்குவத்துடனும் கலை ஆளுமையுடனும் சண் முன்வைத்தார். சுவிஸ் தமிழக அரங்கியல் கலைப்பாலமொன்றை கடந்த 20 வருடங்களுக்கு மேல் கட்டியெழுப்பிய இருபக்க கலைஞர்களின் களமாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. கணிசமான கலை இலக்கிய ஆர்வலர்கள் வந்திருந்தனர்.
அரங்கியல் தளத்திலான கடின உழைப்பு அதற்கான பங்களிப்பு எதிர்கால சந்ததிக்கு கடத்துதல் அதன் முக்கியத்துவத்தை கொண்டாடுதல் அதன் தொடர்ச்சியை பேணுதல் என்பன அவரின் உரையுள்ளிருந்து வெளிப்பட்டபடி இருந்தன. அத்தோடு தேடல், வாசிப்பு, இலக்கிய பரிச்சயம் மட்டுமல்ல அருகாமையுடன் பழகுவது, கருத்துகளை மிக உன்னிப்பாக கேட்பது அவதானிப்பது, அதை கேள்வி பதிலாக எதிர்கொள்ளாமல் உரையாடல் பண்புக்குள் வைத்து கருத்துரைப்பது என எல்லாமும் சண்முகராஜா அவர்களை ஒரு அற்புதமான கலைஞனாக எம்முன் நிறுத்திக் காட்டியது.
நடிப்பு குறித்து அதன் இயங்குதளம் குறித்தெல்லாம் எளிமையாகவும் ஆழமாகவும் வார்த்தைகள் அவருக்குள்ளிருந்து வெளியேறிக்கொண்டிருந்தன. தமிழ்த் திரைப்படத் துறையில் தொழில்நுட்ப ரீதியிலும் கதைக் கருத்துருவாக்க ரீதியிலும் நடைபெற்றுவரும் நேரம்சமான மாற்றங்கள் பற்றியும் பேசினார். கூத்து, நவீன நாடகங்கள் அவைகுறித்து முன்வைக்கப்படும் மாயைகள், உண்மைகள் என்பனபற்றியும், அவற்றின் அழிக்க முடியாத சமூகப் பாத்திரங்கள், அவற்றின் தவிர்க்கமுடியா இருத்தல்கள் பற்றியெல்லாம் பேசினார். அவருடன் இன்னமுமாய் பேச இன்னொரு சந்தர்ப்பத்தை எதிர்வரும் ஞாயிறு (06.10.19) அன்று ஒழுங்குசெய்திருக்கிறோம்.
– ரவி (30092019)
fotos
காணொளி – 1
காணொளி-2